தூக்கியெடுத்து உயர்த்துகிறார்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜனவரி-பிப்ரவரி 2016)

சத்தியவசன வாசகர்கள் பங்காளர்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

“கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (யாக்.4:10), இந்த வசனத்தின் இறுதி பகுதியை நாம் தியானத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். ‘அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்’.  இது தேவன் ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு மட்டும் தருகிற வாக்குத்தத்தம் அல்ல. எல்லா வருடங்களுக்குமுரிய வாக்குத்தத்தமாகும். இதைப்போன்று நாம் வேதத்தில் வாசிக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் எல்லா நாட்களுக்கும் உரியவைகளாகும். இந்த நிருபத்தை, யாக்கோபு அப்போஸ்தலன் தனது அனுபவத்திலிருந்து எழுதுகிறார்.

இந்த வசனத்தில் கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள்; அவர் உங்களை உயர்த்துவார் என்று வாசிக்கிறோம், “உயர்த்துவார்” என்பதற்கு ஆங்கிலத்தில் ‘Lift up’ எனப் பார்க்கிறோம். பல அர்த்தங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் இதுவும் ஒரு அர்த்தமாகும். தேவன் நம்மை குழியிலிருந்து தூக்கியெடுத்து உயர்த்துகிறார். இந்த செய்தியில் மூன்று குழிகளும், அதிலிருந்து கர்த்தர் உயர்த்துகிற மூன்று வழிகளைக் குறித்த  சத்தியத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

முதலாவதாக ஒருமனிதனை தேவன் தூக்கியெடுக்கிற குழி எதுவென்றால், பாவ குழியாகும். முன்பு நாமும் எங்கேயோ ஒரு பள்ளத்தில் அல்லது குழிக்குள் கிடந்தோம். சங்.40:2இல் “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களை கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்துகிறார்” என வாசிக்கிறோம். பயங்கரமான குழியாய் காணப்பட்ட பாவக்குழியிலிருந்து கர்த்தர் நம்மை தூக்கியெடுத்திருக்கிறார். சகரியா 9:11இல் கூட “..தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை பண்ணுவேன்” என்றும் வாக்களித்திருக்கிறார். பயங்கரமான மற்றும் தண்ணீரில்லாத இதுபோன்ற பாவக்குழிகளிலிருந்தும் உளையான சேற்றிலுமிருக்கிற ஒவ்வொருவரையும் ஆண்டவர் தூக்கியெடுத்து உயர்த்துகிறவராய் இருக்கிறார். இதைத்தான் ஏசாயா 43:1 இல் “உன்னை மீட்டுக் கொண்டேன்” என ஆண்டவர் சொல்கிறார்.

இரண்டாவதாக தேவன் நம்மை சிறுமையின் குழியிலிருந்து உயர்த்துகிறார். சங்.107: 41 வசனம் இவ்விதமாகக் சொல்லுகிறது:  “எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறார்”. இப்படிப்பட்ட சிறுமையின் சூழியில் விழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆதி.37: 24 இல் “யோசேப்பை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்”. அவனை குழியில் போடுவதற்கு காரணம் என்ன, அவனுடைய சகோதரர்களுக்கு யோசேப்பின் மேல் உள்ள பொறாமையும், பகைமையும், எரிச்சலுமே காரணமாகும். தீத்து 3:3இல் ‘முற்காலத்திலே நாமும் .. பொறாமையோடும் .. ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்’ என வாசிக்கிறோம். யோசேப்பை குழியில் தள்ளி சிறுமைப்படுத்துவற்கு பொறாமையே காரணமாயிற்று. ஆதி.37:28 இல் அவனை குழியிலிருந்து தூக்கியெடுத்தார்கள் என பார்க்கிறோம். அதுவும் இஸ்மவேலருக்கு அவனை விற்றுப்போடுவதற்காகவே தூக்கினார்கள்.

நாமும்கூட இப்படிப்பட்ட பொறாமையினாலே சிறுமையின் குழியில் தள்ளப்பட்டிருக்கலாம். அடுத்ததாக, ஆதி.39ஆம் அதிகாரத்தில் பார்வோனின் மனைவியாலே குற்றஞ் சாட்டப்பட்டு சிறைச்சாலை என்னும் சிறுமையின் குழிக்குள் தள்ளப்படுகிறான். தாவீது கூட சங்.35:7 இல் “முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்” என்று சொல்கிறதைப் பார்க்கிறோம். இப்படியாக பொறாமையினிமித்தம், பொய் குற்றச்சாட்டுகளினிமித்தம் அல்லது முகாந்தரமில்லாமல் சிறுமையின் குழிக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோமா? எரேமியா 38:6 ஆம் வசனத்தில் எரேமியா வசனத்தை சொன்னதிமித்தம், தீர்க்கதரிசனத்தை சரியாய் உரைத்ததின் நிமித்தம் தண்ணீரல்லாத உளையிலே போட்டப்பட்டதைப் பார்க்கிறோம். வசனத் தெளிவிலே உறுதியாய் இருந்ததின் நிமித்தமாககூட சிறுமையின் குழி அனுபவம் நமக்கு நேரிட்டிருக்கலாம்.  இந்த சிறுமையின் குழியிலிருந்தும் தேவன் நம்மை மீட்கிறவராயிருக்கிறார்.

மூன்றாவதாக, நமக்கு நாமே வெட்டுகிற குழி. சில நேரங்களில் அறிந்து செய்கிற தவறுகளின் நிமித்தமும் நமக்கு நாமே குழியின் அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்கிறவர்களாயிருக்கிறோம். நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போ என ஆண்டவர் யோனாவுக்கு சொல்ல, அவன் அறிந்தே நினிவேக்குப் போகாமல் தர்ஷீசுக்குப் போகிறான். யோனா 2:3இல் யோனா ‘பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன்’ எனச் சொல்கிறான். இப்படிப்பட்ட பாதாளம் என்னும் குழியிலிருந்தும் கர்த்தர் நம்மைத் தூக்கியெடுக்கிறார்.

இப்படிப்பட்ட குழிகளிலிருந்து நாம் உயர்த்தப்படுவதற்கு மூன்று வழிகளை நாம் பார்க்கலாம். முதலில் நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடவேண்டும் (Lift up our voice to God).  இதை யோனாவின் அனுபவத்திலிருந்து நாம் தியானிக்கப்போகிறோம். யோனா 2:1,2 ஆம் வசனங்களில் “…யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் உனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்” என்று ஜெபிக்கிறார். மனிதர்களிடம் சத்தத்தை உயர்த்துவதைவிட தேவனிடத்தில் சென்று நமது சத்தத்தை உயர்த்துவது நல்லது. குழியிலிருந்து வெளிவர முதல் வழி கர்த்தரிடத்தில் நாம் சத்தத்தை உயர்த்த வேண்டும்.

அடுத்ததாக, யோனா2:4 இல், “நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்” என ஜெபிக்கிறார். விண்ணப்பத்தினாலே கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார் (Lift up our eyes  to God). மனிதர்களைப் பார்த்து நமது கண்கள் பூத்துப் போய்விட்டது. சங்.123:1 இல் சங்கீதக்காரனும், “பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்” என தன் கண்களை ஏறெடுப்பதைப் பார்க்கிறோம். அநேக நேரங்களிலே மனிதர்களிடத்திலே முறையிட்டும் எந்தவொரு பதில் கிடையாமலும், நியாயம் கிடையாமலும் போயிருக்கலாம். பதில் செய்பவர் கர்த்தர். ஆதலால் நாம் அமைதலாயிருக்கவேண்டும். கர்த்தருக்கு நேராக நம் கண்களை மாத்திரம் நாம் உயர்த்தும்போது நம்முடைய அபாத்திர நிலை நமக்கு தெரியும். கர்த்தர் நம்மை அக்குழியிலிருந்தும் தூக்கிவிடுவார்.

சங்.63:4 இல் “என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்” என ஜெபிக்கிறார் (Lift up our eyes  to God). சங்கீதக்காரனுடைய ஜெபத்தைப் போல நாமும் ஆண்டவரிடத்தில் உம்மையே நம்பியிருக்கிறேன். உம்மிடத்தில் என்னைத் தருகிறேன். என்னால் எதுவும் செய்யமுடியாது என ஆண்டவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது கர்த்தர் நமக்காக கிரியை செய்கிறவராயிருக்கிறார். கரங்களை உயர்த்தி ஆராதிப்பது என்பது நாம் நம்மை முழுவதுமாக கர்த்தருக்கு அர்ப்பணிப்பதற்கு சமமாகும். நம்மைக் கோபப்படுத்தக் கூடிய வாழ்க்கையின் அழுத்தங்கள், சோதனைகள் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இப்படிப்பட்ட எந்த நிலையிலும் நாம் நம்முடைய சத்தத்தை, நம்முடைய கண்களை, நம்முடைய கரங்களை கர்த்தருக்கு நேராக உயர்த்தவேண்டும். யாக்கோபு 4:10 இன்படி கர்த்தர்தாமே உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பாராக!

சத்தியவசனம்