நான் மட்டும்……

(ஜூலை-ஆகஸ்டு 2017)

அவன் ஆற்றுப்படகுகள் அப்புறமும், இப்புறமும் போவதற்காக கட்டப்பட்டிருந்த திறந்து-மூடும் புகைவண்டிப் பாலத்தை இயக்குகிறவனாய் இருந்தான். அந்த நாளில் ஒரு உல்லாசப் பயணக்கூட்டத்தாரை எடுத்துச் செல்லும் சிறப்புப் புகைவண்டி போகத் திட்டமிட்டிருந்தபடியால், விபத்து ஏதும் நேர்ந்துவிடாதபடி சாயங்காலம் 3 மணி முதல் 4 மணி வரைக்கும் யாருக்காகவும் அந்தப் பாலத்தைத் திறக்கக்கூடாது என்று உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது. அநேகர் அவனைத் திறக்கச் சொல்லி வேண்டியும் அவன் பாலத்தைத் திறக்க மறுத்துவிட்டான். கடைசியாக 4 மணிக்கு சில நிமிஷங்களே இருந்தன. அப்போதுகூட வண்டி வருவதற்காக சைகை காட்டப்படவில்லை. ஒரு வேளை வண்டி வரவில்லை போலும் என்று யோசித்துக்கொண்டிருந்தான். அந்த சமயம் அவனுக்கு மிகவும் பிரியமான ஒரு நண்பன் பாலத்தைத் திறக்கும்படி கெஞ்சினான். அன்றைக்குப் புறப்படும் கப்பலைப் பிடிக்க நேரமாகிவிட்டதென்றும், அதைப் பிடிப்பதில்தான் அவன் செல்வம் எல்லாம் சார்ந்திருக்கிறது என்றும் அழுதவுடன் லஞ்சத்தை வாங்க மறுத்த அவன், சிநேகிதனுடைய வேண்டுதலுக்கு இணங்குகிறான். சிநேகிதனுடைய படகைப் போக விட்டுவிட்டு பாலத்தை இறக்கிக் கொண்டிருக்கும்போது புகைவண்டியின் க்றீச் என்ற ஊதல் வெகு சமீபத்தில் கேட்டது. அவன் கைகளைத் தூக்கிப் புகைவண்டிக்கு சைகை காட்டியபோதிலும் பிரயோஜனம் இல்லை. புகைவண்டியோ வேகமாய் வந்து பயங்கர பேரொலியுடன் ஆற்றுக்குள் பாய்ந்தது!

அந்தப் பாலம் இயக்குபவனைத் தேடி பார்த்தபோது அவன் தன் கைகளைப் பிசைந்துகொண்டு, ‘ஐயையோ! நான் மட்டும்…! நான் மட்டும் … ! ‘ எனக் கதறிக் கதறி அழுதுகொண்டிருந்தான். பெரும் திகிலினால் அடிபட்டவனாய் தன் சுயசித்தத்தை இழந்தான். இப்பவும் பைத்தியக்காரர் மருத்துவமனையில், “ஐயையோ நான் மட்டும்…. நான் மட்டும்…” என்று புலம்பிக்கொண்டிருக்கிறான்.

இருளடைந்த நரகத்தின் ஆழத்திலே அழிவுக்குப் போன அநேக ஆத்துமாக்கள் “ஐயையோ நான் மட்டும்… ஐயையோ!” என்று கதறிக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. உயிரோடிருக்கும்போது இயேசுவானவரையும், அவருடைய அன்பையும் பற்றிக் கேட்டார்கள். நித்திய ஜீவன், சமாதானம், மோட்சம் பற்றியும் கேட்டார்கள். ஆகையால் உலகத்திலே இரட்சிக்கப்பட்டு மோட்சத்திலே மகிமை அடைந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக, உலகத்தின் மாயையும் முகஸ்துதியையும் தெரிந்து கொண்டார்கள். இப்பொழுது தங்களுடைய பிழையை உணர்ந்து மனங்கசந்து, ‘ஐயையோ! நான் மட்டும்…’ என்று புலம்புகிறார்கள். “மனந்திரும்புங்கள்” என்று ஆண்டவர் அன்போடு இப்பொழுது அழைக்கிறார். ஏனென்றால், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்”(2பேது.3:9).

சத்தியவசனம்