தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க பணம் ஒரு தடையா?

பேராசிரியர் எடிசன்
(செப்டம்பர்-அக்டோபர் 2017)

தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க பணம், சொத்து, ஐசுவரியம் ஒரு தடையா? என்ற ஒரு கேள்வி எழும்புகிறது. அநேகருடைய உள்ளத்திலே எழும்புகிற இந்த கேள்விக்கு ஒரு பதிலை காண்போம். மத்.19:23,24 ஆகிய வசனங்களில், “அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” என வாசிக்கிறோம்.

பணம் படைத்தவர்கள் என்றாலே பரலோக ராஜ்யத்தின் கதவுகள் அடைத்துக்கொள்ளுமா? பரலோக ராஜ்யம் செல்வந்தர்களுக்கு எதிரியா? பரலோக ராஜ்யத்தில் ஒரு பணக்காரர்கூட கிடையாதா?

இயேசு ஒருநாளும் அப்படிச் சொல்லவேயில்லை. வேதமும் அப்படிப் போதிக்கவுமில்லை. பணம் எல்லாவற்றிற்கும் உதவும் என்றுதான் சொல்லுகிறது. ஆனால் பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று நம்மை எச்சரிக்கிறது. பண ஆசையில்லாத பணக்காரன் மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தால் பரலோகம் போகமுடியும். பூமி தாங்கக்கூடாத அளவிற்குச் செல்வம் படைத்த ஆபிரகாம் பரலோகம் போனான். தாவீதைப்போல் தேவனுக்குப் பயந்த ராஜாக்கள் தேவராஜ்யத்திற்குள் சேர்ந்தார்கள். இயேசுவின் உடலைக் கேட்டு வாங்கி தன்னுடைய கல்லறையில் வைத்த அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு ஐசுவரியவான். நிக்கோதேமு 100 ராத்தல் வாசனைத் திரவியங்களை இயேசுவின் உடலுக்குப் பூச கொண்டுவந்தான். ஒரு பாட்டில் நளதம் 300 பணமென்றால், 100 ராத்தல் எவ்வளவு அதிகமான விலையாயிருக்கும்? இவர்களெல்லாம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் வர பணம் ஒரு தடையாயில்லையே!

பணம் சேர்ப்பது பாவமா? இல்லவே இல்லை. “அவரே ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கானப் பெலனைத் தருகிறார்” (உபா.8:18). அதோடு ஒரு எச்சரிப்பையும் தருகிறார். “ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்” (சங்.62:10). “கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது. நீதியோ தப்புவிக்கும்” (நீதி.11:4). “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்” (நீதி.11:28). “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத்தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக் கொண்டிருக்கிறார்கள்” (1தீமோ.6:9,10). பணத்தைக் குறித்ததான சில தன்மைகளை ஆராய்வோம்.

1. பணம் பெருகப் பெருக அதின் மேலுள்ள ஆசையும் பெருகும்:

போதுமென்பது இப்பொழுது இருப்பதைவிட இன்னும் கொஞ்சம் அதிகம் (Enough is a little more than what we have) என்கிற காரியத்தை இன்றைய ஜனங்கள் நம்புவதால் அவர்கள் திருப்தியடைவதில்லை. இப்படி நினைத்து செல்வம் குறையாமலிருப்பதற்காகவே எல்லாத் தவறான வழிகளிலும் செல்வார்கள்.

2. பணம் மாயையான ஒரு சுதந்தரத்தை தருகிறது.

ஒரு சிலர் தங்களுக்கு வரும் எந்தப் பிரச்சனையையும் பணத்தால் மேற்கொள்ளலாம் என்று நினைப்பார்கள். லவோதிக்கேயா சபை “நான் ஐசுவரியவான், திரவிய சம்பன்னன் (Rich & Wealthy) எனக்கு ஒரு குறைவும் இல்லை” என்று சொன்னது. தேவனோ அதைப் பார்த்து “நீ நிர்ப்பாக்கியன், பரிதபிக்கப்படத் தக்கவன், தரித்திரன், குருடன், நிர்வாணி, நீ ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு என்கிறார்” (வெளி.3:17).

3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே
உங்கள் இருதயமும் இருக்கும்
(மத்.6:21).

செல்வம் ஒருவனை பூமியோடு சங்கிலிகளால் கட்டிவிடுகிறது. அவன் தேவனையும் தேவ ராஜ்யத்தையும் மறந்து தன் செல்வத்திலேயே களிகூருகிறான். கண்ட உலகத்தை சிநேகித்து ஆதாயம் பண்ணி காணாத பரலோகத்தை இழந்துபோகிறான். மத்.16:26 எச்சரிக்கிறது, “மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயம் பண்ணினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன?”

4. செல்வம் ஒருவனை சுயநலவாதியாக்கிவிடுகிறது.

தனக்கென்று செலவழிப்பான். மற்றவர்களோடு அதைப் பகிர்ந்துகொள்ளமாட்டான். இந்தக் காரணத்தினால்தான் நித்திய ஜீவனுக்கு வழி கேட்ட பணக்கார வாலிபன் துக்கத்தோடு இயேசுவைவிட்டுப் பிரிந்துப்போனான். பகிர்ந்துகொள்கிறேன் என்ற சகேயு பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொண்டான். இதே காரணத்தால்தான் லாசரு ஐசுவரியவான் உவமையில் அங்கே சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஐசுவரியவான் தன் வீட்டு வாசலிலிருந்த அந்த ஏழை லாசருவை கவனியாமல் போனான். நடந்ததென்ன? லாசரு பரலோகத்தில் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான். ஐசுவரியவானோ நரகத்திலே வேதனைப்பட்டான். உங்களுக்கு செல்வம் அதிகம் இருக்குமென்றால் அதை மற்றவர்களுக்கு பயன்படுத்துங்கள். அவர்களுடைய கஷ்டத்தையும் துன்பத்தையும் வேதனையையும் நீக்கும்படியாகதான் தேவன் உங்களுக்கு பணத்தைக் கொடுத்திருக்கிறார். நான் என் குடும்பம், என் பிள்ளைகள் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டும் அதை உபயோகப்படுத்தாமல் தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகள் எல்லாருக்கும் அதை பகிர்ந்துகொடுத்தால் தேவ ராஜ்யம் உங்களுடையதாயிருக்கும்.

அருமையானவர்களே, பணம் பாவமல்ல, ஆனால், அது ஓர் ஆபத்து (Riches are not sin; but they are danger). விவேகி ஆபத்துக்கு விலகி தப்பித்துக்கொள்வான்; மூடன் நெடுகப்போய் தண்டிக்கப்படுவான். நீங்கள் எப்படி?

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. ஐசுவரியவான் அதன்மேல் கண்ணை வைத்தால் பரலோக ராஜ்யம் அவனுக்கு தென்படாமலே போய்விடும்.

சத்தியவசனம்