நம்பிக்கையின் தேவன்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜனவரி-பிப்ரவரி 2018)

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்கிறேன். இந்தப் புத்தாண்டிலே ஆண்டவருடைய ஆசீர்வாதம் உங்களோடுகூட இருந்து பெரிய காரியங்களைச் செய்வதாக.

அருமையானவர்களே, புத்தாண்டு என்பது ஒரு மகிழ்ச்சியான ஒரு காலமாகும். இது ஒரு புதிய தொடக்கத்தின் நாளாகும். புதிய வாய்ப்புகள் புதிய அனுகூலமான காரியங்களை நாம்  எதிர் பார்ப்பதுண்டு. பிரவேசித்திருக்கிற இவ்வாண்டிலே நமக்கு பயங்கள் உண்டு, கவலைகள் உண்டு, அநேக எதிர்பார்ப்புகளும் உண்டு, சிலருக்கு நம்பிக்கையற்ற சூழ்நிலையாகவே  இந்த புத்தாண்டு காணப்படுகிறது. பார்த்துக் கொண்டிருந்த வேலை போய்விட்டது, எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம். குடும்பத்தில் முக்கியமான அங்கத்தினரை இழக்கக் கொடுத்ததினால் சிலருடைய எதிர்காலம் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கலாம். மேலும் வியாதிகள், அதே சமயத்திலே அநேகருடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட வஞ்சகங்கள் இவைகளெல்லாம் ஒரு நம்பிக்கையற்ற நிலையிலே கொண்டுபோய்விடுகிறது.

ஆதி.28:10-22 வரையுள்ள வேதபகுதியை வாசியுங்கள். அங்கே யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புத சம்பவத்தைப் பார்க்கிறோம். யாக்கோபின் வாழ்க்கை நம்பிக்கையற்ற சூழ்நிலையிலிருந்தது. ஏனென்றால் யாக்கோபிற்கும் அவனது சகோதரனாகிய ஏசாவுக்கும் இடையிலே பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. ஆகவே தாயினுடைய ஆலோசனையின்படியே யாக்கோபு தன் மாமன் வீட்டுக்கு ஓடுகிறான். அவன் போகும்போது தனிமையாய் செல்கிறான். எந்தவொரு நபரோ, பெரிய பரிவாரமோ அவனோடு செல்லவில்லை. தனித்து விடப்பட்ட சூழ்நிலை. வசனம் 10 இல் யாக்கோபு, பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரான் என்கிற இடத்திற்கு போக பிரயாணப்படுகிறான் என வாசிக்கிறோம்.

அவன் செல்லுகிற அந்த பாதையிலே அவனுக்கு நண்பர்களில்லை, வேலைக்காரர்கள் இல்லை, தாய் தகப்பன் இல்லை. முழுவதுமாக அவன் நம்பிக்கையை இழந்தவனாகவே இருந்திருப்பான். 450 மைல்கள் செல்லவேண்டிய அந்த பாதையிலே சுமார் 70 மைல்கள் தூரம்தான் அவன் சென்றிருப்பான். “ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்மித்தபடியினால் அங்கே ராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின் கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக் கொண்டான்” (28:11). அந்த இடம் ஒரு வனாந்திரமான இடம் என்றே சொல்லவேண்டும். அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது (வச.19). அது ஒரு பயனற்ற, மனுஷ சஞ்சாரம் இல்லாத இடமாகும். அந்த இடத்திலே ஒரு கல்லை வைத்துப் படுத்திருக்கிறான். தமிழிலே ‘ஒரு இடம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்திலே ஒரு  A certain place என்று சொல்லப்பட்டிருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனுடைய வாழ்க்கையிலே ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலை. கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் அங்கே நம்பிக்கை இல்லை; எதிர்காலத்தில் என்ன நடக்கும், என்ன நிகழும் என்பது அவனுக்குத்  தெரியாது. நம்பிக்கை கிடையாது. ஆகவே இப்படிப்பட்ட நம்பிக்கையற்ற அந்த சூழ்நிலையிலேதான் அவனது வாழ்க்கை பயணம் இருந்தது.

அருமையானவர்களே, இந்த யாக்கோபைப் போல உங்களுடைய வாழ்க்கையிலே  தனித்து விடப்பட்டு, கைவிடப்பட்டு ஒருவேளை எல்லா உறவுகளிலிருந்தும் வெட்டப்பட்டு நம்பிக்கையற்ற நிலையிலே இருக்கலாம். ஆனால் யாக்கோபினுடைய வாழ்க்கையிலே சந்தித்த தேவாதி தேவன் உங்களை சந்திக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். நமது  திரியேக தேவனாகிய கர்த்தர் யாக்கோபினுடைய வாழ்க்கையிலே இடைபட்டவர், உங்கள் வாழ்க்கையிலே இடைபடுகிறவராக இருக்கிறார். இந்த யாக்கோபோடு ஆண்டவர் எப்படி இடைபட்டார்?

யாக்கோபு ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவ தூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள் (வச.12). தொடந்து தேவாதி தேவன் அந்த சொப்பனத்திலே யாக்கோபோடு பேசுகிறார். ஆதி.28:13-15 வசனங்களை வாசித்து பாருங்கள். “அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப் பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்”

ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார், ஈசாக்குக்கு வாக்குத்தத்தம் பண்ணினார், முதலாவது அந்த வாக்குத்தத்தங்களை இப்போது யாக்கோபுக்கு ஞாபகப்படுத்துகிறார்.

ஆதி.12:1-3 வரையில் தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை வாசிக்கிறோம். ஆதி.26:2-5இல் ஈசாக்குக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை வாசிக்கிறோம். இவற்றையெல்லாம் தேவன் சொப்பனத்திலே யாக்கோபுக்கு ஞாபகப்படுத்தி அவைகளை உறுதிபடுத்துகிறார். மனிதர்களைப் போல வாக்குத்தத் தங்களை மறக்கிறவர் நம்முடைய ஆண்டவர் அல்ல; அவர் வாக்கு  மாறாதவர். என்னுடைய ஊழியத்தின் ஆரம்ப காலங்களிலே தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் இன்று வரையில் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. என்னோடு இருந்த எத்தனையோ மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் ஒருநாளும் மாறவே மாறாது.

நம்பிக்கையற்ற சூழ்நிலையிலே இந்த புத்தாண்டை நீங்கள் சந்தித்திருக்கலாம். ஆனால் ஆண்டவருடைய ஊழியக்காரன் என்கிற அந்த ஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு சொல்லுகிற செய்தி என்ன தெரியுமா? நம்பிக்கையற்ற நிலையிலிருக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு ஆண்டவர்  வேதாகமத்தில் எழுதிக்கொடுத்த வாக்குத்தத்தங்கள் ஒருநாளும் மாறாது. மாறி வரும் உலகிலே மாறாத தேவனாக மாறாத வாக்குத்தத்தங்களை உடையவராக ஆண்டவர் இருக்கிறார். மல்கியா 3:6 சொல்கிறது: நான் கர்த்தர், நான் மாறாதவர்; எபிரேயர் 13:8 சொல்கிறது: இயேசுகிறிஸ்து நேற்று இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். சங்.121:3-8வரை வாசித்து பாருங்கள்; ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நம்மை உற்சாகமூட்டுகிறது. ரோமர்8:28 வாசித்துப்பாருங்கள்; கர்த்தருடைய பிள்ளைகளுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடைபெறும் என்கிற வாக்குத்தத்தம் நம்மை பலப்படுத்துகிறது. ஆகவே தனிப்பட்ட நிலையிலும் வேதாகமத்தின் அடிப்படையிலும் ஏராளமான வாக்குத்தத்தங்களை பெற்றிருக்கிற நீங்கள் சோர்ந்து போகவேண்டாம். பயப்படவும் வேண்டாம். வாக்குத்தத்தங்களை கொண்டு இந்த புத்தாண்டை வெற்றி சிறக்க ஆண்டவர் பெலன் தருவார்.

இரண்டாவதாக, நிச்சயமற்ற இந்த சூழ்நிலையிலே யாக்கோபுக்கு தமது பிரசன்னத்தை வாக்குப்பண்ணினார். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன் (ஆதி.28:15). உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலதுபுறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது (சங்.91:7) என்ற வசனத்தின்படி ஆண்டவர் நம்மோடுகூட இருக்கிறவராக இருக்கிறார். ஒரு வேளை  மனித உறவுகள் இல்லாமலும், தனிமையான சூழலில் தள்ளப்பட்டும் இருக்கலாம். உயிர்த்தெழுந்த ஆண்டவர் சொல்கிற வார்த்தை: இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் (மத். 28:20) என்று. உயர்வானாலும், தாழ்வானாலும் எல்லா காலங்களிலும் அது வாலிபனானாலும் முதிர்ந்த நாட்களானாலும் ஆண்டவர் நம்மோடுகூட இருக்கிறவராக இருக்கிறார்.

ஏசாயா 43:2ஐப் பாருங்கள்: நீ தண்ணீர்களைக் கடக்கும்போது, ஆறுகளைக் கடக்கும்போது, அக்கினியில் நடக்கும்போதும் அவைகள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. தண்ணீர் என்கிற போராட்டம், அக்கினி என்கிற சோதனைகள் வந்தாலும் தேவனுடைய கிருபை நம்மை பாதுகாத்து வழிநடத்த அவருடைய பிரசன்னம் வல்லமையுள்ளதாக இருக்கிறது.

மூன்றாவதாக இந்த யாக்கோபினுடைய  நிச்சயமற்ற எதிர்காலத்திலே ஆண்டவர் தமது பாதுகாப்பை அவனுக்கு வாக்குப்பண்ணினார். ஆதியாகமம் 28:15ஆம் வசனத்திலே ‘நீ போகிற இடத்திலே உன்னை நான் பாதுகாத்து’  என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்குத்தத்தத்தின்படி யாக்கோபை ஆண்டவர் உண்மையாகவே நடத்தினார். லாபானுடைய வீட்டிலே யாக்கோபு இருந்த இருபது ஆண்டுகள் (ஆதி. 31:38) எத்தனையோ பிரச்சனைகள் நேரிட்டது. எல்லாவற்றிலும் தேவன் அவனையும், அவனது மனைவிகள், பிள்ளைகள், மந்தைகள் எல்லாவற்றையும் பாதுகாத்தார். லாபான் பத்துமுறை அவனது சம்பளத்தை மாற்றினான். இப்படி எத்தனையோ காரியங்களிலே தேவன் அவனை பாதுகாத்து வழிநடத்தினார்.

அருமையானவர்களே, இந்த ஆண்டு எப்படியிருக்குமென அஞ்சுகிறீர்களா? உங்களுக்கு பலனுள்ள நம்பிக்கையுள்ள தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உண்டு. நம்பிக்கையுள்ள தேவனுடைய பிரசன்னம் உங்களுக்கு உண்டு. தேவனுடைய அளவற்ற பாதுகாப்பு உண்டு. ஆண்டவருடைய பாதுகாப்பு நம்மோடுகூட இருந்தால் அந்த பாதுகாப்புக்கு நிகரான பாதுகாப்பு இந்த உலகிலே ஒன்றுமில்லை. தாவீதை கோலியாத்தின் கரத்திலிருந்து பாதுகாத்தார். சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ இவர்களை அக்கினிச் சூளையிலே பாதுகாத்தார். தானியேலை சிங்ககெபியிலே பாதுகாத்தார். பேதுருவை ராஜாவின் கையிலிருந்து பாதுகாத்தார். பவுலை எல்லா தீங்கானச் சூழலிலிருந்தும் பாதுகாத்தார். அந்த ஆண்டவர் நம்மோடுகூட இருக்கிறார். ரோமர் 8:37,38ஐ வாசித்துப்பாருங்கள். ஆண்டவர் நம்மோடுகூட இருப்பாரானால் நமக்கு எதிரிட்டு நிற்பவர் யாருண்டு. ஏசாயா 4:5ஐப் பாருங்கள். மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.

நான்காவதாக, யாக்கோபினுடைய வாழ்க்கையிலே தேவன் அவனது தேவைகளை சந்திக்க வல்லமையுள்ளவரென வாக்குப்பண்ணினார். “நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்” (ஆதி.28:15) உன்னை மறுபடியும் நான்  திரும்பி வரப்பண்ணுவேன்  என்று சொல்வாரானால், அவனுடைய சரீர, ஆன்மீக, பொருளாதார போன்ற எல்லாத் தேவைகளையும் ஆண்டவர் சந்தித்து தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி தேவைகளைச் சந்திக்கிறவராய் இருந்தார். வசனம் 20-22 வசனங்களில் யாக்கோபு சொல்கிறார்:

நான் போகிற வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் கொடுத்து, என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடேத் திரும்பி வரப்பண்ணுவீரானால் நீர் எனக்குத் தேவனாயிருப்பீர்; நான் உமக்கு எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுப்பேன் என்று சொன்னான்.

நம் ஆண்டவர் தேவைகளைச் சந்திக்கிறவர் என்பதை யாக்கோபு அந்த சொப்பனத்திலே அறிந்துகொண்டான். நம் வாழ்க்கையிலும்  தேவைகள் அதிகம் உண்டு. அது சரீரத் தேவையோ, ஆன்மீகத் தேவையோ, பொருளாதாரத் தேவையோ குடும்பத்தின் தேவையோ எதுவாக இருப்பினும் அவைகளைச் சந்திக்க ஆண்டவர் வல்லமையுள்ளவராயிருக்கிறார். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி.4:19). கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கும் ஆகாரங் கொடுக்கிற ஆண்டவர் இன்றைக்கு என்னோடு உங்களோடுகூட இருக்கிறார். மத்.6:25,33ன் படியும் நமது அன்றாடத் தேவைகளையெல்லாம் கர்த்தர் சந்திக்கிறவராயிருக்கிறார். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (சங்.146:5).

யாக்கோபு அன்றைக்கு தன்னை அர்பணித்து ஆண்டவரோடு உடன்படிக்கை பண்ணினான். ஆண்டவரே, நீர் என் தேவன், உமக்கு எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுப்பேன் என ஆண்டவரோடு உடன்படிக்கை பண்ணினான். இன்றைக்கும் ஆண்டவர் நமக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். வாக்குத்தத்தத்தைக் கொடுத்து தம்முடைய பிரசன்னத்தை அருளி பாதுகாப்பைத் தருகிற உயிர்த்தெழுந்த தேவன்  நம்மோடு இருக்கும்போது இந்த ஆண்டில் எந்தச் சூழலில் இருந்தாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆண்டவரோடு இன்று உடன்படிக்கை பண்ணுங்கள். ஆண்டவரே, நீர் என் தேவன். நான் உம்முடைய அடியான்; உம்மோடு நான் வாழ்ந்து உமக்கென்று எல்லாம் செய்வேன் என்று ஒப்புக்கொடுங்கள். அப்படி ஒப்புக்கொடுக்கும்போது ஆண்டவர் எல்லாவற்றிலேயும் ஜெயங்கொள்ள நமக்கு உதவி செய்வார்.

சத்தியவசனம்