காதுள்ளவன் கேட்கக்கடவன்!

Dr.உட்ரோ குரோல்
(மே-ஜுன் 2016)

அறிவியல் சாதனைகள் பெருகியிருக்கும் இக்காலத்தில் தகவல் தொடர்பு மிகவும் எளிதாக மாறிவிட்டது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நம் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நாம் எளிதாக பேச முடிகிறது. அவர்களை நேரில் பார்த்து உரையாடும் வசதிகளும் உண்டு. இதைப்போன்றே தேவனும் நம்முடன் பேசக்கூடுமானால் எவ்வளவு இன்பமாயிருக்கும்? கடந்த கால வரலாற்றை நாம் ஆராய்ந்தோமானால் தேவன் பல்வேறு வழிகளில் நம்முடன் பேசியிருக்கிறார். இன்றும் அவருடைய அமர்ந்த மெல்லிய சத்தத்தை நம்மால் கேட்கமுடியும். தேவன் அமைதியாக இருக்கவில்லை. அவருடைய வார்த்தையை நாம் வாசிக்கும்பொழுது அவர் நமக்குக் கூறியுள்ள செய்தியை நம்முடைய மொழியிலேயே படித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அவரது சத்தத்தைக் கேட்பதற்கு நாம் நம்மை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அவரைப் பேசவிடாமல் நாமே பேசிக்கொண்டு இருக்கிறோம். நம்முடைய இளம்வயதில் “தேவன் நமக்கு பேசுவதற்கு ஒரேயொரு வாயையும் கேட்பதற்கோ இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறார்” என்று நம்முடைய தாயார் நமக்குக் கூறியிருப்பார்கள். ஏனெனில் நாம் பேசுவதைப்போல் இருமடங்கு கேட்கவேண்டும். ஆனால் நாம் அக்கூற்றுக்கு செவிகொடுத்ததே இல்லை.

இதைப்போலவே தம்முடைய வார்த்தையின் மூலமாக தேவன் நம்முடன் பேசும்பொழுது நாம் அவருக்கு செவிகொடுப்பதேயில்லை. நாம் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்பொழுது நமக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றுவதில்லை. நாம் அவருடைய சத்தத்தைக் கேட்பதைவிட நாம் மட்டுமே பேசுகிறவர்களாகக் காணப்படுகிறோம். “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” என்று சங்கீதம் 46:10இல் தேவன் கூறுகிறார். ஆனால் அவசர உலகில் வாழும் நாமோ, “தேவனே நீர் அனைத்தையும் அறிவீர்; நீரே பேசும்” என்று பதிலளிக்கிறோம்.

தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கு நாம் ஏன் தவறிவிடுகிறோம்? இதற்கு ஒரு காரணம் நம்முடைய கேட்கும் திறன் மிகக் குறைவாக இருப்பதே. நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கும் விதத்தை அறியாதவர்களாயிருக்கிறோம். மற்றொரு காரணம் நமக்கு அநேக காரியங்கள் அறிவிக்கப்படுகின்றன. அவை நமது கவனத்தைச் சிதறடிக்கின்றன. ஒளி ஒலி சாதனங்கள், குறுஞ்செய்திகள் இவை யாவும் பயனுள்ள சாதனங்களாக இருந்தாலும் தேவனுடைய வார்த்தையைக் கேளாதபடி நம்மைத் தடுத்துவிடுகின்றன. மூன்றாவதாக, நமது அலட்சியத் தன்மையாகும். அநேக மக்கள் வேதத்தை வாசிக்கும்பொழுது, தேவன் கூற விரும்பும் காரியத்தைக் கேட்க மனதற்றவர்களாய் உள்ளனர். நமது கேட்கும் திறன் குறைவாக உள்ளது. காதுகள் இருந்தும் செவிடர்களாக வாழ்கிறோம்.

இதற்கு வேதாகமத்திலிருந்து நாம் ஓர் உதாரணத்தைக் காண்போம். 1சாமுவேல் 3ஆம் அதிகாரத்தில் நாம் ஆசாரியனாகிய ஏலியையும் சாமுவேல் என்னும் ஒரு சிறு பிள்ளையையும் பற்றி வாசிக்கிறோம். “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. ஒரு நாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்து போகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப் படுத்துக்கொண்டான்” (வசனம்1-5).

சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டார். ஆனால் அவருடைய வழிகாட்டியான ஏலியல்லவோ தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ உறங்கிக்கொண்டிருந்தார். அவர் வயது முதிர்ந்தவராய் இருந்தமையால் செவித்திறன் குறைந்திருக்கலாம். சாமுவேல் அவரிடம் வந்து, “என்னைக் கூப்பிட்டீரா?” என்று கேட்டபொழுது அவர் ‘கர்த்தர் சாமுவேலைக் கூப்பிடுகிறார்’ என அறிந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அவ்வாறு கூறவில்லை. வசனம் 6இல் “மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய் படுத்துக்கொள் என்றான்”. ஊழிய அர்ப்பணிப்பு பெற்ற இளவயதினருக்கு சில போதகர்கள் தேவன் உன்னை அழைத்திருக்க மாட்டார் என்று கூறுவது போல் இது அமைந்துள்ளது. மீண்டும் வசனம் 8இல் “கர்த்தர் மறுபடியும் மூன்றாம் விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்தார்”. ஏலியின் வழியாக தேவன் மூன்றுமுறை செல்லவேண்டியதாயிற்று. அவருடைய காலத்தில் ஒரு மத போதகராக, தலைவராக இருந்தும் அவர் தேவனுடைய சத்தத்தைக் கேட்கவில்லை. நாம் ஒவ்வொருநாளும் தேவனுடைய பாதத்தில் அமர்ந்திருந்து அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும். நான் ஒரு ஏலியாக இருக்க விரும்பவில்லை. நீங்களும் விரும்பமாட்டீர்கள் என எண்ணுகிறேன். தேவனுடைய சத்தத்தைக் கேட்கமுடியாத சூழலில் இருப்பவர்களுக்கு ஏலி ஓர் உதாரணம்.

அடுத்து இஸ்ரவேல் ஜனங்களைக் காண்போம். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் யூத மக்களுக்கு தேவன் அடிக்கடி உதவி செய்தார். அவர் அவர்களிடம் நேரடியாகப் பேசினார்; ஆனால் அவர்களோ தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள். அவர் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் உலாவினார். அவர்களுக்கு மன்னாவைக் கொடுத்தார்; காடைகளைக் கொடுத்தார்; தண்ணீரைக் கொடுத்தார்; அற்புதங்களைச் செய்தார். ஆனாலும் மக்கள் அவருக்குச் செவிகொடுக்கவில்லை. ஏன்? அவர்கள் தேவசத்தத்தைக் கேட்கவில்லை.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அவர் வானத்திலிருந்து பேசினார். வானத்திலிருந்து உண்டான தேவனுடைய சத்தம் இடிமுழக்கம் போல் இருந்தது. இது எபிரேய மொழியில் ‘Bat Kol’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவன் மக்களிடம் பேசினார். வேதாகமத்தில் அவர் 32 நபர்களுடன் வானத்திலிருந்து பேசியுள்ளார் என்று நாம் காண்கிறோம்.

அவர் ஆதாமை நோக்கி, “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று வினவினார். “மோசே, மோசே, உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு”; “இவர் என்னுடைய நேசகுமாரன்” என்றெல்லாம் வானத்திலிருந்து தேவன் பேசினார். தமஸ்குவுக்கு செல்லும் வழியில், “சவுலே, சவுலே என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்று கேட்டவுடன் சவுல் அதிர்ச்சியடைந்தார்; கலங்கினார்; மனமாற்றமடைந்தார். தேவன் வானத்திலிருந்து பேசினார். கேட்டவர்களும் பேசினது தேவன் என அறிந்துகொண்டனர். ஆனால் தேவன் எப்பொழுதும் இவ்வாறு பேசுவது கிடையாது. பல வேளைகளில் அவர் தமது தீர்க்கதரிசிகள் மூலமாகவே பேசினார். எண்ணாகமம் 9:8இல் “மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக் குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்” என்று கட்டளையிட்டதாக வாசிக்கிறோம். இங்கு தேவன் நேரடியாக இஸ்ரவேல் மக்களுடன் பேசவில்லை. மாறாக “நான் சொல்லுவதாக நீ சொல்; அதை நான் கூறும்விதமாகவே சொல்” என்று மோசேயிடம் கூறுகிறார்.

பொதுவாக தேவன் தமது தீர்க்கதரிசிகள் மூலமாகவே பேசுவார். “கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி” (எசேக்கி.1:1) என்று நாம் வாசிக்கிறோம்.

இதுபோலவே ஒசியா 1:1, யோவேல் 1:1, யோனா 1:1, மீகா 1:1 ஆகிய தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி அவர்கள் அதனை உரைத்தார்கள் என்று நாம் அறிகிறோம். பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவன் மனுக்குலத்துக்கு பேசின முறை இதுவே. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் தேவன் வித்தியாசமான முறையில் பேசினார். அதன் காரணத்தை எபிரேயர் நிருபத்தில் நாம் காண்கிறோம். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்”.

புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து “என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்” என்றார். “நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்” (யோவான் 14:10) என்று திரும்பத் திரும்ப கூறினார். புதிய ஏற்பாட்டின் மிகப்பெரிய தீர்க்கதரிசி இயேசுகிறிஸ்துவே. தேவன் தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசினார்; இயேசுவின் மூலமாகவும் பேசினார். ஆனால் தற்பொழுது இயேசு பரலோகத்தில் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். தங்களை தீர்க்கதரிசிகள் என்று கூறிக்கொள்பவர்கள் அநேகர் உண்டு. இன்று உண்மையான தீர்க்கதரிசியை காண்பது வெகு அரிதாக உள்ளது. அப்படியென்றால் தேவன் தற்காலத்தில் நம்மோடு எவ்வாறு பேசுவார்?

இதற்கும் தேவன் நமக்கு பதிலைத் தந்துள்ளார். “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்”(2பேது.1:16-18).

இந்த வசனங்களில் தேவன் இரண்டு விதங்களில் பேசினதாக நாம் காண்கிறோம். அவர் வானத்திலிருந்து நேரடியாக பேசினார். ‘இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்’; பேதுரு ‘நாங்கள் தரும் செய்தி தேவனிடத்திலிருந்து நாங்கள் பெற்றுக்கொண்டதே’ என்று உறுதியாகச் சொல்லுகிறார். மேலும் “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடி வெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2பேது.1:19-21).

ஆம், தேவன் இன்றும் நம்முடன் பேசுகிறார். நம்முடன் பேச எந்த வழியையும் அவர் தெரிந்தெடுக்கலாம். அவருடைய வழிகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் பொதுவான முறை என்ன? தேவமனிதர்கள் தேவன் தங்களுக்கு உரைத்ததை எழுதி வைத்துள்ளனர். தேவன் அமைதியாய் இல்லை. அவர் பேசும் தெய்வம். தம்முடைய வார்த்தையின் மூலமாக அவர் நம்முடன் பேசுகிறார். அந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்க முடியும். அந்த வார்த்தை பரிசுத்த வேதாகமமே ஆகும்.

இப்பொழுது இருவினாக்கள் நமக்கு முன் வைக்கப்பட்டுள்ளன:

வினா ஒன்று: நாம் கேட்பதற்கு ஆயத்தமாய் இருக்கிறோமோ? ஏனெனில் கேட்பவர் இல்லையெனில் தகவல் பரிமாற்றம் கடினமே. தேவசத்தத்துக்கு நமது செவி திறந்திருக்கிறதா?

வினா இரண்டு: நாம் வாசிப்பதற்குத் தயாராய் இருக்கிறோமா? ஏனெனில் தேவன் தம்முடைய பரிசுத்த வார்த்தைகளினால் நம்முடன் பேசுகிறார். அநேக வேளைகளில் தேவனை நாம் அவருடைய வார்த்தைகள் வழியாகவே சந்திக்கிறோம். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வேதாகமத்தில் மிகச்சிறிய நேரத்தையே செலவழிக்கின்றனர். தொலைகாட்சியில் செய்திகளைக் கேட்பதிலும் இணையதளத்திலுமே அவர்கள் அதிக நேரத்தைக் கழிக்கின்றனர். ஆனால் தேவனை நோக்கி, ‘தேவனே, நீர் ஏன் என்னுடன் பேசுவதில்லை?’ என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அவர் அதற்கு மறுமொழியாக “நீ ஏன் எனக்குச் செவிகொடுக்கவில்லை?” என்கிறார். இன்று நாம் தேவன் பேசுவதைக் கேட்க வேண்டுமெனில் அவருடைய வார்த்தையை வாசிக்கவேண்டும்.

ஒரு சிலர் தேவன் என்னோடு நேரடியாக பேசினார் என்று அறிவிப்பது உண்டு. ஆனால் அப்.பேதுரு கூறியதுபோல தேவன் தனிப்பட்ட நபருடன் பேசுவது அரிது. வேத வசனங்களை நம்முடைய விருப்பத்துக்கு இணங்க விளக்கம் அளிக்கக்கூடாது. சபைக்கு அளிக்காத செய்திகளை தேவன் எனக்கு வெளிப்படுத்தினார் என்று கூறுவது தவறு. அநேக மக்கள் தேவன் தங்களுக்கு சில காரியங்களைத் தெரிவிப்பதாக எண்ணி என்னிடம், “வேதாகமம் இவ்வாறு கூறுவதை அறிவேன். ஆனால் தேவன் என்னிடம் இதைத்தான் கூறினார்’ என்று தங்களுடைய சுயகருத்தையும் விளக்கத்தையும் கூறுவர். இவர்களுக்காகவே வேத புத்தகத்தை நிறைவு செய்யும்பொழுது “இத்துடன் எதையும் கூட்டவோ எடுத்துப்போடவோ கூடாது” என்று எச்சரிச்கை செய்துள்ளார்.

சில நேரங்களில் தேவன் நம்மோடு கனவுகளின் மூலமாகவோ தரிசனங்களின் மூலமாகவோ பேசுவாரா? என்ற ஐயம் நமக்கு எழலாம். தேவன் நம்மோடு உரையாடுவதற்கு எந்த வழியைத் தெரிந்தெடுத்தாலும், “வேத புத்தகத்தில் அருளப்பட்டுள்ள யாவும் என்னுடைய முத்திரையையும் அங்கீகாரத்தையும் கொண்டுள்ளன. அவை தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இதற்கு மேலாக நான் எதுவும் கூறவேண்டிய அவசியமில்லை என்று தேவன் கூறுவார்” என்பது உண்மை. நம்முடைய தனிப்பட்ட கனவுகளையும் தரிசனங்களையும் தேவனுடைய வார்த்தை என்று அறிவிப்பது தேவனை அவமதிப்பதற்கு சமமாகும்.

தேவன் நம்மோடு அவரது வார்த்தையாகிய வேதாகமத்தின் மூலம் பேசுகிறார். நாம்தான் அவரது சத்தத்தைக் கேட்பதில்லை. செவித்தினவுள்ளவர்களாகி உலகத்தின் சத்தத்துக்கும் மற்ற காரியங்களுக்கும் செவிகொடுத்து தேவசத்தத்தை அலட்சியப் படுத்துகிறோம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்