பயத்தின் மத்தியில் பக்தனின் மனம்

எம்.எஸ்.வசந்தகுமார்
(செப்டம்பர்-அக்டோபர் 2011)

தாவீதின் பண்பும் நன்றியும் (சங். 56:12-13)

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பக்தர்கள் பொருத்தனைகள் செய்து ஜெபித்தபோதிலும், சிலருடைய பொருத்தனைகள் தேவனுடன் பேரம் பேசும் முயற்சிகளாகவே இருந்தன. அதாவது, தேவனே நீர் இதைச் செய்தால் நான் இதைச்செய்கிறேன் என்னும் மனநிலையிலேயே அவர்கள் பொருத்தனைகள் செய்துள்ளனர் (ஆதி.28:20-23, நியா.11:30-31).

மேலும், இத்தகைய பொருத்தனைகள் தேவனுடைய வார்த்தையை நம்பாத நிலையில் செய்யப்பட்டவைகளாகவே உள்ளன. உதாரணத்திற்கு ஆதியாகமம் 28ஆம் அதிகாரத்தில் யாக்கோபு பொருத்தனை செய்வதற்கும் முன்பே தேவன் அவனை ஆசீர்வதிப்பதாக வாக்களித்திருந்தார் (ஆதி.28:13-15). ஆனால், அவன் தேவனுடைய வார்த்தையை முழுமையாக நம்பாதவனாக, தேவனே நீர் என்னை ஆசீர்வதித்தால் நான் இதைச் செய்கிறேன் என்று பொருத்தனை செய்துள்ளான் (ஆதி.28:20-22). இதைப்போலவே நியாயாதிபதிகள் 11ஆம் அதிகாரத்திலும், யுத்தத்தில் வெற்றி கிடைப்பதற்காகத் தேவன் யெப்தாவுக்கு ஆவியானவரை அருளிய போதிலும் (நியா.11:29) அவன் தேவனிடம், யுத்தத்தில் வெற்றியைக் கொடுத்தால் தகனபலி செலுத்துவதாக பொருத்தனை செய்தான் (நியா.11:30-31). எனவே, தேவனுடைய வார்த்தையையும், ஆவியானவருடைய வல்லமையையும் விசுவாசியாத நிலையில் தேவனுடன் பேரம் பேசுகின்ற விதமான இத்தகைய பொருத்தனைகள் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் வாழும் கிறிஸ்தவர்களாகிய நாம் பின்பற்றவேண்டிய முறைகளாக இல்லை. ஏனெனில், தேவனுடன் பேரம் பேசுவது பொருத்தனை அல்ல. அவர்மீதான நம்முடைய நம்பிக்கை அதிகரிப்பதை வெளிப்படுத்தும் அடையாளமாகவே பொருத்தனைகள் இருக்க வேண்டும். அதாவது, தேவன் நிச்சயமாக நம்முடைய ஜெபத்திற்குப் பதிலளிப்பார் என்னும் நம்பிக்கையின் வெளிப்பாடாகவே பொருத்தனைகள் இருக்கவேண்டும். எனவே, தேவனே நீர் இதைச் செய்தால் நான் இதைச் செய்கிறேன் என்னும் நிபந்தனையுடன் அல்ல, ஆண்டவரே நீர் நிச்சயம் இதைச் செய்வீர். இதனால் நான் உமது ஊழியத்திற்கு இதைத் தருகிறேன் என்னும் மனநிலையில் நம்முடைய பொருத்தனைகள் இருக்கவேண்டும்.

எதையாவது கொடுத்து தேவனை நம் பக்கம் இழுக்கக்கூடிய நிலையில் அவர் இல்லை என்பதை நாம் அறிந்திருக்கவேண்டியது அவசியம். அதாவது, காணிக்கை கொடுத்தால்தான் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறமுடியும் என்னும் பிறமதச் சிந்தனைகளையும் போதனைகளையும் கிறிஸ்தவத்திற்குள் கொண்டுவருவது தவறாகும். தேவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பவராகவோ, அல்லது தமக்கு ஏதாவது தேவைப்படுபவராகவோ இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக் காட்டுவதுபோல, உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை (அப்.17:24-25). இதனால், நாம் எதையாவது அவருக்குக் கொடுத்து நமக்குத் தேவையானவைகளை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணுவது தவறாகும். உண்மையில், தேவனுக்கு கொடுக்கக்கூடிய அளவுக்கு நம்மிடம் எதுவுமேயில்லை. நாம் கொடுக்கும் காணிக்கைகள்கூட அவர் நமக்குத் தந்ததிலிருந்து அவருடைய ஊழியப் பணிக்காக நாம் கொடுப்பவைகளாகவே உள்ளன. இதை அறிந்திருந்த தாவீது 1நாளாகமம் 29:14ல், இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம் என்று குறிப்பிட்டுள்ளான்.

தேவனே நம்மை சிருஷ்டித்துப் பராமரித்து வருவதனால், நம்மிடமிருந்து அவருக்குத் தேவைப்படுபவைகள் எதுவுமில்லை. தேவனே நமக்கு இவ்வுலக வாழ்வையும், அதற்குத் தேவையான சகலவற்றையும் நமக்குத் தருவதனால், அவருக்கு எதையும் கொடுக்கக்கூடிய நிலையில் நாம் இல்லை. தேவன் நம்மில் அல்ல. நாமே அவரில் சார்ந்து இருக்கின்றோம். இதனால், தேவனுடன் பேரம் பேசுகின்ற விதமான பொருத்தனைகள் அர்த்தமற்றவைகளாகவே உள்ளன. இதனால்தான், தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள் (யோபு 41:11) என்று தேவனே தெரிவித்துள்ளார் தேவனுடைய கூற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட பவுல், தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? (ரோ.11:35) என்று கேட்பதோடு, சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென் (ரோ.11:36) என்று கூறுகின்றார். உண்மையில், தேவன் எவருக்கும் எதற்கும் கடமைப்பட்டவர் அல்ல. அவர் நமக்கு அருளுகின்ற ஆசீர்வாதங்கள் அனைத்தும் அவர் நம்மீது வைத்துள்ள கிருபைமிகுந்த அன்பின் வெளிப்பாடாகவே உள்ளன.

தேவனுக்கு எதையும் கொடுக்கக்கூடிய நிலையில் நாம் இல்லை என்னும் உண்மையை 116ஆம் சங்கீதத்தை எழுதியவர் சிறப்பான விதத்தில் அறியத்தருகின்றார். கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்? (சங்.116:12) என்று கேட்கும் அவர், எதையுமே செய்யமுடியாது என்பதை உணர்ந்தவராக, இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங்.116:13) என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, தேவனுக்கு நம்மால் கொடுக்கக்கூடிய ஒரேயொரு காரியம், அவர் அருளும் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு அவரைத் தேவனாக ஏற்றுக்கொள்வதாகவே உள்ளது என்னும் உண்மையை அறிந்துகொள்ளுகின்றோம். அதாவது, நம்முடைய வாழ்வை அவரிடம் அர்ப்பணிப்பதே நாம் செய்யக்கூடியதும், நாம் செய்யவேண்டியதுமான ஒரேயொரு காரியமாக உள்ளது. உண்மையில், நம்மை ஜீவபலியாகத் தேவனிடம் ஒப்புக்கொடுப்பதே நாம் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனையாக உள்ளது (ரோ.12:1). இதனால், பொருட்களும் பணமும் அல்ல, தேவனுக்கு நன்றிசெலுத்தும் துதி ஸ்தோத்திரங்களே நம்முடைய பொருத்தனைகளாக இருக்கவேண்டும் என்பதை சங்கீதங்கள் அறியத்தருகின்றன. எனவே தேவனைக் கவர்ந்திழுப்பதற்காக அல்ல, அவருக்கு ஸ்தோத்திரப்பலி செலுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் செய்யப்படுபவைகளே சரியான பொருத்தனைகளாக உள்ளன.

116ஆம் சங்கீதத்தில் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங்.116:13) என்று கூறும் பக்தன், அடுத்த வசனத்தில் நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன் (சங்.116:14) என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, இப்பொருத்தனை எத்தகையது என்பதை அறியத்தருவதற்காக நான் உமக்கு ஸ்தோத்திர பலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங்.116:17) என்றும் தெரிவித்துள்ளார். நம்முடைய விண்ணப்பத்தைத் தேவன் கேட்டு நம்முடைய பிரச்சனையைத் தீர்ப்பார் என்னும் நம்பிக்கையுடன் அவருக்கு ஸ்தோத்திரப்பலி செலுத்துவதே நாம் செய்யவேண்டிய பொருத்தனை என்பதை 50ஆம் சங்கீதம் நேரடியாகவே அறியத்தருகின்றது:

நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் (சங்கீதம் 50:14-15)

வேதாகமத்தின் மூலமொழியில் சங்கீதங்கள் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளமையால், எபிரேயக் கவிதைகளில் காணப்படும் சமத்தன்மை சங்கீதங்களிலும் உள்ளன. சமத்தன்மை என்பது எபிரேயக் கவிதைகளில் இரண்டு வரிகளுக்கு இடையிலிருக்கும் தொடர்பாகும். இதனால், பெரும்பாலான சங்கீதங்களில் ஒவ்வொரு வசனத்திலும், முதல் வரியில் சொல்லப்பட்டதே இரண்டாவது வரியில் வேறு வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில சங்கீதங்களில் முதல் வரியில் சொல்லப்பட்டதற்கு எதிரான விஷயம் இரண்டாவது வரியில் காணப்படும். சில சந்தர்ப்பங்களில் முதல் வரியின் தொடர்ச்சியாக இரண்டாவது வரி அமைந்திடும். மேலும், முதல் வரியிலுள்ள உருவகம் இரண்டாவது வரியில் விளக்கப்படுவதும் உண்டு. சங்கீதங்களின் வசனங்களிலுள்ள இத்தகைய சமத்தன்மைகளைக் கருத்திற்கொள்ளாத நிலையில் அவற்றை வியாக்கியானம் செய்தால் சங்கீதக்காரர்கள் சொல்ல முற்படும் விஷயத்தை நாம் சரியாக அறியாதவர்களாகவே இருப்போம். மொழிபெயர்ப்பு காரணமாக சங்கீதங்களின் சகல வசனங்களிலும் உள்ள சமத்தன்மைகளை நம்மால் அறியமுடியாமல் இருக்கின்ற போதிலும், மூலமொழியில் சகல வசனங்களும் சமத்தன்மையுடனேயே எழுதப்பட்டுள்ளன. சங்கீதம் 50:14இல், முதல் வரியிலுள்ள தேவன் என்பது இரண்டாவது வரியில் உன்னதமானவர் என்றும், முதல் வரியிலுள்ள ஸ்தோத்திரப்பலி இரண்டாவது வரியில் பொருத்தனை என்றும் விளக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஸ்தோத்திரப்பலியே தேவன் எதிர்பார்க்கும் பொருத்தனை என்பதை நாம் அறிந்துகொள்கின்றோம். எனினும், பொருத்தனையாக மாத்திரம்தான் ஸ்தோத்திரப்பலி செலுத்தவேண்டும் என்று எண்ணுவது தவறாகும். நாம் எப்பொழுதும் எல்லாவற்றுக்காகவும் தேவனை ஸ்தோத்தரிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றே வேதாகமம் கூறுகிறது (எபி.13:15). சங்கீதக்காரர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பொருத்தனைகளும் ஸ்தோத்திரப்பலிகளாகவே இருந்தன.

(தொடரும்)

சத்தியவசனம்