அனைத்து கிறிஸ்தவர்களும் செல்வந்தர்களாவதே தேவனுடைய சித்தம்!

சகோ.அஜித் பெர்னான்டோ
(செப்டம்பர்-அக்டோபர் 2017)

“…தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்கள் என்னப்பட்டாலும், சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்” (2 கொரி.6:10).

உலகெங்கிலும் அதிகமதிகமான கிறிஸ்தவர்கள் பொருளாதார செல்வச் செழிப்பு (Material Prosperity), சகல கிறிஸ்தவர்களின் உரிமை எனும் நம்பிக்கையைத் தழுவி வருகின்றனர். அதனைத் தேவன் தன்னிடம் கேட்கும்படி எதிர்பார்ப்பதாயும், அது அவரது சத்தியத்தின் நிச்சயமான நிறைவேற்றமாக நமக்குக் கிட்டுமென எதிர்பார்க்கவேண்டும் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

விசுவாசமாய் இருப்பவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார்கள் எனப் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டுமே போதிக்கிறது என்பதிலே ஐயமில்லை. ஆனால் அந்த ஆசீர்வாதம் கட்டாயமாய் எப்போதுமே பொருளாதார செழிப்பை உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டுமா? சகல கிறிஸ்தவர்களுமே செல்வந்தர்களாகிட எதிர்பார்க்கலாமா? இப்படியான ஒரு எதிர்பார்ப்பு வேதாகம ரீதியானதல்ல என்பதற்கு வேதாகமத்திலே பல போதனைகள் உள்ளது.

தனது பாடுகள், தான் கொண்டிருந்த நிறை வாழ்வினை எடுத்துப்போடவில்லை எனப் பவுல் அநேகமான தடவைகளிலே கூறியிருக்கிறார். அவரது நிருபங்களிலே தனது பாடுகளைத்தான் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு அழைக்கப்பட்ட தன் சான்றாக வழங்கியுள்ளார் (உ.ம். 2 கொரி.4: 8-18, 6:3-10 11:13-33; 12: 1-10; கலா.6:17) ஒருமுறை தன்னைக் குறித்து விவரிக்கும்போது, “தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்கள் என்னப்பட்டாலும், சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப் பண்ணுகிறோம்” (2 கொரி.6:10) என்றார்.

எபேசியர் நிருபத்திலே, சிறையில் இருந்து எழுதிய பவுல், ஐந்து தடவைகள் அவர் செல்வத்தை சுவிசேஷம் எனக்குறிப்பிட்டு, அதனுடன் கூட சகல திரவியங்களும் வருகிறதெனக் குறிப்பிடுகிறார். அவர்தாமே அடிப்படையான மனித தேவைகள் மறுக்கப்பட்ட நிலைமையிலே வறிய ஒரு கைதியாக இருக்கிறார். ஆனாலும், தன்னை அவர் செழிப்பானவனாகக் கண்ணோக்குகிறார்.

சிறையில் இருந்து எழுதிய இன்னுமொரு நிருபமான பிலிப்பியரிலே, பவுல் தனது நிதித் தேவைகளை பற்றிக்கூறும்போது, ”என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாய் இருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்” (பிலி.4:11-12) என்கிறார்.

இங்கே செல்வம் தேவனுடைய ஆசீர்வாதத்தின் அடையாளமாகக் கட்டாயம் இருக்க வேண்டியதில்லை, மாறாக திருப்திதான் தேவனுடைய ஆசீர்வாதம் என அவர் சொல்லாமல் சொல்லுகிறார்.

மேலும் இந்த நிருபத்திலே, “களிகூருங்கள்”, “களிகூர்ந்தேன்”, “களிப்பு”, மற்றும் “சந்தோஷம்” போன்ற வார்த்தைகள் பதினாறு தடவைகள் வருகின்றன. நாம் கர்த்தருக்குள் எப்போதுமே களிகூரவேண்டும் (பிலி.4:4) என்று கூறுகின்றார். இந்த நிருபந்தான், “… எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்…” (4:7) பற்றியும் பேசுகிறது. திருப்தி, சமாதானம், களிப்பு, இவைதான் மெய்யான செழிப்புள்ள கிறிஸ்தவனின் குணாதிசயங்களாகும்.

சில வருடங்களுக்கு முன்பதாக புதிய ஏற்பாட்டிலே இயேசு தம்மை மாதிரியாக பின்பற்ற நமக்குக் காண்பிக்கும் சகல பகுதிகளையும் குறித்து ஒரு ஆய்வைச் செய்தேன். நான் பார்த்த இருபத்தொன்பது பகுதிகளுக்குள், நான்கு பொதுவான கூற்றுக்களாக, வாசகர்களை கிறிஸ்துவைப் பின்பற்றும்படி அழைப்பதாக உள்ளது; முதல் இரண்டு, இயேசு மன்னித்ததுபோல மன்னிக்கும்படி கூறுவதாய் உள்ளது (எபே.4:32; கொலோ.3: 13); மற்ற இரண்டு, சாந்தம் மற்றும் சாதுவான தன்மை பற்றியதாகவும் உள்ளது (2 கொரி.10:1; 11:17).

இதர இருபத்தொரு பகுதிகளுமே கிறிஸ்துவின் பணி மற்றும் பாடுகள் பற்றியதாகும். எனவே, தயாள குணத்தை ஊக்குவிக்கும்போது பவுல் இயேசுவை உதாரணமாகக் காட்டிக் கூறுகிறார்: ”நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரி.8:9). இயேசுதாமே, “… ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்றார் (லூக்.12:15). பணக்காரனும் பருக்களால் நிறைந்த லாசரு என்கிற பிச்சைக்காரனையும் பற்றிய உவமையிலே, பிச்சைக்காரனாகிய லாசருதான் பரலோகம் போகிறான், பணக்காரனோ நரகத்திலே வேதனைப்படுகிறான் (லூக்.16:19-31). இவைகளில் இருந்து கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் பற்றிய அடிப்படையான விபரிப்பிலே, புதிய ஏற்பாடு பொருளாதார வெற்றியை உள்ளடக்கவில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

புதிய ஏற்பாடு செல்வச் செழிப்பினை ஆசீர்வாதமாக அல்லாமல் ஆபத்தானதாகவே காண்பிக்கிறது. செல்வத்தைப் பற்றிய விரும்பத்தகுத் தன்மைகளைவிடவும், ஆபத்துக்களையே அது அதிகம் வலியுறுத்துகிறது. “ஐசுவரியமுள்ளவர்கள் …தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாய் இருக்கும்” (லூக்.18:24-25) என்ற கூற்றின் மூலமாக இயேசு இதனை வலியுறுத்தினார். இந்தக் கூற்றானது, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷங்கள் மூன்றிலுமே குறிப்பிடப்பட்டும், கடந்த காலத்துப் பிரசங்கிகளால் அநேகமாக மேற்கோள் காட்டப்பட்டு வந்தது. ஆனால், இக்கால பிரசங்கத்திலே பொதுவாக இடம்பெறும் செல்வச்செழிப்பு பற்றிய வாக்குத்தத்தத்துடன் இக்கூற்றானது இசைவு பெறாததாலோ என்னவோ இன்று இது அநேகமாகக் குறிப்பிட்டு கூறப்படுவதில்லை. தனது எதிர்காலத்திற்காக சொத்தைச் சேர்த்துவைத்த பணக்காரப் பண்ணையாளைப்பற்றிய உவமையிலே, சொத்துக்களின் ஆபத்துகள் பற்றிய தனது படிப்பினையை இயேசு சுட்டிக்காட்டுகிறார். அந்தப் பணக்காரன், அவனது மரணத்திலே “மூடனே”  என அழைக்கப்படுகிறான். இயேசு மேலும் விளக்கிக் கூறுகையிலே, “தேவனிடத்தில் ஜசுவரியவானாய் இராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான்” என்றார் (லூக்.12:16-21).

• சீடராகுபவர்களுக்கு இயேசு விடுக்கும் சுவிசேஷ அழைப்பிலே, தம்மைத்தாமே வெறுமையாக்கி, சிலுவையை எடுத்துக்கொண்டு தன்னைப் பின்பற்றும்படியாக இயேசு கூறுகிறார். தொடர்ந்தும் பேசுகையிலே அவர் எச்சரித்துக் கூறியது, “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). சுவிசேஷத்தை நாம் பிரசங்கிக்கும்போது கிறிஸ்துவின் அழைப்பின் இந்த அம்சத்தை நாம் உதாசீனம் செய்தோமேயாகில் நாமும் சுவிசேஷத்தை உருக்குலைத்துப்போடும் குற்றத்தை இழைத்தவர்களாவோம்.

• 1 தீமோத்தேயு 6-ம் அதிகாரத்தில் செல்வச் செழிப்பைப்பற்றி மேலும் பல எச்சரிக்கைகளைக் கொண்டுள்ளது. பவுல் கூறுகிறார், அடிப்படை தேவைகளாகிய உணவு மற்றும் உடை ஆகியவற்றை விரும்புவது சரிதான்: ஆனாலும், “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அதுபோதுமென்றிருக்கக்கடவோம்” (1 தீமோ.6:8); இதற்கும் அப்பால் செல்வச்செழிப்பு ஒரு பொருட்டல்ல. பவுல் கூறுகிறார், “போதுமென்கிற மனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்” (6:6-7). நாம் செல்வந்தராய் இருக்கவேண்டும் என்பது அவசியமானதல்ல, மாறாக நாம் தேவபக்தியும், திருப்தியும் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

வேறொரு இடத்திலே ‘வேதனைப்படும்போதுங்கூட தான் திருப்தியாக இருப்பதாக’ பவுல் கூறுகிறார். “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” (2 கொரி.12:10). ‘பலவீனத்திலே பலம்’ என்பதுவும் இந்நாட்களிலே புறக்கணிக்கப்படும் சத்தியக் கோட்பாடாக உள்ளது.

நாம் எச்சரிக்கைகளுக்கு மீண்டும் வருவோமாக. 1 தீமோ.6:9-10 கூறுகிறது, “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” விதைக்கிறவனின் உவமையிலே, முட்களிடையே விழுந்த விதைப்பற்றி இயேசு பேசும்போது இன்னுமொரு வலிந்த எச்சரிக்கை வருகிறது: “வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப் பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்” (மாற்கு 4:18). இதே கண்ணிகளுக்குள் இன்று பலர் விழுந்துபோயுள்ளதைக் காண்பது துக்ககரமானதோர் காரியமே. அவர்கள் தமது ஆன்மீக வாழ்வுகளை அழித்துப்போட்டு, சந்தோஷமற்ற வாழ்வுக்குத் தங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார்கள்.

ஆனாலும்கூட, வேதாகமம் செல்வச் செழிப்பு பற்றி முற்றும் முழுவதுமாக எதிர்மறையான அணுகுமுறையையே கொண்டதாக இல்லை. இயேசு சொன்னார், “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” (மத்.6:20).

இந்தக் கூற்று, செல்வத்தை நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு விளக்குகிறது. வியாபார உலகிலே மக்களுக்கு நன்கு பரிச்சயமான மொழிநடையை உபயோகித்து இயேசு தெரிவித்த ஆலோசனை எதுவெனில், நாம் மிகவும் பாதுகாப்பான இடத்திலே அதாவது பரலோகத்திலே, நமது முதலீட்டைச் செய்யவேண்டும் என்கிறார். நாம் நித்திய செல்வச் செழிப்பினைத் தொடரவேண்டியவர்கள். அதாவது பிரசங்கிப்பவர்களாகிய நாம் கிறிஸ்தவர்களிடையே அப்படியானதோர் ஊக்குவிப்பையே வழங்கவேண்டும்.

1 தீமோ.6-ம் அதிகாரத்திலே, பவுல் செல்வந்தர்களை உதாரத்துவமாகக் கொடுப்பதிலும் செல்வச் செழிப்புடன் இருக்கும்படி கேட்கிறார்: “நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதார குணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு” (6:18-19).

இந்தப்பகுதி, பரலோகத்திலே செல்வங்களைச் சேர்த்துவைப்பதைப் பற்றிப் பேசுகிறது. அங்கேதான் நமது செல்வம் இருக்கவேண்டும். நாம் தேவையுள்ளவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கும்போது, பரலோகத்தின் வங்கியிலே சேமித்து வைக்கிறோம். முன்னர் 1 தீமோ.6-ம் அதிகாரத்திலே செல்வம் என்பது பொருட்டல்ல, மாறாக தேவபக்தியும் திருப்தியுமே பொருட்டு எனப் பவுல் கூறியதாக நாம் கூறினோம். இப்போது அவர் ஏராளமாகக் கொடுக்கும் தயாளம் இன்னுமோர் பொருட்டு எனக் கூறுகிறார்.

கொடுத்தல் பற்றி வேதாகமம்  கற்பிக்கும் பல போதனைகள், ஒரு வேதாகம கிறிஸ்தவனுக்கு கொடுத்தல் என்பது அவனது வாழ்வின் மேலான இலட்சியம் எனக்காட்டுகிறது. பவுல் மக்கெதோனிய கிறிஸ்தவர்களைப் பற்றி, “தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்” (2கொரி.8:4) என்று கூறுகிறார்.

எருசலேம் சபையின் தேவைகளுக்காகப் பங்களிப்புச் செய்யும்படி கொரிந்து கிறிஸ்தவர்களைப் பவுல் ஏவும்போது, கூறுகிறார், “மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்” (2 கொரி.8:13).

இதோ கிறிஸ்தவர்களை உந்தித்தள்ளும் இன்னுமொரு காரியம்: மோசமான சமநிலையற்றதான இந்த உலகத்திலே, நாம் தயாளமாகக் கொடுப்போம். அப்போது ஒருசில சமநிலையை அது கொணரும். உலகத்திலே சமநிலைக்கான இந்த அவசரமான தேவையானது பல கிறிஸ்தவர்களை எளிமையான வாழ்க்கை முறைமையைக் கைக்கொள்ளும் தீர்மானத்தை எடுக்கும் படிக்கும் டாம்பீகத்தைத் தவிர்த்து, தேவனுடைய பணிக்கும் தேவை உள்ளவர்களுக்கும் தங்களால் இயன்றவரைக்கும் அதிகம் கொடுக்கவும் இட்டுச் சென்றுள்ளது. யாரோ கூறியதுபோல, ‘நாம் எளிமையாக வாழ்கிறோம்; அதன்மூலம் மற்றவர்களும் வாழும்படிக்கு’. எளிமையான வாழ்க்கை முறை பற்றியதான இந்தச் சிந்தைக்கு ஆதரவாக, நாம் இயேசுவின் போதனையிலிருந்து பார்க்கலாம். “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்” (மத்.6:19). இது நாம் மிகவும் சீரியஸாக எடுக்க வேண்டிய விஷயமாகும். குறிப்பாக, உலகெங்கிலும் மோசமான வறுமை நிலவுவதனால் நாம் இதனை சீரியஸாக எடுத்தாகவேண்டும்.

புதிய ஏற்பாட்டிலே உள்ள அர்ப்பணித்த மக்களும், கதாநாயகர்களும் ஏழ்மையானவர்கள். இயேசுவே நமது பிரதான உதாரணமும், கதாநாயகனுமானவர். நாம் செல்வந்தராகும்படியாக அவர் ஏழ்மையானார் (2 கொரி.8:9). அவர், ஒரு அடிமையின் ரூபம் எடுத்து தம்மை வெறுமையாக்கினார் (பிலி.2:7). இவ்வசனத்திலுள்ள வார்த்தை தொண்டு செய்யும் அடிமையைக் குறிக்கிறது.

இயேசு சாபத்தைத் தன்மேலே சுமந்து கொண்டமையால், நாம் சாபத்தின் கீழ் தொடர்ந்து வாழவேண்டியதில்லை எனவும், அதனால் அவர் பட்ட வேதனையைப்போல நாம் வேதனைப்படமாட்டோம் எனவும் சிலர் கூறுவதுண்டு. ஆனாலும், மேற்படி இரு பகுதிகளுமே நாம் இயேசுவை உதாரணமாகப் பின்பற்றும்படிக்கே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பவுல்: “…அவருடைய (இயேசுவுடைய) பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி” (பிலி.3:10) எனும் எல்லைவரைக்கும் அதனை விஸ்தரிக்கிறார். இயேசுவுடன் அவரது பாடுகளிலே மாத்திரம் அனுபவிக்கும் ஒரு திடமான ஐக்கியம் உள்ளது. அத்துடன் நமக்கு கிறிஸ்துவுடனான ஐக்கியம்தான் மிகப்பெரும் செல்வமாகும்.

புதிய ஏற்பாட்டிலே இயேசுவைப் பின்பற்றுவோராகப் பாராட்டப்பெற்ற பலர் வறுமையானவர்களாவர். பவுல் தன்னைப் பற்றி, “…தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்” (2கொரி.6:10) என்று கூறியதை ஏற்கெனவே நாம் சொல்லியிருக்கிறோம்.

மக்கெதோனியர்கள் தமது வறுமையிலும் கொடுத்தவர்கள் என்பதால் அவர்கள் உண்மையிலேயே ஹீரோக்கள்: “அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்கள்” (2 கொரி. 8:1-3).

இந்த வறிய கிறிஸ்தவர்களின் கொடுத்தலுக்கு “செல்வச்செழிப்பு” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பு: இந்த வசனத்திலே உதாரத்துவம் என்ற சொல், மூல கிரேக்குவிலிருந்து சரிவரமொழி பெயர்க்கப்பட்டால், செல்வச்செழிப்பு என்பதாகும். ஆங்கில வேதாகமம் அப்படியாகவே மொழி பெயர்த்துள்ளது. (திருவிவிலியம் “வள்ளன்மையோடு வாரிவழங்கினார்கள்” என்று மொழி பெயர்த்துள்ளது.)

பணக்காரர்களை வறியவர்களைவிடவும் மேம்பட்டவர்களாகக் கருதும் சபைகளை யாக்கோபு கடிந்துகொள்ளும்போது, கூறியதாவது, “என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக்.2:5). வறிய விசுவாசிகள் உண்மையிலேயே செல்வந்தர்களே!

வெளிப்படுத்தல் நூலிலே ஏழு சபைகளுக்கான கடிதங்களிலே, ஆக இரண்டு சபைகள்தான் கண்டனம் பெறாத சபைகள். அந்த இரண்டு சபைகளுமே உலகம் வெற்றியென கருதும் செல்வ செழிப்பைக் கொண்டிராத சபைகள் என வர்ணிக்கப்பட்டுள்ளது.

முதலாவது சபை சிமிர்னா. தூதன் அவர்களது “வறுமையை”ப்பற்றி பேசும்போது உடனேயே அவர்களையே “செல்வந்தர்” எனக் கூறுகிறார் (வெளி.2:9). குறிப்பு: பழைய தமிழ் வேதாகமத்திலே, “நீ ஐசுவரியமுள்ளவனாய் இருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும் …” என்று கூறுகிறது. திருவிவிலியமோ, “உங்கள் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன். ஆனால் உண்மையில் நீ செல்வம் பெற்றிருக்கிறாய்…” என்கிறது. அதுவே சரியான மொழிபெயர்ப்பு. (ஆங்கில வேதாகமமும் திருவிவிலியத்தைப் போலவே மொழிபெயர்த்துள்ளது).

இரண்டாவது சபை பிலதெல்பியாவில் உள்ள சபையாகும். அது, “கொஞ்சம் பெலன்” கொண்ட சபையாக வர்ணிக்கப்படுகிறது (வெளி.3:8). உலகுடன் பெருமளவிலே சமரசங்கள் செய்யப்பட்டிருந்த சபைகள் மத்தியிலே, தேவனால் அனுமதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்த புற நடைகளாக அவை இருந்தன; அந்த இரண்டும் வறிய மற்றும் பலவீன சபைகளாகும்! இந்த வேதப் பகுதிகளிலே வறிய கிறிஸ்தவர்களை செல்வந்தர்கள் என்ற பதங்களால் விவரிக்கப்பட்டுள்ளது நமக்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளதல்லவா?

அவ்விதமாக செல்வந்தர் எனப்படுவது, கிறிஸ்தவர்கள் எனும் நமது அறிமுக அடையாளத்திலே முக்கியமானதோர் அம்சமாக அமைந்துள்ளது. நமது அறிமுக அடையாளம் பற்றி நாம் அறிந்துகொள்வோமேயாயின், நாம் உண்மையிலேயே சந்தோஷமான மக்களாக இருப்போம், எனவே, வறியவர்கள் உண்மையிலேயே சந்தோஷமான மக்களாக இருக்கலாம்.

எருசலேமில் உள்ள தாய்த்திருச்சபையானது பிரதானமாக வறிய மக்களை உள்ளடக்கியதாகவே இருந்தது. எனவேதான், பிறசபைகள் அதற்கு உதவி செய்யவேண்டிய தேவை இருந்தது. அவர்களது நம்பிக்கையிலேயோ செயற்பாடுகளிலேயோ ஏதோ தவறு இருந்ததால்தான் அவர்கள் வறியவர்களாய் இருந்தார்கள் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. அது எருசலேமிலே பொருளாதார நெருக்கடி நிலவிய காலமாகும். மட்டுமன்றி, அங்கே ஓய்வு பெற்ற பலர் இருந்துள்ளமையும் அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆகியதுமே அவர்களுக்கு உரிய நிவாரண நன்மைகள் இல்லாமற் போனதும் அவர்களது நிலைமையை மேலும் மோசமாக்கியது. எனவே, எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்கள் பெரும் பொருளாதாரத் தேவைகளுடன் இருந்தனர்; வேறு பகுதிகளிலே உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது மிஷனெரி காணிக்கைகளின் மூலமாக அதனைச் சந்தித்து உதவினர்.

பழைய ஏற்பாடு தேவனுக்கு உண்மையாயி ருப்போரின் ஆசீர்வாதங்களுள் ஒன்றாக செல்வச் செழிப்பு உள்ளதாகக் கூறியுள்ளது உண்மையேதான் (உ.ம். உபா.28:11). ஆனால், இந்த வாக்குத்தத்தங்கள் பழைய உடன்படிக்கையின்கீழ், நீதியாக நடந்துகொண்ட ஒரு தேசியத்துக்குக் கூறப்பட்டவைகளாகும் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். தேசத்திலே நீதியாக நடந்துகொள்ளும் தனிநபர்கள் பாடுபட துன்மார்க்கரோ சம்பிரமமாக வாழ்வதையிட்டு நீதிமான்கள் தத்தளித்ததையும் வேதனையடைந்ததையும் பழைய ஏற்பாடு அநேகமாக விவரித்துள்ளதைக் காணலாம்.

வேதாகமத்தில் உள்ள பல புலம்பல்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளன. ஆசாப் எழுதிய சங்கீதம் 73 அப்படியான ஒன்றாகும். அங்கே துன்மார்க்கரின் செழிப்புடன் ஒப்பிடுகையிலே, தனக்குச் செல்வம் குறைவுபடுவதையிட்ட ஆசாப்பின் தத்தளிப்பானது, தேவன் துன்மார்க்கரை நீதியாய் நியாயந்தீர்ப்பார் என்பதை அவன் அறியவந்த பின்னர்தான் தீர்க்கப்பெற்றது. யோபு, ஆபகூக் ஆகிய நூல்களிலே, மோசமான பாடுகள் மத்தியிலும் தேவையான நம்பிக்கையைக் கைவிட மறுக்கும் மக்களின் விசுவாசம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே பழைய ஏற்பாடு நீதியானவர்களுக்கு செல்வச் செழிப்பை உறுதிபட வழங்கியது என்று சொல்வதற்கில்லை. உண்மையிலேயே, புதிய ஏற்பாட்டைப் போலவே, பழைய ஏற்பாடும் செல்வச் செழிப்பின் ஆபத்துகளைப் பற்றித்தான் அநேகமாகப் பேசி மக்களை எச்சரித்துள்ளது (உ.ம். உபா.6:10-25; 8:11-20; 32:15-18 போன்றவை).

கிறிஸ்தவர்கள் உண்மையிலேயே வறுமையாக இருந்து தத்தளித்தபோதுதான் சபையின் அதீத வளர்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளதாக சரித்திரம் காட்டுகிறது.

அண்மித்த காலங்களிலே சீனா, நேபாளம், மற்றும் கொரியா (சபை வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலே) ஆகிய நாடுகளிலும், தற்போது குறிப்பிடத்தக்க சபை வளர்ச்சி ஏற்பட்டு வரும் ஈரான் நாட்டிலும் இப்படித்தான் வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. சிறுபிள்ளையைப்போல நம்பிக்கை போன்றதான பல குணாதிசயங்களை வறிய சபை அதனது வாழ்விலே வளர்வதை இலகுவாக்கியுள்ளது.

ஐசுவரியவான்கள் பரலோக ராஜ்யத்துக்குள் நுழைவது மிகக்கடினமாக இருக்கும் என்று இயேசு கூறியமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

செல்வம் படைத்த, ஆனாலும் தேவனுக்கு விசுவாசமாய் நடந்துகொள்ளும் மக்கள், தேவனுடைய திட்டத்திலே வகிக்கக்கூடிய முக்கிய பங்கைப்பற்றி வேதாகமம் கற்பிக்கிறது என்பதைக் குறித்து எவ்வித ஐயமும் இல்லை.

வேதாகமத்திலே நாம் காணும் சில உதாரண மனுமக்களான ஆபிரகாம் (ஆதி.13:2) பர்சிலா  (2 சாமு.19:32) எலிசாவுக்கு உதவிய சூனேமியப் பெண் (2 ராஜா.4:8) அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு (மத்.27:57) ஆகியோர் குறிப்பாகச் செல்வச் சிறப்புமிக்க மக்களாக இருந்துள்ளனர்.

செல்வந்தர்கள் அகங்காரம் கொள்ளக்கூடாது என்று கூறியபின்பு, பவுல் “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கைவையாமலும் …” என்று கூறுகிறார் (1 தீமோ.6:17). வாங்கக்கூடிய பொருட்களை வாங்கிக் களிப்புடன் அனுபவிப்பது தவறல்ல.

மேலே குறிப்பிட்ட தேவபக்தியும் ஐசுவரியமும் உள்ள நபர்கள் நால்வருமே அவர்களது உதாரத்துவமான கொடுப்பிற்காகப் புகழப்பட்டவர்கள் என்பது முக்கியமானதாகும். மறுபுறத்தே பவுலும் மற்றும் மக்கெதோனியா, சிமிர்னா போன்ற சபைகளின் கிறிஸ்தவர்களும் தமது வாழ்விலே பூலோக செல்வங்களை பொறுத்தவரைக்கும் செல்வந்தராய் இராவிட்டாலுங்கூட, வேதாகமமோ அவர்களை ஹீரோக்களாகவே விபரிக்கிறது.

செல்வச்செழிப்புள்ள கிறிஸ்தவர்கள் அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும்கூட, குறிப்பாக தாழ்மை மனிதராய் இருப்பதாலும், உதாரத்துவமாக கொடுப்பதாலும், தேவபக்தியுடன் இருப்பதாலும் கிறிஸ்துவைக் கனம் பண்ணலாம். வறிய கிறிஸ்தவர்கள் திருப்தியாய் இருப்பதாலும், விசுவாசத்திலே நிறைந்திருப்பதாலும், வறியவர்களாய் இருக்கையிலேயே தாராளமாய்க் கொடுக்கிறவர்களாகவும் தேவபக்தியுள்ளவர்களாகவும் இருப்பதனூடாக அவரைக் கனம் பண்ணலாம்.

வேதாகமத்திலே செல்வச்செழிப்பு ஒரு பொருட்டல்ல என்பது தெளிவு. திருப்தி, களிப்பு, சமாதானம், பரிசுத்தம், அன்பு மற்றும் தாராள தயாள குணம் … இவைகள்தான் வேதாகமம் எப்போதும் பேசும் பெரும்பொருட்டான காரியங்களாகும். இந்தத் தன்மை கொண்டுள்ள மக்கள், வேதாகமத்தின்படி, அவர்கள் பொருளாதார ரீதியாக செல்வந்தராகவோ அல்லது வறியவர்களாகவோ இருந்தாலுமென்ன, அவர்களே மெய்யான செல்வச் செழிப்புள்ளவர்களே ஆவார்கள்.

சத்தியவசனம்