இயேசு நமக்காக வெளிப்பட்டார்!

கே.ப.ஆபிரகாம்
(நவம்பர்-டிசம்பர் 2011)

சத்தியவசன வாசகர்களுக்கு மீட்பர் இயேசு வின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு தற்செயலாய் நடைபெற்ற ஒரு சம்பவம் அல்ல. அவரது பிறப்பு பழைய ஏற்பாட்டிலே முன்னறிவிக்கப்பட்ட ஒன்றாகும். பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாயிலாக பங்குபங்காகவும் வகைவகையாகவும் தேவன் திருவுளம் பற்றினார் என்று எபி.1:1இல் வாசிக்கிறோம். தீர்க்கதரிசனங்களாகவும் வாக்குத்தத்தமாகவும் உரைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு காலம் நிறைவேறினபோது ஒவ்வொன்றாக நிறைவேறியது.

இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் பலவிதமான சொற்களை வேதாகமத்திலே நாம் பார்க்கிறோம். கொடுக்கப்பட்டார் (ஏசா.9:6) என்றும், வந்தார் (1தீமோ.1:15) என்றும். பிதா அவரை அனுப்பினார் (கலா.4:5) என்றும், பிரசன்னமானார் (2தீமோ.1:10) என்றும், வெளிப்பட்டார் (எபி.9:26) என்றும், தோன்றினார் (எபி.7:14, லூக். 7:16) என்றும், உதித்தார் (எண்.24:17, லூக். 2:11) என்றும் இவ்விதமாக பலவிதங்களில் அவரது பிறப்பு விளக்கப்பட்டிருப்பதை வேதாகமத்திலேப் பார்க்கிறோம். இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் இச்சொற்களெல்லாம் அவர் முன்பு பரலோகத்தில் வாசமாய் இருந்ததையும், பிதாவோடு இருந்ததையும் குறிக்கிறது. அவர் முன்பிருந்த தனது மேலான நிலையை விட்டு, கீழான மனிதனுடைய நிலைக்கு இறங்கி வந்தார் என்பதை அவரது பிறப்பு நமக்கு எடுத்துரைக்கிறது. அவரது பிறப்பைக்குறித்து விளக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த அர்த்தத்தையும் சத்தியத்தையும் உடையதாக காணப்படுகிறது.

ஏரோது சாஸ்திரிகளின் வாயிலாக இயேசுவின் பிறப்பை கேள்விப்பட்டபோது, வேத பாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து, கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள் வேதத்திலுள்ள தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்துபார்த்து, யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் (மத்.2:4,5) என்று அவனுக்கு விளக்கினார்கள். இவ்வாறு இயேசுகிறிஸ்துவின் பிறப்பு பழைய ஏற்பாட்டில் மறைபொருளாகவும் இரகசியமாகவும் நிழலோட்டமாகவும் எழுதப்பட்டுள்ளது. இதை பவுல் அப்போஸ்தலன் எழுதும் போது தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் (1தீமோ.3:16) என்று ஆண்டவருடைய பிறப்பைக் கூறுகிறார். அவர் இவ்வுலகத்தின் இராஜ்ஜியங்களை ஆளும்படியாகவோ இவ்வுலகத்தின் கனத்தையும் மகிமையையும் சுதந்தரிக்கும்படியாகவோ அவர் மாம்சத்தில் வெளிப்படவில்லை. அப்படியென்றால் இயேசு கிறிஸ்து ஏன் இவ்வுலகில் வெளிப்பட்டார்? அவர் ஏன் வெளிப்படவேண்டும்?

அவரை விசுவாசிக்கிற நமக்காகவே வெளிப்பட்டார் என்று பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 1:20). அவர் இவ்வுலகில் வெளிப்பட்டதினால் அவரை விசுவாசிக்கிற நாம் பெற்ற ஆசீர்வாதங்களைக் குறித்து தியானிப்போம்.

1.இயேசு பிறந்ததினால் அன்பு வெளிப்பட்டது!

தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1யோவா.4:9).

இயேசு பிறந்தபோது அவர் மூலமாய் பிதா தமது அன்பை வெளிப்படுத்தினார். இயேசு கிறிஸ்துவே இவ்வுலகிற்கு அன்பை இன்னதென்று கற்றுக்கொடுத்தார். உலகில் பாவமும் சாபமும், பகையும் விரோதமும் பெருகியிருந்த அந்நாட்களில் இயேசு அன்பின் உருவாய் வெளிப்பட்டார். பாவியை நேசித்தார். பெரும் வியாதியஸ்தர்களையும் தன் கரங்களால் தொட்டு சுகமாக்கினார். நமக்காக தன்னையே சிலுவையிலே ஒப்புக்கொடுத்து தமது அன்பை வெளிப்படுத்தினார். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம் (1யோவா. 3:16). இயேசுகிறிஸ்துவின் இவ்வுலக வாழ்வில் அவரை பலவிதங்களில் பகைத்தனர், பரிகசித்தனர், எதிர்த்தனர், சில நேரங்களில் கல்லெறிந்து கொல்ல முயன்றனர். இவைகளின் மத்தியில் அவர் பழிவாங்காமலும் பதில் செய்யாமலும் அவர் யாவரிடத்திலும் அன்பு கூர்ந்தார். தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாசையும் சிநேகிதனே என்று அழைத்தார். சிலுவையில் அறையும் என்று கத்திய ஜனங்களுக்காக, பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லூக்.23:34) என்று பரிந்து பேசினார்.

தன் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட கள்ளனுக்கும் அருள் செய்தார். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற பிரமாணத்தைத் தள்ளி, அன்பு மன்னிக்கும் என்ற சத்தியத்தை இயேசு ஒருவரே வெளிப்படுத்தினார். இன்றைக்கு அவருடைய அன்பு நம்மையும் தேவனுடைய பிள்ளையாய் மாற்றியுள்ளது. நாம் அவரிடத்தில் அன்புகூரும் முன்பாக அவரே நம்மிடத்தில் முந்தி அன்புகூர்ந்தார். அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம் (1யோவா.4:19). இந்த தெய்வீக அன்பு நம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு வரவேண்டும். எனவே இக்கிறிஸ்துமஸ் நாட்களில், கிறிஸ் துவின் மாசற்ற அன்பைக் கொண்டாடுவோம்.

2. இயேசு பிறந்ததினால் கிருபை வெளிப்பட்டது!

நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார் (2தீமோ.1:10).

ஆதாமின் பாவத்தினால் ஆக்கினைக்குள்ளான மனுக்குலம் மரணத்தை சம்பாதித்ததுமல்லாமல் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை காண இயலாமல் தவித்தது. ஆனால் இயேசு பிறந்ததினால் தகுதியற்ற நமக்கு அவரது கிருபை வெளிப்பட்டது. அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். … கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின (யோவா.1:16,17) என யோவான் அப்போஸ்தலன் எழுதுகிறார். இயேசு பிறக்கும் போது நம்மை மீட்கும்படியான கிருபையும் வெளிப்பட்டது. அவரது கிருபை ஒன்றே நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் பாவபிரமாணத்திலிருந்தும் விடுதலையாக்கிற்று. ஆகவேதான் சிமியோன், உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்று பாடினார். இதை வாசிக்கும் அன்பானவர்களே, தேவன் நம்மேல் வைத்த கிருபை பெரியது, இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம் அவரது கிருபையைக் கொண்டாடுவோம்.

3. இயேசு பிறந்ததினால் நித்தியஜீவன் வெளிப்பட்டது!

அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம் (1யோவா.1:2).

ஆதி தகப்பன் ஆதாமின் கீழ்ப்படியாமையினாலே மரணம் நம்மை ஆண்டுகொண்டது. மனிதன் பாவத்தினாலே நித்திய ஆக்கினையை அடைகிறான். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் பிறந்ததினால் நமக்கு நித்திய ஜீவன் வெளிப்பட்டது. அவரை விசுவாசிக்கிற எவருக்கும் தேவன் நித்திய ஜீவனை வாக்குப் பண்ணியிருக்கிறார். குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார் இயேசு (யோவா.6:40). நாம் பெற்றிருக்கிற இந்த வாக்குத்தத்தம் எவ்வளவு மேன்மையானதாயிருக்கிறது. இது இயேசு பாலகனாய் இவ்வுலகில் பிறந்ததினால் நமக்கு வெளிப்பட்ட ஆசீர்வாதமாகும். இந்த நித்திய ஜீவனை பெறுவதற்காக இவ்வுலக மனிதன் எத்தனையோ அச்சாரங்களை அனுசரித்தும் தன்னை வருத்திக் கொண்டும் அதை அடையாமற் போகிறான். எந்தவொரு கிரியையினாலும் இதை அடையவே முடியாது. ஆனால் இயேசு தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனை ஈவாக வழங்குகிறார். அதாவது நித்திய நித்தியமாய் அவரோடிருக்கும் பாக்கியத்தைக் கொடுக்கிறார். இப்பாக்கியத்தை அவரோடு அறையப்பட்ட அந்த கள்ளன் தனது வாழ்நாளின் கடைசி வேளையில் பெற்றான். இக்கிறிஸ்துமஸ் நாட்களில் அவரிடத்தில் நாம் பெற்ற நித்திய ஜீவனை, இதுவரை இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலிருக்கிற மற்றவர்களுக்கு அறிவிப்போமா! இது ஒன்றே மெய்யான கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாய் இருக்கும். இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன் (ரோம.6:22).

4. இயேசு பிறந்ததினால் பாவமன்னிப்பாகிய மீட்பு வெளிப்பட்டது!

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரி டத்தில் பாவமில்லை (1யோவா.3:5).

இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பில்லை என்பது மாறாத சட்டமாயிருந்தது. காளை, ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தினாலே பாவம் நிவிர்த்தி செய்யப்படவில்லை. பலியினாலும் காணிக்கையினாலும் மீட்பின் கிரயத்தை செலுத்த இயலவில்லை. மீட்பின் கிரயத்தைச் செலுத்தும்படியாகவும் கிருபாதார பலியாகவும் தன்னையே ஒப்புக்கொடுத்து இயேசு இவ்வுலகில் வந்தார். அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் (பிலி.2:6,7). அவர் பாவமறியாதவர், தமது பரிசுத்த இரத்தத்தை நமக்காக சிந்தினார். அதினாலேயே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. இயேசு பிறந்ததினால் பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு வெளிப்பட்டது.

எனவே நாம் விடுதலைப் பெற்று இன்று தேவனோடு ஒப்புரவானோம். நாம் அவரது பிள்ளைகளாகக் கூடிய சிலாக்கியத்தையும் அப்பா, பிதாவே என்று அவரை அழைக்கக் கூடிய பாக்கியத்தையும் பெற்றோம். இதுவே கிறிஸ்துமஸின் சந்தோஷம்!

சத்தியவசனம்