பாவத்தின் நுழைவாயில்

சகோதரி சாந்தி பொன்னு
(செப்டம்பர்-அக்டோபர் 2011)

வெளிநாடொன்றிலே பலர் முன்னிலையில் ஒரு விவாக நிச்சயதார்த்தம் ஜெபத்தோடும் தேவாசீர்வாதத்தோடும், மிக ஆடம்பரமாக நடந்து முடிந்தது. ஆனால் சில மாதங்களுக்குள்ளேயே நியமிக்கப்பட்ட அந்த விவாக சம்பந்தம் உடைந்துபோயிற்று. அதற்கு காரணங்களும் சொல்லப்பட்டது. ஆனால் அந்த மணப் பெண்ணின் தாயோ, நான் கடவுளைத்தான் நம்பியிருந்தேன். விவாகம் உடைந்தது பரவாயில்லை. ஆனால், இது உடையத்தான் வேண்டுமென்றால் என் பிள்ளைக்கு ஏன் இப்படி ஒரு காரியம் நடக்கவேண்டும். இந்த சம்பந்தம் வராமலே இருந்திருக்கலாமே என்று கண்ணீர் விட்டாள். கடவுள் என் விஷயத்தில் ஏன் இப்படி நடந்துகொண்டார்? ஏன் என் பக்கம் அவர் இருக்கவில்லை? இப்படிப்பட்ட கேள்விகள் நமது வாழ்வில் அப்பப்போ வந்துபோவதை நாம் மறுக்கமுடியாது. இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நாமே தேவனைக் குற்றப்படுத்துகிறவர்களாக பலதடவைகளில் இருந்திருக்கிறோம்.

தேவன் செய்தது சரியா? இது பாரபட்சம் இல்லையா? அவனும் சின்னவன்தானே, தன்னிடம் இருந்ததைத்தானே கொண்டு வந்தான். அவனுடைய காணிக்கையையும் தேவன் ஏற்றுக்கொண்டிருந்திருந்தால் ஒரு நல்ல ஆத்துமா செத்திருக்காதே! மிகுந்த ஆதங்கத்துடனும் மனவருத்தத்துடனும் ஒரு சகோதரி பேசினாள். இது பலருக்குள் எழுகின்ற கேள்விதான். ஏன் கடவுள் காயீனின் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை? ஏன் ஆபேலின் உயிரைக் காப்பாற்றவில்லை? ஆதாமுக்குப் பிறந்த முதற்பிள்ளைகளின் வாழ்வு இப்படி ஆகவேண்டுமா? இக்கேள்விகள் எழுவது தவறு என்று சொல்வதற்கில்லை. ஆனால் சரியான பதிலைக் கண்டுகொண்டால், இன்றும் நமது வாழ்வில் எழுகின்ற பதில் தெரியாத பல கேள்விகளுக்கு நமக்குப் பதில் கிடைத்துவிடும்.

மனிதன் தேவனுக்குப் படைத்த முதல் காணிக்கை: முதல் மனிதன் பாவத்தால் கறைபட்டுப்போக, தேவனுடைய நேரடி பராமரிப்பிலிருந்து அவன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏதேன் தோட்டத்து சுகமும் மகிழ்ச்சியும் பறிபோனது. இனிவரும் காலங்கள் முழுவதும் தான் வாழ வேண்டிய உலகத்தினுள் மனிதன் பிரவேசிக்கிறான் (ஆதியாகமம் 4ஆம் அதிகாரம்).

இந்த உலகம் ஏதேனைப்போல நன்மை மாத்திரம் நிறைந்ததல்ல; வஞ்சகம் தந்திரம் நிறைந்த உலகம். சாத்தானின் வலை விரிக்கப்பட்டுள்ள உலகம். இந்த உலகத்தில்தான் முதல் மனிதன் தம் குடும்ப வாழ்வை ஆரம்பித்து, தம் முதற்பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். தள்ளப்பட்டாலும் கர்த்தராலேயே இந்த மகனைப் பெற்றேன் என்று அந்த முதற்பிள்ளைக்குக் காயீன் என்றும், அடுத்தவனுக்கு ஆபேல் என்றும் பெயரிட்டனர். இருவரும் இருவேறு தொழில்களைச் செய்தனர். அது அவரவர் விருப்பம். காயீன் தன் தகப்பன் தொழிலைத் தொடர்ந்தான். ஆபேலோ தன் ஆடுகளை மேய்க்கிறவனானான். நல்லது, அவரவர் தம்மால் இயன்றதைச் செய்தனர், உழைத்தனர்.

இப்போ இவர்களிடம் காணிக்கை கேட்டது யார்? ஆனால் அவர்கள் கடவுளுக்குக் காணிக்கை கொண்டுவந்தனர். ஆம், தேவனைத் தேடுவதும், தேவனுக்கு நன்றி ஸ்தோத்திரம் செலுத்துவதும், மனிதனுக்குள் உள்ள இயல்பான குணம். ஏனெனில் படைப்பில் அவன் அப்படித்தான் படைக்கப்பட்டான். அவனுக்குள் வைக்கப்பட்ட தேவனுடைய மகிமையை இழந்துபோனாலும் அவன் தன் இயல்பில் மாறவில்லையே! தேவசமுகத்தில் இருந்து விலகினாலும் மனிதன் மனிதன்தான். இந்த இரு சகோதரரும் தங்கள் தங்கள் முயற்சியின் பலனைத் தேவனுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்த வரைக்கும் இருவரும் நல்ல தகுந்த காரியத்தைத்தான் செய்தார்கள். ஆக, தாம் கொடுத்த காணிக்கையில் ஒன்றுமேயில்லை. தங்களிடம் இருப்பதைத்தானே கொடுக்க முடியும். அதுவரை நல்லதுதான்.

ஆனால், இந்தக் காணிக்கையைத் தெரிந்தெடுத்ததைக் குறித்து பரிசுத்தாவியானவர் ஒரு காரியத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான் (ஆதி.4:3,4). ஆபேல் காணிக்கையைத் தெரிந்தெடுத்த விதத்தைப் பார்க்கும்போது நாம் அப்படிச் செய்வோமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இன்று நமது தலையீற்றுகள் எங்கே? முதல் பலன்கள் எங்கே? கர்த்தருக்கென்று எந்தப் பிள்ளையை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். படிப்பு ஏறிவிட்டால் உயர் கல்வி, உயர் தொழில், உயர் பதவி. படிப்பு ஏறாவிட்டால் ஊழியம், போதகர். இதுதானே இன்று நமது நிலை. அதனால்தானே இன்று ஊழியப்பாரம் இல்லாத ஊழியங்களும் ஊழல்களும் சாட்சிகெட்ட காரியங்களும் கிறிஸ்தவ சமுதாயத்திலே மலிந்துவிட்டன.

ஆபேல் பார்த்துப் பார்த்துத் தெரிந்தெடுத்தான். கொழுத்த வடிவான ஆடுகளையெல்லாம் தெரிந்தெடுத்தான். அதிலிருந்து அவன் தேவன்பேரில் வைத்திருந்த அன்பு தெரிகிறது. தேவன்பேரில் அவன் கொண்டிருந்த வாஞ்சை தெரிகிறது. பாவசுபாவத்தில் பிறந்திருந்தாலும் தேவனைத் தேடுகின்ற, அவருக்கு நன்றி செலுத்துகிற வாஞ்சை அவனுக்குள் இருந்தது என்பது விளங்குகிறது. காணிக்கை யாரும் கொடுக்கலாம். ஆனால் எந்த மனதோடு கொடுக்கிறோம் என்பதுவே காரியம்.

காணிக்கையா? அதைக் கொடுக்கிற இதயமா?

தேவன் ஏன் காயீனின் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை என்றுஎழுதப்படவில்லை. எனினும், காணிக்கையின் தராதரத்தை வைத்து அவனையும் காணிக்கையையும் தேவன் புறக்கணித்தார் என்று சொல்லமுடியாது. தன்னிடத்திலுள்ள இரண்டு காசைப் போட்ட விதவையையும் இயேசு பாராட்டினார். அதேசமயம் காணிக்கையைச் செலுத்தவந்து, உன் சகோதரனுக்கு உன்பேரில் குறை உண்டென்று நீ நினைவுகூர்ந்தால், பலிபீடத் தண்டையில்தானே காணிக்கையை வைத்து விட்டுப் போய் காரியத்தை சரிசெய்து விட்டு வா என்றும் இயேசு சொல்லிருக்கமாட்டார். ஆக காயீன் ஆபேல் இருவரும் தம்மிடமுள்ளதையே கொண்டு வந்தனர். காணிக்கை மரக்கறியா ஆடு மாடா என்பதில் அல்ல; அதைச் செலுத்த வந்தவர்களுடைய மனநோக்கிலேயே எல்லாமே தங்கியிருக்கிறது. அதேசமயம், தேவன் ஒரு காரியத்தைச் செய்கிறார் என்றால் அதில் ஒரு நோக்கம் இருக்கும் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.

எபிரெயர் நிருப ஆசிரியர் எழுதிய விசுவாசப் பெயர் பட்டியலிலே முதலிடம் பெற்ற ஆபேலைக் குறித்து அவர் எழுதுகையில்: விசுவாசத்தினாலே காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை ஆபேல் தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவன் சாட்சி கொடுத்தார். அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான் என்று எழுதிவைத்துள்ளார் (எபி.11:4). ஆம், ஆபேலுக்குள் இருந்த அந்த விசுவாசத்தைத் தேவன் கண்டார். இப்படிப்பட்ட ஒரு நல்ல மனுஷன் சாகிறதை தேவன் பார்த்துக் கொண்டுதானே இருந்தார் என்று ஒருவர் விசனப்பட்டார். ஆம், தேவன் அறியாதது எதுவுமே இல்லை. ஆனால், நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். நாம் எத்தனை வருடங்கள் வாழுகிறோம் என்பது அல்ல; நாம் கர்த்தருக்குள் வாழுகிறோமா என்பதுவே காரியம். ஏனெனில் இந்த வாழ்வு வெகு சீக்கிரத்தில் கடந்துபோய்விடும். ஆனால் நம் நித்தியம் எங்கே என்பதுவே காரியம்.

அந்த வகையில் ஆபேல் மரித்தும் இன்றும் பேசுகிறார் என்றால் அவரைக் குறித்து நாம் கவலைகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், காயீன் மரித்திருந்தால் எரிச்சல் பொறாமை கொலைவெறி கொண்ட அவனுடைய ஆத்துமா என்னவாகியிருக்கும்? தேவன் நல்லவர். தேவன் ஆபேலை மாத்திரமல்ல, காயீனையும் நேசித்தார். இல்லையானால் வாழுவதற்குத் தருணம் கொடுத்திருப்பாரா? தேவசமுகத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில் அவன் கேட்டுக் கொண்டபடி, அவனைக் காண்கிறவர்கள் அவனைக் கொன்றுபோடாத படிக்கு அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டிருப்பாரா?

வெளிப்பட்ட உண்மை நிலைமை:

காயீனின் காணிக்கையை தேவன் அங்கீகரித்திருந்தால், என்னென்ன நடந்திராது என்றால், ஆபேல் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டான் என்ற ஒரே ஒரு பதிலைச் சொல்லி விடுகிறோம். ஆனால் முக்கியமான இன்னொன்றும் நடந்திராது என்பதை நாம் சிந்திப்பதில்லை. ஆம், காயீனின் உண்மை நிலைமை வெளிவந்திராது. அவனுடைய உள்ளான மனதின் சிந்தை வெளிவந்திராது. அவனுக்குள் குடிகொண்டிருந்த பாவம் வெளிவந்திராது. அவையும் வெளிவந்து, காயீனும் தனக்களிக்கப்பட்ட தருணங்களைப் பயன்படுத்தியிருந்தால், இன்று ஆபேலின் மரணம் கேள்வியாகவேண்டிய அவசியமே இருந்திராது. எல்லாமே நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நாமும் நல்லவர்கள் போலவே காட்சி தருகிறோம். நமது அஸ்திபாரம் அசைக்கப்படும்போதுதான் நமது உண்மை நிலைமை, நமது விசுவாசத்தின் உறுதி, நாம் வாயினால் பேசுகின்ற பரிசுத்தம் நீதி எல்லாமே வெளிச்சத்துக்கு வருகின்றன.

தெரிவுக்கு ஒரு பாடம்:

காயீனுடைய காணிக்கையை மாத்திரமல்ல, காயீனையும் தேவன் அங்கீகரிக்கவில்லை என வாசிக்கிறோம். அதிலிருந்தே தேவன் காயீனை முன்கூட்டியே அறிந்திருக்கிறார் என்பது தெளிவு. ஆபேல் கொடுத்த காணிக்கை அங்கீகரிக்கப்பட்டு, தனது காணிக்கை விடப்பட்டதைக் கண்டதுமே காயீனுக்கு எரிச்சல் உண்டாகி அவனுடைய முகமே மாறிவிட்டது. அப்பொழுது கர்த்தர் காயீனுடன் பேசினார். கர்த்தர் ஆபேலுடன் பேசினார் என்று எங்கே யாவது எழுதியிருக்கிறதா? இல்லை. ஆனால் அவர் காயீனுடன் பேசினார். கர்த்தர் காயீனை வெறுத்திருந்தால் அவனுடன் பேசியிருப்பாரா? பேசிய கர்த்தர் அவனுக்கு அவனை உணர்த்தி, இன்னமும் தருணத்தையும் கொடுக்கிறார். நீ நன்மை செய்தால் உனக்குத்தான் நல்லது. நன்மை செய்யாவிட்டால் பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும். அது உன்னைப் பற்றிப் பிடிக்கத் தயாராயிருக்கும். நீ அதை ஆளப்போகிறாயா? அது உன்னை ஆண்டுகொள்ள நீ இடமளிக்கப் போகிறாயா? கர்த்தர் ஒரு பாடமே நடத்திவிட்டார்.

காயீனுக்கு அந்தப் பாடம் ஏறவேயில்லை. அந்தளவுக்கு அவனுக்குள் எரிச்சல் பற்றியெரிந்துகொண்டேயிருந்தது. தந்திரமாகப் பேசி, தன்னை நல்லவன்போலக் காட்டி, வயல் வெளிக்கு அழைத்துக் கொண்டுபோய் தன் அன்புத் தம்பியைக் கொன்றுபோட்டான் இந்த அண்ணன். யாரும் பார்க்கவில்லை என்பது அவனது எண்ணம். ஆனால் கர்த்தர் கண்டார். உன் சகோதரன் எங்கே என்று கேட்டார், நடந்தது தெரிந்துகொண்டுதான் கேட்டார். அந்த இடத்திலும் காயீன் தன் பாவத்தை உணருவதற்குக் கர்த்தர் தருணமளித்தார். ஆனால் அவனோ, என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்று என்ன துணிகரமாக பதிலளித்தான். அவன் தன் பாவத்தை ஒரு கடுகளவேனும் உணர வேயில்லை.

இதன் பலன், காயீனுடைய வாழ்க்கை முடிவுக்கு வரவில்லை; மாறாக, இதுவரை அவனுக்கு நல்ல பலன் கொடுத்த பூமி இனி பலன் கொடாது. இந்தப் பூமியில் அவன் நிலையற்று அலைகிறவனாகவும் வாழவேண்டியிருந்தது. அதுமட்டுமின்றி, கொலைகாரன் காயீனின் சந்ததியில் இன்னொரு கொலைகாரன் எழும்பினான் (ஆதி.4:23).

பூமியிலே வாழும் வாழ்வு தேவன் தராவிட்டால் நாம் எங்கும் அதைப் பெற்றுக் கொள்ள முடியாது. அதிலும் நாம் எத்தனைக் காலம் வாழ்ந்தோம், என்னென்ன சாதனைகள் புரிந்தோம் என்பதெல்லாம் வீண். நாம் தேவனுக்குப் பிரியமுள்ள, உத்தமமான, சுத்தமான இருதயத்தோடு, தேவபிள்ளைகளாக வாழுகிறோமா என்பதுவே காரியம். நமது வாழ்விலும் பல சம்பவங்கள் நடக்கும்போது நாம் தடுமாறுகிறோம். ஆனால், அந்த சந்தர்ப்பங்களில்தான் நமது உண்மையான குணாதிசயங்கள், நமக்குள் மறைந்திருக்கிற சுபாவ குணங்கள் வெளிப்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும். அவற்றை உணர்ந்து மனந்திரும்பி தேவனுக்குப் பிரியமாய் வாழலாமே.

தருணம் பார்த்திருக்கும் பாவம்:

அடுத்ததாக, பாவத்தில் விழுந்துபோன இப்பூமியிலே, பாவசுபாவம் நிறைந்த மனு மக்கள் மத்தியிலே வாழுகின்ற நமது வாழ்வின் வாசற்படியிலே குனிந்து பதுங்கி படுத்திருக்கிறது பாவம். நாம் ஒரு சிறிய துவாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் போதும். மண்புழு நெளிவதைப்போல வழுக்கி வழுக்கி நெளிந்து வளைந்து எப்படியோ நமது வாழ்க்கைக்குள் நுழைந்துவிட எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இந்தப் பாவம். காயீன் எரிச்சல் என்ற சிறிய நுழைவாயிலைத் திறந்துவிட்டான். பாவம் அப்படியே அவனைப் பற்றிக்கொண்டு விட்டது. அதேசமயம், என்னிலே என் காணிக்கையிலே என்ன தவறு இருக்கிறது என்று கேட்டு, அதைச் சரிப்படுத்தியிருந்தால், இந்தப் பாவம் அவன் வாழ்விற்குள் நுழைய இடம் கிடைத்திருக்காதல்லவா?

ஆளுகிறேனா? ஆளப்படுகிறேனா?

ஏன் நம் வாழ்வில் பலவித குழப்பமான சந்தேகமான கேள்விகள்? எங்கே தவறு நடந்து விட்டது என்பதை நாம் நிதானமாக முதலில் ஆராயவேண்டும். பாவத்தை ஆளுகிறேனா? அல்லது பாவம் என்னை ஆளுகிறதா? இப்போது ஆரம்பத்திற்கே திரும்பி வருவோம். கண்ணீர்விட்டு அழுத அந்தத் தாயுடன் பேசியபோதுதான் பெண்வீட்டார் விட்ட ஒரு பெரிய தவறு தெரியவந்தது. சிந்திக்காமல், கவலையீனமாக அவர்கள் விட்ட தவறு பெரிய விபரீதத்தில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்திவிட்டது என்பது தெரியவந்தது.

ஒரு சில கேள்விகளை நாமே நம்மைக் கேட்டுப் பார்ப்போம்.

ஒன்று, நீ தவறு செய்திருக்கலாம் என்று யாராவது நம்மிடம் சொன்னால் அதற்கு நமது பதிற் செய்கைதான் என்ன? அதனை மறுப்போமா? நாம் சரி என்று வாதாட முயற்சிப்போமா? அல்லது, அதைக்குறித்து சிந்தித்து அதைச் சரிசெய்ய முயற்சிப்போமா?

இரண்டாவது, காயீனுக்கு பல தருணங்களைக் கொடுத்த தேவன் நமக்கும் தருகிறார் என்பதை உணர்ந்து, அந்த தருணங்களைப் பயன்படுத்தி மனந்திரும்புவோமா? அல்லது காயீனைப்போல அதனை உதாசீனம் பண்ணு வோமா?

மூன்றாவது, ஒரு சிறு கோபம், எரிச்சல், சுயநீதி போன்ற சின்ன துவாரங்களைத் திறந்து வாசற்படியில் படுத்திருக்கும் பாவத்தை உள்ளே வரவேற்போமா? அல்லது, அதை உதைத்துத் தள்ளுவோமா? காயீன் எரிச்சல் என்ற சிறிய துவாரத்தைத்தான் திறந்து விட்டான். அது அவனை ஒரு கொலையாளி ஆக்கி விட்டது.

காயீனைக் குறித்து பல விமர்சனங்களைச் செய்கின்ற நமது வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. சகரியா பூணன் அவர்கள் தமது ஒரு செய்தியிலே, நமது வாழ்வில் ஒரு சதவீதமளவைத்தான் உலகம் காண்கிறது என்றும் மிகுதி 99 சதவீதமும் நமது உள்ளான அந்தரங்க வாழ்வு என்றும் விளக்கியுள்ளார். அந்த ஒரு சதவீதத்திற்காக, உலகத்தில் நற்பெயர் எடுப்பதற்காக நாம் எவ்வளவாக போலியான மாயையான காரியங்களையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறோம். ஆனால் அந்த ஒரு சதவீதமும் அழிந்துபோய்விடும். என்றும் அழியாத அந்த அந்தரங்க ஆத்துமாவிற்குள் இருக்கின்ற கறைகளை நீக்கி, அவை வெளிப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும்போது அதையுணர்ந்து மனந்திரும்பி நமது வாழ்வைக் கர்த்தருக்குள்ளாகக் கட்டியெழுப்புவோமானால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும். காயீனுக்காக வக்காலத்துப் பாடுவதை விட்டுவிட்டு, நமது வாழ்வில் மறைந்திருக்கிற பாவ சுபாவங்களைக் கண்டறிந்து அவற்றை அழித்துப்போட்டு புது வாழ்விற்குள் கடந்து வருவோமாக.

பாவம் நம்மை ஆளுகைசெய்ய துடித்துக் கொண்டிருக்கிறது. கர்த்தராகிய கிறிஸ்து அந்தப் பாவத்தை சிலுவையிலே பரிகரித்துவிட்டார் என்பதையும் மறந்து நாம் எவ்வளவாய் பாவத்தை நேசித்துக் கொண்டிருக்கிறோம். ஆதித் திருச்சபைகளில் மாத்திரமல்ல, இன்றும் திருச்சபைகளுக்குள்ளும் கிறிஸ்தவ குடும்பங்களுக்குள்ளும் எரிச்சல் பொறாமை கோபம் வஞ்சகம் பிரிவினை விபசாரம் வேசித்தனம் என்றும் எல்லாமே நிறைந்திருக்கிறது. திருச்சபை என்பது யார்? நாமேதான். நம் வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களும், சம்பவங்களும் கூட தேவன் நமக்களிக்கும் தருணங்கள். பாவத்திற்குக் கட்டுப்படாமல், பாவத்தைக் கட்டியாண்டு, ஜெயங்கொண்டு எழும்புவோமாக.

நமது குணாதிசயங்கள், உள் மனதின் சிந்தனைகள் என்பவைகளே நமது முகபாவத்திலும் செயல்களிலும் வெளிப்படுகிறது. பாவம் ஆயத்தமாய் காத்திருக்கிறது. நாம் பாவத்தை ஆளப்போகிறோமா? பாவம் நம்மை ஆளுகை செய்ய விட்டுவிடப் போகின்றோமா? தெரிவு நம்முடையதே!

சத்தியவசனம்