பெத்லகேமைத் தெரிந்துகொண்டது ஏன்?

– எஸ்.பாபிங்டன்
(நவம்பர்-டிசம்பர் 2011)

உலக வரைப்படத்தில், பெத்லகேம் ஒரு சிறிய ஊசி முனையளவாகக் கூட காண்பதற்கு முடியாத அளவிலான சிறிய ஊர். ஆனால், யூதேயா நாட்டின் மலைச்சரிவுகளில் மேய்ப்பர்கள் வசித்துவந்த இக்குக்கிராமங்களில் பெத்லகேம் என்ற பேர்கொண்ட, ஒரு சிறு ஓடையின் வளைவில் இருந்த பெத்லகேமைக் குறித்துதான் மீகா தீர்க்கன் …பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது (மீகா 5:2) என்று உரைத்தார்.

எருசலேம் போன்று மேம்பாடு நிறைந்த பட்டணங்கள் இருந்தபோதும், நம் ஆண்டவர் மனித வரலாற்றின் பாதையில் இந்தச் சிறிய கிராமத்திலிருந்து பிரவேசித்தார் என்பது விந்தைதான்! சர்வஞானம் படைத்த தேவனுடைய எண்ணங்கள் நம் அறிவிற்கு எட்டாதவைகள்தான்!

ஆனாலும், ஏகச்சக்கராதிபதியான ஆண்டவர் தன்னுடைய கெம்பீரத்தை வெளிப்படுத்தவும், அன்பின் பெருக்கை ஊற்றவும் பெத்லகேமைத் தன் குமாரனுடைய பிறப்பிடமாக ஏன் தெரிந்தெடுத்தார் என்று, வேதாகமத்தின் அடிப்படையில் சற்று சிந்திப்போம்.

முதல் காரணம், தேவதூதன் மேய்ப்பர்களுக்கு அறிவித்த நற்செய்தியில் காண்கிறோம். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் (லூக்கா 2:11). தாவீது பிறந்த ஊரும் பெத்லகேம்தான். தாவீது அருகிலிருந்த மலைச்சரிவுகளில் தன் ஆடுகளை மேய்த்து போஷித்தான். அங்கே தன்னுடைய சுரமண்டலத்தை எடுத்து வாசிப்பதும் தன்னுடைய இருதயத்தையே சங்கீதங்களின் மூலமாய் ஆண்டவரிடம் ஊற்றுவதும் உண்டு.

தாவீது பிறந்த ஊர் பெத்லகேம் போல், இயேசுகிறிஸ்துவின் பிறந்த ஊரும் பெத்லகேம் என்று கவனித்தோம். தாவீது ஒரு சாதாரண மேய்ப்பன், இயேசுவானவரோ மகாப்பெரிய நல்ல மேய்ப்பர்; இவர்கள் இருவரும் மேய்ப்பர்களின் பணியை மக்கள் மறவாதபடி சிறப்பித்தார்கள். இயேசு, நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான் 10:11) என்றார். அதேபிரகாரம் தன் ஜீவனைக் கொடுத்தார். அவர் நல்ல மேய்ப்பராய் இருப்பது, தேவதூதன் கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தபோது பரம சேனையின் திரள் கூட்டத்துடன், மந்தையைக் காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களும் இருந்தார்கள் என்பதற்கு அர்த்தம் அளிக்கிறது.

தாவீதும் அவனைப் பின்பற்றினவர்களால் நேசிக்கப்பட்டான்; மற்றவர்களால் வெறுக்கப்பட்டான். இயேசுவானவரும் அவரைப் பின்பற்றுபவர்களால் நேசிக்கப்படுகிறார். மற்ற உலகத்தாரோ அவரை வெறுக்கிறார்கள். தாவீதும் அவனுக்கு நெருங்கிய ஒருவனுடைய நம்பிக்கைத் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டான். இயேசுவானவரும் அவருடைய நெருங்கின பன்னிருவரில் ஒருவனுடைய நம்பிக்கைத் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டார். தாவீது யூதர்களுக்கு ராஜாவாக்கப்பட்டான். இயேசுவானவரோ, அவர் தாமே யூதர்களின் இராஜா.

தாவீதுக்கும் இயேசுவானவருக்கும் வித்தியாசங்களும் இருப்பதைக் காண்கிறோம். தாவீது அவனுடைய மனுஷீகப் பெற்றோருக்கு எட்டாவதாகப் பிறந்தான். இயேசுவானவரோ தேவனுடைய ஏகசுதன். தாவீது சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்தான். இயேசுவானவரோ, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது என்று தீர்க்கன் கூறினான் (ஏசாயா 53:2). தாவீது மாமிச இச்சை நிறைந்தவனாய் கொடிய பாவம் செய்தான். இயேசுவானவரோ …எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிறார் (எபி.4:15). தாவீது மகுடாபிஷேகம் செய்யப்படுவதற்காக எருசலேமுக்கு வந்தான். இயேசுவானவரோ, சிலுவையில் அறையப்படுவதற்காக எருசலேமுக்கு வந்தார். ஆனபொழுதிலும் தாவீது தேவனுடைய இருதயத்தை வாஞ்சித்தான். அதற்கு ஏற்றாற்போல இயேசுவானவரும் மனிதருடைய இருதயத்தை வாஞ்சிக்கும் தேவன்!

பெத்தலையில் பிறந்தவருடைய சந்ததி அநேக திருப்பங்களும் வளைவுகளும் நிறைந்திருந்தபோதிலும், தாவீதின் வழியாகவேச் செல்ல வேண்டியதிருக்கிறது. அவனுடைய சிங்காசனமும் அவனுடைய பரம்பரையுமே, யூதருடைய ராஜாவாகப் பிறந்தவரிடமும் கொண்டுசேர்க்கிறது. இருவரும் ஒரே ஊரில் பிறந்ததில் அர்த்தம் இருக்கிறது.

இரண்டாவது காரணம், பெத்லகேம் இன்னொரு பூர்வீக சம்பவம் சம்பவித்த களமாக இருந்தது. உங்களுக்கு, எரிகோவின் மதிலில் வசித்து இஸ்ரவேலின் வேவுகாரரைத் தப்புவித்த ராகாப்பைப் பற்றித் தெரியுமல்லவா? எரிகோ பட்டணம் அழிக்கப்பட்ட போது அவளும் அவள் குடும்பத்தாரும் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். ஏன்? ஆன்மீக இருள் நிறைந்த எரிகோ பட்டணத்தின் மக்கள், ஆண்டவராகிய தேவனைவிட்டு விலகி, அவரை வெறுத்ததுமல்லாமல் விக்கிரக ஆராதனை செய்வதும், பாகாலுக்கு நரபலி செலுத்துவதிலும், கோவிலில் வேசித்தனம் அனுசரிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள். அந்த சமுதாயத்திலும் அதன் சடங்காச்சாரங்களிலும் வாழ்ந்த ராகாப்பிற்கு, மற்ற எரிகோ பட்டணத்தாருக்குக் கிடைக்காத வெளிச்சம் கிடைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனாவார் என்று நம்பினாள் (யோசுவா 2:1). இஸ்ரவேல் மக்களுடைய ஆண்டவரைத் தன் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்து, தன்னையும் தன் குடும்பத்தினரையும் சாவுக்குத் தப்புவிக்க வேண்டிக்கொண்டு, வேவுகாரரைக் காப்பாற்றினாள். அவளுக்கு அதிகம் விளங்காவிட்டாலும், விசுவாசத்தின் இந்தச் சிறிய அடியை அவள் எடுத்து வைத்ததால் அவளது கறைபட்ட வாழ்க்கையை தேவன் மாற்றி, அவளை சுத்திகரித்து விசுவாச வீரர்களின் பட்டியலில் இருக்கும் இரண்டே பெண்களில், சாராளிற்குப் பின் இரண்டாவதாக சேர்க்கப்பட்டாள்.

வேதாகமத்தில் தெளிவாய்க் கூறப்படாவிட்டாலும், சில ஆதாரங்களைக் கோர்த்து ராகாப், சல்மோன் என்ற யூதனை மணம்புரிந்து பெத்லகேம் ஊரிற்கு அருகில் குடியேறினாள் என்று வேத நிபுணர்கள் நிர்ணயித்துள்ளார்கள். இந்தத் தம்பதிகளுக்குப் பிறந்தவன்தான் போவாஸ் என்றும் அறிகிறோம். போவாசிற்கும் ரூத்திற்கும் உருவான காதல், இனிமையானதும் பரிசுத்தமானதுமாக பெத்லகேமிற்கு வெளியே இருந்த வயல்களில் பிறந்தது என்று வேதாகமத்திலிருந்து அறிகிறோம். இது தேவனாலேயே நிறைவேறியது. இவர்களின் திருமண ஐக்கியம், கர்த்தருக்கு மனிதர்மேல் கொண்டுள்ள அன்பைச் சித்தரிக்கிறது. கர்த்தர் அவரைத் தஞ்சமாகக் கொண்டவர்களை எப்படி நேசிக்கிறார், மூடி மறைத்துக் கொள்கிறார், பாதுகாக்கிறார் என்பதற்கு ரூத்தின் சரித்திரம் நல்ல உதாரணமாக இருக்கிறது. போவாஸ் ரூத்தை நோக்கி, …கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான் (ரூத் 2:12). அந்தப் பலன்கள் என்ன? முக்கிய பலன் தேவன் அவளுக்குப் புத்திர பாக்கியமளித்ததால் அவள் ஓபேத் என்ற புத்திரனைப் பெற்றெடுத்தாள். இந்த ஓபேத்தின் மகன்தான் தாவீதின் தகப்பனான ஈசாய். இவ்விதமாக ராகாப் தாவீது அரசனுடைய பெரிய பாட்டியாவதற்கு வாய்ப்பு கிடைத்தது. முடிவில் பெத்லகேம் இந்த சம்பவத்திற்கு வளமாக அமைந்தது என்று பார்க்கிறோம்.

மூன்றாவது காரணம், பெத்லகேம் என்பதற்கு அப்பத்தின் வீடு என்று அர்த்தம். யூதா என்றால், துதி என்று அர்த்தம். ஆகவே யூதேயாவிலிருந்த பெத்லகேம் ஊரின் முக்கியத்துவம், அது துதியின் நாட்டினில் இருக்கும் அப்பத்தின் வீடு என்று விளங்குகிறது. இவ்வித அர்த்தம் அளிக்கும் ஊர் ஆவிக்குரிய சிந்தனைகளை ஆழமாய் எழுப்புகிறது. ஜீவ அப்பமாக உலகத்திற்கு வந்தவர், மனிதர் உயிருள்ளவர்களாய் இருப்பதற்கு ஆதாரமானவர். கடைசி காலத்திலே யூதா கோத்திரத்தின் சிங்கமாக வரவிருக்கிறவர். தன்னுடைய நித்தியமான பலியால் அவரால் இரட்சிக்கப்பட்டவர்களின் இருதயங்களிலிருந்து துதி, வணக்கம், தொழுகை, ஆராதனை எல்லாம் வழிந்து ஓடச்செய்தார்.

இஸ்ரவேல் விமானக் கம்பெனியின் ஒவ்வொரு விமானத்தின் வால் பாகத்திலும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு அடையாளமான தாவீதின் நட்சத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தாவீது ராஜா அந்த நட்சத்திர சின்னத்தை தன் கேடகத்தில் அல்லது போர்க்கவசத்தில் பொறித்திருக்கக் கூடும். அல்லது, அவருடைய மோதிரத்தின் முத்திரை அடையாளமாய் இருந்திருக்கக் கூடும். ஆனால் கிறிஸ்துவின் பிறப்போடு காணப்பட்ட அபூர்வ காரியங்களில் நட்சத்திரம் ஒன்றிருந்ததல்லவா! இந்தக் காலத்திலே மக்கள் மற்றொருவிதமான நட்சத்திரங்களால் சேதப்படக் கூடியவர்களாயிருக்கிறார்கள். பலவிதமான நட்சத்திரங்களைப் பத்திரிக்கைகளும் விளம்பரங்களும் உயர்த்திப் பெருமைப்படுத்தினதால் அவர்களுடைய அபிமானிகள் (Fans of Cinema Stars) அவர்கள்பின் அலைவதும் அவர்கள் படங்களை வைத்து வணங்குவதையும் பார்க்கிறோம். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஒரு நட்சத்திரம் உண்டு. அவர் பேர் இயேசு! நாம் அவரைப் பின்பற்றுகிறோம்!! அவரை வாழ்த்தி உயர்த்துகிறோம்!!!

ஒருநாள் அவருடைய நாமத்திற்கு எல்லா சிங்காசனங்களும், துரைத்தனங்களும், அதிகாரங்களும் தாழ்த்தப்படும். அவருடைய தகப்பன் தாவீதின் சிங்காசனத்திலிருந்து ஆட்சி செய்வார். அவருடைய கர்த்தத்துவத்திற்கும் ராஜ்ஜியத்திற்கும் முடிவில்லை. அவருடைய வெளிச்சத்தை எதுவும் அணைக்க முடியவில்லை. சேனைகளின் தேவனாகிய கர்த்தர் தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படி, எந்நாளும் ஒரு விளக்கை அணையாமல் காத்துக்கொள்வார்.

ஆம், இவையெல்லாம் துதியின் நாட்டிலிருந்த அப்பத்தின் வீட்டிலிருந்து ஆரம்பித்தது. இன்றைக்கும் ஒலிவமரத் தோப்புகளும் திராட்சைத் தோட்டங்களும் சுற்றியிருக்கும் சில கல்வீடுகளும் நிறைந்த ஊர்தான் பெத்லகேம். அங்கு அந்நாட்களில் ஒரு குகைதான் மாட்டுக் கொட்டகையாக உபயோகப்படுத்தப்பட்டிருந்திருக்கிறது. இன்று, அருமை ஆண்டவர் பிறந்த மண்ணால் கட்டப்பட்ட தொழுவம், இப்போது வெள்ளியால் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும், ஒரு மாட்டுத் தொழுவத்திலும் காணக்கூடாத வெள்ளி, பொன், பட்டு, ஆபரணங்கள் போன்ற வியாபாரப் பொருட்கள் காணப்படுகின்றன. மலைச்சரிவுகளில் குடையப்பட்டிருந்த குகைக்குள் மங்கலான வெளிச்சத்தில் படிகளில் இறங்கிப்போனால், அருமைநாதர் இயேசு பிறந்தவிடத்தை ஒரு வெள்ளி நட்சத்திரம் குறிப்பிடுகிறது. அதில் – “Hic de virgine Maria Jesus Christus natus est” இங்குதான் கன்னிகை மரியாளுக்கு இயேசு கிறிஸ்து பிறந்தார் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அவரை விசுவாசியாத சுற்றுலா பிரயாணிகள், கூட்டத்தோடு கூட்டமாய் வேடிக்கை பார்த்துவிட்டு சிந்தனையில் மாறுதலே இல்லாமல் வெளியே சூரிய வெளிச்சத்திற்குள் வரக்கூடும். ஆனால் இதே இடத்தில்தான் (Hic) என்று நம்பாவிட்டாலும், (Christus natus est) இயேசுகிறிஸ்து பிறந்தார் என்பதை விசுவாசிக்கிற ஒருவன் உள்ளே போன மனதுடன் திரும்பி வரமுடியாது.

ஆம், பிறப்பின் சம்பவம் அங்கேதான் நடந்தது, பெத்லகேமில் நடந்தது! தேவன் மனிதனாகி மனிதருடன் சஞ்சரித்தார்…. நாம் அவருடைய மாட்சிமையைக் கண்டோம். அவருடைய அன்பினால்தான் நம் வாழ்வில் கிருபையிருக்கிறது!

(மறுபதிப்பு)
சத்தியவசனம்