ஞானிகள் தேடுகின்ற இயேசு

Dr.உட்ரோ குரோல்

(நவம்பர்-டிசம்பர் 2011)

சத்தியவசன வாசகர்களுக்கு எனது அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். பாரில் நம்மைத் தேடிவந்த பாலகன் இயேசுவின் பிறப்பை முன்னிட்டு கீத ஆராதனைகள், கீத பவனிகள், பரிசுகள் பரிமாற்றம், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்த மகிழ்ச்சியின் காலத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம், இயேசுவைத் தேடிவந்த ஞானிகளைப் பற்றி தியானிப்போம். கிறிஸ்துமஸ் காலங்களில் மட்டுமே இந்த சாஸ்திரிகளைப் பற்றி நாம் நினைவுபடுத்திக் கொள்ளுகிறோம். முற்காலத்தில் எகிப்து, பாபிலோன் மற்றும் இஸ்ரவேல் நாடுகளில் ஞானிகள் இருந்தனர் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். அநேக மக்களுக்குப் புரியாத காரியங்களையும் எளிதில் விளங்கிக்கொள்ளும் கல்விமான்களே இந்த ஞானிகள். இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? எத்தனை பேர் வந்தனர்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோமாயின், பாரம்பரியங்கள் நமக்கு அநேக குறிப்புகளைத் தருகிறது. ஆனால் வேதபுத்தகமோ, இவர்கள் கிழக்கிலிருந்து வந்தவர்கள் என்று மட்டுமே கூறுகிறது.

வரலாற்று ஆசிரியரான எரோதித்து என்பவர் இவர்களை மேதிய மற்றும் பெர்சிய நாட்டு ஆசாரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார். புளுட்டார்க், ஸ்டாராபோ போன்ற வரலாற்று ஆசிரியர்கள், இந்த ஞானிகள் மிகச் சிறந்த கல்விமான்கள், கிரகங்கள், விண்மீன்கள் போன்ற வானியல் ஆராய்ச்சியில் அதிக நாட்டம் உடையவர்கள் என்று கூறுகின்றனர்.

பாலகன் இயேசுவைப் பணிந்துகொள்ள வந்த இந்த சாஸ்திரிகளைப் பற்றி நாம் மத்தேயு 2ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான் (மத்.2:1-4)

ஏரோது ராஜா ஒரு கல்விமானோ அல்லது வேதவல்லுநரோ அல்ல. எனவே அவர் பிரதான ஆசாரியர், வேதபாரகர்களைத் தன்னிடமாக அழைத்து, மேசியா எங்கு பிறப்பார்? உங்களுடைய பாரம்பரியம் கூறுவது என்ன? என்று வினவினார். அவர்களும் சற்றும் தயங்காமல், அவர் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் என்று பதிலளித்தனர். யூதேயா என்று அவர்கள் கூறக்காரணம், கலிலேயா மாகாணத்தில் மற்றுமொரு பெத்லகேம் என்ற பெயருடைய ஊர் இருந்தது. எனவேதான் தெளிவான இருப்பிடமாக யூதேயாவிலுள்ள இடம் என்று கூறினர். மீகா தீர்க்கதரிசி எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே (மீகா.5:2) என்று திட்டவட்டமாய் முன் உரைத்திருந்தார்.

அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக் குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போக வேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள் (மத்.2:7-12).

கிறிஸ்துமஸ் காலத்தில் வேதாகமத்தைப் படிப்பது நல்லதுதான். ஆனால் பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை ஆராயாமல் போவது அபாயமானதாகும். வேதபகுதியை நாம் கூர்ந்து வாசிப்போமானால் சாஸ்திரிகள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் எருசலேம் வரை அவர்களை வழிநடத்தி வந்ததாக எழுதப்படவில்லை என்பதை நாம் கண்டுகொள்ளலாம். ஏரோது அரசனின் மாளிகைக்கு அவர்கள் சென்று குழந்தையைப் பற்றி விசாரித்துவிட்டு வந்த பின்னரே மீண்டும் அந்த நட்சத்திரத்தைக் கண்டு ஆனந்தமடைந்தனர் என்றும் நாம் அறிந்துகொள்கிறோம். மேலும் அவர்கள் பிள்ளையையும் அதன் தாயையும் கண்ட இடம் முன்னணை அல்ல. வீடு என்று வாசிக்கிறோம். எனவே குழந்தை இப்பொழுது சிறிது வளர்ந்திருக்க வேண்டும். சாஸ்திரிகள் பாலகனைக் கண்டு சாஷ்டாங்கமாய்ப் பணிந்து வணங்கினர். ஆம், இயேசுகிறிஸ்து மாத்திரமே நமது பாவங்களிலிருந்து நம்மை மீட்டு இரட்சிக்க முடியும். அதிக தூரம் பிரயாணம் பண்ணி ஒரு பாலகனைத் தேடி இந்த ஞானிகள் வந்தனர் என்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறதல்லவா? இயேசு பாலகனைத் தேடிவந்த ஞானிகள் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் சிறந்த கல்விமான்கள், அறிவாளிகள்.

வேதத்தை நீங்கள் விசுவாசித்தீர்களானால் ஒருசில வரைமுறைகளுக்கு உட்பட வேண்டும் என்று நமக்குக் கூறப்படுகிறது. கிறிஸ்தவனாவதற்கு அறிவுடைமை ஒரு தடையல்ல. ஓர் அறிஞர் வேதத்தை நம்ப முடியுமா? முடியும் என்பதற்குச் சான்றாக அநேக அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் நாம் உதாரணமாகக் காணலாம்.

பவுல் கொரிந்தியருக்கு எழுதும் பொழுது, எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவான வைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1கொரி.1:26-29).

இயேசுகிறிஸ்துவின் அன்பும் மனதுருக்கமும் மக்களை அவரண்டைக்கு இழுக்கிறது. அநேக மக்கள் அனுதினமும் அவர் மந்தையில் இணைந்து வருகின்றனர். சாதாரண மக்கள் முதல் மாபெரும் தலைவர்களும் அவரை நாடி ஓடி வருகின்றனர். கிறிஸ்துவை நேசிப்பதற்கும், அவரைப் பின்பற்றுவதற்கும் பதவி ஒரு தடையல்ல. இங்கிலாந்து அரசியான விக்டோரியாவும் தான் விண்ணரசில் பங்குபெறும் உறுதி தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார். பல அறிஞர்கள் இயேசுகிறிஸ்துவைத் தேடி வந்தனர். தங்களது வாழ்வை அவருக்கு அர்ப்பணித்து அவருடைய சீடராக வாழ்ந்திருக்கின்றனர்; இன்றும் பலர் அவரது அடிச் சுவட்டில் நடந்து வருகின்றனர். அவர்களது வாழ்வும் கருத்துக்களும் நமக்கு அதிக உதவியாயிருக்கிறது.

இங்கிலாந்து தேசத்திலுள்ள லிங்கன்ஷயர் என்ற இடத்தில் ஐசக் என்பவர் 1642ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் விவசாயத் தொழில் செய்து வந்தனர். ஆனால் ஒரு தலைசிறந்த கண்டுபிடிப்பாளராவதற்கோ, வேத பண்டிதராவதற்கோ, அறிவியல் அறிஞராவதற்கோ இவருடைய ஏழ்மை தடையாயிருக்கவில்லை.

ஐசக் நியூட்டன் இயேசுகிறிஸ்துவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு சத்திய வேதாகமத்தை நம்பும் ஒரு மறுபிறப்படைந்த கிறிஸ்தவராவார். தொலைநோக்கியின் உதவியால் பல மில்லியன்களுக்கு அப்பாலுள்ள வானமண்டலத்தை நாம் காணமுடியும் என்று அவர் கூறினார். மற்றவர்கள் அவரை ஒரு பைத்தியக்காரன் என எண்ணினர். ஆனால் அவரோ அண்ட சராசரங்களைப் படைத்த சர்வ சிருஷ்டிகரை விசுவாசித்தார். நான் என்னுடைய அறைக்குள் சென்று முழங்காலில் நின்று ஜெபிக்கும் பொழுது, தொலைநோக்கி வழியாகக் காணமுடியாத வான மண்டலங்களையும், ஆண்டவரின் அருகாமையையும் உணருகிறேன் என்று கூறினார்.

தென் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வாழ்ந்த காலத்தில் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்பவர் வாழ்ந்தார். பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். ஒவ்வொரு ஆண்டும் ஒரே பயிரை சாகுபடி செய்வதற்குப் பதிலாக மாற்றுப் பயிரை வளர்ப்பது நல்லது என்ற எண்ணத்தை தனது பத்தாவது வயதில் வெளியிட்டார். அதன் விளைவாக இன்றும் தென் அமெரிக்காவில் அதிக அளவு வேர்க்கடலை பயிரிடப்படுகிறது. கார்வர் பிற்காலத்தில் மிகச் சிறந்த ஓர் அறிஞராகக் கருதப்பட்டார். இவர் ஒரு கிறிஸ்தவர். கல்விமான்கள் கிறிஸ்துவண்டை வருவது அரிதல்ல.

கிறிஸ்துவைத் தமது இரட்சகராக ஏற்றுக்கொண்ட மற்றொரு ஞானியைப் பற்றி நாம் காண்போம். திரு.C.S.லூயிஸ் என்பவர் 1898ஆம் ஆண்டு பிறந்தார். ஆங்கிலிக்கன் சபை முறைப்படி வளர்க்கப்பட்டார். ஆனாலும் இவர் தேவனை வெறுத்த ஒரு நாத்திகவாதியாகவே இருந்தார். ஆனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் தேவன் இவரில் கிரியை செய்ய ஆரம்பித்தார். நாத்திகராக இருந்த இவர், தேவன் இருக்கிறார் என்பது உண்மையாயிருக்கலாம்; ஆனால் அவரை நான் நம்ப வேண்டியதில்லை என்று வாதிட்டார். பல்கலைக்கழகத்தில் மாணவராக ஓர் அமைதியான வாழ்க்கை நடத்த விரும்பிய அவரை தேவன் தெரிந்துகொண்டார். 1929 ஆம் ஆண்டு ஒருநாள் இறைவன் ஒருவர் உண்டு என்று நான் நம்பினேன். அன்று இரவே முழங்காற்படியிட்டு ஜெபித்தேன். இங்கிலாந்து தேசத்திலேயே மிகவும் விசனமான, விருப்பமற்ற மனதுடைய நான் மனமாறினேன். இழுக்கப்பட்டு, உதைபட்டு அலறியவனாய் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குள் பிரவேசித்தேன் என்று அவர் எழுதியுள்ளார்.

இயேசுவின் பிறப்பு அநேக ஞானிகளின் வாழ்வை மாற்றமடையச் செய்துள்ளது. இரட்சகர் இல்லையெனில் ஐசக் நியூட்டன், ஜார்ஜ் வாஷிங்டன், கார்வர், C.S.லூயிஸ் ஆகியோரது வாழ்க்கை அர்த்தமற்றதாயிருந்திருக்கும். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சிறந்த கல்விமான்கள், அறிவாளிகள், ஞானிகள் இயேசுவைத் தேடுகின்றனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த இயேசுவின் பிறப்பு இன்றும் அநேகரை மாற்றமடையச் செய்கின்றது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள ஆன் அர்போர் என்னும் இடத்தில் ஆல்வின் பிளான்டின்கா என்பவர் பிறந்தார். இவர் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலை சிறந்த தத்துவ ஞானியாவார். இவர் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவராயினும் விசுவாசியல்ல. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்றபொழுது அவருடைய வாழ்க்கை முற்றிலுமாய் மாறியது. என்னுடைய சந்தேகங்களையும் குழப்பங்களையும் நீக்கும்படி இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறைவன் இருக்கிறாரா? இயேசுகிறிஸ்து மெய்யான தெய்வமா? போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் கிடைத்தன.

ஜனவரி மாதத்தில் ஒரு நாள் இரவு உணவுக்குப் பின்னர் ஒயிட்னார் நூலகத்தைக் கடந்து, தாயேர் என்ற கட்டிடத்தில் உள்ள ஐந்தாவது மாடியில் உள்ள எனது அறைக்குச் சென்றுகொண்டிருந்தேன். விடாது மழையுடன் பலத்த காற்றும் வீசிக்கொண்டிருந்தது. எங்கும் இருள்; ஆனால் திடீரென்று வானம் திறந்தது போல, கெம்பீரமான இசையொலி இனிமையாகக் கேட்டது; வர்ணிக்கமுடியாத அழகிய ஒளி வீசியது. வானலோகம் தெரிவது போல இருந்தது. தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அதிக நிச்சயத்துடன் ஏற்றுக் கொள்ளத் தூண்டப்பட்டேன் என்று அவர் தனது அனுபவத்தை விளக்குகிறார். பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் கிரியை செய்து கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார்.

அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கிராண்ட் ராபிட்ஸ் என்ற இடத்திலுள்ள தன்னுடைய இல்லத்துக்குச் சென்றார். அப்பொழுது அங்குள்ள கால்வின் கல்லூரிக்குச் செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு கிறிஸ்தவ தத்துவ ஞானியைச் சந்தித்தார். அவரது கருத்துக்கள் ஆல்வினை ஈர்த்தது. அவரிடம் மாணவனாக இருந்து பயில விரும்பினார். எனவே ஹார்வர்ட் பல்கலையிலிருந்து கால்வின் கல்லூரிக்குச் சென்றார். அங்கு பட்டம் பெற்ற பின்னர் மிச்சிகன் பல்கலைக்கழகம் சென்றார். ஏல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்று வேயின் மாவட்டத்தில் பேராசிரியராக இணைந்தார். இருபது ஆண்டுகள் அங்கு கற்றுக்கொடுத்த பின்னர் நோட்ரிடேம் பல்கலைக்கழகம் சென்றார்.

ஆல்வின் பிளான்டின்கா ஒரு கத்தோலிக்கர் அல்ல. சத்திய வார்த்தையான வேத புத்தகத்துக்கு மாத்திரமே தன்னை அர்ப்பணித்தவர். இவர் டார்வினின் பரிணாமக் கொள்கையில் பல முரண்பாடுகள் உள்ளன என ஆணித்தரமாக வாதிட்டார். அதனை வேதவசனங்கள் மூலம் நிரூபிக்காமல் தன்னுடைய அறிவுத் திறனால் கூறினார். டார்வின் கூறியவைகளை நம்புவது அதிக மூடத்தனம் என்று தெளிவாக விளக்கினார். 1881ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி டார்வின் தனது நண்பர் ஒருவருக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் தனது உள்ளத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். மனுக்குலத்திற்கு கீழான ஒரு மிருகத்திலிருந்து வந்த மனிதனின் விசுவாசத்தைப் பற்றி எனக்கு அதிகமான சந்தேகங்கள் எழும்புகின்றன. குரங்கு விசுவாசிப்பதை யாராவது நம்ப முடியுமா? இந்த வரிகளைக் குறிப்பிடுவதில் ஆல்வினுக்கு அலாதி பிரியம். உலகம் புகழும் அமெரிக்க தத்துவ ஞானியான ஆல்வின் இயேசுகிறிஸ்துவைத் தேடி அவரைக் கண்டடைந்து தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.

ஐயோவா இடத்துக்கு அருகிலுள்ள கியோக்குக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் வில்லியம் லேன் கிரேக். 1977ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள பிர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1984 ஆம் ஆண்டு மூனிச் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1987 முதல் 1994 முடிய பெல்ஜியத்தில் உள்ள லூவெயின் பல்கலைக் கழகத்தில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

தனது 16ஆம் வயதிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்து கொண்டார். அதற்காக அவர் தன்னுடைய அறிவினால் ஆராய்ச்சி செய்யவில்லை. அறிவுக்கும் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கும் எந்த ஒரு தடையும் இல்லை. வில்லியம் லேன் கிரேக் கல்லூரியில் செலவிட்ட காலத்தில் சிறந்த வாதாடுபவராகத் திகழ்ந்தார்.

ஒரு சமயம் வட கரோலினா பல்கலைக்கழகத்திலிருந்து புதிய ஏற்பாட்டு வல்லுநரான பார்ட்டி எர்மன் என்பவரோடு இயேசு கிறிஸ்துவின் வரலாற்று பின்னணியைப்பற்றி வாதிட்டனர். இயேசுகிறிஸ்து உண்மையில் வாழ்ந்தவர் என்று கிரேக் வாதிட்டார். எனவே எர்மன் எதிர் கட்சியில் பேசவேண்டியதாயிற்று. இந் நிகழ்ச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடந்தது. வாதம் முடிந்தபின்னர் இருவரது வெளியீட்டாளர்களும் அவர்களை அணுகி இந்த வாதத்தை அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக வெளியிட விரும்பினர். ஆனால் எர்மன் அதனை மறுத்துவிட்டார். இருவருமே அறிவாளிகள். ஒருவர் தனது அறிவைப் பயன்படுத்தி தனக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் பிளவை உருவாக்கிக் காட்டினார். அடுத்தவரோ தனது அறிவுத்திறமையுடன் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்தார்.

நாம் எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி (ரோ.3:23) என்று வேதம் கூறுகிறது. எனவே நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுக்கு ஓர் இரட்சகர் தேவை. இந்த உலகத்தின் ஒரே இரட்சகர் இயேசுகிறிஸ்துவே.

நீங்கள் அதிகம் படித்த அறிவாளியாயிருக்கலாம்; உயர் பதவி வகிக்கலாம்; ஆஸ்திகள் நிறைந்த செல்வந்தராய் இருக்கலாம்; ஆனால் உங்களது பட்டம், பதவி, செல்வம், புகழ் இவை யாவும் இவ்வுலகத்துடன் அழிந்துபோய்விடும். ஆனால் இயேசுகிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்கள் எனில் இவ்வுலகில் புது ஜீவனையும் மறுமையில் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வீர்கள்.

இன்றே இயேசுபாலகன் பாதத்தில் தாழ விழுந்து அவரைப் பணிந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்