எம்.எஸ்.வசந்தகுமார்
(ஜனவரி-பிப்ரவரி 2016)
(ஜூலை – ஆகஸ்டு 2015 இதழ் தொடர்ச்சி)

ஆண்டவரின் இன்பமான வழி

கிறிஸ்தவர்களாகிய நாம் செல்லக்கூடாத இனிமையற்ற இவ்வுலகின் வழியைச் சுட்டிக் காட்டும் முதலாம் சங்கீதத்தின் இரண்டாம் வசனம் இவ்விதமாக கூறுகிறது. “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அதில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.1:2). இவ்வுலகில் மனிதர் சந்தோஷமாக வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது தேவனுடைய வார்த்தையான வேதாகமம் என்பதை இவ்வசனம் அறியத்தருகின்றது.

இவ்வசனத்தில் வேதாகமம், “கர்த்தருடைய வேதம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “வேதம்” என்பதற்கு மூல மொழியில் “தோரா” (Torah) என்னும் எபிரேயச் சொல் உபயோகிக் கப்பட்டிருப்பதனால், இவ்வசனத்தில் வேதம் என்பது எதனைக் குறிக்கின்றது என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. “தோரா” என்பது “போதனை”, “அறிவுறுத்தல்”, “கட்டளை”, “சட்டம்” என்னும் அர்த்தங்களைக் கொண்டுள்ள ஒரு சொல்லாகும். பழைய ஏற்பாட்டில் இச்சொல் தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளைக் குறிப்பிடும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆரம்பகாலத்தில் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட கட்டளைகளே “தோரா” என்று அழைக்கப்பட்டன. பிற்காலத்தில் இது, பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களையும் குறிப்பிடும் பெயராக மாறியது. இதனால் முதலாம் சங்கீதம் எழுதப்பட்ட காலத்தில் கர்த்தருடைய வேதம் என்பது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களையே குறிப்பதாக சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், சங்கீதப் புத்தகத்திலுள்ள சகல சங்கீதங்களும் எழுதப்பட்டு, அவைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட பின்பே முதலாம் சங்கீதம் எழுதப்பட்டிருப்பதனால், பழைய ஏற்பாட்டின் ஏனைய புத்தகங்களையும், குறிப்பாக சங்கீதங்களையும் குறிப்பிடும் விதத்திலேயே முதலாம் சங்கீதத்தில் ‘கர்த்தருடைய வேதம்’ என்னும் சொற்பிரயோகம் உபயோகிக்கப்பட்டுள்ளதை அண்மைக்கால ஆராய்ச்சிகள் அறியத்தருகின்றன. உண்மையில், பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களைப் போல சங்கீதங்களையும் தேவ வார்த்தையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை வாசித்து தியானிக்கும்படியே முதலாம் சங்கீதத்தின் இரண்டாம் வசனம் அறிவுறுத்துகிறது.

ஆரம்ப காலத்தில் சங்கீதங்கள் ஆலய வழிபாடுகளில் பாடல்களாகப் பாடப்பட்டன. இதனால், இவை வெறும் பாடல்கள் அல்ல, சங்கீதங்களும் தேவவார்த்தை என்பதை அறியத்தரும் விதத்திலேயே “கர்த்தருடைய வேதம்” என்னும் சொற்பிரயோகம் முதலாம் சங்கீதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே சங்கீதங்கள் ஆரம்பத்தில் ஐந்து புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டன. மோசேயின் மூலமாக ஐந்து புத்தகங்களைக் கொடுத்த தேவன் தாவீதின் மூலமும் ஐந்து புத்தகங்களைக் கொடுத்துள்ளார் என்று அக்கால யூதர்கள் நம்பினார்கள்.

மேலும், அக்காலத்தில் பழைய ஏற்பாடு, எபிரேய மொழியில் “தோரா” (நியாயப் பிரமாணம் – அதாவது முதல் ஐந்து புத்தகங்கள்), “நபீம்” (தீர்க்கதரிசிகள் – அதாவது தீர்க்கதரிசிகள் எழுதிய சரித்திர மற்றும் தீர்க்கதரிசனப் புத்தகங்கள்), “கெத்துபிம்” (எழுத்தாக்கங்கள் – அதாவது கவிதை நடையில் எழுதப்பட்ட புத்தகங்கள்) என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவற்றில் சங்கீதங்கள் மூன்றாவது பகுதியிலேயே இருந்தன. இதனால், முதலிரு பகுதிகளைப் போலவே மூன்றாவது பகுதியும் அதிலுள்ள சங்கீதங்களும் தேவனுடைய வார்த்தை என்பதை அறியத்தரும்விதத்தில் “வேதம்” என்னும் சொல் முதலாம் சங்கீதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, பழைய ஏற்பாடு முழுவதும் “வேதம்” என்பதை இதன் மூலம் அறிந்துகொள்கின்றோம்.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழும் கிறிஸ்தவர்களாகிய நமக்குப் பழைய ஏற்பாடு மட்டுமல்ல, புதிய ஏற்பாடும் கர்த்தருடைய வேதமாக உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல், “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது”(2தீமோ.3:16) என்று கூறும்போது, அவர் பழைய ஏற்பாட்டை மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளார்.  “பவுலினுடைய காலத்தில் புதிய ஏற்பாடு முழுமைபெறாத நிலையில் இருந்ததினால், அவர் பழைய ஏற்பாட்டை மட்டுமே வேத வாக்கியமாகக் கருதினார்” என்னும் சிலரது கருத்து தவறானதாகும். ஏனெனில், லூக்கா 10:7லுள்ள இயேசு கிறிஸ்துவின் கூற்றைப் பவுல் 1தீமோத். 5:18இல் வேதவாக்கியம் என்றே குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, லூக்காவின் சுவிசேஷத்தையும் பவுல் வேதவாக்கியமாகக் கருதியுள்ளது தெளிவாகின்றது. மேலும், பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களை சபையில் வாசிப்பது போலவே தன்னுடைய நிருபங்களையும் சபையில் வாசிக்கும்படி பவுல் கூறுவதனால் (கொலோ.4:16, 1தெச.5:27, 2தெச.3:14), அவர் தன்னுடைய நிருபங்களையும் வேத வாக்கியமாகக் கருதியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. தன்னால் பிரசங்கிக்கப்பட்டவைகளைத் “தேவவசனம்” என்றும் (1தெச. 2:13), “பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளையே தான் பேசுவதாகவும்” (1கொரி.2:13) பவுல் குறிப்பிட்டுள்ளதால், அவருடைய நிருபங்களும் வேதவாக்கியமாகவே உள்ளது. பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களைப்போலவே பவுலினுடைய நிருபங்கள் அனைத்தும் வேத வாக்கியம் என்று 2பேதுரு 3:15-16 அறியத் தருகிறது. இதைப்போல பேதுரு எழுதிய வைகளும் “கர்த்தருடைய வசனமாகவே” உள்ளன (1பேது.1:25). எனவே, பழைய ஏற்பாடு மட்டுமல்ல, புதிய ஏற்பாடும் கிறிஸ்தவர்களின் வேதமாக உள்ளது.

தற்காலத்தில் சில கிறிஸ்தவர்கள், புதிய ஏற்பாட்டைக் கருத்திற்கொள்ளாத நிலையில் பழைய ஏற்பாட்டை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு கிறிஸ்தவ போதனைகளை உருவாக்குவது மாபெரும் தவறாகும். பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்திலேயே வியாக்கியானம் செய்யப்பட வேண்டும். ஏனெனில், பழைய ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட தேவனுடைய வெளிப்படுத்தல் புதிய ஏற்பாட்டிலேயே முழுமையும் முடிவும் பெற்றது. இதனால், புதிய ஏற்பாட்டைக் கருத்திற்கொள்ளாத நிலையில் பழைய ஏற்பாட்டை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் உபதேசங்கள் முழுமை பெறாதவைகளாகவும் பிழையானவைகளாகவும் உள்ளன. இதற்கு சமாரியர்களுடைய வழிநாட்டுமுறை சிறந்த உதாரணமாக உள்ளது. இவர்கள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை மாத்திரமே வேதவாக்கியமாக ஏற்றுக்கொண்டிருந்தனர். வேதாகமத்தில் உள்ள ஏனைய புத்தகங்களை இவர்கள் வேதவாக்கியமாகக் கருதவில்லை. இதனால், இவர்களுடைய வழிபாடு தவறானதாயிருந்ததை இயேசுகிறிஸ்து சமாரியப் பெண்ணுக்குச் சுட்டிக்காட்டினார். யோவான் 4:22இல், “நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்” என்னும் இயேசு கிறிஸ்துவின் கூற்றானது, “யாரை வழிபடுகிறோம் என்பதையே அறியாத நிலையில் சமாரியர்களுடைய வழிபாடு இருந்துள்ளதையே சுட்டிக்காட்டுகிறது”.

பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதியை அறியாதவர்களாக இருந்த சமாரியர்கள், தேவனை அறியாதவர்களாகவும், அவரை சரியான விதத்தில் வழிபடாதவர்களாகவும் இருந்தனர். உண்மையில், தாங்கள் எருசலேமிலேயே தேவனை வழிபடவேண்டும் என்பதையும், எருசலேம் நகரத்திலிருக்கும் ஆலயத்திலேயே கர்த்தருடைய மகிமை இறங்கியது என்பதையும் அறியாதவர்களாக (1ராஜா. 8:10-11, 2நாளா.5:13-14, 7:1-3), தாங்கள் வேதவாக்கியமாக ஏற்றுக்கொண்டிருந்த பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, தேவன் நியமிக்காத இடத்தில் அவரை வழிபட்டு வந்ததோடு, தங்களுடைய மார்க்கமே சரியானது என்றும் வாதிட்டு வந்தனர்.

மேலும் புதிய ஏற்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத தற்கால யூதர்களுடைய மார்க்கமும் தவறானதாகவே உள்ளது. இதைப் போலவே சில கிறிஸ்தவர்களும் புதிய ஏற்பாட்டைக் கருத்திற்கொள்ளாமல், பழைய ஏற்பாட்டை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு குழப்பமும் முரண்பாடுமுள்ள பிழையான உபதேசங்களை உருவாக்கி வருகின்றனர். இவர்கள், பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணக் கட்டளைகள் இயேசுகிறிஸ்துவின் முதல் வருகை வரைக்குமானது (லூக்.16:16) என்பதை அறியாதவர்களாக இருப்பதனால், அவை தற்கால கிறிஸ்தவர்களுக்கும் அவசியமானது என்று கருதுகின்றனர்.

மேலும், புதிய ஏற்பாட்டுக்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் விசுவாசியுடன் எப்பொழுதும் இருப்பவர் (யோவா.14:16) என்பதை அறியாதவர்களாக, பழைய ஏற்பாட்டு வசனங்களை ஆதாரமாகக்கொண்டு, அவர் ஒவ்வொரு ஆராதனை வேளையின்போதும் விசுவாசியிடம் வந்து போகிறவர் என்னும் எண்ணத்துடன் செயல்படுகின்றனர். இதைப் போலவே, விசுவாசிகளுக்கு வியாதிகள் ஏற்பட்டால், அவர்கள் தங்களுடைய சபையின் மூப்பர்களை வரவழைத்து ஜெபிக்கும் புதிய ஏற்பாட்டு முறையைக் கருத்திற்கொள்ளாமல் (யாக்.5:13-16), பழைய ஏற்பாட்டுக் காலத்தைப்போல பிரபலமான ஊழியர்களைத் தேடிப்போகின்றனர். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அரசர்கள், ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் என்போருக்கு மட்டுமே பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருந்ததினால் மக்கள் தேவ உதவியைப் பெறுவதற்கு இவர்களிடம் வரவேண்டியதாயிருந்தது. ஆனால், தற்காலத்தில் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் சகலருக்கும் தேவன் தம்முடைய ஆவியானவரைக் கொடுப்பதனால் (யோவேல்2:28, அப்.2:16-17, எபே.1:13, கலா.4:6) விசுவாசிகளே நேரடியாகத் தேவனிடம் தொடர்பு கொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றனர் (எபேசி.2:18, 3:12, ரோம.5:1-2).

இதைப்போல, புதிய ஏற்பாட்டைக் கருத்திற்கொள்ளாத பல தவறுகள் தற்கால கிறிஸ்தவத்தில் உள்ளன. பழைய ஏற்பாடானது எப்பொழுதும் புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்திலேயே வியாக்கியானம் செய்யப்பட வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்களையும், மேலதிக விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டே பழைய ஏற்பாட்டை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

பழைய ஏற்பாடு மட்டுமல்ல, அல்லது நமக்கு விருப்பமான பகுதிகள் மட்டுமல்ல, முழு வேதாகமமும் கிறிஸ்தவர்களாகிய நமது வேதமாக உள்ளது. இதுவே ஆனந்தமான வாழ்வுக்கு அவசியமான வழியைக் காட்டும் அற்புதமான புத்தகமாக உள்ளது. முதலாம் சங்கீதத்தின் இரண்டாம் வசனத்தில் மூன்று காரியங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்துபார்ப்போம்.

1. வேதத்தில் மகிழ்ச்சியாயிருத்தல்

கர்த்தருடைய வேதத்தில் நாம் “பிரியமாயிருக்க” வேண்டும் என்று முதலாம் சங்கீதம் கூறுகிறது. “பிரியம்” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் “மகிழ்ச்சி” என்னும் அர்த்தமுடையது. இதனால் புதிய மொழிபெயர்ப்புகளில் “கர்த்தருடைய வேதத்தில் மகிழ்ச்சியாய் இருத்தல்” என்னும் அர்த்தத்திலேயே இரண்டாம் வசனம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில், பழைய வேதாகமங்களிலும் மகிழ்ச்சி என்னும் அர்த்தமுடைய “டிலைட்” (delight) என்னும் சொல்லே உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் கர்த்தருடைய வேதத்தில் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும். அதாவது, வேதாகமத்தை நாம் சந்தோஷத்துடன் வாசிப்பவர்களாகவும், அதன் கட்டளைகளை விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் கைக்கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும்.

தற்காலத்தில் “தாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று பெருமிதங்கொள்ளும் பலருக்கு வேதாகமம் கசப்பானதாகவும், வேதப்படிப்பு கடினமானதாகவும் உள்ளது. ஆனால், இது கிறிஸ்தவத்தின் தன்மைக்கே முரணான காரியமாகும். உண்மையில், தேவனை அறியாதவனுக்கே அவருடைய வார்த்தை கசப்பான தாகவும் புரிந்துகொள்ளக் கடினமானதாகவும் இருக்கும். “ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்” (1கொரி.2:14). ஆனால் மெய்க்கிறிஸ்தவன் கர்த்தருடைய வேதத்தை விரும்புகிறவனாகவும், அதைப் படிப்பதில் மன மகிழ்ச்சியடைபவனாகவுமே இருப்பான். அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுவதுபோல, ஒருவன் “கர்த்தர் தயையுள்ளவரென்பதை .. ருசிபார்த்ததுண்டானால் … அவன் திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையுள்ளவனாக இருப்பான்” (1பேது.2:1-3). இரட்சிப்பின் அனுபவத்தை (அல்லது கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தைக்) குறிப்பிடவே “கர்த்தருடைய தயவை ருசிபார்த்தல்” என்று பேதுரு இவ்வசனத்தில் எழுதியுள்ளார்.

இதனால்தான், “இப்படியிருக்க” என்று பேதுரு இவ்வசனத்தை ஆரம்பித்துள்ளார். “இப்படியிருக்க” என்பது, இதற்கு முன் உள்ள வசனங்களின்படி, மறுபடியும் ஜெனிப்பிக்கப் படுவதையேக் குறிக்கின்றது (1பேது.1:23-25). எனவே, மறுபடியும் ஜெனிப்பிக்கப்பட்டவர்கள் (அதாவது, மறுபடியும் பிறந்தவர்கள்) நிச்சயம் கர்த்தருடைய வேதத்தின்மீது வாஞ்சையுள்ளவர்களாகவே இருப்பார்கள். இதனால்தான், புதிதாகப் பிறந்த குழந்தை எவ்விதமாகப் பாலின்மீது வாஞ்சையுடன் இருக்குமோ, அவ்விதமாக இரட்சிக்கப்பட்டவர்கள் கர்த்தருடைய வேதத்தின்மீது வாஞ்சையுள்ளவர்களாக இருப்பார்கள் என்று பேதுரு குறிப்பிட்டுள்ளார். இவ்வசனத்தில் “வாஞ்சை” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், “தீவிரமான அல்லது கடுமையான ஆசை” என்னும் அர்த்தமுடையது.

உண்மையில், வேதத்தைப் படிக்க வேண்டும் என்னும் தீவிரமான ஆசை ஒருவனுக்கு இல்லாவிட்டால் அவன் இன்னும் இரட்சிக்கப்படாதவனாகவே இருக்கின்றான். பேதுரு கூறுவதுபோல, “அவன் கர்த்தருடைய தயவை அனுபவரீதியாக அறியாதவனாகவே” இருக்கின்றான். கிறிஸ்தவ சபைகளில் ஏனைய சகல காரியங்களிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டும், வேதத்தைப் படிப்பதில் மாத்திரம் ஆர்வமற்றவர்களாக இருப்பவர்கள் இன்னும் இரட்சிக்கப் படாதவர்களாகவே உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

கர்த்தருடைய வேதம் மனிதருக்கு மெய்யான சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதற்கு சங்கீதங்களை எழுதியவர்களுடைய வாழ்வு சிறந்த உதாரணமாக உள்ளது. 19ஆம் சங்கீதத்தை எழுதியவர், கர்த்தருடைய வேதம் தன்னுடைய “இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதாய் இருப்பதாகக்” குறிப்பிட்டுள்ளார் (சங்.19:8). “உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே நான் அழிந்து போயிருப்பேன்” (சங்.119:92) என்பது 119ஆம் சங்கீதத்தை எழுதியவரின் அனுபவமாயுள்ளது. இதற்குக் காரணம், “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, அவர் தேவனுடைய வார்த்தையில் களிகூர்ந்துள்ளார் (சங்.119:14). ஆனால் தற்காலத்தில் பெரும்பாலான மனிதருடைய நிலைமை இதற்கு முரணானதாகவேயுள்ளது. அவர்கள் தேவனுடைய வார்த்தையில் அல்ல, உலக செல்வத்திலேயே களிகூருகிறவர்களாக இருக்கின்றனர். ஆனால், உலக செல்வம் தரும் சந்தோஷம் தற்காலிகமானதாகவும், அர்த்தமற்றதாகவுமே இருப்பதை திரளான செல்வங்களை வைத்திருந்த சாலொமோனுடைய வாழ்வு அறியத்தருகின்றது. அவனது அரண்மனையிலிருந்த பெரும்பாலான பொருட்கள் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன.

அக்காலத்தில் சாலொமோனே உலகின் முதலாவது செல்வந்தனாக இருந்தான் (1ராஜா.10:14-23). அப்படியிருந்தும், அவன் தன்னுடைய வாழ்க்கையைப்பற்றி கூறும்போது, “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை” என்று விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார் (பிரச.2:11). உலக வாழ்க்கைக்குப் பணம் அவசியம் என்பது உண்மை என்றாலும், மானிட வாழ்க்கைக்குப் பணம் மட்டும் போதாது. பணம் முழுமையானதும், நிலையானதுமான சந்தோஷத்தைத் தராது.

எனவே நாமும் சங்கீதக்காரனைப்போல, “கர்த்தருடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும்” (சங்.119:16). வேதத்தை ஆராய்ந்து படிப்பது நமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தவேண்டும். நாம் பணத்தைவிட தேவனுடைய வார்த்தையை அதிகம் நேசிப்பவர்களாகவும், அதில் மனமகிழ்வடைபவர்களாகவும் இருக்கவேண்டும்.