இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு…

சகோதரி சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2011)

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே
அந்த மெய்யான ஒளி (யோவான் 1:9)

எங்கள் கிராமத்திலே மின்சார வசதி இருந்ததில்லை. விளக்கு வெளிச்சத்தில்தான் நாங்கள் வளர்ந்தோம், வாழ்ந்தோம். அது எங்களுக்குப் பழக்கமாகிவிட்டிருந்தது. என் எட்டாவது வயதிலே கிராமத்திற்கு வெளியே பெரிய பள்ளியில் படிப்பதற்காக பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்டேன். விடுதியில் சேர்ந்த முதல் நாள் மாலை மங்கியது. நான் விளக்கைத் தேடினேன். ஒரு அக்கா வந்து, சுவரிலே இருந்த ஒன்றைத் தட்டினார்கள். ஆ! என்ன வெளிச்சம்! வாயைப் பிளந்தேன் நான். இப்படியும் ஒரு வெளிச்சமா! இப்போதுதான் ஏதோவொன்று விளங்கியது. இதுவரைக்கும், இரவின் முழு இருளிலும், வீடுகளில் எரிந்த மங்கிய வெளிச்சத்திலும்தான் இரவுகளைக் கழித்தேனா என்று ஆச்சரியப் பட்டதையும், வெளிச்சத்தின் மகிமையை அன்று என் பிஞ்சு மனதில் அனுபவித்ததையும் நான் இன்றும் மறப்பதேயில்லை. இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு வரும்போது அப்படியொரு மகிழ்ச்சி!

எரிகோவிலே, பர்திமேயு என்ற ஒருவன் பார்வையற்றவனாக பிச்சைக்காரனாக வாழ்ந்தான். அவன் வாழ்வு முழுவதுமே இருட்டாயிருந்தது. அவனுக்கு இயேசுகிறிஸ்து பார்வை கொடுத்த சம்பவத்தை, அதாவது அவனுடைய வாழ்வு ஒளியடைந்த சம்பவத்தை மாற்கு 10:46-52வரையிலும் வாசிக்கிறோம். இதுவரையிலும் உலகத்தைப் பார்க்காத அவன் பார்வை பெற்றபோது எப்படிக் குதூகலித்திருப்பான் என்பதை நாம் கொஞ்சமாவது கற்பனை செய்து பார்க்கலாம். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே, அவருக்குப் பின்சென்றான் என்றும், ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள் என்றும் லூக்கா இதைக் குறித்து விபரமாக எழுதியுள்ளார். ஏன் இவ்வளவு சந்தோஷம்? அவன் இருளிலிருந்து ஒளிக்குள் வந்தான். இருண்டுபோன அவனது சரீரத்திற்கு ஒளி கிடைத்தது. அது அவனுக்கும் மகிழ்ச்சி, பிறருக்கும் மகிழ்ச்சி.

ஆனால், இந்தப் பர்திமேயுவும் ஒருநாள் மரித்திருப்பான். அவனது சரீரமும் பார்வையடைந்த கண்களும் மண்ணுக்குள் போயிருக்கும். அப்படிப்பட்ட வாழ்வைக் குறித்தே இத்தனை சந்தோஷமென்றால், நித்திய நரகத்தில் தள்ளப்படவிருந்த நாம், அந்தகார இருளில் அடைபட்டுக்கிடந்த நாம், ஆச்சரியமானதும் நித்தியமானதுமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறோமே, இதைக் குறித்து நாம் எவ்வளவாக மகிழ்ச்சி அடைய வேண்டும்! நம்மைக் குறித்து பிறர் எவ்வளவாக தேவனைத் துதிக்க வேண்டும்! இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று தேவதூதன் சொன்ன சந்தோஷம் இதுதான். புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்று சிமியோன் சொன்னதும் இதுவேதான். அந்த ஒளிப்பிரகாசம் இன்று நமது வாழ்வில் பிரதி பலிக்கிறதா? அதற்கு மாறாக, நமது வாழ்வு சோகங்களும் துயரங்களும் நிறைந்து காணப்படுவது ஏன்? பிறருக்கும் நமக்குமுள்ள உறவுகள் கறைபட்டிருப்பது ஏன்?

தேவனோடுள்ள ஐக்கியம்:

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. …நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம் (1 யோவான் 1:5,6).

இந்த வசனத்தில் நம்மையும் தேவனையும் இணைக்கின்ற ஒரு பாலமாக ஒரு சொல் அமைந்திருப்பதைக் கவனித்தீர்களா! ஐக்கியம் – இதற்கு இன்று பலவித வியாக்கியானங்களைக் கொடுத்து, நமது கிறிஸ்தவ வாழ்க்கையை குதூகலிக்கப்பண்ணிக் கொண்டிருக்கிறோம். ஐக்கியம் என்பது நேரான சரியான விடுபடாத பிணைப்பு. நமது வீடுகளில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் செய்துவிட்டு, அழகான பல்புகளையும் தொங்கவிட்டுவிட்டால் வெளிச்சம் வந்துவிடுமா? இல்லை. ஏற்கனவே இருக்கின்ற மின்சார ஓட்டத்துடன் சரியான இணைப்பை நாம்தான் ஏற்படுத்தவேண்டும். அந்த பிளக் சரியாகப் பொருத்தப்படாவிட்டால் தொங்கி நிற்கும் பல்புகள் ஒளி கொடுக்காது. இதுதான் நமது வாழ்வும். தேவன் இருக்கிறார். நாமும் இருக்கிறோம். நமக்கும் அவருக்கும் இடையில் சரியான இணைப்பை நாம் ஏற்படுத்தாவிட்டால் அவருடைய வல்லமை நமக்குள் பாய்ந்துவர வாய்ப்பேயில்லை. அப்போது எப்படி நமது வாழ்வு ஒளிவீசும்?

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன் என்றார் ஆண்டவர் (யோவான் 12:46). ஆம், நாம் இயேசுகிறிஸ்துவைத்தான் விசுவாசிக்கிறோம்; அவரைத்தான் வணங்குகிறோம்; இன்னும் சொல்லப்போனால் அவரால் இரட்சிப்பும் பெற்றிருக்கிறோம். அப்படியானால் நமது வாழ்வில் எவ்வளவாக ஒளி வீசவேண்டும்! இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன், இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார் (2கொரி.4:6) என்று பவுல் எவ்வளவு ஆணித்தரமாக எழுதியுள்ளார். அந்தப் பிரகாசம் எங்கே? பிரகாசம் மங்கியிருக்குமானால், அல்லது வாழ்க்கை இருளுக்குள்ளாகத் தோன்றுமானால், தேவனுடனான நமது பிணைப்பை, ஐக்கியத்தை சற்று சரிபார்க்க வேண்டியது மிக மிக அவசியம்.

இன்று சாத்தான் தேவபிள்ளைகளை வஞ்சகமாகவே தேவனைவிட்டுப் பிரித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நம்மில் யார் உணருகிறோம். கிறிஸ்தவ சமுதாயம் முக்கியமாக வாலிப சமுதாயம் இதனைக் காணவும் உணரவும் கூடாதபடிக்கு அவர்களது கண்கள் குருடாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை யார் சிந்திக்கிறார்கள்? துதி ஆராதனைகள், பாடல் ஆராதனைகள், சங்கீத விருந்துகள், ஐக்கிய விருந்துகள், ஒன்று கூடல்கள், பெரிய பெரிய மகாநாடுகள் என்று எத்தனை! இவை யாவும் நல்லது, தேவையானது. ஆனால், இவற்றையே தன் வஞ்சகக் கூடமாக மாற்றி, தேவனுடனான நல்லிணைப்பை, வசனத்தின் படியான அந்த ஐக்கியத்தை அவன் வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருக்கிறான் என்பதை நிதானித்துப் பார்ப்பது நல்லது. கிறிஸ்து பிறப்பை நினைவுகூரும் இந்த நாட்களில் எத்தனை சிமியோன்களை, எத்தனை அன்னாள்களை நம்மால் காண முடிகிறது? இன்று நமக்கு வருகின்ற சோதனைகள் வெளியிலிருந்து அல்ல; நமக்குள்ளிருந்து தான் வருகின்றன. நாம் எல்லோரும் ஏதோ விதங்களில் சபைக்கடுத்த, கிறிஸ்தவத்திற்கு அடுத்த காரியங்களிலே அதிகமதிகமாக ஈடுபடும்படியான சூழ்நிலைகள் இன்று உருவாகிவிட்டன. நாம் எல்லோருமே தேவனுடைய காரியங்களிலேதான் ஈடுபடுகிறோம். நேரமே இல்லை, இரவு பகலாக அவ்வளவு வேலை. இதனால், தேவனோடு தனித்திருந்து, உறவாடி, கற்றுக்கொண்டு அவரோடுள்ள ஐக்கியத்தில் வளர முடிகிறதில்லை.

அன்று பவுல் எழுதியது இன்றும் நம் மத்தியில் மலிந்துகிடக்கிறது. களியாட்டும், வெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் ஏன் நாம் நடக்கவேண்டும்? (ரோமர் 13:13) இவை எதுவும் ஒளியின் கிரியைகள் அல்லவே! அன்று மோசே சீனாய் மலையுச்சியில் நாற்பது நாட்கள் தேவனோடு தனித்திருந்தார். திரும்பி வந்தபோது, அவருடைய முகப்பிரகாசம் அவருக்கே தெரியவில்லை. ஆனால், மக்கள் அதைக் கண்டு பின்வாங்கினார்கள் என்று வாசிக்கிறோம். அத்தனை பிரகாசம்! பின்னர் மங்கிப்போன அந்தப் பிரகாசத்திற்கே இத்தனை மகிமை இருக்குமானால், ஒருபோதும் மங்கிப்போகாத மகிமைப் பிரகாசத்தைப் பெற்றிருக்கிற நாம் எவ்வளவாக உலகில் ஒளிவீசவேண்டும்!

பிறரோடுள்ள ஐக்கியம்:

நாம் கிறிஸ்தவர்கள்தான், ஆனால் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுப்பார்ப்போமாக. ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். மாம்ச கண்களுக்குத் தெரியாத தேவனை நான் நேசிக்கிறேன் என்று சொல்லுவதா; எனக்கு அருகிலிருக்கும் அடுத்தவனை நான் நேசிப்பதை வாழ்ந்து காட்டுவதா எது எளிது? எது கடினம்? விடை உங்களுக்கே தெரியும். ஆம், நான் தேவனை நேசிப்பது உண்மையா பொய்யா என்பது, அடுத்தவனோடு எனக்குள்ள உறவுதான் நிரூபிக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம் (1யோ.1:7). ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலை கொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக் கினபடியால்…. (1யோ.2:9-11).

இந்த வசனங்களையெல்லாம் நாம் எத்தனை தடவைகள் படித்திருக்கிறோம். அப்படியிருந்தும், நமது உள்ளத்தில் மெய்யான அன்பு இல்லையானால் நாம் எப்படி தேவனுடைய பிள்ளைகளாக இருந்து அவருடைய பிரதிநிதிகளாக உலகில் பிரகாசிக்க முடியும்? இன்று, நமது வாழ்வில் இருளின் கிரியைகள் அதிகரிப்பதற்கு ஒரே காரணம், வார்த்தை இதற்கு முக்கியத்துவம் கொடுக்காதபடிக்கு தந்திரமாக பிசாசானவன் வீசுகின்ற வஞ்சக வலைக்குள் நாம் சிக்கியிருப்பதுதான். உட்கார்ந்திருந்து பிரசங்கம் கேட்பதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்ற நாம் இந்த வார்த்தைகளை நமது சொந்த வாழ்வில் உட்கொண்டு அதற்குக் கீழ்ப்படிந்து வாழ ஆயத்தமா?

பிரிவினைகளும், போட்டி பொறாமைகளும், வஞ்சகங்களும் ஒருபுறத்தில், மறு புறத்தில் வஞ்சகமான சொற்பொழிவுகளும், கள்ளத்தனமான போதனைகளும், மக்களைப் பிரியப்படுத்தும் பிரசங்கங்களும், பாடல் ஆடல் என்றும் இன்றைய நவீன வசதிகளின் ஆரவாரமும் ஆதிக்கமும் என்று எல்லாம் நம்மிடையே மலிந்துவிட்டன. இவற்றின் மத்தியில் நமது சாட்சியுள்ள வாழ்வு என்னவாகும்? எனக்கு அருகிலிருக்கும் சகோதரனிடம் தூய்மையான அன்பு செலுத்தத் தெரியாவிட்டால், அவனை ஏற்றுக்கொண்டு புரிந்துகொண்டு, கிறிஸ்து நம்மில் காட்டிய அன்பை மன்னிப்பை தயவை அவனுக்குக் காட்டத் தெரியாவிட்டால், அடுத்தவனின் தவறுகளிலும் அவரைச் சரிப்படுத்தி அணைத்துக் கொள்ளத் தெரியாவிட்டால், நான் உம்மை நேசிக்கிறேன் என்று பாடி ஆரவாரம் செய்வதில் அர்த்தம் என்ன? நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்

இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் நமது வாழ்வை தேவனுக்கு நேராக, தேவனுக்கு நேராக மாத்திரமே திருப்புவோமாக. என் வாழ்வில் வீசுவது போலித்தனமான வெளிச்சமா? கிறிஸ்துவிடம் பெற்றுப் பிரகாசிக்கிற வெளிச்சமா? இதனைச் சரிபார்ப்பதற்கு ஒரே வழி, கிறிஸ்துவின் ஒளியினிடத்திற்குத் திரும்புவதேதான். கிறிஸ்துவின் ஒளியினிடத்திற்குத் திரும்பும்வரையிலும், நமது பாவ நிலைமை, நமக்குள் இருக்கும் இருளின் கிரியைகள், நமக்கு ஒரு விடுதலை வேண்டும் என்றதான உணர்வு எதுவும் வரவே வராது. பலர் தங்கள் வாழ்வை கிறிஸ்துவின் வெளிச்சத்துக்குள் கொண்டுவர விரும்புவதில்லை. அதாவது, அவருடைய வார்த்தைக்கு நேரே தங்கள் வாழ்வை நிறுத்தி சோதித்துப்பார்க்க விரும்புவதில்லை. ஏனெனில், பயம்; தமக்குள் உள்ளது உள்ளபடியே வெளிவரும் என்ற தயக்கம். வீட்டுக்கூரையிலுள்ள சிறு துவாரத்தினூடாக உள்ளே வருகின்ற அந்த ஒளிக் கீற்றில் நமது வெறுமையான கண்களினால் பார்க்க முடியாத ஏராளமான தூசித்துகள்கள் தெரிகின்றனவே, அதுபோலவே, கிறிஸ்துவின் ஒளிக்குள் வந்தோமானால், நமது வாழ்வில் நமக்குத் தெரியாமலே ஒட்டியிருக்கிற கறைகளும் தெரியவரும்.

பிரியமானவர்களே, இருளின் அந்தகாரத்தி லிருந்து கிறிஸ்து நம்மை விடுதலையாக்கிவிட்டார் (கொலோ.1:13) என்ற நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க வேண்டிய நாமே இன்னமும் இருளின் பிள்ளைகள்போல சாத்தானின் நுகத்தடியைச் சுமப்பது ஏன்? படைப்பில் இருளிலே வெளிச்சத்தை உண்டாக்கிய தேவன், பாவ இருளுக்குள் மாண்டுபோன மானிடத்துக்கு ஒளி உண்டாகும்படிக்குத் தாமே ஒளியாக நம்மைத் தேடிவந்த தேவன், இன்னமும் இருளுக்குள் வாழுகின்ற இந்த சமுதாயத்திற்கு ஒளியாக இன்று நம்மைத்தான் வைத்திருக்கிறார். நாம் உண்மை ஒளியாகிய இயேசு நடந்த பாதையில் அவரையே பின்பற்றி நடப்போமானால், பாவத்திற்குள் விழாதபடிக்கு நாம் தப்பிக்கலாம்.

ஒரு காரியத்தை மனதில் வைத்துக் கொள்வோம். இன்றைய கிறிஸ்தவ பிள்ளைகளை நேரடித் தாக்குதலால் இலகுவாகத் தாக்கி வீழ்த்தமுடியாது என்பதை சத்துரு நன்கு அறிந்து வைத்திருக்கிறான். அதனால், இன்று மறைமுகமாக, பதுங்கியிருந்து தாக்குகின்ற, அல்லது நல்ல காரியங்களாலேயே தாக்குகின்ற யுக்தியில் இறங்கியிருக்கிறான் என்பதைக் குறித்து எச்சரிக்கையடைவோமாக. விட்டுவந்த இருளுக்குள் மறுபடியும் அகப்பட்டு விடாதபடி, தினமும், ஒவ்வொரு விநாடியும் நம்மை கிறிஸ்துவின் ஒளியில் நிறுத்தி வைப்போமாக.

நம்மைச் சூழ்ந்துள்ள மக்கள் மத்தியில், விசேஷமாக இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், நாம் ஒளிவீசும் பிள்ளைகளாக இருந்து, எல்லோருக்கும் சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்தியின் நறுமணத்தை வாயினால் மாத்திரமல்ல, வாழ்வினாலும் வீசச் செய்வோமாக. துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள் (ரோ.13:14) .

சத்தியவசன சஞ்சிகை வாசகர்களுக்கு என் அன்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

சத்தியவசனம்