ஐக்கியமாக செயல்பட்ட சபை

ஆ.பிரேம்குமார்
(செப்டம்பர்-அக்டோபர் 2017)

ஒருமுறை மூக்கிற்கும் கண்களுக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டதாம். மூக்கு கண்ணைப் பார்த்து, ‘உனக்குச் சொந்தமான பொருளை (கண்ணாடியை) என்மேல் வைத்திருக்கிறாய், அதை எடுத்துவிடு’ என்று கூறியதாம். அதற்குக் கண், ‘ஐயோ கண்ணாடியை எடுத்துவிட்டால் நான் தடுக்கி விழுந்துவிடுவேன், எனக்குத் தயவுபண்ணு’ என்று கெஞ்சியதாம். அதற்கு மூக்கு மறுத்துவிட வேறுவழியில்லாமல் கண்ணும் கண்ணாடியை கவலையுடன் கழற்றிவிட்டது. பின், கண் தெரியாததால் கால் தடுக்கி விழுந்தபோது கல்லில் இடிபட்டது மூக்குதான்.

திருச்சபை என்பது கட்டிடமல்ல, அது அழைக் கப்பட்ட ஜனக்கூட்டம் என ஏற்கனவே கவனித்தோம். கிறிஸ்துவைத் தலையாகக்கொண்ட கிறிஸ்துவின் சரீரம்தான் சபை. அதில் நாம் ஒவ்வொருவரும் அவயவங்கள் (2 கொரி.12:27). நீங்கள் ஒருவரையொருவர் கடித்து பட்சித்தீர்களானால் அழிவீர்கள் (கலா.5:15) என பவுல் எழுதுகிறார்.

அந்தியோகிய சபையில் வித்தியாசமான பின்னணியைக்கொண்ட பல இன மக்கள் இருந்தார்கள். ஆனாலும், அவர்கள் ஐக்கியமாக செயல்பட்டனர். அந்தியோகிய சபை தலைமைத்துவம் ஒரு ஏதேச்சதிகார தனிமனித ஆளுகையில் இருக்கவில்லை. புதிய ஏற்பாட்டு சபைகள் தனி மனித ஆளுகையின் கீழ் இருக்கவில்லை. மாறாக புதிய ஏற்பாட்டுத் தலைமைத்துவம் பன்மையில் இருந்தது (அப்.20:17;பிலி1:1;1 தீமோ.3:1-13; தீத்து1:39).

அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனே கூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள் (அப்.13:1).

போதகர் ஒருவர் தலைமைத்துவம் கொடுப்பதில் தவறேதுமில்லை. ஆனால், அந்தப் போதகர் தலைமைத்துவக் குழுவொன்றுக்கு பொறுப்புக் கூறுபவராக கணக்கொப்புவிக்கிறவராக இருக்கவேண்டும். ஒரு சில இடங்களில் சர்வாதிகாரியாகவும் தலைமைத்துவ குழு போதகரின் கைப்பொம்மைகளாகவும்  இருக்கின்றனர். மறுபுறத்தில் சில சபைகளில் தலைமைத்துவ குழு அதிகாரிகளாகவும் போதகர் அவர்களின் கைப்பொம்மையாக இருக்கின்றனர். இது இரண்டுமே ஆரோக்கியமானதல்ல.

குழுவாகத் தலைமைத்துவம் வகித்து செயல்படுவது ஆரோக்கியமானது. ஆண்டவர், போதகருக்கு ஒரு தரிசனத்தைக் கொடுக்கும்போது தலைமைத்துவம் அதைத் தடுக்காமல், அது தேவனிடமிருந்து வந்ததா, நடைமுறை ரீதியானதா என்று ஆராய்ந்து நன்மை தீமைகளை எடுத்துரைத்து சரியான தரிசனத்தை நிறைவேற்ற உதவ வேண்டும். தலைவர் ஒருவருக்கு தேவன் ஒரு தரிசனத்தைக் கொடுத்தால், போதகர் அதனைத் தடுக்கக்கூடாது. அது தேவனிடமிருந்து வந்ததா, யதார்த்த பூர்வமானதா என ஆராய்ந்து சரியான தரிசனமெனில்  ஊக்கப்படுத்தவேண்டும்.

தேவன் சபைபோதகருக்கு மட்டும்தான் எல்லா தரிசனங்களையும் கொடுப்பார் என்றில்லை. சபை மக்களுக்கும் தரிசனமொன்றைக் கொடுக்கலாம். சபை மக்கள் எல்லாருக்குமிருக்கிற வித்தியாசமான தரிசனங்களை அனைத்தையும் ஒரு சபை செயற்படுத்த முடியாது. அது சபையின் தரிசனத்தோடு ஒத்திராவிடின் அந்தந்த அங்கத்தினரின் அந்த தரிசனத்தை செயல்படுத்தக்கூடிய சபையுடனோ அந்த நபரை தொடர்புபடுத்துவது நல்லது.

அந்தியோகியா பட்டணம் கிரேக்க, யூத, சீரிய கலாச்சாரங்களைக்கொண்ட பட்டணமாயிருந்தது. சபைத் தலைமைத்துவத்திலும் பல்லின கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். பர்னபா யூதன், நீகர் எனப்பட்ட சீமோன் ஆப்பிரிக்கன், சிரேனே ஊரானாகிய (தற்கால லிபியா, வட ஆப்பிரிக்கா) லூகி, மெனாகேம் என்ற எபிரேய பெயரின் கிரேக்க பெயர் மனாயீன். இதன் அர்த்தம் ‘தேற்றுபவர்’ ஆகும். இவர் தேசாதிபதியாகிய ஏரோது அந்திபாசோடு வளர்க்கப்பட்டவர். ஏரோதோடு ரோமாபுரியில் கல்வி கற்றவர், ஏரோதின் வளர்ப்புச் சகோதரன் (Foster Brother) அந்தியோகிய சபையில் செல்வாக்குள்ள தலைவராக இருந்தார். போதகராக அல்லது தீர்க்கதரிசியாக இருந்தார். அரசியல் தலைமைத்துவப் பின்னணியிலிருந்து சபைத் தலைமைத்துவத்திற்கு வந்தவர், சவுல் கமாலியேலின் கீழ் கல்விகற்ற யூதன், பரிசேயன், ரோமக் குடியுரிமையுள்ளவர். கிரேக்க பின்னணியில் வளர்க்கப்பட்டவர்.

இப்படி பல்லின மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக ஆராதித்து வந்தனர். தலைமைத்துவமும் பல்லினத்தவர்களைக் கொண்டிருந்தது. இன்று சில சபைகள் ஒரு இனத்தை மட்டுமே கொண்டுள்ளது துக்ககரமானது. அதிலும் சில சபைகள் ஒரு சாதியைச் (ஜாதியை அல்லது குலத்தை) சேர்ந்தவர்களை மட்டும் கொண்ட சபைகளாயிருக்கிறது. மற்ற இனங்களோ மற்ற சாதியைச் சேர்ந்தவர்களோ அச்சபைக்கு வருவது ஊக்கு விக்கப்படுவதில்லை. மாறாக அதைரியப்படுத்தப்படுகிறது. இது வேதாகம ரீதியானதல்ல. இன மொன்றையோ அல்லது சாதியொன்றையோ ஆதாயப்படுத்த முற்படுகையில் ஒரு இனம் வந்தால் மற்ற இனம் வரமாட்டார்கள். அல்லது கீழ்சாதி வந்தால் மேல்சாதி வரமாட்டார்கள் என்ற நிலை காணப்படுமிடத்து அவர்களைத் தனித்தனியே ஆதாயப்படுத்துவதில் தவறில்லை.

ஆரம்ப கட்டமாக தனியாக சபை ஆரம்பிப்பதிலும் தவறில்லை. ஆனால் கிறிஸ்துவுக்குள் புதிய சமூகமாக வந்த பின்பு இனம், சாதி, குலம், கோத்திரம் பார்த்து மற்றவருடன் சேர்ந்து ஆராதிக்க முடியாது என்று கூறுவது அவர்கள் மனமாற் றத்தை கேள்விக்குறியாக்குகிறது.

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றா யிருக்கிறீர்கள் (கலா.3:28) என பவுல் கூறுகிறார்.

சாதி பார்ப்பது பாவம். இனத்தின் அடிப்படையில் மற்றவர்களை ஒதுக்குவது பாவம். சில சூழ்நிலைகளில் இடப்பிரச்சனை, பல மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதால் நேரப்பிரச்சனை காரணமாக அந்தந்த மொழிகளில் தனித்தனி ஆராதனை நடத்துவதில் தவறில்லை. ஆனால், இவர்கள் மாதத்திற்கொருமுறை அல்லது சில மாதங்களுக்கொருமுறை ஒன்றாகக் கூடி வருவது நல்லது. வெளிநாடுகளில் வசிக்கிற, வேலை செய்கிற இலங்கை, இந்தியக் கிறிஸ்தவர்கள் மற்ற இனத்தவர்களை ஆதாயப்படுத்தவோ பிற இன விசுவாசிகளை தமது ஐக்கியத்தில் சேர்த்துக் கொள்ளவோ விருப்பமற்ற நிலை காணப்படுமானால் அது துக்ககரமானது.

சபை என்பது ஒரு இனத்திற்கோ, சாதிக்கோ, நாட்டவருக்கோ சொந்தமான சங்கமோ கழகமோ அல்ல. அது தேவனுக்கு சொந்தமானது. அது அனைத்து இனங்களையும் உள்ளடக்க வேண்டியது.

இதனை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே! உங்கள் சபையின் ஐக்கியத்திற்கு ஒரு முஸ்லீம் பின்னணியிலிருந்து இரட்சிக்கப்பட்ட ஒருவர் வந்தால், அவர் எந்தவிதமான வரவேற்பைப் பெறுவார்? ஒரு ஆப்பிரிக்க கிறிஸ்தவன் வந்தால் எந்தவிதமான வரவேற்பைப் பெறுவார்? தொடர்ந்து சபைக்கு வந்து சபை தலைவனொருவனுக்குரிய தகுதிகளைப் பெற்றிருந்தால், அவர் உங்கள் சபையில் தலைமைத்துவத்திற்கு வரமுடியுமா? திருமணம் என்று வரும்போது சபை அங்கத்துவம் என்று வரும்போது சாதி (ஜாதி) குலம், இனம், என்ற பாகுபாடு பார்க்கிறீர்களா?

பல இனங்களை சபையில் உள்ளடக்கும்போது அவர்களுக்கேற்றவிதமாக நாமும் சில விட்டுக்கொடுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். நாமும் மாறவேண்டி வரலாம். நமக்கு பரிச்சயமான காரியங்களையும் விட்டுக்கொடுத்து அவர்களுக்குப் பரிச்சயமான காரியங்களையும் உள்ளடக்க வேண்டிவரலாம். அந்தியோகிய சபை வித்தியாசமான இனப்பின்னணியைக் கொண்டவர்களை மட்டுமல்ல, வித்தியாசமான வரங்களைக் கொண்டவர்களையும் உள்ளடங்கிய சபையாக இருந்தது.

“முதலாவதாக சுவிசேஷகருடைய வரத்தையுடைய சாதாரண விசுவாசிகள் சபையை ஸ்தாபித்தனர். அதன் பின்பு பர்னபா வந்து தனது ஊக்கப்படுத்தும் வரத்தால் அவர்களுக்கு புத்தி கூறி அவர்களை நிலைப்படுத்தினார். பிரசங்கியும் போதகனுமாகிய சவுலை பர்னபா அறிமுகப்படுத்தி இருவருமாக ஒரு வருடகாலமாக ஒன்றாக ஊழியம் செய்தனர் (அப்.11: 22-23). அத்துடன் மூன்று தீர்க்கதரிசிகளும் போதகர்களும் சபைக்கு ஊழியம் செய்தார்கள். இதற்கு மேலதிகமாக வந்துபோகும் தீர்க்கதரிசிகளும் சபையில் ஊழியம் செய்தார்கள். விதவிதமான வித்தியாசமான ஊழியங்களை இச்சபைக் கொண்டிருந்தது” என்கிறார் தியோடர் வில்லியம்ஸ்.

சபையின் ஐக்கியம் கிறிஸ்துவை உலகிற்கு அறிவிக்கும்; சாத்தானின் சூழ்ச்சிகளுக்கு சாவு மணியடிக்கும்.

அந்தியோகிய சபை பல இனங்களையும் பல வித்தியாசமான வரங்களை உடையவர்களைக் கொண்டிருந்தாலும் ஐக்கியமாகச் செயல்பட்டது. வித்தியாசமானவர்கள் இருப்பதாலோ, வித்தியாசமாக சிந்திப்பதாலோ ஐக்கியம் குலையவேண்டும் என்பதில்லை. வேற்றுமையிலும் நாம் ஒற்றுமையாய் இருக்கலாம். கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், நோக்கத்தில் ஒற்றுமையிருக்கவேண்டும். சுயநல நோக்கங்கள் ஐக்கியத்தைக் குலைக்கலாம். கிறிஸ்து மாத்திரமே மகிமைப்படவேண்டும் என்ற நோக்கம் நம்மை வித்தியாசங்களுக்கு மத்தியிலும் ஐக்கியப்படுத்தும்.

இதனை வாசித்துக்கொண்டிருக்கும் சகோதரனே, சகோதரியே, நீங்கள் உங்களைவிட வித்தியாசமானவர்களை ஏற்றுக்கொள்ள, அவர்களோடு இணைந்து தேவமகிமைக்காக செயல்பட தீர்மானிப்பீர்களா? நீங்கள் உங்கள் குடும்பத்தில், சபையில், அயலகத்தில், அலுவலகத்தில் சமாதானத்தை, ஐக்கியத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறீர்களா? அல்லது சிறியசிறிய காரியங்களுக்காக ஐக்கிய குலைவை ஏற்படுத்துகிறீர்களா?

இன்று பாகுபாடுகளை மறந்து சபைகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய காலமாயுள்ளது. அடிப்படை வேத சத்தியங்களை மறுதலித்து, வேதாகம விழுமியங்களை ஒழுக்க நெறிகளை அலட்சியம் செய்து, பாவத்திலிருந்து மனந்திரும்ப மறுப்பவர்களுடன் ஐக்கியமாக ஊழியம் செய்ய வேண்டுமென்று நான் கூறவில்லை. மாறாக அவர்களையும் வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும் என்கிறேன்.

நமக்கென்று கருத்துகள் நம்பிக்கைகள் வலியுறுத்தல்கள் இருக்கலாம். அதில் தவறேதுமில்லை. அவற்றை நாம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், நம்மிலும் வித்தியாசமான கருத்துக்களை வலியுறுத்தும் உண்மைக் கிறிஸ்தவர்களுடன் நாம் ஐக்கியப்படாமல் இருக்கிறோமா? அவர்களுடைய எல்லா கருத்துக்களோடும் நாம் உடன்பட வேண் டிய அவசியமில்லை. ஆனால், முரண்படவும் உடன்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு சிலர் அந்நியபாஷை, பரிசுத்த ஆவி, அபிஷேகம், வரங்கள் போன்றவற்றை வலியுறுத்தலாம். இன்னும் சிலர் கிறிஸ்தவ அறநெறி, ஆவியின் கனி என்பவற்றை வலியுறுத்தலாம். மற்றும் சிலர் குடும்ப உறவுகள், ஆலோசனை போன்றவற்றை வலியுறுத்த, இன்னும் சிலர் வெளி ஊழியத்தை வலியுறுத்தலாம். சிலர் சமூக நீதி, சமூக சேவை என்பவற்றை வலியுறுத்த, மற்றும் சிலர் சுவிசேஷ ஊழியத்தை வலியுறுத்தலாம். வேதப் புரட்டர்களைத் தவிர்த்து அனைவருடனும் நாம் ஐக்கியம்கொள்ள ஆயத்தமாயிருக்க வேண்டும்.

ஒவ்வொரு உள்ளூர் சபைக்குள்ளும் இருக்கும் மக்களிடம் ஐக்கியம் காணப்படவேண்டும். சபைக்கு வெளியே மற்ற சபைகளுடனும் ஐக்கியம் காணப்படவேண்டும். அது ஆவியில்லாத சபை, செத்த சபை, இது வசனமில்லாத சபை போன்ற நியாயத்தீர்ப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு சபைக்குள்ளும் உண்மை விசுவாசிகள் இருக்கிறார்கள். பெயரளவு கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

கிறிஸ்துவின் நாமத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் ஒவ்வொரு திருச்சபையுடனும் ஸ்தாபனத்துடனும் ஐக்கியம்கொள்ள இணைந்து செயல்பட நாம் ஆயத்தமா? இப்பொழுது நாம் ஆயத்தமில்லாவிட்டால், பரலோகில் எப்படி அவர்களோடு இணைந்து இருக்கப்போகிறோம்? சிந்திப்போம்!

சத்தியவசனம்