யகாசியேல்

Dr.உட்ரோ குரோல்

(மே-ஜுன் இதழின் தொடர்ச்சி)

யுத்தம் யாருடையது? என்று உணருங்கள்.

யுத்தம் உங்களுடையதல்ல. தேவனுடையது என்று யகாசியேல் யூதாவின் மக்களுக்கு நினைவுப்படுத்தினான்.

சாத்தான் உங்களுடன் போராடுகிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இறுதியில் அவன் மோதுவதும், போரிடுவதும் தேவனுடன் என்பதை அறியவேண்டும்.

சாத்தான் தன்னைத் தேவனைவிட உயர்ந்தவனாகப் பெருமைப்படுத்தி, தேவனுக்கெதிராகக் கலகம் செய்யும்வகையில் நான் செய்வேன் என்று ஐந்து காரியங்களைக் கூறினான். அப்பொழுது அவன் நான் உலகத்தின் சாதாரண மக்களாகிய டாம், டிக், ஹாரி இவர்களைப்போல இருப்பேன் என்று கூறவில்லை. உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று கூறினான் (ஏசாயா 14:14). டாம், டிக், ஹாரி இவர்கள் மூவரும் ஒன்றாய்ச் சேர்ந்து நின்றாலும் அவர்களைக் காட்டிலும் சாத்தான் திறமையானவன். அவன் உங்களையும், என்னையும் போல இருக்க விரும்பவில்லை. அவன் தேவனாயிருக்கவே விரும்புகிறான்.

கெத்செமனே தோட்டத்திலும் பின்னர் கல்வாரிச் சிலுவையிலும் இயேசுவோடு சாத்தான் பயங்கரமாகப் போராடினான். அப்பொழுது அவனுடைய தாக்கும் குறி இயேசு அல்ல. ஏனெனில் இயேசு பாவமற்ற வாழ்வு வாழ்ந்திருந்தார். இயேசு தேவனாய் இருந்த படியால்தான், தான் தேவனை எதிர்ப்பதாக எண்ணி இயேசுவோடு போராடினான். சாத்தானுடைய நீண்ட யுத்தம் தேவனோடு நடத்திய யுத்தமாகும். நாம் தேவனுடைய சேனையில் போர் வீரர்களாய் இருக்கிறோம். ஆனால் சாத்தானுக்கு வேண்டியது நாம் அல்ல. நம்முடைய சேனையின் பிரதம போர்த் தளபதியான தேவனாகும்.

சாத்தானோடு நமக்கு அனுதினமும் ஏற்படும் உரசல்களின்போது, யூதா மக்கள் நினைவுகூர வேண்டும் என்று யகாசியேல் சொன்ன வார்த்தைகளை – யுத்தம் உங்களுடையதல்ல- தேவனுடையது. இதை நாமும்கூட நினைவுகூர வேண்டும்.

இந்த சத்தியம் வேதாகமம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. கலகக்காரர்களாகிய மக்கள் நெகேமியாவையும், அவனது நண்பர்களையும் தாக்கியபோது, அவர்கள் எருசலேமின் மதில்களைக் கட்டும் பணியிலிருந்து பின்வாங்கி விடுவார்கள் போலத் தோன்றியது. அந்த நேரத்தில் நெகேமியா தன்னுடைய மக்களிடத்தில் கூறியதென்ன? நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார் (நெகே.4:20)

அசீரிய இராஜாவாகிய சனகெரிப் யூதாவின் நகரங்களையும், எசேக்கியா இராஜாவையும் எதிர்த்துப் படையெடுத்து வந்தபோது, யூதாவின் இராஜா தன் ஜனங்களிடம் நினைவுபடுத்தியது, அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தானே! (2நாளா.32:8)

யோசுவா இஸ்ரவேல் மக்களுக்கு இந்தச் செய்தியை நினைவூட்டி, மனதில் புகுத்திக் கொண்டிருந்தான். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணினார் (யோசுவா 23:3). மறுபடியும் 10ஆம் வசனத்தில், உங்களில் ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல் ஒரு பகல் முழுவதும் நடு வானத்தில் நின்றது. அன்று யோசுவா தன் மக்களுக்கு நினைவுபடுத்தியது, அவர்கள் பெற்ற வெற்றி அன்று பகல் நேரம் நீட்டிக்கப்பட்டதை அல்ல, கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார் (யோசுவா 10:13,14) என்பதையே.

முன் ஒரு சந்தர்ப்பத்தில் மோசே இஸ்ரவேலரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அவர்கள் சந்திக்கப்போகும் சத்துருக்களைக் குறித்து, அவர்களுக்குப் பயப்படீர்களாக. உங்கள் தேவனாகிய கர்த்தர்தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் (உபா.3:22) என்று சொல்லி ஊக்கப்படுத்தி பயத்தைப் போக்கினான்.

போர்வீரன் அணியும் இரும்புக் கவசத்தை அணிந்துகொண்டு கோலியாத்தை எதிர்த்துச் சண்டை போடச் செல்ல தாவீது மறுத்தது ஏன்? தாவீது கோலியாத் என்னும் இராட்சதனிடம் கர்த்தர் பட்டயத்தினாலும், ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக் கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது. அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான் (1சாமு. 17:47). வசனம் 46ஐயும் வாசித்துப் பாருங்கள். எவ்வளவு தன்னம்பிக்கையுடனும், உறுதியுடனும், விசுவாசத்துடனும் அறிக்கையிடுகிறான் என்பதைக் காணலாம்.

தேவனுடைய வேலையின் நெருக்கடி வேளையில் அமைதியான மனத்துடனும், தெய்வீக சாட்சியுடனும் இருப்பது எளிதான காரியம் அல்ல. பண நெருக்கடியில் போராடுதல் மனச்சோர்வை உண்டாக்கும். ஆனால் யகாசியேல் யோசபாத் இராஜாவுக்கும் யூதாவின் மனுஷருக்கும் கூறிய செய்தி நாம் அனுதினமும் நினைவுகூரத்தக்கதாகும். யுத்தம் நம்முடையதல்ல, கர்த்தருடையது. நீங்கள் உங்கள் போராட்டத்தில் மிகுந்த வெற்றியைக் கண்டடைவீர்கள். கொஞ்சமும் கவலைப்பட மாட்டீர்கள். நமக்காக யார் யுத்தம் பண்ணுவார் என்பதை நாம் அறிந்து உணரும்போது இப்படி நடக்கும்.

உங்கள் எதிராளியுடன் போராட ஆயத்தப் படுங்கள்.

யகாசியேலின் கதையின் மீதிப் பகுதியில் கர்த்தர் யூதாவுக்காக யுத்தம் பண்ணினார் என்று காண்கிறோம். ஆனால் தன் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை தீர்க்கதரிசனம் உரைத்த நமது தீர்க்கதரிசி, தேவனுடைய மக்கள் யுத்தம் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்தான். யகாசியேல் மூலம் தேவன் கட்டளை கொடுத்தார். யுத்த வீரர்களை ஒன்று கூட்டுங்கள். அவர்களுக்குப் பயிற்சியளியுங்கள். யுத்தத்துக்கு ஆயத்தமான சில நடவடிக்கைகளைச் செய்ய வேண்டியதிருந்தது. தேவன் தங்களுக்காக யுத்தம் செய்வார் என்று நினைத்துக்கொண்டு யூதாவின் இராஜா தன் இராணுவத்தைத் தயார் நிலையில் வைக்காமலிருக்க முடியாது. யகாசியேல் அவர்களுக்கு அறைகூவல் விடுத்தான்:

  • நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாகப் போங்கள்.
  • போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்கத் தரித்து நில்லுங்கள்.

யூதாவின் போர் வீரர்கள் யுத்தக்களத்துக்குச் செல்வது மட்டுமல்ல, எதிரிகளைப் பதிவிருந்து தாக்கும் இடங்களிலும் ஆயத்த நிலையில் இருக்கும்படி கட்டளையிடப்பட்டது. யூதர்கள் யுத்தம் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டியதிருந்தது. அவர்கள் தங்கள் வீடுகளில் சொகுசாக இருந்துகொண்டு எதிரிகளைச் சந்திக்க முடியாது. போர் உடை தரித்து, போர் ஆயுதம் தாங்கிப் போர்க்களத்தில் தயாராக நிற்க வேண்டும். கோட்டை மதில் சூழ்ந்த தங்கள் பட்டணத்திற்குள் இருந்துகொண்டு எதிரிகளைச் சந்திக்க முடியாது. அவர்கள் எருசலேமைவிட்டுப் புறப்பட்டு, சிஸ் நாட்டுக்குப் பயணம் செல்லவேண்டியதிருந்தது. அங்கேதான் அவர்கள் யுத்தத்துக்கு அணிவகுத்து நிற்கவேண்டும். அதாவது யுத்தம் கர்த்தருடையதாய் இருந்தாலும் யுத்தத்தின் வெற்றி தங்கள் வீடுகளில் சோபாக்களிலும் சாய்வு நாற்காலிகளிலும் உல்லாசமாக இருந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வந்து சேராது. யுத்தத்தில் வெற்றி யுத்தக்களத்தில் அணி வகுத்து நிற்கும் வீரர்களுக்கே வந்து சேரும்.

இது இன்று நம்முடைய போராட்டங்களுக் கும் பொருத்தமானது.

  • தேவனைக் கனப்படுத்தும்படி பிள்ளைகளை வளர்ப்பது ஒரு போராட்டம். நாம் அவர்களுக்காக ஜெபித்து, அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று விசுவாசித்தால் மட்டும் போதாது. நாம் யுத்தத்துக்கு ஆயத்தப்படுவதுபோல் தொடங்க வேண்டும். பிள்ளைகளைத் திருத்த பல சூழ்நிலைகளில், பல சந்தர்ப்பங்களில் அவற்றுக்கேற்ப நாம் நம்மை அணி வகுத்துக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்குச் சில ஆலோசனைகள் இங்கு தரப்படுகின்றன.
  • உங்கள் பிள்ளைகளைப் பக்தி வழியில் வளர்க்க அவர்கள் ஒவ்வொருவருக்கும் தேவனோடு தனிமையில், அமைதியாக இருந்து வேதம் வாசித்துத், தியானித்து, ஜெபிக்க நேரம் ஒதுக்கிக் கொடுங்கள்.
  • தினமும் வீட்டில் குடும்ப ஜெபமும், தியானமும் நடத்தும் நேரத்தைத் திட்டமிட்டு, சரியாகச் செயல்படுத்துங்கள். இதில் மாற்றம் வரக் கூடாது.
  • பிள்ளைகள் தொலைக்காட்சியில் (T.V.) எந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்துங்கள்.
  • ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒழுங்காக ஆலயம் சென்று ஆராதனையில் பங்குபெறச் செய்யுங்கள்.
  • ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வு நாட் பள்ளி வகுப்புக்குத் தவறாமல் செல்லப் பழக்குங்கள்.
  • கூடுமானவரை பிள்ளைகளைக் கிறிஸ்தவ கல்வி ஸ்தாபனங்களில் சேர்த்துப் படிக்க வையுங்கள். இது நல்ல கூட்டுறவில் ஐக்கியப்படவும், வழுவிப்போகாமல் இருக்கவும் உதவும்.
  • கிறிஸ்தவ வாலிபப் பிள்ளைகள், நண்பர்கள் வந்துகூடும் இடமாக உங்கள் வீடு இருக்கட்டும்.

இப்படி நடத்தும் வீட்டு யுத்தம் நீண்டதாகவும், கடினமானதாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் அடையும் வெற்றி இன்பமானது. உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

உங்களுக்காகக் கர்த்தர் யுத்தம் பண்ணட்டும்.

நீங்கள் போருக்கு அணிவகுத்து நிற்கும்போது, புயல் மேகங்கள் சூழ்ந்து வரும்போது, எதிரியைத் தாக்கவேண்டும் என்னும் சோதனையை அடக்குவது தான் இந்த உலகிலேயே மிகவும் கடினமான காரியம். போர்க்களத்தில் யுத்தம் செய்ய அணிவகுத்து நிற்கும்போது, நாம் போரில் ஈடுபடத்தான் விரும்புவோம். ஆனால் யுத்தம் கர்த்தருடைய தாய் இருக்கும்போது, அது அவசியமில்லாமல் போகலாம். யகாசியேல் மூலம் தேவன் மக்களுக்கு கட்டளையிட்டார்.

யூதா மனுஷரே, எருசலேமின் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள் ( 2 நாளா.20:17).

தேவனுடைய மக்களுக்கு இப்படிச் சொல்லப்பட்டது. இதுதான் முதல் தடவை அல்ல. நீங்கள் தரித்து நின்று தேவன் உங்களுக்காகச் செய்யப் போவதைப் பாருங்கள்.

எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து, இஸ்ரவேல் மக்கள் விடுவிக்கப்பட்டு, விடுதலைப் பயணம் புறப்பட்டு செங்கடலை அடைந்தார்கள். இவர்களைத் துரத்திக் கொண்டு பார்வோனின் சேனைகள் பின்னால் வந்துகொண்டிருந்தனர். இப்பொழுது இஸ்ரவேலரின் பின்னால் சிங்கம் போல் சீறிவரும் பகைவர்கள், முன்னால் செங்கடலின் வெள்ளம், என்ன செய்வார்கள்? அது ஒரு தப்பமுடியாத சூழ்நிலையாகத் தோன்றிற்று. இப்படித் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களிடம் மோசே கூறியதென்ன?

பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; …… கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான் (யாத்.14:13,14)

தேவன் எப்போதுமே நாம் யுத்தக்களத்தில் நம் இடத்தில் அணிவகுத்து நின்று போருக்கு ஆயத்த நிலையில் நிற்பதை விரும்புகிறார். நாம் அப்படி நிற்கும்போது, நாம் எதுவும் செய்யாமல் நின்றுகொண்டு தேவன் நமக்காக யுத்தம் செய்வதைப் பார்க்கச் சொல்லுவார். அவர்மீது முழு நம்பிக்கை கொண்டு அவர் சொற்படி யுத்தக்களத்தில் போர் செய்வதற்கு அணிவகுத்து, நிற்பதை அவர் எவ்வளவாக விரும்புகிறார்!

நம்முடைய அன்பான பரலோகப் பிதா நம்மிடம், நீங்கள் அசையாமல் நின்று, நானே தேவன் என்று அறியுங்கள் என்று நம்மிடம் கூறியபோது, நாம் தனியான ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்திருப்பதை அவர் நினைக்கவில்லை. அந்த வசனம் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறது: ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன் (சங். 46:10).

சிலவேளைகளில் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும் நாம் அசையாமல் நிற்க வேண்டியதிருக்கும். அந்த நேரத்தில் ஆண்டவரை நம்புவது அரிதான காரியமாய் இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில்தான் தேவன் யுத்தம் கர்த்தருடையது என்பதை செயல்படுத்திக் காட்டுவார்.

யகாசியேலின் மூலம் தேவன் பேசிய வார்த்தைகளுக்கு இஸ்ரவேலர் செவி கொடுத்தனர். யோசபாத் இராஜா தரைமட்டும் குனிந்து வணங்கினார். லேவியர்களும் மற்றவர்களும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதிக்க எழும்பினர். ஆனால் அவர்கள் அதைவிட அதிகமான காரியத்தைச் செய்தார்கள். அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்து, அம்மோனியர், மோவாபியர், ஏதோமியர் இவர்களின் சேனையை எதிர்க்க அணிவகுத்துச் சென்றனர். யோசபாத் இராஜா உரத்த சத்தமாய், யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான் (2நாளா. 20:20)

யூதா கர்த்தரைத் துதித்தது, போர் ஆயுதங்களைக் கடத்திச் சென்றது. (சொல் பொருளின் படி) பாடகர்கள் சேனையின் முன்னே கர்த்தரைப் பாடித் துதித்துக் கொண்டே சென்றார்கள். எதிரிகளுக்காக ஒரு பதிவிடை அமைக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆச்சரியமான காரியம் நடந்தது. 2 நாளாகமத்தை எழுதியவர் அதை இப்படிக் குறிப்பிடுகிறார்:

அம்மோன் புத்திரரும் மோவாபியரும் சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும், அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.

யூதாமனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக் கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை. தேவனுடைய மக்கள் உண்மையிலேயே தேவனுடைய இரட்சிப்பைக் கண்டார்கள் (2 நாளா.20: 23,24)

கடவுளுடைய வழியில் வாழ்க்கையை வாழுங்கள்

பயப்படாமல் வாழ்வதென்பது சுலபமல்ல. நாம் ஒவ்வொன்றைக் குறித்தும் பயப்படுகிறவர்களாயிருக்கிறோம். எனினும் கிறிஸ்து நமக்குத் தரும் வளமுள்ள வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்வதற்கு, தேவன் காட்டும் வழியில் நாம் வாழவேண்டும். அதாவது, அதன்படி நம்மில் இருக்கும் பயங்கள் யாவையும் அகற்றிவிட வேண்டும். நீங்கள் பயத்துக்கு இடங்கொடுத்தால் நீங்கள் தேவனை நம்பவில்லை என்று பொருள். பின்னர் யுத்தம் யாருடையது? என்று நீங்கள் கண்டுகொள்ள வேண்டும். யுத்தம் உங்களுடையதல்ல. அது கர்த்தருடையது. அவரே இறுதி வெற்றிக்கு முழுப்பொறுப்பானவர். போராட்டம் வரும்போது யுத்தம் செய்ய ஆயத்தத்துடன் முன்னணியில் அணிவகுத்துச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களுக்காக யுத்தம் செய்ய இடைபட்டு வரும்போது, பின் வாங்கி, யுத்தம் செய்ய அவருக்கு இடங்கொடுங்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் படைப் பிரிவுகளாகிய குடும்பம், நண்பர்கள், தொழில், வர்த்தகம் போன்றவற்றைப் பிரதம படைத் தளபதியான கர்த்தருக்கு அர்ப்பணிக்க ஆயத்தமானால், சாத்தான் அவர்களைத் தாக்க வரும்போது அவர்களுக்காகப் போரிட நீங்கள் முன்வரும்போது, ஆண்டவர் அங்கே வந்து, இப்படிக் கூறுவார்.

நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள். கர்த்தர் உங்களோடே இருக்கிறார் (வச.17)

உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையும் ஊக்கமும் தரக்கூடிய செய்தியைக் கேட்க விரும்புகிறார்களா? நீங்கள் அவர்களுக்கு ஒரு சிறந்த எழுத்தாளர் எழுதிய நம்பிக்கையூட்டும் ஒரு புத்தகத்தை வாங்கிக் கொடுக்கலாம். ஊக்குவிக்கும் பேச்சாளர் ஒருவரின் செய்திகள் அடங்கிய ஒரு ஒலி நாடாவையோ அல்லது சிடி கொடுத்துக் கேட்கச் செய்யலாம். அல்லது தேவனுடைய செய்தியை அவருக்குப் பக்குவமாக எடுத்துக்கூற உங்களைப் பயன் படுத்தும்படி ஆண்டவரிடம் ஜெபிக்கலாம். அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது, யுத்தம் கர்த்தருடையது என்னும் சத்தியத்தை வலியுறுத்திக் கூற மறவாதீர்கள்.

யகாசியேலை தேவன் தெரிந்தெடுத்து, குறிப்பிட்டுக் காட்டும் ஒளியை அவன்மீது வீசி, அவனை ஆவியால் நிரப்பிப் பயன்படுத்தினார். ஒரு நிமிட நேரம்தான். ஆனால் அதற்குள் அவன் தேவனுடைய செய்தியை உரத்த சத்தமாய் மக்கள் அனைவரும் கேட்கும்படி கூறி அறிவித்துவிட்டான்.

யகாசியேல் வேதாகமத்தில் காணப்படும் மோசே, பவுல் போன்ற ஒரு பெரிய கதாபாத்திரம் அல்ல. அற்ப நேரம் தோன்றி, தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்து மறைந்தவன். சாதாரணமான மக்களாகிய உங்களையும், என்னையும் போல இப்படிப்பட்ட சிறிய மக்களைத்தான் தேவன் பயன்படுத்துகிறார்.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்