இலக்கை நோக்கிய ஓட்டம்

சகோ.உதயகுமார்
(ஜனவரி-பிப்ரவரி 2016)

‘உலகம் ஒரு நாடக மேடை, நாமோ, அதில் நடிக்கும் நடிகர்கள்’ என்றும், ‘உலகம் ஒரு போர்க்களம், நாமோ போர் வீரர்’ என்றும் ‘உலகம் ஒரு கடல், நாமோ அதில் பயணிக்கும் கப்பல்’ என்றும் உலகைக் குறித்தும் வாழ்க்கையை குறித்தும் பலர் பல விதங்களில் சித்தரித்துள்ளனர். அதுபோலவே கிறிஸ்தவ வாழ்வை ஒரு ஓட்டத்திற்கு ஒப்பிட்டுள்ளதை நாம் வேதாகமத்திலே காண்கின்றோம்.

உபத்திரவங்கள், பிரச்சனைகள், துன்பங்களைக் கண்டு இலக்கை நோக்கிய கிறிஸ்தவ ஓட்டத்திலே பின்னடையவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இவை எல்லாவற்றையும் அனுபவித்து வெற்றிக்கண்ட கிறிஸ்து இயேசு நமக்கு முன்மாதிரியாக இருக்கிறபடியால் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய அவரையே நோக்கி ஓடும்படி நம் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதே எபிரெய நிருப ஆசிரியரின் நோக்கமாயிருக்கிறது.

“ஆகையால் மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக் கடவோம்” (எபி.12 :1).

இந்த வசனம் வெற்றிகரமான ஒரு ஓட்டத்தை ஓட நான்கு ஆலோசனைகளை நமக்குத் தருகின்றது.

1. நினைக்கவேண்டியவை:

நம்முடைய கிறிஸ்தவ ஓட்டத்திலே எப்பொழுதும் நம் மனதில் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், இது நமக்கு மட்டும் உரிய ஓட்டமல்ல. நமக்கு முன்னிருந்த கிறிஸ்தவ பக்தர்கள் ஒவ்வொருவரும் ஓடிய ஓட்டமேயாகும். சிலர் ஆரம்பத்திலேயே ஓட்டத்தை முடித்துக் கொண்டனர். பலர் இடையிலே ஓட்டத்தை நிறுத்திவிட்டனர். வேறு சிலர் ஓட்டத்தின் இலக்கை கடந்தவர்களும் வெற்றிப்பெற்றவர்களுமாக பாரட்டப்படுகின்றனர். அப்படிப்பட்ட வெற்றியாளர்கள் இருபத்திரெண்டு பேரின் பெயர் பட்டியலையே எபிரெயர் 11ஆம் அதிகாரம் பட்டியலிட்டுக் காட்டுகின்றது.

“ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துக்கொண்டிருக்க…” என ஆரம்பிப்பதே அதனால்தான். நாம் ஓடிக்கொண்டிருக்கின்ற இந்த கிறிஸ்தவ ஒட்டத்தைக் குறித்து நம்பிக்கையற்றவர்களாய், உறுதியற்றவர்களாய் ஓடவேண்டியதில்லை. முன்நோக்கி ஓடிய அன்றைய மற்றும் இன்றைய நம் முன்னோர்களின் முன்மாதிரியே நமக்கு சிறந்த சாட்சியாகவும் பலனாகவும் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கின்றது. இவை கதையல்ல நிஜம்.

ஆகவே நமது கிறிஸ்தவ வாழ்க்கை பயனற்றது, அது நிலையற்றது, அவசியமற்றது என்ற எதிர்மறையான எண்ணம் நமக்கு வேண் டாம். அல்லது நான் மட்டும்தான் இப்படிப்பட்ட பாடுகளுக்கு முகங்கொடுக்கின்றேன் எனக்கு வந்த பிரச்சனைகளைப்போல் வேறு யாருக்குமே வந்ததில்லை என மனம் சோர்ந்து போக வேண்டியதில்லை. நாம் நமக்கே உரிய விசுவாச ஓட்டத்தை நமது முன்னார்களைப்போல விடாமுயற்சியோடும் எதிர்பார்ப்போடும் ஓடிமுடிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

2. தவிர்க்கவேண்டியவை:

இலக்கை நோக்கிய நம்முடைய விசுவாச ஓட்டத்தை தடுக்கின்ற, தாமதப்படுத்துகின்ற தள்ளாட வைக்கிற தடையான காரியங்கள் என்னவோ அவைகளை உதறி தள்ளிவிட்டு ஓடும்படி வேதம் நமக்கு ஆலோசனை தருகிறது. கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள “ஒன்கோன்” (onkon) எனும் சொல் பெளதீகரீதியான பாரத்தையும் குறிப்பிடுகின்றது. ஒன்று நம் செயல்பாடுகளை தாமதப்படுத்துகின்றது. மற்றது ஒன்றுமே செய்ய முடியாதபடி நம்மை முடக்குகின்றது.

இந்நிருபத்தின் ஆசிரியர் அந்நாட்களில் நடைபெற்றுவந்த ஓட்டப் பந்தயத்தை மனதிற்கொண்டே எழுதியிருக்கிறார். ஓட்ட வீரர்கள் தங்கள் ஓட்டத்தை தாமதப்படுத்துகின்ற பாரமான ஒன்றையும் தங்களோடே வைத்துக் கொண்டு ஓடுவதில்லை. அவர்களது ஆடையின் பாரம்கூட ஓட்டத்தை தடுத்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் சிறிய, குறைந்த துணிகளையே அணிவதுண்டு. இன்றைய ஓட்டவீரர்களின் உடைகள் அதற்கு சிறந்ததொரு உதாரணமாகும்.

சிலர் அதுவும் வேண்டாமென்று நிர்வாணமாக ஓடுவதுமுண்டு. வேறு சிலர் தங்களை யாரும் பிடித்து இழுத்து தள்ளிவிடும் சம்பவங்களும் நடக்கலாம் என்று அஞ்சி எண்ணெய் மற்றும் கிரீஸ் போன்றவற்றை சரீரத்தில் பூசிக்கொண்டு ஓடுவதுண்டு. இன்னும் சிலர் காலணிகள் அணியாமல் வெறும் காலோடு ஓடுவதுமுண்டு. இவை பெளதீக பாரத்தை சித்தரிக்கின்றது.

ஆவிக்குரிய பாரம் என்பது நம் பாவத்தையே சுட்டிக்காட்டுகின்றது. பாவம் நமது பாதையின் பாலங்களை உடைத்து பயணத்தைத் தடுக்கின்றது. ஓட்டப்பந்தயத்திலே முதலில் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அவனது கவனத்தை சிதறடிக்கும் வண்ணமாக அவனது வெற்றியை விரும்பாத பார்வையாளர்கள் அந்த வீரனின் கண்களுக்கு முன் தங்க ஆப்பிள் பழங்களை வீசுவார்கள். அந்த ஆப்பிள் பழங்களைக் கண்டு அதனை எடுக்க முற்படுகின்றபோது, அடுத்த ஓட்ட வீரன் அவனை முந்திக்கொண்டு ஓடிவிடுவான்.

இந்த பின்னணியை ஞாபகப்படுத்தியே “நம்மை நெருங்கி நிற்கின்ற பாவத்தை தள்ளிவிட்டு” ஓடும்படி எபிரெய நிருப ஆசிரியர் நம்மை அறிவுறுத்துகின்றார்.

இச்சையடக்கமின்றி பாவத்தோடு நமது ஓட்டத்தின் இலக்கை அடைய முடியாது. பாவம் பாதியிலேயே பரிதபிக்கச் செய்துவிடும். பிரியமானவர்களே! நாம் பாவம் செய்யாதிருப்போமானால் பயம் எதற்கு? பரிசுத்த தேவனை அறிந்திருந்தும் பாவத்தோடிருப்போமானால் நம்மைப் போல பரிதபிக்கக் கூடியவர்கள் வேறு யாரும் இல்லை. நாம் எவ்வளவு பின்னால் இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அர்த்தமுள்ள ஒரு ஆரம்பத்தோடு ஆண்டவரிடம் வருவோம். ஆவியிலே அனல் பெறுவோம், புது பெலத்தோடு ஓட்டத்தை திரும்பவும் ஆரம்பிப்போம்.

3. நோக்கவேண்டியவை:

சிறகடித்து பறக்க ஆரம்பித்த பறவைகள் எங்கே பறந்து செல்ல வேண்டும் என திக்குத் திசை தெரியாமல் திகைத்து நிற்பதைப் போன்றதல்ல, நமது கிறிஸ்தவ வாழ்க்கை. அல்லது நதிகள் எங்கே ஆரம்பித்தாலும் அது சமுத்திரத்திலேயே சங்கமிக்கும் என்ற பொதுவுடைமை கருத்தை சொல்வதல்ல கிறிஸ்தவ ஓட்டம். அதற்கு ஆரம்பமும் முடிவும் உண்டு. அதை ஆரம்பிப்பவரும் முடிப்பவரும் இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவே!

தாயின் கருவில் உருவாகும் முன்னரே தேவன் நம்மை தெரிந்துகொண்டாலும் கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளுகின்ற இடத்திலேயே நமது விசுவாச ஓட்டம் ஆரம்பிக்கின்றது. சூரியனிலிருந்து வெளிப்பட்டு வந்த கதிர்கள் மறுபடியும் சூரியனையே சென்றடையுமாயின் எப்படி இருக்கும். கிறிஸ்தவ ஓட்டமும் அதுபோன்றதென்றே. நான் நினைக்கின்றேன்: நாம் எல்லோரும் சிருஷ்டி கர்த்தரின் கிரியையாய் இருக்கின்றோம். அவராலேயே இந்த பிறவி பாக்கியத்தை பெற்றிருக்கிறோம். நாம் அவருக்கே சொந்தமானவர்கள். நாம் மறுபடியும் அவர் சமுகம் சென்றடைவதே நமது எதிர்பார்ப்பும் பரம நம்பிக்கையாகவும் இருக்கின்றது. அந்த இடத்திலேயே நமது விசுவாச ஓட்டம் நிறைவு பெறுகின்றது.

அந்நாட்களில் ஓட்டவீரர்கள் காடு, மேடு, மலை, குன்று பள்ளத்தாக்கு என கரடுமுரடான பாதைகளில் பல மைல்தூரங்கள் ஓடிச்சென்று வெற்றி பெற்றப்பின் ஒலிவ இலையினால் செய்யப்பட்ட ஒரு கிரீடத்தை வெற்றிப் பரிசாக பெற்றுக்கொள்வார்கள். இந்த ஒலிவ இலையிலான கிரீடத்தைப் பெறுவதற்கு தங்களை முற்றிலும் அர்ப்பணித்து பனியிலும் மழையிலும் வெயிலிலும் கடினமான பயிற்சிகளை நீண்டகாலமாக செய்து தங்களை தயார் படுத்திக்கொள்வார்கள். அத்தனை பிரயாசங்களின் பின் வெற்றிப் பரிசாக கிடைக்கும் ஒலிவ இலையிலான அந்த கிரீடமோ கொஞ்ச காலத்திலேயே வாடிப்போய்விடும்.

பிரியமானவர்களே! தங்கம், இரத்தினம், வைரம், வைடூரியத்தினாலான வாடிப்போகாத நீதியின் ஜீவகிரீடத்தைப் தேவன் நமக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கின்றார். வாடி அழிந்துப் போகின்ற அந்த கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள அவர்கள் அத்தனை பிரயாசப்படுவார்களேயானால் நம்முடைய விசுவாச ஓட்டம் நிறைவேறவும் அழியாத ஜீவகிரீடத்தைப் பெறவும் நாம் எத்தனை அதிகமாய் பிரயாசப்பட கடமைப்பட்டுள்ளோம்.

இந்த விசுவாச ஓட்டத்திலே, தனிமைக் கலந்த தவிப்புகள் தாராளம் தாராளம், வேதனை துக்கம் நிறைந்த சம்பவங்கள் ஏராளம் ஏராளம். தட்டிக்கொடுக்கவோ தயவாய் பேசவோ, அன்புக்காட்டவோ, அணைத்துக்கொள்ளவோ, உதவிக்கோ ஒத்துழைப்புக்கோ ஒருவரும் இன்றி நொந்து நூலாய் போன அனுபவங்கள் நமக்கு எண்ணில்லாமல் இருக்கலாம்.

அன்புக்குரியவர்களே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நிகழ்ந்ததை விடவுமா நமக்கு நடந்துவிட்டது. அதை நினைத்து உள்ளத்தை தேற்றிக்கொள்ளுங்கள். இப்பொழுதும் இதை வாசித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் அருகில் யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆண்டவர் அதிக பெருமூச்சுகளோடு உங்கள் அருகில் இருப்பதை உங்கள் மனக் கண்களால் பாருங்கள். நம்பிக்கையோடே விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரு மாயிருக்கின்ற இயேசுவையே நோக்கி நம்முடைய ஓட்டத்தை தொடருவோம்.

4.கவனிக்கவேண்டியவை:

“நமக்கு நியமித்திருக்கின்ற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்”. தோட்டத்திலே ஆயிரம் மரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் என்பதுபோல அநேக கிறிஸ்தவர்களோடே நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் நமக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் ஓட்டம் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்ததென்பதை மனதிற் கொள்வோம்.

“உப்போமோனே” எனும் கிரேக்க மொழி சொல் பொறுமையோடும் சகிப்புத் தன்மை யோடும் விடாமுயற்சியுடன் ஓடப்பட வேண்டும் என அர்த்தம் கொள்கின்றது. அதாவது நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஓட்டமானது 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் தூரமுள்ள ஓட்டம் அல்ல. அது ஒரு மரத்தின் ஓட்டத்தைப் போன்றது. நீண்ட தூரம் ஓட வேண்டிய ஓட்டத்தையே வலியுறுத்துகின்றது. அதற்கு பொறுமையும் சகிப்புத் தன்மையும் இன்றியமையாதது.

பல வருடங்களுக்கு முன் கிரீஸ்தேசத்தில் நடைபெற்ற ஒரு ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் எல்லாரும் கடைசியில் மைதானத்திற்குள் ஓடிவந்து தங்கள் இலக்கை அடைந்தனர். பின்னர் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான பரிசுகள் வழங்கி முடியும் கட்டத்தில் ஒலிபெருக்கியின் மூலம் ஒரு அறிவித்தல் கொடுக்கப்பட்டது.

“இன்னுமொரு பந்தய வீரன் கடைசியாக ஓடி வந்துக்கொண்டிருக்கின்றார்” என்பதே அந்த அறிவித்தலாகும். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்! வீட்டுக்குப் போக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களும் நின்றுவிட்டார்கள். “இவ்வளவு நேரம் சென்ற பின்னரும் இன்னுமொருவர் ஓடி வருகிறாரா என்பது சிலரின் ஆச்சரியமான கேள்வி. “பாவி! போதுமென்று இடையிலேயே நின்றிருக்கலாமே” என்பது பலரின் கருத்து. “சரி என்னதான் ஆகுமென்று பார்ப்போம்” என காத்திருந்தனர் வேறுசிலர்.

“இதோ அந்த கடைசி ஓட்டப் பந்தயவீரன் மைதானத்திற்குள் வந்துவிட்டார்” என ஒலி பெருக்கியால் ஒலித்தபோது ஒட்டுமொத்த பார்வையாளர்களின் பார்வையும் அவன்மேல் விழுந்தது. தட்டுத் தடுமாறி தள்ளாடி மிகவும் சோர்ந்து களைத்துப்போனவராக தனக்கு நியமிக்கப்பட்டிருந்த இலக்கை கடந்து அந்த ஓட்டவீரன் ஓடி முடித்தார்.

பத்திரிக்கைக்காரரும் மீடியாக்காரரும் அவரை சூழ்ந்திருக்க போட்டி நடத்துனர் அவரைப் பார்த்து: “இவ்வளவு நேரமாகி எல்லாம் முடிந்துவிட்டது; உங்கள் ஓட்டத்தை இடையிலேயே நிறுத்தி இருக்கலாமே, ஏன் இத்தனை கஷ்டப்பட்டு களைத்து ஓடி வந்தீர்கள்” எனக் கேட்டார். அதற்கு அந்த கடைசி ஓட்டவீரன், “என்னுடைய நாடும் என் மக்களும் என்னை நம்பி இங்கு அனுப்பியதன் நோக்கம் இடையிலேயே என் ஓட்டத்தை நிறுத்திக் கொள்வதற்காக அல்ல; என்னுடைய இலக்கை அடையும்வரை ஓட்டத்தை ஓடி முடிப்பதற்காகவே, அவர்களுடைய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உடைப்பது எனக்கு தகுதியல்ல அதை நிறைவேற்றவே கடைசிவரையும் ஓடினேன்” என பதிலளித்தபோது முழு மைதானத்தில் இருந்தவர்களும் எழுந்து நின்று கரகோஷமிட்டு ஆரவாரித்தனர்.

அன்பு சகோதரனே! சகோதரியே! வாழ்க் கையில் நீ கண்ட துன்ப துயரங்களால் கிறிஸ்தவ ஓட்டத்தை இடை நடுவிலேயே நிறுத்திக் கொண்டாயோ? ஊழியத்திலே முகங்கொடுத்த பொய் குற்றச்சாட்டு, வெட்டு கொத்து போட்டி, பொறாமைகளால் ஒதுக்கித் தள்ளப்பட்டதால் கைவிடப்பட்டதால், போதும் இனி ஒன்றும் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டாயோ? தனிமையில் தவித்துப்போய் ஊழியமோ, சபையோ, கிறிஸ்தவ வாழ்க்கையோ ஒன்றுமே வேண்டாம் என எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துவிட்டு வெளி யேறிவிட்டாயோ? அல்லது அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தோடு இருக்கின்றாயோ?

நீ உண்மையுள்ளவன் என்று எண்ணி யல்லவோ ஆண்டவர் உன்னை தெரிந்துக்கொண்டார். எத்தனை போராட்டங்களையும் சகித்து எனக்காக நிலைத்து நிற்பாய் என்று நம்பியல்லவோ வரங்களையும் வல்லமையையும் கொடுத்து இத்தனை தூரம் நடத்தி வந்தார். அவர் உன்மீது வைத்த நம்பிக்கையை நீ உடைப்பது தகுமா? ஓட்டப் பந்தயத்திலே ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும்போது கத்துவதும் கைத்தட்டி உற்சாகப்படுத்துவதுமே பார்வையாளர்களால் செய்யக்கூடிய காரியம்.

ஆனால் நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கின்ற கிறிஸ்து இயேசுவோ கைக் கட்டி பார்ப்பவராகவோ கைத்தட்டி உற்சாகப் படுத்துபவராகவோ இருப்பவர் அல்ல, மாறாக அவரும் நம்மோடுகூட ஓடுபவராக இருக்கின்றார். அதனால்தான் நமது கிறிஸ்தவ ஓட்டத்தை இலகுவாக ஓடவும், எதிர்த்துவரும் சவால்களை மேற்கொள்ளவும் பெலனுள்ளவர்களாய் இருக்கின்றோம்.

மேகம்போல் இருக்கின்ற சாட்சிகளை நினைத்துக்கொண்டு, நம்மை நெருங்கி நிற்கின்ற பாவபாரத்தை உதறி தள்ளிவிட்டு, நல்ல முன்மாதிரியாய் இருக்கின்ற இயேசுவையே நோக்கி பொறுமையோடே தொடர்ந்து ஓட ஒரு தீர்மானம் செய்வோம்.

நமது பலவீனத்திலே அவருடைய பெலன் பூரணமாய் நமக்கு கிடைக்கும். முடிவிலே, அப்போஸ்தலன் பவுல் கூறியதைப்போல “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2தீமோ.4:7,8) என உறுதியாக நமக்கும் கூற இயலுமாக இருக்குமல்லவா!

சத்தியவசனம்