நியாயாசனத்திற்கு ஆயத்தமாயிருக்கிறேன்

பாஸ்டர் ஜாண் மேக் ஆர்தர்
(ஜூலை-ஆகஸ்டு 2017)

சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும் (2 கொரி.5:10).

இயேசுவானவரின் வார்த்தைகள்: “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனுவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” என்று வெளி.22:12-ல் எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வார்த்தைகள் விசுவாசிக்கு பலன் அளிக்கும் வேளை ஒன்று உண்டு என்று கற்பிக்கிறது. தன் ஊழியத்தை முடித்தவராய் அப்போஸ்தலராகிய பரி.பவுல்: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது; நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” (2தீமோ.4:7,8) என்று அறிக்கை செய்தார். மட்டுமல்லாமல் “நாமெல்லாரும் (விசுவாசிகள்) கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்” (2 கொரி.5:10) என்றும் பரி.பவுல் ஆணித்தரமாய்க் கூறினார்.

இந்த நியாயாசனம் என்ன? கர்த்தரின் வரு கைக்குப்பின் உடனே நேரிடவிருக்கும் வெகுமானங்கள் அளிக்கும் காலம் என்பது என்ன? கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நான் காணப்படுவேன் என்றால் அதின் விபரம் என்ன என்று அறிய விரும்புகிறேன். மேலும் அங்கே நான் மிகவும் மேன்மை தரும் ஒரு சூழ்நிலையை அடையவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

எப்பொழுது நடக்கும்?

முதலாவது, இவைகளெல்லாம் பரிசுத்தவான்கள் விசுவாசிகள் எல்லோரும் பூமியிலிருந்து ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபின் தாமதமில்லாமல் நடக்கப்போகிறது. “இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது” (வெளி.22:12).

எங்கே நடக்கும்?

நியாயத்தீர்ப்பின் இடம். “பேமா” (Bema) என்ற பதத்திலேயே அதன் சொற்பொருளிலிருந்து தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகிய “நியாயத்தீர்ப்பு” என்ற பதம் சரியானதல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் “நியாயத்தீர்ப்பு” என்றாலே அநேக பயங்கரமான எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகின்றன. வேதாகமத்தில் நியாயத்தீர்ப்பைப்பற்றி எழுதியிருக்குமிடமெல்லாம் அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய அர்த்தத்தை நினைக்கும்பொழுது நாம் நமது பாவத்தையே மனதில்கொள்கிறோம். விசுவாசிகள் கிறிஸ்துவிற்கு முன்பாக நிற்கும்போது அளிக்கவிருக்கும் நியாயத்தீர்ப்பைத் தவிர, வேதத்திலுள்ள மற்ற எல்லா நியாயத்தீர்ப்பும் பாவத்திற்காக அளிக்கப்படும் நியாயத்தீர்ப்பாகும். “பேமா” என்ற பதத்திற்கு அட்சரப்பிரகாரமான அர்த்தம் என்னவெனில், ‘படிக்கட்டுகளால் ஏறி அடையும் ஒரு உயர்ந்த மேடை’ என்பதாகும். இதைப் பற்றித்தான் அப். 18-ம் அதிகாரத்தில் நியாயாதிபதியின் அதிகாரப் பூர்வமான ஆசனம், அதாவது நியாயாசனம் என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் கிறிஸ்துவின் நியாயாசனம் என்பது தண்டனையளிக்கப்படும் இடம் என்பதையல்லாமல் மிக முக்கியத்துவம் கொண்டதும் எல்லா அதிகாரமும் படைத்ததுமான ஒரு ஆசனமாகும்.

“பேமா” என்றால் கொரிந்தியர்களின் மனதில் எழும் ஒரு மனவுருவத்தை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். கொரிந்து பட்டணத்திற்கு வெளியே உலக விளையாட்டுப் பந்தயங்கள் நடந்த பெரிய அரங்கம் ஒன்று இருந்தது. அதன் நடுவிலே ஒரு உயர்ந்த மேடை இருந்தது. அதற்கு முக்கியத்துவமும் கெளரவமும் பெருமதிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை ‘பேமா’ என்று அழைத்தனர். நடத்தப்படும் பந்தயத்தில் வெற்றிபெற்றவர்கள் ‘பேமாவிற்கு’ அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் பேமாவிற்கு ஏறி அதன் உயர்ந்த இடத்தில் நிற்பார்கள். அப்பொழுது நாட்டின் ஒரு பிரபலமான பிரஜை, சரமாகக் கோர்த்த சிந்தூர் (Oak) மர இலைகளை, அல்லது வளையமாகப் பின்னின புன்னை (Laurel) மர இலைகளை, அல்லது ஒரு பூமாலையை, சிறந்த வெற்றி ஆர்ப்பரிப்பின் சின்னமாக வெற்றி பெற்றவர்களின் தலையில் சூடி அவர்களை மரியாதை செய்வார்.

ஒவ்வொரு விசுவாசியும் மேலே விவரிக்கப்பட்ட மேன்மை பொருந்திய மேடைக்கு ஏறிப்போய் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன் நிற்போம். அங்கே தேவனுடைய பாராட்டுதல்களைப் பெறுவோம்.

யார் அவர்?

யார் அந்த நியாயாதிபதி? கிறிஸ்துதான் அந்த நியாயாதிபதி! யோவான் 5:22-ல் “பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல் நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்” என்று கூறப்பட்டிருக்கிறது. இது கிறிஸ்துவை உயர்த்தி மேன்மைப்படுத்துவதின் ஒரு பாகமாகும். அவர் நியாயத்தீர்ப்பை அளிக்கும்போது தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.

இயேசுவானவரின் முன்னிலையில் அவரை முகமுகமாய்ப் பார்த்துக்கொண்டு நிற்பதையும், அப்பொழுது அவர் நம்மைப் பார்த்து ‘இதோ உன் உண்மைகளுக்காக நான் உனக்குக் கொடுக்கும் வெகுமானம்’ என்று சொல்லுவதையும் மனதில் நினைவுகொள்ளுவதே எவ்வளவு அன்னியோன்னியமான ஒரு உணர்வை எழுப்புகிறது! நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காணப்பட்ட நேர்மையும் நீதியுமுள்ள கிரியைகளுக்காக வெகுமானங்களை அவரே அளிக்கப்போகிறார்! இவ்விதம் வெகுமானங்கள் பெறவிருக்கும் ஜனம் யார்? கிறிஸ்தவ விசுவாசியான பவுல் கிறிஸ்தவ விசுவாசிகளுடன் உரையாடுவதால் 2 கொரி.5: 10-ல் உபயோகிக்கப்பட்டிருக்கும் ‘நாம்’ என்ற பிரதிப்பெயர்ச்சொல் அவரையும் கொரிந்து விசுவாசிகளையும் சேர்த்தே குறிக்கிறது. இந்தக் கூற்றுக்கு முன்வரும் ஒன்பது வசனங்களைக் கவனிக்கும்போது இவைகள் கிறிஸ்தவ விசுவாசிகளைத் தவிர வேறே யாரையும் குறிப்பிடவில்லை என்பது விளங்குகிறது (2 கொரி.5:1-9).

எல்லா விசுவாசிகளும் வெகுமானங்கள் அளிக்கப்படும் மேடைக்கு ஏறிச்செல்லப் போகிறார்கள். ஆனால் 1 கொரி.3:15-லிருந்து சில விசுவாசிகளுடைய கிரியைகள் அதிக விலையேறப் பெற்றதாய் இருக்காது என்று அறிகிறோம். அவைகள் வெந்துபோகும்; ஆனபோதிலும் ‘பேமா’ நியாயாசனத்திற்கு முன்வரும் ஒவ்வொருவரும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருந்தாலும் இரட்சிக்கப்படுவார்கள்.

ஏன் இந்த நியாயத்தீர்ப்பு?

இந்த நியாயத்தீர்ப்பின் நோக்கம்தான் என்ன? இதை விளங்கிக்கொள்ளுவதற்காக ரோமர் 14:12-ஐக் கவனியுங்கள். “ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்”. இதுவே இதன் நோக்கம்.

ஒரு விசுவாசியாக நீ கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன் சேருமுன், ஏற்கனவே மேகங்களிலிருந்து இறங்கிவரும் கிறிஸ்துவுடன் எடுத்துக்கொள்ளப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டிருப்பாய். மோட்சத்தை அடைவதற்கு வேண்டிய தகுதிகள் எல்லாம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டன. இந்த நியாயத்தீர்ப்பிற்கு ஆரம்பமாக கர்த்தருடன் மேகங்கள்மேல் எடுத்துக்கொள்ளப்படும் மக்கள், மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே.

ரோமர் 6:14-ல் “நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆம், ஒரு உண்மை விசுவாசியின் வாழ்வில் மன்னிக்கப்படாத பாவம் இருக்கமுடியாது. அப்படியானால் “சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு” என்று 2 கொரி.5:10-ல் கூறப்பட்டிருப்பது எதற்காக? எல்லா தீமையான காரியங்களும் வெளிப்படுத்தப்படுமோ? சரியானபடி கிரேக்க மொழியில் உபயோகித்திருக்கும் பதம் குறிப்பிடுவது தீமையைப் பற்றியுமல்ல; பாவத்தைப் பற்றியுமல்ல. தகுதியற்ற அல்லது உபயோகமற்ற காரியங்களையே குறிக்கின்றது. அப்படியென்றால் இந்த நியாயத்தீர்ப்பு, தேவன் விலைமதிப்புள்ள காரியங்களோடிருக்கும் உபயோகமற்ற காரியங்களை நீக்கிவிட்டு மீதியானவைகளின் அடிப்படையில் விசுவாசிகளுக்குப் பலனளிக்கும் ஒரு ஒழுங்காகும்.

விசுவாசிகளுடைய கிரியைகளை நீதியாய்த் தீர்ப்புசெய்யும் முறையை நிர்ணயிப்பதைப் பற்றி வேதாகமத்தில் சில அடிப்படைக் கருத்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது உக்கிராணத்துவம். 1கொரி.12-ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களான நமக்கு தேவன் சில ஆவிக்குரிய வரங்களைக் கொடுத்திருக்கிறார் என்று பார்க்கிறோம். நமக்கு இயல்பான திறமைகளும் ஆற்றல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் நமக்குச் சொந்தமானவைகளல்ல. அவைகளை உக்கிராணக்காரராகவே நாம் கொண்டுள்ளோம். ஒரு உக்கிராணக்காரன் மற்ற ஒருவருக்காக அவருடைய காரியங்களை நடத்துபவன். அவைகள் அவனுக்கு சொந்தமானவைகளல்ல; அவன் அவைகளைக் கவனித்துமட்டுமே வருகிறான். அதேவிதம் ஒரு விசுவாசிக்கு கொடுக்கப்பட்ட ஆவியின் வரங்கள் அவனுக்கு சொந்தமானவைகளல்ல. அவைகள் தேவனுடையவைகள். 1 பேதுரு 4:10-ஐக் கவனியுங்கள். ஆகவே நம்முடைய தனிப்பட்ட உக்கிராணத்துவத்திற்கு கணக்கு ஒப்புவிக்கும்படி தேவனுடைய சந்திதானத்தில் நிற்போம். “இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைத் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன். மேலும் உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்” (1 கொரி.4:1,2).

வேதாகமம் இந்த விஷயத்தை ஒரு கட்டடமாகவுமே பாவிக்கிறது. 1கொரி.3:11-15-ல் பரி.பவுல் விசுவாசி ஒரு அஸ்திபாரத்தின்மேல் கட்டுகிறான் என்று கூறுகிறார். அந்த அஸ்திபாரம் கிறிஸ்து. ஆனால், கட்டடம் கட்டப்படுவதோ பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்கள், மரம் புல், வைக்கோல் ஆகிய பொருட்களைக்கொண்டு. எவைகளானாலும் “அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப்பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்” (வச.13,15).

ஒரு விசுவாசிக்கு ஒரு அஸ்திபாரம் உண்டு அது இயேசுகிறிஸ்துவே என்று பரி.பவுல் சொல்லுகிறார். அவனுக்கு வீடுகட்டும் பொருட்களைத் தெரிந்துகொள்ள அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன் தன்னுடைய வாழ்க்கையை மரம், புல், வைக்கோல் ஆகியவைகளை வைத்துக் கட்டலாம். அவ்விதம் கட்டுவது பலனளிக்கக்கூடாதவைகளை வைத்து கட்டடம் கட்டுவதாகும். சில விசுவாசிகள் இவ்விதம் தங்கள் வாழ்க்கையைக் கட்டுகிறார்கள். அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள்தான். தேவனுடைய பாராட்டுதலைப் பெறவிருக்கிறார்கள். ஆம், தேவன் அவர்களைப் பாராட்டுவார். ஆனால் சிலர் கிரீடங்கள் பெற விரும்புகிறாாகள். அவர்கள்தான் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்கள் ஆகிய பிரயோஜனமான பொருட்களால் தங்கள் வாழ்வைக் கட்டினவர்கள். இவைகள் அக்கினியினூடே செல்லும். ஆனால் எரிந்து போகாது. இந்தக் கிரியைகளை தேவன் விலையேறப்பெற்றதும் நித்திய மதிப்பை உடையதுமாகக் கருதுவார்.

இதற்கடுத்தபடியாக 1 கொரி.9-ம் அதிகாரத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு பந்தயத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. இங்கேயும் வெகுமானங்களைப் பெறும்வேளையைப் பற்றி கூறுகிறது. 24-ம் வசனம் கூறுகிறது: “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”. ஒரு கிறிஸ்தவன் பந்தயத்தில் வெற்றி பெறுவதற்காக ஓடவேண்டும். 25-ம் வசனத்தில் விசுவாசிகள் ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள். இதைத் தொடர்ந்து, “ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு. என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (வச.26,27) என்று முடிக்கிறார்.

விசுவாசியே! நீ இயேசுகிறிஸ்துவின் முன் நிற்கப்போகிறாய், வெகுமானங்கள் அளிக்கப்படும் வேளை இருக்கப்போகிறது. இதற்கிடையில் முழுமையான பலனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் எவைகள் முக்கியமானவைகள் என்று விளங்கிக்கொள்வதற்கும் உன்னுடைய திறமைகளையும் தாலந்துகளையும் நல்ல உக்கிராணத்துவத்துடன் உபயோகிப்பதற்காகவும், உன்னையே நல்லொழுக்கத்திற்கு கட்டுப்படுத்தவேண்டியது அவசியம்.

ஆகவே நியாயாசனத்திலிருந்து தேவன் எவற்றை நியாயந்தீர்ககப் போகிறார்? நோக்கங்களை விசாரிப்பார்; “இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்” (1 கொரி.4:5). ஆதலால் “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்; என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்.139:23,24) என்று சங்கீதக்காரனோடே நாமும் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பது மிக அவசியம்.

தேவன் நம் நடத்தையையும் விசாரிக்கப் போகிறார். சரீரப்பிரகாரமாக நாம் நடந்து கொண்டதன் பலனைப் பெறுவோம். அதன்பின் நாம் செய்த பணியை விசாரிப்பார். ஒவ்வொரு மனிதனுடைய கிரியைகளும் வெளிப்படுத்தப்படும். ஆனால் நம்மில் காணப்பட்ட நேர்மைக்கும் உண்மைக்கும் வெகுமானங்கள் வாக்குப் பண்ணப்பட்டிக்கின்றன. வேதாகமத்தில் ஐந்து கிரீடங்களைப் பற்றிக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவைகளாவன: அழிவில்லாத கிரீடம், நீதியின் கிரீடம், மகிழ்ச்சியின் கிரீடம், மகிமையுள்ள கிரீடம், ஜீவ கிரீடம். இவை ஒவ்வொன்றும் நேர்மையாயும் உண்மையுமாயும் நடந்துகொண்டதற்கான வெவ்வேறு கிரீடங்களாகும்.

அழிவில்லாத கிரீடம் யாருக்கென்றால், ஆண்டவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தங்களுக்கானதை தியாகம்செய்து, தேவனுக்காகவே வாழ்வதற்கு தங்களை நல்லொழுக்கத்திற்குள் கட்டுப்படுத்தியவர்களுக்குமட்டுமே சூட்டப்படும் (1 கொரி. 9:25).

நீதியுள்ள கிரீடம் யாருக்கென்றால், அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் கிடைப்பதாகும். அதாவது யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவை அவ்வளவு அதிகமாய் நேசிப்பதால் அவருடைய வருகையை எதிர்பார்ப்பதே அவர்கள் வாழ்க்கையில் முதலிடமாகக் கொண்டிருக்கிறவர்களுக்கு அளிக்கப்படும் (2 தீமோ.4:8).

மகிழ்ச்சியின் கிரீடம் ஆத்தும ஆதாயம் செய்தவர்களுக்குக் கொடுக்கப்படும் கிரீடம் ஆகும் (1 தெச. 2:19).

மகிமையின் கிரீடம் மேய்ப்பர்களுக்கு கிடைக்கும் கிரீடம். அது மூப்பர்களுக்கும் சபை மேய்ப்பர்களுக்கும் போதகர்களுக்கும் அளிக்கப்படும் (1 பேது. 5:1-4).

ஜீவகிரீடம் பாடுகளுக்கும் உபத்திரவங்களுக்கும் ஊடாக சென்று இயேசுவானவருக்காக இரத்த சாட்சியாய் மரித்தவர்களுக்கு சூட்டப்படும் (வெளி. 2:10).

விசுவாசிகள் தங்கள் நன்றியைக் காட்டுவதற்கு தாங்கள் பெற்றுக்கொண்ட கிரீடங்கள் அல்லது கிரீடங்களை இயேசுவானவரின் பொற்பாதத்தில் வைப்பார்கள். ஆ! அந்நாள் எவ்வளவு ஆசீர்வாதமான நாளாயிருக்கும்!

விசுவாசிகளான நாமெல்லாரும் ஒரு கிரீடமாவது பெறுவோம். ஆனால், நான் இயேசுகிறிஸ்துவை அவ்வளவாய் நேசிப்பதால், அவருடைய மகிமைக்காகவே எவற்றையெல்லாம் பந்தயப் பொருளாய்ப் பெறமுடியுமோ அத்தனையையும் சம்பாதிக்க விரும்பினேன், என்று அவரிடம் காட்ட விரும்புகிறேன். உங்களுக்கும் உங்கள் உள்ளத்தில் அதே விருப்பம் உண்டு என்று நம்புகிறேன்.

நம் கிறிஸ்தவ வாழ்வில் அடையும் தோல்விகளால் அவர்முன் நிற்கும் போது வெட்கப்பட்டுப் போகாதபடி வெற்றிக் கிரீடங்கள் பெறுபவராக ஜீவிப்போமாக.


நினைவுகூருங்கள்

அன்பு கொடுக்கப்படும்போது அது இழக்கப்பட்டு விடாது; மாறாக அது அதிகரிக்கும்!

சத்தியவசனம்