விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜனவரி-பிப்ரவரி 2016)

3. விசுவாசிகளின் எதிரிகளும், அவர்களுடைய தாக்கும் உத்திகளும் (எபேசியர் 6:11, 12,16)

சத்துருவை அறிந்துகொள்ளுங்கள்

யுத்தம் செய்வதில் அடிப்படையான முக்கிய காரியங்களில் ஒன்று, நீங்கள் யுத்தம் செய்யப்போகிற உங்கள் சத்துருவைப் பற்றி அறிந்துகொள்ளுவதாகும். சாத்தான் யார்? அவனுடைய உபாய தந்திரங்கள் எவை? என்று அறியாமல் அவனுடன் ஆவிக்குரிய போராட்டம் நடத்துவோமானால் நாம் வெற்றியடைவோம் என்று எதிர்பார்க்க முடியாது.

சாத்தான் ஒரு சக்தி மட்டுமல்ல. அவன் ஆளத்துவம் உள்ளவன். எனவே அவன் பேசுகிறான், திட்டமிடுகிறான், வஞ்சிக்கிறான், வெறுக்கிறான், யுத்தம் செய்கிறான். இருந்தபோதிலும் பலர் சாத்தான் ஆளத்துவம் உள்ள ஒரு நபர் என்பதை நம்ப மறுக்கிறார்கள். அவன் ஒரு தீயசக்தி என்றுமட்டும் நினைக்கிறார்கள் அல்லது தீமையின் ஒரு அடையாளம் என்று கருதுகிறார்கள். இந்தத் தவறான நம்பிக்கை கூட அவன் அவிசுவாசிகளை வஞ்சிப்பதற்கு உதவியாயிருக்கிறது. சாத்தான் தன்னுடைய கிரியைகளை மறைப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு தந்திரம் மக்களிடம் ‘சாத்தான்’ என்று ஒருவன் இல்லை என்ற எண்ணத்தை வலுப்பெறச் செய்வதே. மானிடர்களிடையே இடைபட்டுக் கொண்டிருக்கும் முக்கிய எதிரி, ‘சாத்தான்’ என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் ஒரு தவறான “எல்லாம் நன்மைக்கே” என்னும் எண்ணம் ஏற்படுகிறது. சாத்தான் திறமையாகத் தன்னை மறைத்துக்கொள்வதில் வெற்றியடைந்துள்ளான். எனவே சிலர் தங்கள் நற்கிரியைகள் மூலம் ஆயிரம் வருஷ அரசாட்சிக்குள் பிரவேசித்துவிடலாம் என்று நம்புகிறார்கள். எனினும் சமாதானமான ஆயிரம் வருஷ அரசாட்சியை இந்த உலகம் அறியுமுன்னே, இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வந்து, சாத்தானைப் பாதாளத்தில் தள்ளி அடைக்கவேண்டும் (வெளி.20:2).

சாத்தானை மேற்கொள்வதற்குரிய ஒரே வழி, இயேசு கல்வாரியில் செய்து முடித்த, சாத்தானின் மீது ஜெயம்கொள்ளும் கிரியையின் மூலம் தாக்குவதாகும். சாத்தானுக்குத்தான் ஒரு தோற்கடிக்கப்பட்ட எதிரி என்பது தெரியும். இயேசு கல்வாரிச் சிலுவையிலே செய்து முடித்துச் சம்பாதித்தவைகள் மூலம் தன் தலை நசுக்கப்பட்டதை அவன் அறிவான். உபத்திரவ காலத்தில் விசுவாசிகள் “…ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்”(வெளி.12:11). இப்பொழுதும் சாத்தானை வெற்றிகொள்வதற்கு அடிப்படை இதுவே. ஆனால் நம்மால் அந்த வெற்றியை அடைய முடியாது. கிறிஸ்துவுக்குள் நமது இடத்தைப் பெற்று அவருடைய துணையுடன் நாம் போராட்டம் செய்யும்போதுமட்டுமே நம்மால் சாத்தான் மேல் ஜெயங்கொள்ள முடியும்.

வேதாகமம் சாத்தானைக்குறித்து நிறைய காரியங்களைக் கூறுகிறது. சாத்தானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்கள் அவனது தன்மைகளை வெளிப்படுத்துகின்றன. “ஆகாயத்து அதிகாரப் பிரபு” என்பது சாத்தானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெயர் (எபே.2:2). சாத்தான் தனது வல்லமையை முதலாம், இரண்டாம் வானங்களில் காட்டுவதன் அடிப்படையில் இப்பெயர் வந்திருக்கலாம்.

மேலும் சாத்தான் “இந்த உலகத்தின் அதிபதி” என்றும் அழைக்கப்படுகிறான் (யோவான் 12:31). அதாவது சாத்தான் இந்த உலகத்தின் சிங்காசனத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறான். சாத்தானுக்கு இந்த உலகத்தில் உள்ள அதிகாரம் 1யோவான் 5:19இல் காணப்படுகிறது: “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்”.

சாத்தான் “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” என்று அறியப்படுகிறான் (2கொரி. 4:4). இது அவன் இந்த உலகத்தார் அவனை வணங்க வேண்டும், ஆராதிக்க வேண்டும் என்று விரும்புகிறான், ஏற்றுக்கொள்ளுகிறான். நற்செய்தி அறிவிக்கப்படாத இடத்தில் மக்கள் பயம் காரணமாகச் சாத்தானை வழிபடுகிறார்கள்.

சாத்தானின் இன்னொரு பெயர் “குற்றஞ் சாட்டுகிறவன்” “… தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும் பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப் போனான்” (வெளி.12:10). யோபுவின் புத்தகத்தில் முதல் இரண்டு அதிகாரங்களிலும், சாத்தான் எவ்வாறு பரிசுத்தவான்கள் மீது குற்றஞ்சாட்டுகிறான் என்று காணலாம். இவ்விதம் குற்றஞ்சாட்டுவதன் மூலம் தேவனுடைய பிள்ளைகளைச் சாத்தான் கெடுக்க முயற்சிக்கிறதைக் காணலாம். சாத்தான் முதலில் தேவனுடைய பிள்ளைகளைப் பாவம் செய்யத் தூண்டுவான். பின்னர் தேவனுக்கு முன்பாக அவர்கள் செய்த பாவத்தைச் சொல்லிக் குற்றஞ்சாட்டுவான். இயேசுகிறிஸ்து நமக்காக வாதாடுகிறவராக தேவனுக்கருகில் நிற்பதால் நாம் பயப்படத் தேவையில்லை. 1யோவா.2:1இல், “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார்” என்று பார்க்கிறோம். ஒரு வழக்கறிஞரைப்போல இயேசு நமக்காக வாதாடுகிறார். இயேசு சிலுவையில் சம்பாதித்த புண்ணியங்களின் அடிப்படையில் நமக்காக வாதாடுகிறார். வசனம் 2ஐக் கவனியுங்கள்: “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்”.

நாம் பாவம் செய்யும்போது, நாம் நம்முடைய பாவத்தை தேவனிடத்தில் அறிக்கை செய்யவேண்டும். 1யோவான் 1:9 சொல்லுகிறது: நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் அவற்றை மன்னிப்பதாக தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”. தேவன் நம்முடைய பாவத்தை மன்னிக்கிற அடிப்படை, இயேசுகிறிஸ்து ஏற்கெனவே நம்முடைய பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செலுத்தித் தீர்த்துவிட்டார் என்பதே. இவ்விதமாக நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யும்போது, நாம் பரலோக பிதாவோடு மறுபடியும் ஐக்கியம் கொள்ளும் சிலாக்கியத்தைப் பெறுகிறோம்.

சாத்தானுடைய தந்திரங்கள்

சாத்தானைக் குறித்துப் பவுல் கொரிந்தி யருக்கு எழுதும்போது, அவர்களுக்கு நினைவூட்டியது: “.. அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” (2கொரி.2:11). ஆனால் இன்றைய நாளில் விசுவாசிகளுக்குச் சாத்தானின் தந்திரங்கள் தெரியாது போல் இருக்கிறது. எனவே சாத்தானின் பலப்பல தந்திரங்களை இங்கு காண்போம்.

1. மனதைக் குருடாக்குதல்

சாத்தான் அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்குகிறான். 2 கொரி.4:4இல் இப்படிப் பார்க்கிறோம்: “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.”

கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை மக்கள் உணராமல் இருக்கவேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். தான் மனதைக் குருடாக்கிய மக்களை தனது அடிமைத்தனத்துக் கொள்ளாதபடிக்குச் சாத்தானைக் கட்டி வைக்கும்படி ஜெபிப்பதில் நாம் கிறிஸ்துவோடு ஒத்துழைக்கவேண்டும். ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபடும் நமக்கு இது ஒரு முக்கிய பொறுப்பாகும்.

2. சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷம் தரித்துக்கொள்ளுதல்

“அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்” (2 கொரி.11:13-15).

பிரசங்க பீடங்களில் நின்றுகொண்டு கிறிஸ்துவின் கிருபையைக் குறித்துப் பிரசங்கிக்காத பலர் இன்று உண்டு. அதற்குப் பதிலாக அவர்கள் கிரியைகளைக் குறித்த நற்செய்தியைக் கற்பிக்கிறார்கள். மக்கள் தாங்கள் உழைப்பது தங்களுக்கு நல்லது என்று நினைப்பதால் இப்படிப்பட்ட போதனை நியாயமானது போல் தோன்றுகிறது. இப்படிப்பட்ட போதனை மூலம் சாத்தான் தன்னை ஒரு ஒளியின் தூதனாக மாற்றிக்கொண்டிருக்கிறான். அதன் மூலம் அவன் அவிசுவாசிகளை தேவ இராஜ்யத்தில் சேரவிடாமல் வழிதவறச் செய்ய முடியும்.

3. கீழ்ப்படியாமை

எபேசியர் 2:2 வசனத்தின் மூலம் சாத்தான் மக்களைக் கீழ்ப்படியாமைக்கு வழிநடத்துகிறான் என்று அறிகிறோம்.

“…நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்”.

4. வஞ்சித்தல்

சாத்தானின் முக்கியமான தந்திரம் இவ்வுலகை வஞ்சிப்பதாகும். இது வெளி.12:9 வசனத்தில் தெளிவாகத் தெரிகிறது “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்”.

வரப்போகும் உபத்திரவ காலத்தில் தோன்றப் போகிற அந்திக் கிறிஸ்துவைக் குறித்து 2தெச. 2:9ஆம் வசனம் சொல்லுவதைக் கவனியுங்கள்: “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்”. அவன் பொய்யான அற்புதங்கள் மூலம் உபத்திரவ காலத்தில் இந்த உலகத்தை வஞ்சிப்பான்.

5. சாத்தானின் கண்ணி

பவுல் தீமோத்தேயுவிடம் பேசும்போது சாத்தானின் கண்ணியில் அகப்பட்டவர்களைக் குறித்துப் பேசுகிறார்:

“எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத் தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்” (2தீமோ.2:25,26).

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்