மகிழ்ச்சி வாழ்வுக்கு ஒரே தெரிவு

சகோதரி சாந்தி பொன்னு
(செப்டம்பர்-அக்டோபர் 2017)

“முழுமக்கள் தொகையையும் உடைத்துச் சின்னாபின்னமாக்கப் போதுமான அநேக டைனமைட்களை (வெடிபொருள்) அடக்கியதும், சமுதாயங்களைத் தலைகீழாக மாற்றவல்லதும், யுத்தத்தால் உடைந்துபோயிருக்கிற இந்த உலகத்துக்குச் சமாதானத்தைக் கொண்டுவரக்கூடியதுமான ஒரு பெரிய பாக்கியத்தைக் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்களோ அதை ஒரு நல்ல இலக்கியமாக வாசிக்கிறீர்களே தவிர அதற்கும் மேலாக நீங்கள் எதுவும் செய்வதில்லை.” உலகம் போற்றும் மகாத்மா காந்தி அடிகளாரின் கூற்று இது. இயேசுவின் மலைப்பிரசங்கத்தின் அடிப்படையிலே தன் வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்ற இந்த மகான் கடைசி வரைக்கும் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான குற்றத்தை அவர் கிறிஸ்தவர்களின்மீது சுமத்தியிருப்பது நமக்கு வெட்கமான விஷயம்.

தெரிந்தோ தெரியாமலோ பல வேளைகளில் மற்றவர்கள் ஆண்டவரிடம் வருவதற்கு தனியாகவோ, குடும்பமாகவோ, சபையாகவோ, கிறிஸ்தவ சமுதாயமாகவோ நாமே தடைக்கற்களாக இருந்திருக்கிறோம் என்பதை மறுக்கவேமுடியாது. நமது வாழ்வின் மூச்சும், நமது மகிழ்ச்சியின் அஸ்திபாரமுமாகிய தேவனுடைய வார்த்தையானது நம் வாழ்வில் முதன்மையான இடத்தைக் கொண்டிராததே இதற்குக் காரணம் என்றால் அதையும் நம்மால் மறுக்கமுடியாது. தேவனுக்குப் பிரியமாய் வாழ்வதற்கு ஏற்புடையதான சகல ஒழுக்க நெறிகளையும் ஆண்டவர் நமது கைகளில் நமது பாஷையிலேயே எழுதிக்கொடுத்திருக்கிறார். அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பது நமது தெரிவு. ஆனால் சரியான தெரிவைச் செய்துவிடாதபடி, சத்துரு நம்மைப் பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறான் என்ற விழிப்புணர்வு நமக்கு அவசியம்.

பரிசுத்த வேதாகமத்தின் பழைய புதிய ஏற்பாடுகள் இரண்டிலும் இரண்டு பெரிய பிரசங்கங்களைக் காண்கிறோம். ஒன்று, சீனாய் மலையில் தேவனாகிய கர்த்தர் மோசே மூலம் தமது மக்களுக்குப் பேசிச்சொன்னது. இது கட்டளைகள் அடங்கிய சட்ட திட்டங்களும், ஒழுக்கத்திற்கடுத்த பிரமாணங்களுமாகும். இந்தப் பிரமாணங்கள் மனிதனை நியாயந்தீர்க்கும், இதனை மீறுகிறவன் சாவான். ஆனால், இரண்டாவது இயேசு தாமே வாய்திறந்து தமது சீஷருக்கும் வந்திருந்த ஜனங்கள் கேட்கவும் பேசிச்சொன்ன பிரசங்க வார்த்தைகள். இவை நம்மை நித்தியத்திற்கு நடத்தும் மைல்கற்கள்; கீழ்ப்படிதலுக்கான அறை கூவல். அவற்றைத் தினமும் சிந்தித்து, தேவ கிருபையை நாடி அவற்றின்படி நடக்கும்போது, ஒருவேளை உலகம் நம்மைப் பரிகசித்தாலும், நாம் ஒருபோதும் தோற்றுப்போகவே முடியாது.

தொலைந்துவிட்ட மகிழ்ச்சி:

இன்று நற்சிந்தனைகளும், நல்ல செய்திகளும், ‘மகிழ்ச்சி வாழ்வுக்கான பத்துப்படிகள்’, ‘வெற்றி வாழ்வுக்கான ஏழு ஆலோசனைகள்’ என்று வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லுவதற்கு உதவிசெய்ய ஆயத்தமாயுள்ள பலப் புத்தகங்களும் ஏராளமாகவே கிடைக்கின்றன. இணையத்தளமே இன்றைக்கு ஆலோசனைத் தளமாக மாறிவிட்டிருக்கிறது. அப்படியிருந்தும், மனிதனுடைய வாழ்வில் சந்தோஷம் உண்டா? திருப்தி உண்டா? இன்னொரு பக்கத்தில் பலரக ஆராதனைகள், பாடல்கள், ஊழியங்கள், சமூகப் பணிகள் என்று கிறிஸ்தவர்கள் நாம் மிகவும் ‘பிஸி’ யாகிவிட்டோம். ஆனால், நமது மனதில் சமாதானம் உண்டா? நமது திருச்சபைகள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறதா?

ஏன் மனிதனுக்கு இத்தனை சஞ்சலங்கள்; சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமை, பொய் புரட்டுகள் என்று ஒருபுறமும்; புதிய புதிய வியாதிகள், அதற்கான சிகிச்சைகள் மருந்துகளால் மேலும் புதிய பிரச்சனைகள் என்று இன்னொரு புறமும். போதாதென்று இயற்கைக்கூட மனிதனுக்கு எதிராக எழும்பியிருக்கிறது. நேரடி சண்டையென்றால் துப்பாக்கியால் சுடலாம், டெங்கு கொசுவை  எந்தத் துப்பாக்கியால் சுடுவது? விநோதமான காய்ச்சல் கொண்டுவரும் வைரஸ் நுண்ணுயிரை எந்த ஏவுகணையால் அழிப்பது? ஏன் இந்த நிலைமை? நவீனமும் விஞ்ஞானமும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் இவற்றுக்குப் பல விளக்கங்கள் காரணங்களைச் சொல்லலாம். ஆனால், பரிசுத்த வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று சற்றுக் கவனிப்போமா?

“நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்…” (லேவி.26:3) இங்கே ஒரு நீண்ட ஆசீர்வாதத்தின் பட்டியல் எழுதப்பட்டுள்ளது. அதேசமயம், “நீங்கள் எனக்குச் செவி கொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்…” (வச.14,15) அந்த அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள இடறல்களை நினைத்தும் பார்க்கமுடியாது. இது அன்றைய இஸ்ரவேலுக்குத் தேவனாகிய கர்த்தர் சொன்னது. இன்று நமது நிலைமையும் இதுதானா?

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூமியிலே வாழ்ந்திருந்தபோது, பல காரியங்களை உறுதியாகவும் அதிகாரத்துடனும் போதித்தார். வாழ்க்கைக்கான வழிமுறைகளைத் தெளிவாகவும், விளங்கக் கடினமானவற்றை உவமைகள் மூலமாகவும் விளக்கினார். நமது இன்றைய காலத்தின் வாழ்வுமுறைக்கு ஏற்ற யாவையும் அவர் கற்றுத் தந்திருக்கிறார். நமது எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் பதில் உண்டு. எல்லாப் பிரச்சனைகளுக்கும் அவரிடம் வழி உண்டு. ஆசீர்வாதமான வாழ்க்கை, வாழ்வுக்கான சட்ட திட்டங்கள். கோபம், இச்சை, விவாக உறவு, ஆணையிடுதல், பழி வாங்குதல், சத்துருவையும் நேசித்தல், ஏழைகளுக்குக் கொடுத்தல், ஜெபம், உபவாசம், வீண் கவலை, அடுத்தவரை நியாயந்தீர்த்தல் இப்படி சகலத்தையும் எளிமையான முறையில் இயேசு போதித்துள்ளார். இதற்கும் மேலாக நமக்கு என்னதான் வேண்டும்? இறுதியில் இயேசு ஒரு காரியம் சொன்னார். “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத்.7:24) என்றார்.

ஆக, பழைய ஏற்பாடோ, புதிய ஏற்பாடோ காரியம் ஒன்றுதான். நாம் இந்தப் பாடுள்ள உலகிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக வாழ ஒரேவழி, கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதுதான். அந்த ஒன்றைத்தான் ஆண்டவர் நம்மிடம் எதிர் பார்க்கிறார். அந்த ஒன்றுதான் நமக்கும் கஷ்டமா யிருக்கிறது, இல்லையா?

இரண்டு மாறுபட்ட வாழ்வுகள்:

‘அப்போ கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு நடந்துவிட்டால் நமக்கு ஒரு சேதமும் வராதா? வாழ்வில் பிரச்சனைகள் தலை தூக்காதா?’ இப்படிப்பட்ட கேள்விகள் நமக்குள் எழலாம். இயேசு சொன்னார்: “பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது” (மத்.7:25). ஒரு கன்மலையை இடித்து, நொருக்கித் தகர்த்து, அடி ஆழத்துக்குச் சென்று அஸ்திபாரம் போடுவதென்பது இலகுவான காரியமே அல்ல. அது உயிராபத்தான விஷயமும்கூட. அந்நாட்களிலே டயனமைட்டுக்கள் பயன்படுத்தி கன்மலையை உடைப்பர். இதற்கு அதிக நாட்கள் எடுக்கும். அதிக செலவாகும். ஆனால், காலம் எடுத்தாலும் அது அசையாது.

இங்கே இயேசு குறிப்பிட்ட கன்மலை, அது தேவனுடைய வார்த்தை. தேவனுடைய வார்த்தையால் நமது வாழ்வைக் கட்டி எழுப்புவது கடினமாகத் தெரியலாம். ஆனால், அது ஒருபோதும் அசைக்கப்படாது. ஏனெனில், அது உலகத்தின் பெறுமதிப்புக்கு மாறானது; உலகக் கண்ணோட்டத்துக்கு வேறுபட்டது. உதாரணத்துக்கு, ‘அடிக்கிறவனுக்குத் திருப்பி அடி’ என்று உலகம் சொல்லும். கர்த்தருடைய வார்த்தையோ ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் கொடு’ என்கிறது. இது முடிகின்ற காரியமா? ஆனால், முடியாத எதையும் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறதற்கு அவர் பொல்லாத தேவன் அல்ல. அவருடைய பெலத்தினால் கிருபையினால் எல்லாம் முடியும்.

ஆனால், கஷ்டப்பட்டு எப்படியாகிலும் அஸ்திபாரத்தைப் போட்டுவிட்டால், ‘இது தேவனுடைய வார்த்தைப்படி கட்டப்பட்ட வாழ்வு இதை நெருங்க முடியாது’ என்று சொல்லி வாழ்க்கைப் புயல் நம்மைத் தவிர்த்துச் சென்றுவிடும். பெருமழை நமக்கும் வரும்; ஆம்! மேலிருந்தும் பிரச்சனைகள் வரும், பெருவெள்ளம் வரும்; கீழிருந்தும் தொல்லைகள் சீண்டும். காற்று அடிக்கும்; எல்லாப் பக்கங்களிலும் ஒன்று மாறி ஒன்றாக அடிகள் பல விழும். ஆனால் ஆண்டவர் இயேசு சொல்கிறார்: ‘நீ அசைக்கப்படமாட்டாய்’. இது வேதசத்தியம்.

அதேசமயம் மணற் பரப்பிலும் ஒருவன் வீடு கட்டுகிறான். மணலில் கட்டுவது மிகவும் இலகு. அஸ்திபாரத்திற்குக் குழி தோண்டுவதும் இலகு. ஆகவே அதிக தொழிலாளிகள் தேவைப்படாது. செலவும் குறைவு. எல்லாவற்றுக்கும் மேலாக மணல் தரையில் வீடு கட்டுவதற்கு அதிக நாட்களும் செல்லாது. சீக்கிரமாகக் கட்டி சீக்கிரமாகக் குடிபோய் விடலாம். உலகம் அவனைப் பாராட்டும். ‘கெட்டிக்காரன்’ என்றும் சொல்லும். அதே பெருமழை, அதே பெருவெள்ளம், அதே பெருங்காற்று. இந்த வீட்டையும் மோதியடிக்கிறது. இயேசு சொன்னார்: அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். ஏன்? அவரே சொன்னார். “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (மத்.7:26).

இப்போ பதில் வெகு இலகுவாகக் கிடைத்துவிட்டது, இல்லையா? தேசத்தின் வறட்சிக்கும், திடீர் வெள்ள அழிவுகளுக்கும், யுத்தச் சாவுகளுக்கும், குடும்பச் சீரழிவுகளுக்கும், தனி மனித வாழ்வின் சீர்கேட்டுக்கும், கொலை, கொள்ளை, கற்பழிப்புகளுக்கும் காரணம் என்ன என்று ஆய்வு செய்யவேண்டிய அவசியமே இல்லை. பரிசுத்த வேதாகமம் மிகத்தெளிவான பதிலைத் தந்திருக்கிறது. அதனைப் பதில் என்று சொல்லுவதிலும், நமது தெரிவு என்பது மிகப் பொருத்தமானதாகும். கடினமாயினும், காலம் எடுத்தாலும், பல இழப்புகளைச் சந்தித்தாலும் என் வீட்டை அதாவது என் வாழ்வை கற்பாறையில் கட்டப்போகிறேனா? அல்லது, இதெல்லாம் பார்க்க முடியாது. எப்படியோ ஒரு வீடுவேண்டும். நான் வாழவேண்டும், அதிலும் இன்று வாழவேண்டும். அதற்கு இலகுவான வழி மணற்தரையில் கட்டுவதுதான். மற்றக் காரியத்தைப் பின்னர் பார்க்கலாம் என்போமா?

இரண்டு மாறுபட்ட பெறுமதிப்புகள்:

ஆக, இயேசுவின் பிரசங்க வாக்கியங்களில் உலகத்தின் பெறுமதிப்புக்கும் பரலோக பெறுமதிப்பிற்குமுரிய பெரிய வேறுபாட்டை நாம் காணலாம். உலகப் பெறுமானத்தைத் தலை கீழாக்குகிறது இயேசுவின் பிரசங்க வாக்கியங்கள். (உ.ம்) ‘சத்துருவைச் சிநேகித்தல்’, இது மன்னிப்பு இல்லாமல் நடக்காது. இதற்கு உலகம் ஒத்துவருமா? ‘கைமாறு கருதாமல் கொடுத்தல்’, இது முடிகின்ற காரியமா? அன்பும் கரிசனையும் இல்லாமல் இது நடக்காது. முக்கியமாக ‘விவாக சம்பந்தம்’; தேவன் இணைத்ததை யாராலும் பிரிக்கவே முடியாது; வேசித்தன முகாந்திரம் இல்லாமல் (அன்று இது யூதருக்குச் சொல்லப்பட்டது) இது முடியவே முடியாது. (ஆண்டவர் அப்படிப்பட்டவனையும் மன்னித்தார் என்பதையும் மறத்தல் நல்லதல்ல) ஆனால், இன்று நீதிமன்றம் வருகின்ற விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலானவை கிறிஸ்தவர்களுடையதுதான் என்ற செய்தி மிகவும் துக்கத்துக்குரியது.

இந்த உலகம் பணத்துக்கும் பதவிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. பரலோகமோ பரிசுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இரண்டினுடைய பெறுமதிப்புகளும் ஒன்றுக்கொன்று நேர்ரெதிரானவைகள். ஆனால், நாம் எந்தப் பெறுமதிப்புக்கு நம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறோம்? எந்தச் சிக்கல்களோ, பிரச்சனைகளோ தேவனுடைய கண்ணோட்டத்தில் பார்க்கப்படும்வரை அவை தீர்க்கமுடியாதவைகள் அல்ல.

அ. திருமண பந்தத்தில் இணையும்போது தேவதிட்டத்தினுள்ளே நுழைகிறோம். பின்னர் நமக்கென்று எந்தத் திட்டமும் இருக்க முடியாதே.

ஆ. பிள்ளைகள் பிறக்கும்போது தேவனுடைய சுதந்திர பாக்கியத்தில் நுழைகிறோம். அவர்களை அவருடைய வார்த்தைகளின்படி அவருக்கேற்றபடி வளர்ப்பதுதான் பெற்றோரின் தலையாய பொறுப்பு.

இ. குடும்பத்தில் சிக்கல்கள் வரும்போது தேவனுடைய கிருபைக்குள் நுழைகிறோம். நாம் பிணக்குகளை அவரிடம் கொண்டு செல் லுகிறோமா? அல்லது…??

பரமபிதாவிடம் கேட்கிறவர்களுக்கு அவர் நன்மையையே கொடுக்கிறவர்.

ஈ. அடுத்தவர்தான் தப்பு என்று எண்ணும்போது தேவனுடைய ஆலோசனைக்குள் நுழைகிறோம். பிரச்சனை அடுத்தவரிலோ பிள்ளைகளிலோ அல்ல. நம்மிலேதான் என்பதை உணர்ந்து தேவனுடைய பெறுமதிப்புக்குள் நம்மைக் கொண்டுவருகிறோமா?

நமது துணை அல்லது பிள்ளைகள் எதைச் செய்யவேண்டும்; எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, முதலில் நாம் அதைச் செய்வோமாக.

உ. ‘நான்’ இது எழும்பும்போது தேவனுடைய இரக்கத்தினுள் நுழைகிறோம். இதய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் நமது சுயத்தை அடித்து வீழ்த்தி, இயேசுவைச் சிங்காசனத்தில் ஏற்றி, நமக்குரிய சிலுவையைச் சந்தோஷமாகச் சுமக்க நாம் ஆயத்தமா?

ஊ. இருதயம் பாரமாக உணரும்போது தேவனுடைய மார்பில் சாய்ந்துவிடுவோம். அன்றன்று சிக்கல்களை அன்றன்றே எடுத்து விடுகின்ற கிருபையைப் பெற்றுக்கொள்வது நல்லது. மாறாக அதை நீடிக்கவிட்டால் புரையோடிவிடும். ஆனால், உலகமோ, இது உன் வாழ்வு, உன் விருப்பம், உன் சுதந்திரம் என்று தன் பெறுமதிப்புகளை மனிதனில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

தெரிவு நம்முடையது:

தேவனுடைய வார்த்தை, நமது வாழ்வின் மகிழ்ச்சிக்கான இரகசியமே இதுதான். ஆனால் நமது தெரிவுதான் பதில் சொல்லும். என்னைப் படைத்து உருவாக்கி, இதுவரை நடத்திவந்த தேவனுடைய வார்த்தைக்கு நான் கீழ்ப்படிவேனா? அல்லது என் விருப்பப்படியே வாழ விரும்புவேனா? அன்று தேவனாகிய கர்த்தர் மோசேயிடம் பேசிச்சொன்னது இஸ்ரவேல் தனித்துவமாக வாழுவதற்கான கட்டளைகள்; இன்று ஆண்டவர் இயேசு தமது வாயைத் திறந்து பேசிச்சொன்னது, தேவனுடைய பரிசுத்தத்தை நம் வாழ்வில் வெளிப்படுத்துவதற்கு ஏதுவான நமது வாழ்வுக்கான ஒழுக்க நெறிகள். நாமோ அவற்றை வெகு சாதாரணமாகப் படிக்கிறோம். ஆனால் சிந்தித்து நடப்பதில்லை. இதைத்தான் மகாத்மா காந்தி அடிகளார் கூறினார். நாம் வேதாகமத்தை எதற்காகப் படிக்கிறோம். படிக்க வேண்டுமே என்பதற்காகவா? அல்லது, படிக்க மனதுக்கு இதமாயிருக்கிறது என்பதற்காகவா? அல்லது, தேவன் என்னுடன் என்ன பேசுகிறார்? என் வாழ்வை நான் தேவனுக்குப் பிரியமுண்டாக எப்படி வாழவேண்டும் என்று கற்றுக் கொண்டு தேவனுக்கு என்னை அர்ப்பணிக்கின்ற மனநோக்கில் படிக்கிறேனா?

மாம்சத்துக்கும், மனிதனின் புரிந்துகொள்ளுதலுக்கும் முரணான ஆணைகளை இயேசு மனிதர்மேல் வைத்தார். அவை பொதுவாக விழுந்துபோன மனித மனதுக்கு முரணானவையே. பகைவர்களை நேசிப்பது, அடித்தவனுக்கு அடுத்த கன்னத்தைக் கொடுப்பது, திருப்பித் தருவான் என்ற எதிர்பார்ப்பில்லாமல் கடன் கொடுப்பது, அங்கியைக் கேட்பவனுக்கு வஸ்திரத்தையும் விட்டுவிடுவது, துன்பத்திலும் அவமரியாதையிலும் உபத்திரவத்திலும் களிகூருவது, இன்னும் அநேகம். இவற்றை உலகம் ஏற்குமா? இவை கடின பாதை அல்லவா? மனித சுபாவத்தில் செய்ய முடியாததைச் செய்யும்படி கேட்பது ஒவ்வாத விஷயமாயிருக்கலாம். அப்படியானால் இவற்றை ஆண்டவர் ஏன் நம் முன்வைத்தார்? ஆம், மனிதன் தன்னைத் தேவனோடு நேருக்கு நேர்கண்டு, இந்த முடியாத காரியங்களைச் செய்வதற்கு அவருடைய கிருபையை நாடுவதற் காவேயாகும்; அவரையே சார்ந்து வாழுவதற்கே யாகும்.

பிரியமானவர்களே, நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக வாழவேண்டும். கர்த்தருக்காக வெற்றிகள் பல ஈட்டவேண்டும். நமக்கும் குடும்பத்துக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாக வாழவேண்டும். உலகுக்கு வெளிச்சமாய் வாழவேண்டும். கடவுளுக்குப் பிரியமானதும் அவருடைய நாமத்துக்குக் கனத்தைக் கொண்டு வருகிறதுமான வாழ்வு வாழவேண்டும். இவை தேவனுடைய விருப்பமும் சித்தமும். இதற்கு அவருடைய வார்த்தை ஒன்றே பதில். அதற்குக் கீழ்ப்படிகின்ற மனது நமது மாறுத்தரம். உலகப் பெறுமதிப்பை வெறுத்து, பரலோக பெறுமதிப்புக்கு ஏற்ப வாழுகின்ற அர்ப்பணம் ஒன்றே முடிவு. நமது தெரிவு என்ன?

சத்தியவசனம்