வேதாகமம் அறிவுறுத்தும் 10 நிதிக்கொள்கைகள்!

திரு. ஜார்ஜ் பூஷீ
(செப்டம்பர்-அக்டோபர் 2017)

நவீன சுற்றுப்புற சூழலைக் காப்பதற்காக சிலர் டப்பாக்களை நசுக்கியும் பாட்டில்களை உடைத்தும், செய்தித்தாள்களையும் மற்ற பத்திரிக்கைகளையும் துண்டுத்துண்டுகளாக அழிக்கின்றனர். சுமார் 17 ஆண்டுகளாக நிதி சேகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் மேலாளராகவும் நான் இருந்ததால் ஒரு நாட்டின் இயற்கை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திறன் குறிப்பாக தனிப்பட்ட நிதிநிலை பாதுகாக்கப்படவேண்டும் என்பது எனது விருப்பம். அநேகருக்கு குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு நிதிநிலையை சரியான விதத்தில் கையாள தேவனுடைய வார்த்தையில் பத்து நிதிக்கொள்கைகள் தரப்பட்டுள்ளன. பணத்தை சரியான முறையில் கையாளத் தெரியாததால் நசுங்கிப்போன, உடைந்துபோன, நொந்துபோன மக்களுக்கு இந்த ஆலோசனைகள் உதவும்.

தற்காலத்தில் “உடனடியாக பொருள்; பின்னர் பணம்” என்ற கொள்கையைக் கொண்டுள்ள கடன் அட்டை (Credit Card), அநேக மக்களை பொருளாதார அழிவின் குழியில் தள்ளிவிடுவதை நான் கண்டிருக்கிறேன். என்னுடைய பணியானது கடன் வாங்கி அதைக் கட்ட இயலாத மக்களிடம் சென்று அவர்களது கணக்குகளை சேகரித்து வருதலாகும். எனவே அனுதினமும் பொருளாதார இன்னலில் சிக்கியுள்ள மக்களை நான் காண்கிறேன். ஆயிரக்கணக்கான மக்கள் இதில் சிக்குண்டு அதிக பயங்கரமான விளைவுகளைச் சந்திக்கின்றனர்.

நான் அளித்த ஆலோசனைகள் பிறருக்கு பயனளிக்கவில்லை. ஆனால், தேவனுடைய வல்லமையான வார்த்தைகளையும், அவரது பத்து நிதிக்கொள்கைகளையும் நான் கண்டு கொண்ட பின்னர் வேதத்தின் கொள்கைகளை  அடிப்படையாகக்கொண்ட என்னுடைய பொருளாதார ஆலோசனை, அதன் வெற்றி அவர்கள் அவைகளைக் கடைப்பிடிப்பதைப் பொறுத்து அமைந்தது. இக்கொள்கைகள் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு நிதிக்கொள்கையைப் பற்றி வெளிப்படுத்திய அறிவுரைகள் ஆகும்.

வேதத்தின் முக்கிய கட்டளை தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும். இந்த நிதிக்கொள்கைகள் உண்மையானவை. இதற்குக் கீழ்ப்படியும்பொழுது கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வின் பிறபகுதிகளிலும் தேவன்மீது நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்தும். அவைகளை நாம் ஆராய்வது நமக்கு அதிக பலனைத் தரும்.

1. தேவனே ஆதாரம்

முதல் கொள்கையானது தேவனே அனைத் துக்கும் ஆதாரம் என்பதாகும். “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி.4:19). “என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்” (நீதி.8:20,21). மேலும், “நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” (2 கொரி.9:8) என்று வேதம் சொல்லுகிறது. பணமோ ஆஸ்திகளோ நம்முடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் ஜெபமே விடையாகும். தேவனை நோக்கிப் பாருங்கள். அவர் தம்முடைய சித்தப்படி அனைத்தையும் உங்களுக்குத் தந்தருள்வார்.

2. ஈதல் அவசியம்

இரண்டாவது கொள்கை கொடுப்பதைப் பற்றியதாகும். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்கா 6;38). மேலும், “நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசம பாகத்தைப் பிரித்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்ச ரசத்திலும் உன் எண்ணெயிலும் தசம பாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்திதியில் புசிப்பாயாக” (உபா.14:22,23) என்ற பகுதிகள் தசமபாகம் செலுத்துவதன் ஒரு நோக்கம் இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய வாழ்வில் தேவனை முதன்மைப்படுத்தவேண்டும் என்பதாகும்.

என் வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுக்க நான் இருவழிகளைக் கண்டுபிடித்தேன். ஒன்று அமைதி வேளையைக் கடைப்பிடிப்பது. அதிகாலையில் அனுதினமும் தேவனுடன் நேரம் செலவழிக்க எனக்கு விருப்பமில்லையெனில், நான் வேறு ஒரு நபரை அல்லது வேறு ஒரு காரியத்தை ஆண்டவரைவிட முக்கியப்படுத்துகிறேன் எனறு அர்த்தமாம். எடுத்துக்காட்டாக நம்மில் எத்தனைபேர் காலையில் செய்தித்தாள் வாசிக்கவில்லை என்றால் வருத்தப்படுகிறோம்? தேவனுடைய வார்த்தையை வாசிக்க செய்தித்தாள் தடையாக இருந்தால் அதன் சந்தாவை நிறுத்திவிடுவோமா? தேவனை நெருங்கிச் சேரவிடாமல் இருக்க தொலைக்காட்சி இடையூறாக இருப்பின் அதன் இணைப்பை நிறுத்திவிடுவோமா? தொலைக்காட்சியின் வர்த்தக விளம்பரங்கள் அநேக காரியங்களை வாங்கத் தூண்டுகின்றன. அநேகமாயிரம் மக்கள் கவரப்பட்டு உலகத்தால் கறையுண்டு போகின்றனர்.

தேவனுடைய ஊழியங்களுக்கு வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு கொடுப்பது இரண்டாவது வழியாகும். “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம் பண்ணு, அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்ச ரசம் புரண்டோடும்” என்று நீதி.3:9,10 அறிவுரை கூறுகின்றன.

3. வரையறைக்குள் வாழ்தல்

மூன்றாவது கொள்கை ஒரு வரம்புக்குள் வாழ்வதாகும். சரீரம், ஆன்மீகம், நேரம் மற்றும் பொருளாதாரம் இவை அனைத்தையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, நம் வாழ்க்கை அமையவேண்டும். ஓரிடத்துக்கு ஒருவர் குறிப்பிட்ட நேரத்திலோ அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ செல்லமுடியும். சரியான நேரத்துக்கு நான் செல்ல திட்டமிட்டாலும் சில வேளைகளில் நான் தாமதமாகவே செல்லுவேன். ஏனெனில் நான் அதற்கு வரையறை செய்வதில்லை. இந்த பொன்னான நேரங்களை நாம் கணக்கிட்டால் அது அதிகமாகிறதல்லவா? என்னுடைய சரீரத்தைப் பாதுகாக்க வாரத்தில் மூன்று நாட்கள் நீச்சலுக்குச் செல்லுகிறேன். என்னுடைய எடையை சரியான அளவில் வைத்துக்கொள்ள உணவைக் கட்டுப்படுத்துகிறேன். ஏனெனில், தேவனுக்கு ஊழியம் செய்யும்பொழுது மாரடைப்பினால் இறக்க நான் விரும்பவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் அவசரமாகச் செல்வதால் 15 ஆண்டுகளில் அது ஆறு மாதங்கள் காலத்துக்கான மன அழுத்தத்தைத் தருகிறது. இந்த அழுத்தங்கள் மாரடைப்புக்கு ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. எனவே எவ்விடத்துக்கும் தாமதமாகச் செல்லுவதைவிட முன்நேரத்துக்குச் செல்ல எனக்கு தேவன் உதவுகிறார்.

4. வேதாகமம் ஆதரிக்கும் சேமிப்பு

நான்காவது கொள்கை மழைக்காலத்துக் கென்று சேமித்து வைப்பதாகும். “வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப் போடுகிறான்” என்று நீதி. 21:20 கூறுகின்றது. “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று நீதி.22:3 தெளிவுபடுத்துகிறது.

ஒரு தம்பதியின் ஆண்டுவருமானம் $12,000 எனக்கொள்வோம். இவர்கள் $1,000 வீதம் சேமித்து 6% கூட்டு வட்டியில் போட்டால் 15 ஆண்டு கள் கழித்து அது $24,672.56-ஐத் தரும். இதனை தன்னுடைய மகன் அல்லது மகளின் மேற்படிப்புக்காகவோ, புதுவீடு கட்டவோ அல்லது முழுநேர ஊழியம் செய்வதற்கோ இந்த சேமிப்பு பணம் உதவும். ஆண்டுக்கு $1,000 அச்சேமிப்பிலிருந்து எடுத்தாலும் $15,322.17 அதில் மீதம் இருக்கும். எனவே சேமிப்பது ஒரு நல்ல பழக்கம்.

5. கடன் வாங்காதிருத்தல்

ஐந்தாவது கொள்கை தேவையற்ற கடனுக்கு விலகியிருப்பதாகும். இதனால் கடன் என்னும் வலையில் விழுவதைத் தவிர்க்கலாம். ஒரு வீட்டையோ அல்லது காரையோ வாங்குவதற்கு கடன் வாங்குவது வேறு; ஆனால், தன்னால் அடைக்கமுடியாத அளவுக்கு கடன் வாங்குவது வேறு. “துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக் கொடுக்கிறான்” (சங்.37:21). ஒரு மனிதன் கடன் வாங்கும்பொழுது தனது சுதந்திரத்தை இழக்கிறான். “ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை” (நீதி.22:7) என்பதும் உண்மையே.

மேலே நாம் கண்ட இளம்தம்பதியர் ஆண்டுக்கு $1,000 சேமிப்பதற்கு பதிலாக நாற்காலி மற்றும் மேஜை வாங்க $1,000 கடனுக்கு உட்படுகிறார்கள் எனக்கொள்வோம். ஒவ்வோர் ஆண்டும் இதைப்போல 15 ஆண்டுகளுக்குச் சென்றால் அவர்களது கடன் $3,4 949.74 ஆகிவிடும். ஒரு தடவை வாங்கிய $1,000 ஒரு கடனை மாத்திரம் அவர்கள் அடைக்கவில்லை எனில் 15 வருடங் களில் அது $4,177.21 ஆகிவிடுமே!

அநேகமக்கள் “இப்பொழுது வாங்கிவிடலாம், பின்னர் பணம் கட்டலாம்” என எண்ணுகின்றனர். உண்மையில் ஒரு தொகையை சேமிப்பதால் கிடைக்கும் வட்டியைவிட அத்தொகையை கடனுக்கு வாங்கும் மதிப்பு அதிகமாம்.

6. போதுமென்ற மனம்

ஆறாவது கொள்கையானது நமக்கிருப்பது போதும் என்ற மனநிறைவுடன் இருப்பதாகும். “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” என எபிரேயர் 13:5 சுருக்கமாகக் கூறியுள்ளது. பொதுவாக மக்கள் மனநிறைவடையாத ஒரு பகுதி அவர்களுடைய வாகனமாகும். அநேகர் தங்கள் வாகனங்களை நன்கு பயன்படுத்துமுன்னரே அதனை விற்றுவிடுகின்றனர். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு உழைத்த ஒரு காரை சரிசெய்வதற்கும் புதியதாக ஒன்றினை வாங்குவதற்கும் வேறுபாடு உண்டு. அநேக விற்பனையாளர்கள் ‘நீங்கள் எளிதான மாதத்தவணை முறையில் வாங்கிக் கொள்ளலாம்’ என்று நளினமாகப் பேசுவார்கள். அவ்வாறு எளிதான மாதத்தவணை என்பது கடினமாகவே அமையும். “துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்கள் என்னப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்” (2 கொரி.6:10) என்ற பகுதி இங்கு அழகாக பொருந்துகிறது.

அநேகர் விற்றுச் செல்லும் கார்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நன்றாகவே ஓடும் என என்னுடைய வாகன வியாபாரிகளான நண்பர்கள் கூறுவர். ஒரு கார் 1,00,000 மைல் ஓடிவிட்டது என்பதற்காக அதனை மாற்றவேண்டிய அவசியமில்லை. அநேக பேருந்துகள் லாரிகள் மற்றும் கார்கள் வட மாநிலங்களிலும் கிராமங்களிலும் நன்றாகவே ஒடிக்கொண்டிருக்கின்றன. அவை யாவும் ஒரே காலத்தவை; அதிக தூரமும் ஓடி பல மக்களால் ஒதுக்கிவிடப்பட்டவை.

எனவே “உபயோகி; பழமையாக்கு; பழுதுபார்; நீக்கிவிடு” என்ற கொள்கையை நீங்களும் கடைபிடியுங்கள்.

7. பதிவு செய்தல் கணக்கு வைத்தல்

ஏழாவது கொள்கையானது பதிவு செய்தலும் கணக்கிடுதலுமாகும். “சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு” (நீதி. 23:23). “வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்” (நீதி.24:3,4) என்ற வேதவசனம் உண்மையானதல்லவா? என்னுடைய வியாபாரத்தை எந்த ஒரு பதிவேடும் இல்லாமல் நடத்துகிறேன் என்று சொல்லுகிறவன் ‘படுமுட்டாள்’ என நான் கூறுவேன். தேவனுடைய காரியத்தில் நிதி நிர்வாகிகள் இவ்வாறு கூறுவது நல்ல ஊழியர்களுக்கு அழகல்ல.

என்னுடைய பிள்ளைகளுக்கு ஒவ்வொரு வாரமும் $15 கொடுப்பேன். அதை அவர்கள் ‘சேமிப்பு’ ‘ஆலயம்’ ‘செலவு’ என்று பெயரிட்ட மூன்று பெட்டிகளில் போட்டு வைக்கவேண்டும். பணம் அதில் இல்லை என்றால் செலவு பண்ண முடியாது என்ற கருத்தை அவர்கள் கற்றுக்கொண்டனர். வரவு செலவு கணக்கிடுவதும் இது போன்றதே.

என்னிடம் ஆலோசனை பெற வந்த நண்பர் ஒருவர் நிதி வசதியுடையவர் என்று நினைத்தேன். ஏனெனில் அவர் கடந்த எட்டு மாதங்களில் $300 மட்டுமே கடன் வாங்கியிருந்தார். இது எவ்வாறு சாத்தியமானது என நான் கேட்டேன். அவர் தனது வாரவிடுப்பை $500-க்கு ஒப்படைப்பு செய்ததாகவும் கூடுதல் பணி செய்து வருமானம் பெற்றதாகவும் கூறினார். ஆராய்ந்து பார்த்ததில் அந்த நண்பர் இவையெல்லாம் செய்தும் வரவைவிட மாதம் $175 செலவு பண்ணினார் எனத்தெரியவந்தது. இவ்வாறு கூடுதல் செலவு பண்ணினால் அவரது கடன் இன்னும் $2,100 அதிகமாகும். மேலும் அக்கடனுக்குரிய வட்டி ஒவ்வொரு மாதமும் $30 அதிகமாகும். நல்ல பதிவேடுகளை பராமரித்து திட்டமிட்டு தனக்கே உண்மையுள்ளவராய் இருந்தால் ஒருவரும் கடன் தொல்லையில் சிக்கமாட்டார்கள். சரியான பதிவேடுகளை பராமரிக்காமல் வெற்றி பெற்ற மனிதர்களைக் காண்பது அரிது.

என்னுடைய வியாபாரத்திலும் இது உண்மை. என்னுடைய விற்பனையாளர்களிடம் 15 விழுக்காடு வருமானத்தைக் குறைத்து ஒரு நிதிநிலை அறிக்கையையும் கொடுத்தேன். அவர்கள் அம்மாதத்தின் திட்டத்தைப் பின்பற்றவேண்டும். அவர்களும் அத்திட்டத்தைப் பின்பற்றி விற்பனை குறையாமல் இலாபம் ஈட்டினர். தனக்குரியதை வைத்து அதை செயல்படுத்துவதற்குத் திறமை வேண்டும்.

8. பிறருக்காக உத்தரவாதம் கொடுக்காதீர்கள்

எட்டாவது கொள்கை பிறருக்காக உத்தரவா தம் கொடுக்காதீர்கள். “அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடு வாங்கிக்கொள்” என்று நீதி.27:13-ல் தேவன் கூறியுள்ளார். இதில் அதிக கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்களுடைய கடனை அடைப்பதற்காக உத்தரவாதம் கொடுப்பவர்களே அதிகக் கடன் சுமைக்குள்ளாகிறார்கள். ஒரு கடன் பத்திரத்தில் மற்றொருவருக்காக கையெழுத்திடும்பொழுது அவரும் கடன் வாங்கியவராகிறார். ஒரு நபருக்கு மற்றொருவர் உத்தரவாதம் கேட்கிறார் எனில் கடன் கொடுப்பவர் அம்மனிதருக்குக் கொடுக்க மனமற்றவராய் இருக்கிறார் என்பதே காரணம்.

9. கடின உழைப்பு

ஒன்பதாவது கொள்கை கடின உழைப்பு ஆகும். “சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்” (நீதி.14:23) “தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்” (நீதி.28:19) என்ற வசனங்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் தருகின்றன.

வேலை செய்வது மிக முக்கியமானதாகும். ஏனெனில் தேவனும் கிரியை செய்தார். “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி.1:1). இது வேதாகமம் முழுவதும் காணப்படும் அடிப்படையான கொள்கையாகும். கடன் தொல்லையில் இருக்கும் அநேகர் கடினமாக உழைப்பதில்லை என நான் கண்டுபிடித்தேன். கடன் தொல்லையில் இருக்கும் அநேக இளைஞர்களுக்கு ஆலோசனை கூறும்பொழுது அவர்கள் தங்களுடைய காரில் மாதத்துக்கு 2000 மைல் அதிக நேரம் செலவழித்து சுற்றியிருந்ததையும் நான் அறிந்துகொண்டேன். எனவே அவர்களை இரண்டவதாக ஒரு வேலை தேடச் சொல்லி ஆலோசனை கூறினேன். அது அவர்களது வருமானத்தைப் பெருக்கி, செலவைக் குறைக்கும். பொன்னான நேரம் குறிக்கோளற்று விரயமாவதையும் தடுக்கும்.

10. தேவ ஆலோசனையைத் தேடுதல்

இறுதியாக தேவனுடைய ஆலோசனையைத் தேடவேண்டும். “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்” இருக்கும்படி சங்கீதம் 1:1 ஆலோசனை தருகிறது. தான் வாங்குவதற்குத் தயங்கும் பொருளை விற்பனை செய்யும் ஒரு வணிகரிடம் சென்று பொருளாதார ஆலோசனை கேட்கக்கூடாது. “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்” (நீதி.15:22).

ஒரு வீட்டையோ காரையோ அல்லது கடன் வாங்குவதற்கு முன்னரோ ஜெபித்து தேவ மனிதர்களின் ஆலோசனையைத் தேடவேண்டும். நீங்கள் அநேக தவறுகள் செய்யாதவாறு அவர்கள் உதவி செய்வார்கள். தங்களுடைய செயல் தவறு என்று மற்றவர்கள் சொல்லிவிடக்கூடாது என்றும், தங்களுடைய எண்ணம் போலவே செயல்பட வேண்டும் என்பதாலேயே அநேகர் இவ்வித ஆலோசனைகளைக் கேட்காததற்குக் காரணம் ஆகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக எதையும் நன்றாக புரிந்து பின்னரே கையெழுத்திடவேண்டும். அவசரப்படக்கூடாது. ‘வாழ்வில் ஒருமுறை மட்டும் கிடைக்கும் வாய்ப்பு’ என்று நயமாகப் பேசும் விற்பனையாளர்களிடம் அவசரப்பட்டு மாட்டிக் கொள்ளக்கூடாது. அதைவிட நல்ல வாய்ப்பு பின்னர் வரக்கூடும்.

மேற்கண்ட இந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக்கொண்டால் தேவனை நம்பி அவருக்குக் கீழ்ப்படியும் மகிழ்ச்சியை எவரும் அனுபவிக்கலாம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்