ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2018

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலும் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கர்த்தரின் பெரிதான தயையினாலே இப்புதிய வருடத்தை காண தேவன் நமக்கு கிருபை செய்திருக்கிறார். “நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர்” (2தீமோத்.1:14) தாமே நம்மைப் பெலப்படுத்தி அனுதினமும் கர்த்தருடைய வழிகளில் நாம் நடப்பதற்கு நமக்கு உதவி செய்திடுவார். 2018ஆம் வருட காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பிவைத்திருந்தோம். மிஷனெரி பணிகளையும் அருட்பணியாளர்களையும் நாம் நினைவுகூரும் வண்ணமாக இவ்வருட சத்தியவசனக் காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. காலண்டர் கிடைக்கப்பெறாத பங்காளர்கள் எங்களுக்கு எழுதித்தெரிவியுங்கள். உங்களுக்கு அன்பானவர்களுக்கு இதை விநியோகம் செய்யவும் வேண்டுகிறோம். காலண்டர் ஒன்றிற்கு நன்கொடை ரூ.25/- மட்டுமே.

கடந்த வருடம் சத்தியவசன வானொலி தொலைகாட்சி ஊழியத்தின் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து நிகழ்ச்சிகள் வெளிவர உதவிய யாவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம். இவ்வருடத்திலும் தங்கள் ஜெப உதவியையும் ஆதரவையும் தர அன்பாய் வேண்டுகிறோம். பேப்பர் மற்றும் அச்சுக்கூலி உயர்வின் காரணமாக சத்தியவசன சஞ்சிகையின் வருட சந்தாவை ரூ,100/- லிருந்து 120/- ஆக உயர்த்தியுள்ளோம். சந்தாதாரர்கள் இதை கவனத்தில் கொள்ளவும்.

இவ்விதழில் நம்பிக்கையின் தேவன் என்ற தலைப்பில் புத்தாண்டு செய்தியை சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களும், புதிய வருடத்தில் ஒரு மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி மாற்றத்திற்கு ஒரு மாற்றம் என்ற தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்களும்.  விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டத்தில் இரட்சணியமென்னும் தலைச்சீரா தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப். அவர்களும், சோதனைக்கு எதிர்த்து நின்றல் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்களும் எழுதியுள்ளார்கள். மேலும் கடந்த இதழின் தொடர்ச்சியான தீர்க்கதரிசன வாக்கியங்களில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு என்ற தலைப்பில் வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்களின் கட்டுரையும், மிஷனெரிக்கான கரிசனை என்ற தலைப்பில் சகோ.ஆ.பிரேம்குமார் அவர்களின் கட்டுரையும் வெளியாகியுள்ளது.

நற்செய்தியை கொண்டாடுவோம் என்ற கருப்பொருளில் தயாரிக்கப்பட்ட இவ்வருட காலண்டரில் இடம்பெற்றுள்ள அருட்பணியாளர்களின் வாழ்க்கை வரலாற்றை சத்தியவசன இதழில் தொடர்ந்து பிரசுரிக்கவுள்ளோம். இவ்விதழில் அப்போஸ்தலனாகிய பவுல், மிஷனெரி வில்லியம் கேரி ஆகியோர் ஆற்றிய அருட்பணி அனுபவங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இக்கட்டுரைகள் அருட்பணி ஊழியத்திற்கு நம்மை ஊக்குவிக்கும் ஏதுகரங்களாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்