ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

செப்டம்பர்-அக்டோபர் 2011

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

தம்முடைய சொந்த இரத்தத்தை நமக்காகச் சிந்தி, உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இதுவரையிலும் தேவன் நம்மை நடத்திவந்த எல்லா பாதைகளுக்காகவும். இவ்வூழியத்தின் மூலம் தேவன் செய்த மகத்தான கிரியைகளுக்காகவும் அவரை ஸ்தோத்திரிக்கிறோம். சத்தியவசன வானொலி நிகழ்ச்சி, தொலைகாட்சி நிகழ்ச்சி, பத்திரிக்கை ஊழியம் இவற்றின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும், கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவிக்க மறவாதிருங்கள்.

ஜூன் மாதத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் காலை 5.30 மணிக்கு பொதிகையில் மற்றுமொரு சத்தியவசன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். வருகிற நவம்பர் மாதத்திலிருந்து ஃபீபா வானொலி நிலையத்தார் ஒலிபரப்பை சிற்றலை வரிசையிலிருந்து (SW) மத்திய அலைவரிசைக்கு (MW) மாற்ற இருப்பதாகவும், சத்தியவசன நிகழ்ச்சிகள் மாலையில் (7 – 7.15) ஒலிபரப்பாகும் என அறிவித்துள்ளார்கள். இந்த நேரம் மற்றும் அலைவரிசை மாற்றத்தினிமித்தம் தொடர்ந்து வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்புவதைக் குறித்து சரியான முடிவு எடுக்க ஜெபித்து வருகிறோம். சத்தியவசன நேயர்களும். ஆதரவாளர்களும் எங்களோடு இணைந்து இந்த காரியங்களுக்காக ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.

நாங்கள் முன்பு அறிவித்திருந்தபடியே செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வேலூரிலும், 21 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் CFH சிற்றாலயத்திலும் சத்தியவசன ஆவிக்குரியக் கூட்டங்கள் ஆசீர்வாதமாக நடைபெற தேவன் கிருபை செய்தார். இக்கூட்டங்களில் சகோதரி சாந்திபொன்னு அவர்களை தேவன் வல்லமையாய் எடுத்து உபயோகித்தார்.

இவ்விதழில் நல்ல சமாரியன் உவமையை மையமாக வைத்து சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் எழுதிய சிறப்புச் செய்தி நம் அனைவரையும் தெளிவடையச் செய்கிறதாயிருக்கிறது. Dr.உட்ரோகுரோல் அவர்கள் யகாசியேலைக் குறித்து அளித்த செய்தியின் தொடர்ச்சி இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. இச்செய்தி நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைப் போராட்டங்களில் நம்மை உற்சாகப்படுத்துகிறதாயும், தைரியப்படுத்துகிறதாயுமிருக்கிறது. காயீன் ஆபேல் இவர்களது பலிகளை மையமாக வைத்து சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய பாவத்தின் நுழைவாயில் என்ற செய்தி நம்மை உணர்வடையச் செய்கிறதாயிருக்கிறது. வழக்கம்போல் வெளிவரும் தொடர்செய்திகளும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்