2012-ல் தேவனுடைய வார்த்தையில் ஆழமாய் வளருங்கள்!

வேதாகமத்தைப்பற்றி நன்கு அறிந்த கிறிஸ்தவர்கள் சிலரே. அநேகக் கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை வாசிப்பதே கிடையாது, அல்லது தினந்தோறும் வாசிப்பது கிடையாது. முக்கால்வாசி கிறிஸ்தவர்களுக்கு வேதாகமத்தில் எத்தனை புஸ்தகங்கள் இருக்கின்றன என்று தெரியாது. சில முக்கியமான புத்தகங்கள் பழைய ஏற்பாட்டில் இருக்கிறதா அல்லது புதிய ஏற்பாட்டில் இருக்கிறதா என்று தெரியாமல் வேதாகமத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்ப்பவர்கள் உண்டு. வெளிப்படுத்தின விசேஷத்தை வெளிப்படுத்தின சுவிசேஷம் என்று நினைப்பவர்களுமுண்டு.

நம் கண்களைத் திறக்கும் இவ்வுண்மைகள் வேதாகமத்தைக் கருத்துடன் படிக்க வேண்டிய அவசியத்தையும் அதற்காக அதிக நேரம் செலவிட வேண்டியதின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே 2012இல் தேவ வார்த்தையை ஆழ்ந்து படித்து அறியாமையை நீக்கிக் கொள்ளும்படியாய் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆலோசனை களைத் தருகிறோம்.

நேரம் ஒதுக்குவது:

இக்காலத்தில் எல்லோரும் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும்வரை ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். நேரமே இல்லை என்று முறையிடுகிறவர்கள் அநேகர். எவ்வாறாயினும் தேவனுக்கென்று நேரம் ஒதுக்கி வைப்பது நம்முடைய கையிலிருக்கிறது. அத்தியாவசியமானால் காலையில் சிறிது முன்னதாகவே எழுந்திருக்கலாம். அவசியமற்ற நேரப்போக்குகளைத் தவிர்க்கவும் அல்லது அவைகளில் செலவழிக்கும் நேரத்தை குறைக்கவும் நம்மால் முடியும். மோட்சத்தின் பிரஜைகளுக்கு, உலக செய்திகளையும் உலக அறிவையும்விட தேவனுடைய வார்த்தையில் பொதிந்திருக்கும் இரகசியங்களை அறிவதுதான் மிக மேலானது. காலையில் நேரம் எடுத்து அந்த நாளை வேதவாசிப்பிலும், தியானத்திலும், ஜெபத்திலும் துவங்குவது அந்த நாளை ஆசீர்வாதமாக்கும். இவ்வாறான வழக்கமில்லாதவர்கள் இதற்காக புதிய வருடத்தில், முதலில் காலையிலே குறைந்தது 10 நிமிடங்கள் செலவிடத் தீர்மானியுங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஜெப தியான வேளையை அதிகரிக்க முடியும்.

வேதாகமத்தை ஒழுங்காய் வாசியுங்கள்:

வேதாகமத்தை ஒழுங்காகத் தொடர்ந்து வாசிப்பது முக்கியம். வேதாகமத்தை ஒரு வருஷத்தில் அல்லது இரண்டு வருடங்களில் முடிப்பதற்கான அட்டவணைகள் உண்டு. சில தியான புத்தகங்கள் தினமும் வாசிப்பதற்கு வேத பகுதிகளைக் கொடுத்து வேதாகமத்தை தொடர்ந்து முழுவதுமாய்ப் படிக்க உதவுகின்றன. இதை ஒழுங்கு முறை காலை தியான நேரத்தை மேலும் 15 நிமிடங்களுக்கு அதிகப் படுத்திவிடும். ஆனால் இது உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.

வசனத்தை இருதயத்தில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்:

உங்கள் வேதாகமங்கள் திடீரென்று பறிமுதல் செய்யப்பட்டால் என்னவாகும்? ஒருவேளை வேதாகமம் கையில் இல்லாமல் இருக்கும்போது ஏதோ பிரச்சனைகள், ஆபத்துக்கள் நமக்கு நேரிட்டால் ஆறுதல் அளிக்கும் வசனங்கள் தேவைப்படுமே! கண்கள் ஒளி இழந்தால் நினைத்த வேளையில் வேதாகமத்தை வாசிக்க முடியாதே! பாராமல் படிப்பது சிரமம்தான். ஆனால் ஒரு திடமனதோடு, அருமையான வசனங்களை வாசிக்கும் போது ஒன்றிரண்டு வசனங்களை அவ்வப்போது திரும்பவும் திரும்பவும் சொல்லிப் பாருங்கள் அல்லது எழுதி எப்போதும் பார்வையில் படும்படியான இடத்தில் வைத்து அதை அடிக்கடி வாசித்து மனப்பாடம் செய்யுங்கள். இது உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கும்.

வேத வசனத்தினால் மனதை நிரப்புங்கள்:

நீங்கள் என்ன வேலை செய்தாலும், அது வீட்டு வேலை என்றாலும் அலுவலக வேலையென்றாலும், வாகனத்தில் செல்லும்போது என்றாலும் தேவனைப்பற்றி நினைவுகூருங்கள். வேத வசனங்களைக் கூறிப் பெலப்படுங் கள். வேதவசனத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட கீதங்களைப் பாடி இயேசுவானவரை மனதில் கொண்டுவரும்போது நாம் ஆவியில் உற்சாகப்படுத்தப்படுவோம்.

வேத வசனத்தை சிந்தித்து தியானியுங்கள்:

யோசுவா 1:8இல் நாம் வேதாகமத்தை இரவும் பகலும் தியானித்திருக்கும்படி கூறப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு இலேசான வழி என்னவென்றால் ஒரு வசனத்தை அல்லது ஒரு கருத்தை எடுத்து, அதைமட்டும் சிந்திப்பதாகும். உங்களுக்கும் உங்கள் சூழ்நிலைகளுக்கும் அதைப் பொருத்திப் பாருங்கள். ஒவ்வொரு வார்த்தையையும் அதன் அர்த்தத்தையும் சிந்தித்து, அது உணர்த்துவதையும், உங்கள் பிரதி செயல் என்னவாயிருக்க வேண்டும் என்றும் நன்கு ஆலோசியுங்கள். இது மிகவும் பயன் அளிக்கிறதாயிருக்கும்.

வேதத்தை ஆழமாக ஆராயுங்கள்:

வேதாகமம், நாம் தேடிக் கண்டடையக் கூடிய பொக்கிஷங்களால் நிறைந்திருக்கின்றது. ஆனால் சிரத்தையுடன் தேடினால்தான் அவைகளைக் கண்டுபிடிக்க முடியும். இதற்கு ஒரு வழி என்னவென்றால், நம்மைப் பற்றி இந்த வசனம் என்ன கூறுகிறது? இதன் அர்த்தம் என்ன என்று நம்மையே கேள்விகள் கேட்டு விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். கடினமான வார்த்தைகளுக்கு அகராதியிலிருந்து அர்த்தம் கண்டுபிடிக்கலாம். அல்லது போதகரிடம் கேட்டு விளங்கிக் கொள்ளலாம். வசனங்கள் அடிப்படையாய் கொண்ட பிரசங்கங்களைக் கேட்கும்போது வசனத்தை விளக்கும் குறிப்புகள் எடுத்துக் கொள்வது மிகவும் உபயோகமாயிருக்கும். ஆங்கிலத்தில் நல்ல வியாக்கியானங்களும், வேதாகம அகராதிகளும் உண்டு.

வேதாகமத்தை ஆழ்ந்து ஆராய்வதற்கு ஆலயத்தில் மற்றும் விசுவாசிகளின் வீடுகளில் நடத்தப்படும் வேதபாட வகுப்புகளில் பங்கெடுப்பது மிகவும் பிரயோஜனமாயிருக்கும். வானொலி மற்றும் தொலை காட்சியின் மூலம் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் நடத்தப்படும் வேதபாட நிகழ்ச்சிகளைக் கருத்தாய்க் கவனித்து குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்வதும் நல்லது.

இன்னொரு வழி, நீங்களே ஒரு புத்தகத்தையோ, ஒரு அதிகாரத்தையோ ஆழ்ந்து ஆராய்வதற்கு தெரிந்துகொண்டு அதை அநேகமுறை வாசித்துவிட்டு வித்தியாசமான கலர் பென்சிலால் அடிக்கடி உபயோகிக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள், சொற்றொடர்கள், அல்லது கருத்துக்களைக் கோடிட்டு குறிப்பிடுங்கள். பின் திரும்பவும் வாசித்து ஒரு பொருளைப்பற்றி கூறப்பட்டிருக்கும் கருத்துக்களையும் சுருக்கமாய் சேர்த்து உங்கள் வாழ்க்கையில் அதை எவ்விதம் நடைமுறைப் படுத்த முடியும் என்று யோசிக்கலாம். புத்தகத்திற்கோ அல்லது அதிகாரத்திற்கோ ஒரு சுருக்கக் குறிப்பு வரைந்து பார்க்கலாம். அதிலுள்ள முக்கிய வசனத்தைப் பொறுக்கி எடுத்து மனதில் வைத்துக்கொள்ளலாம்.

ஜெபியுங்கள்:

வேத வசனத்தை வாசித்து ஆழமாய் படிக்கும்பொழுது அது என்ன சொல்லுகிறது, என்ன அர்த்தம் கொண்டது, அதை எப்படி உங்கள் ஜீவியத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்று தேவனுடன் உரையாடுங்கள். இது தேவனிடம் ஜெபிப்பதில் ஒரு தனி சிறப்பை உண்டுபண்ணும். வேத வசனத்தைக்கொண்டு உங்கள் ஜெப வாழ்க்கையை உயர்ந்ததாக்க முடியும்.

இன்னும் சில நாட்களில் 2012ஆம் புதிய வருஷத்திற்குள் பிரவேசிக்கப்போகிறோம். இந்தப்புதிய வருஷத்தில் தேவனையும் அவருடைய வார்த்தையையும் பற்றி அதிகமறிய புதிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

சத்தியவசனம்