நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள்

கோதுமை மணி – 18
(செப்டம்பர்-அக்டோபர் 2011)

டேவிட் பிரெய்னெர்டு

கணெக்டிக்கட் மாகாணத்தில் ஹடாம் என்னும் இடத்தில் டேவிட் பிரெய்னெர்ட் பிறந்தார். இவர் ஒன்பது பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை. இவருக்கு நான்கு சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் இருந்தனர்.

டேவிட் கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் கலகலப்பாகப் பேசமாட்டார். அவர் தன் பெற்றோருடன்கூட மனம்விட்டுப் பேசியதில்லை. எனவே இவர் விடைதெரியா பல கேள்விகளையும் தன் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தார். சில எண்ணங்கள் இவருக்குக் கவலையளித்தன. இளைஞனாயிருக்கும்போதே டேவிட் தனக்கும் இறைவனுக்கும் இடையில் உறவுகள் சரியாக இல்லை என்று உணர்ந்தார். மரணம் பற்றிய சிந்தனை இவருக்குப் பயம் அளித்தது.

டேவிட் ஒன்பது வயதாக இருக்கும்போது இவரது தந்தை இறந்துவிட்டார். அவரது 14ஆவது வயதின்போது அவருடைய தாயின் மரணம் ஏற்பட்டது. இந்த மரணங்கள் டேவிட்டின் உள்ளத்தில் பல கேள்விகளை எழுப்பின. இவரை அதிக கவலை கொள்ளச் செய்த கேள்வி, தேவனைப்பற்றி அறிந்து கொள்வது எப்படி? என்பதே. இவருக்கு தேவனைப் பற்றி ஓரளவு தெரியும். எனினும் தனக்குக் கடவுளைப்பற்றி முழு அளவில் தெரியுமா? என்பது சந்தேகமாக இருந்தது. தன்னுடைய வாழ்வில் ஏதோ ஒரு குறை இருப்பதாக டேவிட் உணர்ந்தார்.

ஆலயத்துக்கு ஒழுங்காகச் செல்லுதல், வேதம் வாசித்தல், ஜெபித்தல் இவற்றில் டேவிட் தவறவில்லை. எனினும் தேவன் இவரைவிட்டு வெகு தூரத்தில் இருப்பதாகவே தோன்றியது. அவருடைய உள்ளத்தில் சமாதானமும், சந்தோஷமும் இல்லை. இன்னும் தேவனோடு தன் உறவு சரியாகவில்லை என்று உணர்ந்தார். அதற்கு தான் என்ன செய்யவேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை.

டேவிட் தன் 19ஆவது வயதில் டர்ஹாம் என்னுமிடத்தில் ஒரு பண்ணையில் வேலைக்குச் சென்றார். அங்கு ஒருவருடம் தங்கியிருந்தார். அப்போது, தான் கண்டிப்பான ஒரு பக்தியுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென்று தீர்மானித்தார். இந்தக் காலத்தைக் குறித்து அவர் இப்படி எழுதி வைத்துள்ளார். என்னுடைய சிந்தனைகள், பேசிய வார்த்தைகள், செய்த செயல்கள் அனைத்தும் மிகவும் கண்டிப்பாக, சரியானவைகளாக, கடவுளுக்குப் பிரியமானவைகளாக இருந்தன. நான் என்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்ததாகக் கற்பனை செய்து கொண்டேன். இப்படிச் செய்த போதிலும் நான் சந்தோஷத்தைக் கண்டடையவில்லை.

டேவிட்டின் 21 வயதுக்குப் பிறகு, இரட்சிப்பு என்னும் சத்தியம் அவருக்குப் புரிவதுபோல் காணப்பட்டது. அவர் தன்னுடைய இரட்சிப்புக்காகப் பிரயாசப்பட வேண்டியதிருக்கவில்லை. இயேசு சிலுவையில் உயிர்விட்டபோதே டேவிட் செலுத்தவேண்டிய பாவப்பிராயச் சித்தத்தைச் செலுத்திவிட்டார். இவரிடம் தேவன் எதிர்பார்த்தது டேவிட் இந்த இரட்சிப்பை ஏற்றுக்கொண்டு, தன் வாழ்வை தேவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே.

1739 ஜூலை 12ஆம் நாள் இது நடந்தது. அந்த நேரம் முதலே டேவிட்டின் வாழ்க்கை முழுவதும் மாறிவிட்டது. இனிமேல் அவர் இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்து தன் வாழ்க்கையை நடத்தவேண்டும்.

1739 செப்டம்பரில் பிரெய்னெர்ட் நியூ ஹேவனில் உள்ள யேல் பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெறச் சென்றார். ஆனால் அங்கு மூன்றாம் ஆண்டு படித்திருக்கும்போது கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இது கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் கல்லூரியிலேயே டேவிட் திறமையான மாணவர்களில் ஒருவர். கல்லூரி வளாகத்திலேயே மிகச் சிறந்த ஒரு கிறிஸ்தவராகவும் இருந்தார்.

ஒருநாள் டேவிட் தன் நண்பர்கள் சிலருடன் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு படிக்கும் கிறிஸ்தவ மாணவர்கள் கூடி தங்களுக்குள் நடத்தும் ஜெபக் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு ஆசிரியரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த ஆசிரியரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று ஒரு மாணவர் டேவிட்டிடம் கேட்டார். அதற்கு டேவிட் உயிரற்ற ஜடமான இந்த மர நாற்காலிக்கும் அவருக்கும் வித்தியாசமில்லை என்றார்.

இந்த உரையாடலை இன்னொரு மாணவன் கேட்டுக் கொண்டிருந்து, அப்படியே போய் கல்லூரி முதல்வரிடம் சொல்லிவிட்டான். கல்லூரி நிர்வாகிகள் டேவிட்டிடம், நீ எல்லா மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் பகிரங்கமாக உன்னைத் தாழ்த்தி இதற்காக வருந்துவதாகக் கூறி மன்னிப்புக் கேட்க வேண்டும். அல்லது கல்லூரியை விட்டு உன்னை விலக்கிவிடுவோம் என்றனர். டேவிட் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். எனவேதான் அவர் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முன்பாக அதை வாசித்து மன்னிப்புக் கேட்டார்.

கல்லூரியிலிருந்து விலக்கப்பட்ட பின் டேவிட் ஒரு போதகருடன் சென்று வாழ்ந்தார். அவரோடு சேர்ந்து தன் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு தங்கியிருக்கும்போது தன்னுடைய எதிர்கால வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று திட்டமிட்டார். தன் வாழ்வின் மீதிக் காலம் முழுவதும் ஆண்டவருக்கு ஊழியம் செய்வதிலேயே செலவிட வேண்டும் என்று நினைத்தார். அவர் படிப்பை முடிக்க முடியாததால் ஒருவேளை ஒரு போதகர் ஆக முடியாவிட்டாலும், ஒரு மிஷனெரியாகி ஊழியம் செய்யலாம் என்று நினைத்தார். தான் ஒரு மிஷனெரியாகி ஊழியம் செய்வதுதான் ஆண்டவருடைய சித்தம் என்று சீக்கிரம் உணர்ந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு மிஷனெரி சொசைட்டி, அமெரிக்காவில் நியூயார்க், நியூ ஜெர்ஸி, பென்சில்வேனியா என்னும் இடங்களில் வசித்த இந்தியர்கள் மத்தியில் மிஷனெரி ஊழியம் செய்யத் தெரிந்தெடுத்தனர்.

இந்தப் பணியை டேவிட் ஏற்றுக் கொண்டார். இங்கு பணியாற்ற இவருக்கு முதல் தேவை அங்குள்ள மொழியைக் கற்றுக் கொள் வதாகும். அது ஒரு சிக்கலான மொழி. பல வகை எழுத்தமைப்புகள் கொண்டது. அதைப் படிக்க மிகவும் பொறுமை தேவைப்பட்டது. மிக மெதுவாகத் தான் அதைப் படிக்க முடிந்தது. இவரால் அந்த மொழியைக் கற்றுத் தேர்ச்சி யடைய முடியவில்லை. அங்கிருந்த இந்தியர் களில் ஆங்கிலம் தெரிந்த ஓரிருவர் இருந்தனர். அவர்களின் உதவியைக் கொண்டு இவர் பேசுவதை மொழிபெயர்க்கச் சொல்லி ஊழியம் செய்தார்.

இவரது மொழிப் படிப்பில் முன்னேற்றம் இல்லை. அதே வேளையில் இவரது ஊழியம், இவர் கூறிய நற்செய்தி இவற்றை அந்த மக்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் இவரைச் சந்தேகப்பட்டார்கள். இதற்கு முன்னால் அங்கு பணியாற்றிய வெள்ளையர் ஒருவர் அவர்களைக் கொடுமைப்படுத்தினார். அன்பாக நடத்தவில்லை. எனவே அதுமுதல் அவர்கள் வெள்ளையர்கள் எவரையும் நம்புவதில்லை.

இந்தியர்கள் மத்தியில் டேவிட் ஊழியம் செய்யும்போது ஏற்பட்ட இன்னொரு தடை, இந்தியர்களில் மாந்தரீகம், குறி பார்த்தல், ஆவிகளைக் கொண்டு கிரியை நடப்பித்தவர்கள் போன்றவர்கள் இருந்ததாகும். டேவிட் மூலம் இயேசுகிறிஸ்துவைக் குறித்து அறிந்தவர்கள் இந்த மந்திரவாதிகளைக் கேள்விகள் கேட்கவும் புறக்கணிக்கவும் தொடங்கினர். இதைக் கவனித்த மந்திரவாதிகள் தங்கள் செல்வாக்கு குறைவதையும் கிறிஸ்துவின் செல்வாக்கு வளருவதையும் கண்டு, அந்தக் கொடிய மக்கள் அங்கிருந்த கிறிஸ்தவர்கள், டேவிட் பிரெய்னெர்ட் ஆகியோருக்குப் பல துன்பங்களைக் கொடுத்தனர்.

டேவிட்டுக்கு ஜெபிப்பது சுவாசம் விடுவது போன்றதாகும். ஊக்கமாக, நீண்ட நேரம் ஜெபிப்பார். சில நாட்கள் இரவு முழுவதும் ஜெபிப்பார். இவருடைய ஊழியத்தில் இவருக்குக் கிடைத்த வெற்றிக்குக் காரணம் இவருடைய ஜெபமே.

இவருடைய ஊழியத்தில் பல தடைகள், பல எதிர்ப்புகள் தோன்றி இவரைச் சோர்வடையச் செய்ததுண்டு. இவர் எதிர்பார்த்தபடி அவர்கள் இயேசுவின் அன்பை அறிந்து அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

மிஷனெரி ஊழியத்துக்கு வந்த டேவிட் பிரெய்னெர்ட் அனுபவித்தவை.

1. புதிய இடத்தில் தனக்கு ஒரு நண்பர், உறவினர் கூட அங்கு இல்லை.

2. வாழ்க்கை வசதிகள், சுகம் எதுவும் இல்லை.

3. போதுமான நல்ல உணவு கிடைக்க வில்லை.

4. பலதடவைகளில் ஆபத்துக்கள் இவருக்கு வந்தன.

இப்படி மகிழ்ச்சியும், வசதியும், ஊழியத்தில் திருப்தியும் இல்லாதிருந்தபோதும், ஒருபோதும் இந்த ஊழியத்தைவிட்டுப் போய்விடுவோம் என்று டேவிட் நினைத்ததில்லை.

டேவிட்டின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவர் சுகவீனமாகப் படுத்திருக்கும்போது இவருக்கு உதவி செய்யவோ, கவனிக்கவோ எவரும் இல்லை. இது அவரை மிகவும் மன வேதனையும், சோர்வும் ஏமாற்றமும் அடையச் செய்தது.

டேவிட் பேசும்போது அதை மொழி பெயர்த்து உதவிய நண்பர் கிறிஸ்தவர் அல்ல. ஆனால் டேவிட் இயேசுவைப் பற்றி பேசிய அனைத்தையும் மொழிபெயர்த்ததன் மூலம் அறிந்துகொண்டார். அவருக்குக் கிறிஸ்தவனாக வேண்டும், இயேசுவையே வணங்க வேண்டும் என்னும் ஆவல் எழுந்தது.

ஒருநாள் அந்த நபர் டேவிட்டிடம் வந்து ஐயா, நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். இதே கேள்வி பிலிப்பியில் உள்ள சிறைக் காவலாளியால் பவுலிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது பவுல் அவனுக்குக் கூறிய பதிலையே டேவிட்டும் கூறினார்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி. அப்போது நீ இரட்சிக்கப்படுவாய் என்றார். அவர் இயேவைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவரானார். மேலும் டேவிட்டுக்கு உடன் ஊழியராகி, உண்மையும் உத்தமமுமாக உழைத்தார். டேவிட்டின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார். டேவிட் பேசிய செய்தியை மொழிபெயர்த்து உதவினார். இந்திய மக்களின் நம்பிக்கையையும், பழக்க வழக்கங்களையும் டேவிட்டுக்கு சொல்லிக் கொடுத்தார். திடீரென்று டேவிட்டின் மிஷனெரி ஊழியத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இவர் நடத்திய ஜெபக்கூட்டங்களுக்கு ஏராளமான இந்தியர்கள் வந்து கூட ஆரம்பித்தனர். மனக்கவலை, வியாதி, துன்பங்கள் நீங்க வழி என்ன? என்று ஆவிக்குரிய உதவிகள் கேட்கவும், ஜெபிக்கவும் பலர் வரத்தொடங்கினர். இவையெல்லாம் தேவன் இவருடைய ஊழியத்தை ஆசீர்வதித்ததின் பலனாய் ஏற்பட்டவையே. 1745 கோடைகாலத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டது. அநேக வாரங்கள் தொடர்ச்சியாக இந்தியர்கள் இவரிடம் வந்துகொண்டிருந்தனர்.

1745 ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் இவரது ஊழியத்தின் உச்சகட்டம். அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், பொல்லாதவர்கள் என எல்லா வகை மக்களும் வந்து கூடியிருந்தனர். எல்லோரும் நற்செய்தியை அமைதியாகக் கேட்டனர். அவர்களில் பல வருடங்களாகப் பெரிய குடிகாரர்களாயிருந்து, தங்கள் உடலையும், வாழ்க்கையையும், குடும்பத்தையும் சீரழித்து, மனம் உடைந்தவர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வந்தனர்.

கூட்ட முடிவில் மேடையிலிருந்து ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் முன்னே வாருங்கள் என்று அழைத்தபோது, குடிகாரர்கள், குற்றவாளிகள், கொடியவர்கள் உட்பட ஆண்களும், பெண்களும் கூட்டமாக முன்னேறினர். டேவிட் அவர்களுக்காக ஜெபித்து, ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி விசுவாசத்துடன் வாழ வழிகாட்டினார். இப்படி மனந்திரும்பியவர்களுக்குத் தனியாகக் கூட்டம் நடத்தி, அவர்கள் இரட்சிக்கப்படவும், விசுவாசத்தில் உறுதிப்படவும், பரிசுத்தமாய் வாழவும் போதனை கொடுத்தார். கூடி ஜெபித்தல், பாடித் துதித்தல், வேதம் வாசித்தல் இவற்றில் தரித்திருக்கக் கூறினார். இவர்களுக்கு டேவிட்டின் தியாக வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக இருந்தது. அவர் தன் சுகம், சந்தோஷம், வசதி, வாழ்க்கை அனைத்தையும் துறந்து, இவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காகவே தன் வாழ்க்கையைத் தியாகம் செய்திருந்ததை எண்ணி பாராட்டினார்கள்.

இந்தத் தியாகிக்கு வயது 29ஆக இருந்த போது அவருக்கு வியாதி வந்தது. வசதியும், மருத்துவ உதவியும் இல்லாத இடத்தில் இந்த வியாதியின் கொடுமையில் தனது 30 வயதுக்கு முன்னரே இறந்து போனார்.

உலகில் அவருடைய பணி முடிந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். நீதியின் கிரீடம் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதைப் பெற்றுக்கொள்ளப் போகிறேன் என்று இறைவன் பாதம் சேர்ந்து விட்டார்.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்