காலம் நிறைவேறினபோது…

– சுவி.சுசி பிரபாகரதாஸ்
(நவம்பர்-டிசம்பர் 2011)

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார் என்று பவுல் கலா.4:5இல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

அப்படியானால் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் எதற்காக இந்த உலகத்திற்கு வந்தார் என்பதற்கு இந்த வசனத்திலே நல்லதொரு விளக்கம் இருக்கிறது.

1.சரியான காலத்திலே ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வந்தார்.

“காலம் நிறைவேறின போது” – இதில் காலம் என்கிற வார்த்தையை விளக்குகிற கிரேக்க வார்த்தையின் பொருள் இவ்வாறு கூறப்படுகிறது: அதாவது, ஆண்டவர் ஒவ்வொரு நிகழ்ச்சியாய் தொடர்ந்து செய்து வருகிற போது கடைசியாகச் செய்கிற நிகழ்ச்சியை இந்த வார்த்தை குறிக்கிறது. நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் காலம் நிறைவேறினபோது இந்த உலகத்திலே வந்தார். முதலில் பங்கு பங்காக தீர்க்கதரிசிகளின் மூலமாக, பரிசுத்தவான்களின் மூலமாக அல்லது நியாயாதிபதிகளின் மூலமாக தேவன் தம்மை வெளிப்படுத்தினார். ஏற்றகாலம் வந்தபோது தன்னுடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினார்.

வேதத்தை வாசித்துப் பார்ப்போமென்றால் அவர் எல்லாவற்றையும் அந்தந்த காலத்திலே நேர்த்தியாய் செய்கிறவராக இருக்கிறார். பழைய ஏற்பாட்டிலே நாம் வசனத்தை வாசிப் போமென்றால், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிரசங்கி 3:11). குமாரனாகிய இயேசுவின் வாழ்விலும் அந்தந்த காரியங்கள் அந்தந்த காலத்திலே செய்யப்பட்டிருக்கிறது. அதே போல, என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் ஆண்டவர் நினைக்கிற காரியங்கள் அந்தந்த காலத்திலே கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பைப் பெறுவோம்.

பழைய ஏற்பாட்டில் மொர்தெகாயை உயர்த்துவதற்காக தேவன் ராஜாவுக்கு தூக்கம் வராமல் செய்து ஒரே இரவில் மொர்தெகாயை உயர்த்தி, எதிரியைத் தாழ விழப்பண்ணினதையும் பார்க்கிறோம். யோசேப்பை ஏற்றகாலத்திலே உயர்த்தும்படிக்கு அவனை முன்னதாகவே எகிப்துக்கு அனுப்பி, பின்பு முழு இஸ்ரவேல் ஜனங்களையும் கர்த்தர் காத்தார். ஆதியாகமம் 15:13 இல் “அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், … நீ நிச்சயமாய் அறியக்கடவாய்” என்று கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு சொல்லப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேதான் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்துக்கு சென்றார்கள். நானூற்று முப்பது ஆண்டுகள் அடிமைகளாய் கஷ்டப்பட்டார்கள். ஏற்றகாலம் வந்தபோது கர்த்தர் மோசேயை அனுப்பினார். எல்லாமே ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை எல்லாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. சங்கீதக்காரனாகிய தாவீது என் காலங்கள் உமது கரத்தில் இருக்கிறது (சங்.31:15) என்று சொல்லுகிறார் அல்லவா.

“காலம் நிறைவேறினபோது,…” ஆண்டவராகிய இயேசு கானாவூர் கலியாண வீட்டிற்குச் செல்கிறார். அங்கே திராட்சரசம் குறைவுபட்ட செய்தியை மரியாள் இயேசு விடம் சொல்லும்போது, அதற்கு அவர், என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அதே நேரத்தில் அவருடைய சகோதரர்கள் அவரிடம் வெளிப்படையாய் எருசலேமுக்கு சென்று உம்மை வெளிப்படுத்த வேண்டும் என்றார்கள். அப்பொழுது என் வேளை இன்னும் வரவில்லை என்று மரியாளிடம் கூறிய ஆண்டவர், தான் மரிக்கப்போகும் காலம் வந்தபோது, என் வேளை வந்தது என்றார். ஆண்டவர் தனது கால கிரமத்தின்படிதான் எல்லாவற்றையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

இயேசுவானவர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உலகத்திற்கு வந்தது சுயத்தின் அடிப்படையிலோ, தற்செயலாகவோ, அல்லது ஏனோதானோ என்பதான முறையிலோ அல்ல; அது முன்குறிக்கப்பட்டது, திட்டமிடப்பட்டது. காலம் நிறைவேறினபோது சரியான காலத்திலே இயேசு வந்தார். அவர் பிறந்த காலம் அரசியல் ரீதியாக சரியான காலம், கலாச்சார ரீதியாகவும் சரியான காலம், அதேசமயம் அவருடைய வார்த்தை தீவிரமாய் செல்வதற்குரிய ஒரு அமைப்பு ரீதியாகவும் சரியான காலமாயிருந்தது. ஆகவே காலம் நிறைவேறினபோது இயேசு வந்தார். கிறிஸ்துமஸின் செய்தி என்ன தெரியுமா? சரியான காலத்தில் ஆண்டவர் வந்தார்.

2. சரியான பரிசாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவர் இந்த உலகத்திலே வந்தார்.

இந்த உலகத்தில் இருக்கும் எல்லா வெகுமதியைக் காட்டிலும் சிறந்த வெகுமதி யார் தெரியுமா? நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் தான். தேவன் “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:32). உலகத்திற்கு தேவாதி தேவன் கொடுத்த பெரிய வெகுமதி தம்முடைய சொந்தக் குமாரனாகிய இயேசுவானவர். அவரையே நமக்குத் தரும்போது அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் தராமலிருப்பதெப்படி? அப்படியானால் நீங்கள் விரும்புகிறதெல்லாம் தருவார் என்று பொருளல்ல. நம் வாழ்க்கையிலே எது அவசியமோ அவைகளை அந்தந்த காலங்களிலே தந்து தேவைகளைச் சந்திக்கிற ஆண்டவராய் இருக்கிறார்.

கிராமப்புறங்களிலே பார்ப்பீர்களேயானால் மக்கள் தங்க நகைகளை வாங்குவார்கள். அந்த நகையை சாதாரண வைலட் கலர் பேப்பரில் வைத்துக் கொடுப்பார்கள். நகைக்கு மதிப்பு அதிகமா? வைலட் பேப்பருக்கு மதிப்பு அதிகமா? நகைக்குத்தான் மதிப்பு அதிகம். நகைகளை வைப்பதற்கு அலங்காரப் பெட்டிகளைக் கொடுப்பார்கள். எதற்கு மதிப்பு அதிகம்? இன்று கிறிஸ்தவ வட்டாரங்களிலே காணப்படுகிறது என்ன?

நகையை விட்டுவிட்டு நகைப்பெட்டியை சுமந்துகொண்டு போகிறார்கள். கிறிஸ்துவை விட்டுவிட்டு ஆசீர்வாதங்களைமட்டும் சுமந்துகொண்டு போகிறார்கள். சரியான பரிசு எது? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவானவர் மட்டும்தான்.

3. சரியான நோக்கத்திற்காக இயேசு இவ்வுலகில் பிறந்தார்.

நியாயப்பிரமாணத்தின் கீழேயும் பாவத்தி லேயும் அடிமைப்பட்டிருந்த மனிதனை விடுவிப்பதற்காகத்தான் இயேசு வந்தார். அற்புதங்களுக்கும், அடையாளங்களுக்கும் மாத்திரம் என்று எண்ணிவிடக் கூடாது. இவைகள் எல்லாம் சாதாரணமானவை. மக்கள் முக்கியமானதை சாதாரணமாக்கிவிட்டார்கள். சாதாரணமானவைகளை முக்கியமாக்கிவிட்டார்கள். உலகத்திலிருக்கும் எத்தனையோ அற்புதங்களிலே சிறந்த அற்புதம் எதுவென்றால், ஒரு மனிதன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து, ஆண்டவருடைய பிள்ளையாக மாறுவதுதான்!

காலம் நிறைவேறினபோது இயேசு,
சரியான காலத்திலே வந்தார்,
சரியான வெகுமதியாய் வந்தார்,
சரியான நோக்கத்திற்காக வந்தார்.

அருமையானவர்களே, இதுவே கிறிஸ்துமஸின் செய்தி!

உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !!

சத்தியவசனம்