விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்.
(செப்டம்பர்-அக்டோபர் 2017)

5. விசுவாசமென்னும் கேடகம் (எபேசி.6:14-17)

விசுவாசம் என்னும் கேடகத்தின் மூலம் பொல்லாங்கானாகிய சாத்தான் நம்மீது எய்யும் அக்கினியாஸ்திரங்கள் “எல்லாவற்றையும்” அவித்துப்போடவேண்டும் (எபே.6:16) சார்லஸ் B.வில்லியம்ஸ் இந்த வசனத்தை இப்படி மொழி பெயர்த்திருக்கிறார். “விசுவாசம் தருகிற கேடகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு பொல்லாங்கனாகிய சாத்தான் உங்கள்மீது எய்யும் தீப்பந்தங்களை நுனியில் கொண்ட அம்புகள் அத்தனையையும் அவித்துவிடமுடியும்.” அவிக்கப்படவேண்டிய தீப்பந்தங்களுடன் வரும் சில அம்புகளைப் பற்றிப் பார்ப்போம். சாத்தான் எய்யும் அம்புகள் என்பவை நம்மை வீழ்ச்சியடையச் செய்ய சாத்தான் அனுப்பும் சோதனை முயற்சிகளாகும். அவன் நம்முடைய வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கையாளுவான். அவற்றின்மூலம் நம்மை விழச்செய்ய முயற்சிப்பான்.

நம்மைப் ‘பெருமை’ உள்ளவர்களாக இருக்க ஊக்குவிப்பதன் மூலம் சாத்தான் நம்மைத் தாக்குவான். நீதி.16:18 நமக்கு இப்படி எச்சரிக்கை அளிக்கிறது. “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை”. மாம்ச சரீரத்தின் ஆசைகள், விருப்பங்கள் இவைகள் மூலமும் சாத்தான் நம்மைத் தாக்குவான். இந்த ஆசை இச்சைகளை முறையற்ற வழிகளில் திருப்தி செய்யத் தூண்டுவதன்மூலம் சாத்தான் நம்மை விழத்தள்ளி விடுகிறான்.

நாம் தவறு செய்யத் தூண்டப்படும்போது, அத்தகைய சோதனைகள் ஆண்டவரிடத்திலிருந்து தோன்றியவை அல்ல என்பதை நாம் நினைவுகூர வேண்டும். வேதாகமம் கூறுகிறது: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவரையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” (யாக்கோபு 1:13-15).

நாம் கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறவர்களானால், சாத்தான் எய்யும் தீப்பந்தம் தாங்கிய அம்புகள் நம்மைத் தாக்கி அழிவை ஏற்படுத்துவதற்கு முன் இடையிலேயே அணைக்கப்பட்டுவிடும். ஆனால் நாம் கிறிஸ்துவை சார்ந்திருக்கவில்லையானால், சோதனைகள் வரும் நேரத்தில் அவர் நமக்கும் பெலனாய் இருக்கவேண்டும் என்று வேண்டுகிறவர்களாய் இராமற்போனால், நாம் சாத்தானின் முயற்சிகளுக்கு இடங்கொடுக்கிறவர்களாயிருப்போம். நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் பல தடைகளையும் தோல்விகளையும் சந்திப்போம்.

சாத்தான் நம்மைத் தாக்கும் முறைகளில் ஒன்று, விசுவாசியின் சிந்தனை வாழ்க்கையைத் தாக்குவதாகும். விசுவாசியின் உள்ளத்தில் சந்தேங்களை எழுப்பிவிடுவான். கவலையை உருவாக்கிவிடுவான். இவை ஆண்டவர்பேரில் அவனுடைய விசுவாசத்தையும் பற்றுதலையும் குறைத்துவிடும். உள்ளமானது ஒரு ஆவிக்குரிய போர்க்களம் என்பதை  உணர்ந்த பவுல் இப்படிக் கூறினான்:

“அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி.10:5).

அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது சாத்தான் தேவனுடைய உண்மைத்தன்மை மீது சந்தேகத்தை விசுவாசியின் உள்ளத்தில் ஏற்படுத்துவான். அல்லது அவருடைய வாக்குத்தத்தங்களின் அதிகாரம், நம்பகத்தன்மை இவற்றில் சந்தேகம்கொள்ளச் செய்துவிடுவான்.

விசுவாசியைத் தாக்கும் முறைகளில் ஒன்று, ஒருவன் பாவம் செய்யும்போது அவனிடத்தில் “தேவன் உன் பாவத்தை மன்னிக்கமாட்டார். அவர் முன்னால் நீ செய்த ஒரு பாவத்தை உன் கண் முன்னால் காட்டிக்கொண்டே இருக்கிறார்” என்று கூறுவான். வேதபுத்தகத்தில் காணப்படும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இத்தகைய சந்தர்ப்பங்களில் மிகவும் முக்கியமானவை. தேவன் இப்படிக் கூறியிருக்கிறார்: “உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீடடுக் கொண்டேன்” (ஏசா.44:22). எசேக்கியா தேவனிடத்தில் கூறிய அறிக்கைகளை ஏசாயா 38:17-ல் காண்கிறோம். “இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்”. தேவனோடு ஐக்கியமும் நல்லுறவும் கொண்டிருக்கிறவர்களைக் குறித்துப் புதிய ஏற்பாடு கூறுகிறது: “அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை” (எபி.10:17). இயேசு நமக்காகச் சிலுவையில் மரித்தபோது, சம்பாதித்த மன்னிப்புதான் இந்த மன்னிப்புக்கு அடிப்படையாகும். நம்முடைய பாவங்களுக்காக தேவன் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்ட அனைத்து நீதியான கோரிக்கைகளையும், இயேசுகிறிஸ்து முழுவதுமாகச் செய்து நிறைவேற்றினார். இயேசுகிறிஸ்துவை நமது இரட்சகராக ஏற்றுக்கொண்டதன் மூலம் கண்டனத்துக்கும், ஆக்கினைத்தீர்ப்புக்கும் விலக்கி விடுவிக்கப்பட்டிருக்கிறோம். இந்தச் சத்தியங்களையெல்லாம் நன்கு அறிந்தவர்களாய் மறுபடியும் வேதாகமத்தை வாசித்துத் திரும்ப வேண்டும். சாத்தான் இப்பகுதியில் நம்மைத் தாக்கும்போது நாம் இதைச் செய்ய வேண்டும்.

நம் வாழ்க்கையில் மிகவும் சோர்வடையச் செய்யும் இழப்புகளையும், துன்பங்களையும் அனுபவிக்கும்போது, நம்முடைய விலையேறப்பெற்ற உடைமைகளை இழக்கும்போது, நாம் அன்பாய் நேசித்த ஒரு குடும்ப உறுப்பினரை மரணத்தின்மூலம் பிரியும்போது, தேவன் நம்மைக் கைவிடவில்லை என்பதை நாம் நினைவுகூரவேண்டும். தேவன் நம்மை மறந்துவிட்டார் என்ற நினைப்பைச் சாத்தான் நம்மில் ஊக்குவிப்பான். எபிரேயர் 13:5-ல், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே”.

அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையில் நெருக்கடியான, எதிர்மறையான சூழ்நிலைகள் ஏற்பட்டபோதும் அவன் வெற்றிகரமான வாழ்க்கையை உற்சாகமாக வாழக் கற்றுக்கொண்டிருந்தான். அதனால்தான் பவுலினால் இப்படிக் கூற முடிந்தது. “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி.4:11-13).

நித்தியத்துக்காகத் தேவன் நம்மை உருவாக்கிச் சீர்ப்படுத்தும்போது, முற்றிலும் எதிர்பாராத, பயங்கரமான நிகழ்ச்சிகள் நமது வாழ்வில் நடப்பதுண்டு. அவ்வேளையில் நமக்கு இவை ஏன் வருகின்றன என்று சிந்தித்துச் சோர்வடையும்போது, சாத்தான் தனது சோர்பு, சந்தேகம், பயம் என்னும் அக்கினி அஸ்திரங்களை நம்மீது சமயம் பார்த்து எய்வான்.

நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் பிரதி கூலமான காரியங்கள் ஏன் என்று நமக்கும் புரியாமல் இருந்தாலும், நாம் “ஏன்?” என்னும் கேள்வியைக் கேட்டுக் குழம்பிக்கொண்டு இராமல், விசுவாசம் என்னும் கேடகத்தை எடுத்துக் கொண்டு இயேசுவையும் அவருடைய வார்த்தையையும் பூரணமாய் நம்பிக்கொண்டிருக்க வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் இடுக்கண்கள் வரும்போது, நாம் ரோமர் 8:28-ம் வசனத்தை நினைவுகூரவேண்டும். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”. நம்முடைய வாழ்வில் தேவன் என்ன நிறைவேற்றப் போகிறார் என்று நிச்சயமாக நமக்குத் தெரியாவிட்டாலும் விசுவாசிகள் என்ற நிலையில் இந்த உண்மையை உறுதியாய் விசுவாசிக்கவேண்டும். தேவன்மீது நமக்குள்ள விசுவாசத்தில் நாம் இதை உறுதியாய் நம்பினாலும், எல்லாக் காரியங்களும் ஒன்றாகச் சேர்ந்து நமக்கு நன்மையாகவும் ஆண்டவருக்கு மகிமையாகவும் நடந்தேறும். அப்பொழுது துன்பச் சூழ்நிலைகள் குறித்து நம்மிடம் ஒரு வித்தியாசமான மனநிலை உண்டாகும். ரோமர் 8:31,32 வசனங்களைப் பாருங்கள். “இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?”. சோதனைகள் வரும்போது இவைபோன்ற வேதப்பகுதிகளை நாம் வாசிக்கவேண்டும்.

நமக்கு நேரிடும் எல்லாக்காரியங்களிலும் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு. நமக்கு ஏற்படும் துன்பச் சூழ்நிலைகள் மூலமாக தேவன் நம் வாழ்வில் தவறு செய்பவர் அல்ல என்னும் காரியங்களை நாம் உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.

துன்பங்களைக் குறித்து யாக்கோபு தெளிவாக எழுதியுள்ளார். “என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடியபொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்” (யாக்.5:10).

பாடுகள் குறித்துப் பவுல் கூறுவதைக் கேளுங்கள். “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” (ரோமர் 8:18).

நாம் ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சி அடையும்படி தேவன் பல துன்பங்களை அனுமதித்தாலும் நாம் அனுபவிக்கக்கூடிய அளவுக்கு மட்டுமே சோதனைகளை வரவிடுகிறார். “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரி.10:13). நம்முடைய சோதனைகள் நம்மால் தாங்கக்கூடாத அளவுக்கு அதிகமாக இருப்பதுபோல் தோன்றினாலும், நம்முடைய துன்ப நேரத்தில் நம்முடைய ஆண்டவர் பேரில் பூரணமான நம்பிக்கையை வைத்திருப்போமானால், தேவன் நம் துன்பங்களைத் தாங்கவும், தப்பித்துக்கொள்ளவும் கிருபையளிக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம். விசுவாசத்துடன் நாம் வாழ்கிறவர்களானால், நாமும் பக்தன் யோபுவோடுகூடச் சேர்ந்து இப்படிக் கூறுவோம். “அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10).

நம் வாழ்வில் துன்பச் சூழ்நிலைகள் வரும்போது, நாம் வாழ்க்கையில் தோல்வியடைந்து தடுமாறவேண்டும் என்பதற்காக தேவன் நம்மைச் சோதிப்பதில்லை என்பதை நாம் உணரவேண்டும். அழிக்க முடியாத சுதந்தரம் நமக்குப் பரலோகத்தில் உண்டு என்பதை நினைவிற்கொண்டு பேதுரு இவ்வாறு கூறுகிறார்: “இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்பட வேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சகாலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1 பேதுரு 1:6,7).

தேவனுடைய பரிசுத்தத்தில் நாம் பங்கு கொள்ளத்தக்கதாக நாம் துன்பப்படும்போது, அது நம்மை வாழ்வில் தோல்வியடையச் செய்வதற்காக அல்ல, ஆவியில் முதிர்ச்சியடைவதற்காக என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். வேதாகமம் கூறுகிறது: “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபி.12:11).

சாத்தான் நம்மீது தொடுக்கிற இன்னும் அநேக அம்புகள் உண்டு. அவை நம் மனநிலையை மாற்றவும், வெறுப்பை உண்டாக்கவும் கூடியவைகளாயிருக்கும். நம் செயல்களை மற்றவர்கள் குறைகூறிக் குற்றம் சுமத்திக் கண்டனம் செய்ய இடம் கொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்ட மனம் சோர்ந்த வேளையில் சாத்தான் தன்னுடைய அக்கினியாஸ்திரத்தை நம்மீது எய்துவிடுவான். இது சம்பந்தமாக யூதாவின் வார்த்தைகள் நாம் சிந்திக்கத் தக்கவையாக உள்ளன. “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள்” (யூதா 20,21). கொலோசெயர் 2:6,7 வசனங்கள் கூறுகின்றன. “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக”.

எனவே, நாம் விசுவாசம் என்னும் கேடகத்தை எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தையையும் பூரணமாக நம்பி, சாத்தானின் அக்கினியாஸ்திரங்களின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவோமாக!.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்