தேவனுடைய சித்தத்தை அறிவதற்கான சிறந்த வழி!

சகோ.டேவ் ஒட்லி
(மே-ஜுன் 2016)

தேவன் தம்முடைய சித்தத்தை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் உங்கள் வாழ்வுக்கு ஒரு திட்டம் வைத்துள்ளார். அதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறார். அந்த திட்டத்தை அவர் வேண்டுமென்றே மறைத்து வைத்துக்கொண்டு, அதை உங்கள் வாழ்வில் நீங்கள் செயற்படுத்த வேண்டும் என்று விரும்புவாரா? ஒரு கட்டிட வடிவமைப்பாளர் ஒரு கட்டிடத்தின் வரைபடத்தை வரைந்து வைத்துக்கொண்டு அதை கட்டிடம் கட்டுபவர்களுக்கு காட்டாமல் இருப்பாரா? ஒரு தொழிலதிபர் தன் தொழில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தபின், அவர் அலுவலக பணியாளர்களிடம் அதைப் பற்றி கூற மறுக்க முடியுமா? கால்பந்து பயிற்றுவிப்பவர் அந்த விளையாட்டில் நூதன முறைகளைக் கண்டுபிடித்து, அதனை விளையாடும் மக்களுக்குக் கூறாமல் இருக்க முடியுமா? முடியாது அல்லவா.

தேவன் தமது சித்தத்தை நாம் அறியவேண்டுமென விரும்புகிறார்:

அநேக கிறிஸ்தவர்கள் ஆண்டவர் தமது சித்தத்தை அவர்களுக்கு மறைக்கிறார் என்று எண்ணுகின்றனர். ஏதோ அவர் தமது சித்தத்தைப் பொதிந்து பரலோகத்திலிருந்து தொங்க விட்டதுபோல் தோன்றுகின்றது. ஒவ்வொரு முறையும் அதை எட்டிப்பிடிக்கும் வேளையில், அவர்கள் கைக்குத் தப்பி அது மேலே போவது போல எண்ணுகின்றனர். இது உண்மையா? தேவன் தமது திட்டத்தை மனிதருக்குக் கிட்டாத ஒன்றாக மறைத்து வைக்க விரும்புகிறாரா? “கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” என்று எபேசியர் 5:17இல் வாசிக்கின்றோம்.

கொலோ.1:9லும் இப்படியாக வாசிக்கின்றோம்: “உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்..” தேவனுடைய திட்டத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதை வேதம் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது. அப்படியிருந்தும், அவரது சித்தத்தை அறிந்துகொள்வது ஏன் நமக்குக் கடினமாக தோன்றுகின்றது?

ஒருவேளை நீங்கள் தவறானவைகளைத் தேடி இருக்கலாம். உங்கள் முழு வாழ்க்கைக்கான திட்டத்தை தேவன் வெளிப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். உங்கள் பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள எல்லா சிறிய காரியங்களுக்குமான ஒரு வரைபடத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். சங்.139:16 இல் “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” என்று வாசிக்கின்றோம். தேவன் உங்கள் முழு வாழ்வுக்கும் ஒரு பெரிய திட்டம் வைத்திருப்பது உண்மை. ஆனால் அதில் சிறிய பகுதியைத்தான் வெளிப்படுத்தி நடத்துவார். ஒரு முழு வரைபடத்தை அல்ல; ஒரு சுருள்தான் உங்களுக்கு காட்டப்படும். அந்தந்த நேரத்துக்கு உங்களுக்கு தேவைப்படுவதை வெளிப்படுத்துவார்.

தேவனுடைய சித்தத்தில் எவ்வளவாக உங்களுக்கு தேவைப்படும்? நீங்கள் இன்று என்ன செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? நாளை என்ன எதிர்பார்க்கிறார் என்று உணரமுடியுமா? உங்கள் எதிர்காலத்திற்கு நீங்கள் ஏதாவது திட்டமிட்டு இருக்கிறீர்களா? உங்கள் திட்டங்கள் ஒருவேளை தவறாக இருந்தால், தேவன் அதை சரிப்படுத்துவார் என்ற விசுவாசம் உங்களுக்கு இருக்கின்றதா? ஒருவேளை உங்கள் முழு வாழ்வுக்குமான தேவனுடைய முழு திட்டமும் உங்களுக்குத் தெரிந்தால், ஒரு நாளைக்கு மேலாக உள்ள அவர் திட்டத்தை உங்களுக்கு செயல்படுத்த முடியுமா?

காட்டு லீலி புஷ்பங்கள், பறவைகள் பற்றி ஆண்டவர் கூறிய உவமையை நினைவு கூருங்கள் (மத்.6:25-34). பரமபிதா அவைகளைப் பாதுகாத்து போஷிப்பதால் அவைகள் கவலைப்பட தேவையில்லை என்று இயேசு விளக்கினார். தேவன் பூக்களையும் பறவைகளையும் பாதுகாப்பாரானால் நிச்சயமாக உங்களைப் பற்றி கவலையில்லாமலிருப்பாரா? உங்கள் தேவைகளை அவர் அறிவார். அவைகளைச் சந்திப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

பிலிப்பியர் 4:19 இல் இப்படியாக வாசிக்கின்றோம்: “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்”.

ஆகவே உங்களுக்குத் தெரியவேண்டிய அவரின் சித்தத்தை அவர் வெளிப்படுத்துவார் என்று விசுவாசியுங்கள்.

தேவன் ஒரு வழியை வகுத்திருக்கின்றார்

அவருடைய சித்தத்தை அறிய தேவன் ஒரு வழியை வைத்திருக்கின்றார். விசுவாசிகளில் தங்கும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் துணையாகவும் வழிகாட்டியாகவும் விரும்புகிறார். அவரை அனுமதிக்கும்போது, வழிகாட்ட தவறமாட்டார். ஆனால் அவர் தானாகவே யார் வாழ்விலும் குறுக்கிடமாட்டார். உங்கள் ஒப்படைப்பிற்கு அவர் காத்திருக்கிறார். நீங்கள் தேவனுக்கு உங்களை ஒப்படைந்திருந்தால் தாவீதைப்போல “என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்” (சங்.31:3) என நீங்களும் கூறலாம்.

விசுவாசிகள் சில நேரங்களில் வேறு ஒரு தவறும் செய்கின்றனர். தேவன் தமது சித்தத்தை ஒரு அதிசயமான வழியில் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். தேவன் விரும்பினால் அதை அவர் செய்யமுடியும். ஒரு தூதன் மூலம் பிலிப்புவை வனாந்தரத்திற்கு அனுப்பினார். அதன் விளைவாக எத்தியோப்பியாவிலிருந்து ஒரு மனிதன் கிறிஸ்தவனாக மாறினார் (அப்.8:26-39). வனாந்தரத்தில் இஸ்ரவேல் மக்களை வழி நடத்த தேவன் மேகஸ்தம்பத்தையும், அக்கினி ஸ்தம்பத்தையும் உபயோகித்தார் (யாத். 13:21). தேவன் தம்முடைய சித்தத்தை இயற்கைக்கு அப்பாலுள்ள வழிகள் மூலம் வெளிப்படுத்த முடிந்தாலும், இப்போது அவர் பொதுவாக அப்படி செய்வதில்லை. அப்படி ஒரு மனிதனின் வாழ்வில் அசாதாரண நிகழ்வு மூலம் தேவசித்தம் வெளிப்பட்டாலும் அவன் ஆவியில் முதிர்ந்தவன் என்று கூறமுடியாது. யேசபேலைவிட்டு ஓடும்போது எலியா ஆவிக்குரிய வாழ்வின் உச்சக்கட்டத்தில் இல்லை (1இரா.19). ஒரு வனாந்தரத்தில் ஒளிந்து கொண்டு கெபிக்குள் வாழ்ந்தான். இஸ்ரவேலில் நடந்தவைகளைக் கண்டு சோர்ந்து போயிருந்தான். அப்போது தேவன் தன்னை பெருங்காற்று, பூமி அதிர்ச்சி, நெருப்பு மூலம் வெளிப்படுத்தினார். ஆனால் எலியாவோடு பேசும்போது ‘மெல்லிய’ குரலில் பேசினார் (1இராஜா.19:12). தேவனால் பெரிய அற்புதங்களை செய்யமுடியும். ஆனால் மனிதனை வழிநடத்தும்போது தனிப்பட்ட வழியில் ஆரவாரம் இல்லாமல், அமைதியாக செயல் படுகின்றார்.

பொறுமை தேவை

கிறிஸ்தவர்கள் இன்னுமொரு தவறையும் செய்கின்றனர். தங்களது நோக்கத்தைப் போலவே தேவனுடைய பார்வையும் இருக்கும் என்று எண்ணுகின்றனர். அவர்கள் ஒன்றை அதிக முக்கியமாக எண்ணினால் தேவனும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதைக் குறித்தாவது மிகவும் வேகத்துடன் செயல்படும்போது, தேவனும் அப்படியே இருக்கவேண்டும் என எண்ணுகின்றனர்.

ஒருவேளை நீங்கள் போதகராகவோ மிஷனரியாகவோ ஆக விரும்பினால், அதை அடைவதற்கு வேண்டிய பயிற்சிகளைச் சீக்கிரமாக முடிக்க விரும்புவீர்கள். உங்கள் குறிக்கோள் மிகவும் சிறப்பானது. தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்புவது மிகவும் சரியான ஒன்றாகும். ஆனால் ஒருவேளை நீங்கள் கிறிஸ்தவ ஊழியராகவோ அல்லது தேவன் உங்களுக்காக நியமித்திருக்கும் பணியில் பணியாளராக செயல்படுவதற்கு முன்னதாக, நீங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியடைவதை தேவன் விரும்பலாம் அல்லவா?

நீங்கள் விரும்பும் பணிக்கு ஆயத்தப்படும் முயற்சியில் ஆவியில் முதிர்ச்சியடைவது தேவன் பார்வைக்கு முக்கியமான பங்காக தோன்றலாம். பொறுமை தேவைப்படுகின்றது. முதிர்ச்சியும் பக்குவமும் அடைவதற்கு அதிக காலம் தேவை. தேவன் குறுக்கு வழிகளை ஏற்பதில்லை. நீங்கள் பக்குவம் அடையும் வரைக்கும் அவர் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. சிறு குழந்தையாக அவர், “பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது” (லூக்.2:40) என்று வாசிக்கிறோம்.

தேவன் ஒருவேளை எப்படி பக்குவம் அடைய உதவுகிறார் என்பதற்கு ஒரு முன் மாதிரி மோசே ஆவார். பார்வோனின் அரண்மனையில் 40 வருடங்களும், மீதியானியர் தேசத்தில் 40 வருடங்களும் அவர் இருந்தார். அவர் மக்களை வழிநடத்துவதற்கு முன் இந்த அனுபவத்தை அவர் கடந்துசென்றார். சில நேரங்களில் அவர் தனது வாழ்க்கை வீணாகின்றதே; தான் தேவனுக்காக எதையும் சாதிக்க முடியாதே என்று எண்ணியிருக்கலாம். ஆனால் தேவன் குறித்திருந்த வேளையில் எகிப்திற்கு திரும்பிய மோசே, மக்களை கானான் தேசத்திற்கு வழிநடத்தினார்.

அப்போஸ்தலர் பவுலும் ஆவியில் முதிர்ச்சியடைய காத்திருந்தார். அவர் ஊழியத்தை ஆரம்பிக்குமுன் அரேபியாவில் ஜெபம், தியானம், படிப்பு என்று மூன்று வருடங்களைச் செலவழித்தார் (கலா.1:17).

ஆயத்தப்படுத்தப்பட விருப்பம்

தேவனுடைய சித்தம் செய்வதை நீங்கள் விரும்பினால், அவர் அதற்கு உங்களை ஆயத்தப்படுத்துவதை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் அவர் விரும்புவதை அறிந்து கொள்ளுமாறு, தினமும் அவரோடு நேரத்தை செலவிட உங்களுக்கு விருப்பமா? நீங்கள் தேவனை நன்றாக அறிய அறிய அவர் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறார் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள். அவரோடு ஜெபத்தில் பேசுங்கள். வேத தியானம் மூலம் அவரைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவீது, “கர்த்தருக்கு காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு” (சங்.27:14) என்கிறார். தேவனோடுகூட ஐக்கியத்தில் வளர நாம் செலவிடும் நேரம் வீணானதோ பிரயோஜனமற்றதோ இல்லை. தேவனுடைய சித்தத்தைக் குறித்து நாம் செய்யும் பெரிய தவறுகள் இதனால் தவிர்க்கப்படுகின்றன. தேவனுடைய சித்தத்திற்கு நாம் செயல்படமுடியும். தேவன் குறித்த நேரங்கள் நம் வாழ்வில் சிறந்தவை.

ஒருவேளை நீங்கள் தேவனுக்கு காத்திருக்க தேவையில்லை என்ற முடிவு எடுத்திருக்கலாம். நீங்களே உங்கள் வாழ்வில் சில முடிவுகளை எடுத்து, அவைகளை சீக்கிரமாக செய்துமுடிக்க முயற்சி செய்யலாம். நீங்கள் எதை இழப்பீர்கள்? உங்கள் இழப்பு நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆகும். தேவன் இல்லாமல் தங்கள் வாழ்வை வாழ முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள் அநேக காரியங்களை இழந்துபோகின்றனர். இயேசுகிறிஸ்து “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா. 10:10) என்றார். பரிபூரண ஜீவன் – அவர் அதை நமக்கு ஆயத்தமாக வைத்திருக்கிறாரே! அப்படிப் பட்டப் பரிசை யாரால் புறக்கணிக்க முடியும்?

இயேசு கொடுக்கும் மற்ற காரியங்களை மனதின் முன் கொண்டு வாருங்கள். உள்ளான சமாதானம் அவர் கொடுப்பாரே. குழப்பமான நாட்களில் வாழும் மக்களுக்கு அது ஒரு சிறந்த அரிதான பொருள் அல்லவா? மேலும், நிறைவான நிலையான மகிழ்ச்சியும் அவரிடத்தில் உண்டு. நம் சூழ்நிலைகளைச் சாராத மகிழ்ச்சியையும் திருப்தியான வாழ்வையும் இயேசு தருகின்றார். இயேசு உங்கள் ஆவிக்குரியத் தேவைகளையும் சந்திப்பதால் திருப்தியான வாழ்க்கையை வாழலாம்.

கிறிஸ்தவ வாழ்க்கை மேலும் சில சலுகைகளையும் அளிக்கின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக கிறிஸ்தவர்களில் அநேகர் தங்கள் வாழ்வை பூரணமான ஒன்று என்று புரிந்து கொள்ளவில்லை. சிலருடைய வாழ்வு அலுப்பும் குழப்பமும் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. மேகங்களுக்கு மேலே பறந்து செல்வதற்குப் பதில் கடினமான தரையில் தவழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஏன் இப்படி? இயேசு பரிபூரண ஜீவனை அளிக்கவந்தார் என்றால், ஏன் அநேக கிறிஸ்தவர்களிடம் அது இல்லை? ஏனென்றால், அவர்கள் தேவன் இல்லாமலே தங்கள் வாழ்வை வாழ்வதினால்தான். தேவன் அழைத்துச் செல்லும் இடங்களுக்கு செல்லாமல், அவர்கள் தாங்கள் நினைத்த இடங்களுக்கு செல்கின்றனர். தங்கள் வாழ்விற்கு தாங்களாகவே ஒரு அட்டவணை வகுக்கின்றனர். பள்ளிக் கல்வியை எவ்வாறு சீக்கிரமாக முடித்து, வேலையில் சேர்ந்து எந்த வயதில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தாங்களாகவே எல்லாவற்றிலும் முடிவு எடுக்கின்றனர். உலகம் உருவாகுமுன்னே தேவன் அவர்களுக்கான திட்டத்தை நிர்ணயித்திருக்கிறார் என்பதை மறந்து விடுகின்றனர். எனவே கிறிஸ்தவனுக்கு வரும் அநேக பிரச்சனைகள் அவனால்தான் வருகிறது. மனுஷீக பெலவீனத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்ததினாலோ, தேவனுக்கு துணிகரமாகக் கீழ்ப்படியாமல் போனதாலோ அல்லது ஒரு கிறிஸ்தவனாக எப்படி இருக்கவேண்டும் என்று அறியாததினாலோ அவன் பிரச்சனையைச் சந்திக்கிறான்.

தேவனுடைய ஆளுகைக்கு தன்னை ஒப்புக் கொடுக்காமல் ஒரு கிறிஸ்தவன் பரிபூரண வாழ்வை அனுபவிக்க முடியாது. உங்கள் இருதயமே சிம்மாசனம் இருக்கும் அறை. நீங்கள் கிறிஸ்தவ வாழ்வை மகிழ்ந்து அனுபவிப்பது, அந்த சிம்மாசனத்தில் யார் அமருகின்றாரோ, அதைப் பொறுத்ததுதான். இயேசு அருளும் அந்த பரிபூரண ஜீவன் உங்களுக்குத் தேவையானால் இயேசுவை அந்த சிம்மாசனத்தில் அமரச் செய்யுங்கள்.

(மொழியாக்கம்: Dr.Edrina Jeyasingh)

சத்தியவசனம்