மாற்றத்திற்கு ஒரு மாற்றம்!

சகோதரி சாந்தி பொன்னு
(ஜனவரி-பிப்ரவரி 2018)

“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். .. உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (சங்.51:10-12).


தேவனைவிட்டுத் தூரம்போயிருந்த நமது வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்துடன் வாழுகின்ற கிருபையையும் ஈந்து, இன்னுமொரு புதிய ஆண்டுக்குள் நம்மை ஜீவன் சுகம் பெலத்துடன் நடத்திவந்த கர்த்தராகிய இயேசுகிறிஸ் துவின் இனிய நாமத்தில் சத்தியவசனம் வாசகர்களுக்கு அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒரு மனிதன் பிறந்தால் மாத்திரம் போதாது; பிறந்தவன் வளரவேண்டும்; வளருகிறவன் முதிர்ச்சியடைய வேண்டும். ஆக, இந்த வளர்ச்சியின்போது பல மாற்றங்களுக்கும் அவன் உள்ளாகிறான். குழந்தைப் பருவம் பிள்ளைப் பருவமாக மாறி, பின்னர் வாலிபனாக மாற்றமடைந்து, பின்னர் அவன் முழு மனிதனாகி, முதிர்ச்சி என்ற மாற்றத்திற்குள்ளாகிறான். இது இயல்பு, நியதி. இந்த சரீர வளர்ச்சியும் மாற்றங்களும் நம்மை அறியாமலேயே இயற்கையாகவே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதேசமயம் நமது சிந்தனைகள் செயற்பாடுகளிலும் உணர்வுகளிலும் அந்தந்தப் பருவத்திற்கேற்றபடி மாற்றங்கள் நிகழத்தான் செய்கின்றன. இதுவும் நாம் தடுத்தாலும் விட்டாலும் நடந்தேதீரும். ஆனால் இந்த சிந்தனை மாற்றம் உணர்வு மாற்றம், நமது தேவனுக்கும் நமக்கும் இடையிலான உறவில் மாற்றத்தையும், அந்த மாற்றத்திலிருந்து புதிதான தேவனுக்குள்ளான வளர்ச்சியையும் கொடுக்கவில்லையானால் நமது வாழ்வின் நறுமணம் நிச்சயம் குன்றிப் போய்விடும். உண்மை என்னவெனில் ஏதொவொரு மாற்றத்திற்கான ஒரு தாகம் நமக்குள் இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்பதையும் நம்மில் பலர் உணருவதில்லை.

மாற்றத்திற்கான தாகம் ஏன்?

‘மாற்றம் வேண்டும். இன்றைய சமுதாயக் கட்டமைப்பு மாறவேண்டும். பெண்களைக் குறித்த கண்ணோட்டம் மாறவேண்டும்.’ துடிப்பான ஒரு இளம் பெண்வழக்கறிஞர் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆக்ரோஷமாகப் பேசினார். ‘மாற்றங்கள் வேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்து வருகின்ற இந்த நாட்களில், வாலிபர் நாங்கள் எங்கள் மேடைகளில் மாற்றம் செய்ய எங்களை விட்டுவிடுங்கள்’. அரங்கத்தில் ஓங்கி ஒலித்தது வாலிபன் ரமேஷின் குரல். ‘அரசியல் களம் மாற்றியமைக்கப்படவேண்டும்’. இது ஒரு அரசியல்வாதி. ‘சபையில் மாற்றம் வேண்டும். இக்காலத்திற்கேற்ப ஊழிய முறைகளில் மாற்றம் வேண்டும்’. இது யார் குரல்!

‘மாற்றம் வேண்டும்’ மானிட மனது அன்றும் இன்றும் ஏங்குகின்ற ஒரு விஷயம்தான் ‘மாற்றம்’. இருப்பது அலுத்துப்போவதால் மாற்றமா? முன்னேறவேண்டும் என்பதால் மாற்றத்திற்கு ஒரு தாகமா? எதிலே மாற்றம்? எப்படிப்பட்ட மாற்றம்? எதற்கு மாற்றம்? மாற்றம் என்னும்போது ஏற்கனவே இருக்கின்ற ஒன்றில்தான் அது நடைபெறவேண்டும். அது எது? மனிதனையும் அறியாமலே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அல்லது, ‘அந்த’ நாட்களில்’ ‘எங்களுடைய காலத்தில்’ என்ற வார்த்தைகளுக்கு இடமிருந்திருக்காது. வளர்ச்சிகளைக் காண்கிறோம், புதிய உருவாக்கங்களைக் காண்கிறோம். புதிய சிந்தனைகளைப் பார்க்கிறோம். இவற்றால் மனிதனுடைய தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? அவன் சுபாவம் மாறியதா? சிந்தனைபோக்குச் சுத்தமாயிற்றா? அல்லது அவனுக்குள் இருக்கின்ற மாற்றத்திற்கான தாகம் தீர்ந்ததா?

மாற்ற முடியாதவை மாற்ற முடியாதவையே

மாற்றமுடியாத ஏராளமானவை நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. அவற்றை நம்மால் எதுவும் செய்யமுடியாது. கடவுள் படைத்த படைப்பை மாற்றமுடியுமா? சூரியன் உதிக்கும் திசையையும் சந்திரனின் சுற்று வட்டத்தையும், நட்சத்திரங்களின் பாதையையும், காற்றின் திசையையும் யாரால் மாற்றமுடியும்? என்னதான் ஆண் தன்னைப் பெண்ணாகவும் பெண் தன்னை ஆணாகவும் மாற்றக்கூடிய நவீனங்கள் வந்தாலும், படைத்தவர் கொண்டிருக்கும் திட்டத்தை மாற்றமுடியுமா? மாற்றங்கள் நல்லது; அதிலும் அந்த மாற்றங்கள் முன்னேற்றங்களை ஏற்படுத்துமிடத்து மிக நல்லது. ஆனால் இந்த மாற்றங்கள் எதை நோக்கி நகருகின்றன, மனுக்குலத்தை எங்கே கொண்டு செல்லுகின்றன என்பதில் நாம் விழிப்பாயிருப்பது அவசியம்.

மாற்றத்திற்கான அவசியம் ஏன்?

தேவன் உலகைப் படைத்தபோது, பூரணமாகவே படைத்தார். தான் படைத்த மனிதனைக் கண்டு அவர் பூரித்துப்போனபடியால்தான் ‘மிக நல்லது’ என்று சொல்லி, அவனோடும் படைப்புகளோடும் உறவாடும்படிக்கு ஒரு நாளையே வேறு பிரித்து வைத்தார். பூரணமான ஒன்றில் எதற்கு மாற்றம்? ஏன் மாற்றம்? மனித இருதயம் தேவனோடு உறவாடியது. தேவன் மனிதனுடன் உறவாடினார். அங்கே வேதனை இருக்கவில்லை. துன்ப துயரம் இழப்பு மரணம் எதுவுமே இருக்கவில்லை. நித்தியமாய் நிரந்தரமாய் சாவு அற்றவனாகவே மனிதன் படைக்கப்பட்டான். மாற்றம் என்ற சொல்லுக்கே அங்கே இடமிருக்கவில்லை.

இந்த மனிதன் எப்போது தன்னிலைவிட்டு, தன்னைப் படைத்தவரைவிட்டு பாவத்தில் விழுந்தானோ அங்கேதான் அவனில், அவன் வாழ்வில், சிந்தனையில், நடத்தையில், குணாதிசயத்தில் முக்கியமாக அவன் இருதயத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவன் கர்த்தரைவிட்டு மாறிப்போனான். அதனால் கர்த்தர் இஸ்ரவேலிடம், ‘நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?’ (எரே.2:21)என்று கேட்டார். மனுக்குலமே மாறிப்போனது. நித்திய அழிவுக்குரிய இந்த மாற்றம் மாற்றப்படவேண்டியதொரு மாற்றம். அழிவுக்குரிய இந்த மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்துதான் மனித இருதயம் தன்னையும் அறியாமல் ஒரு தேடலுக்காக, ஒரு மாற்றத்திற்காக ஏங்க ஆரம்பித்ததை மறுக்கமுடியாது. தான் விழுந்த  இடத்திலிருந்து எழுந்திருக்க அது வாஞ்சித்தது. இதற்காக மனிதன் எடுத்த முயற்சிகளோ ஏராளம். ஏதாவது பலனளித்ததா? காலங்கள் ஓடின, சந்ததிகள் பெருகின. வாழ்வுமுறைகள் மாறின; உணவுப் பழக்கங்கள் மாறின. சிந்தனைகள் மாறின. அறிவு பெருத்தது. கல்விமுறைகள் மாறின. நாகரீகம் மாறியது. அரசாங்க ஆட்சிகள்  மாறின. மாற்றம்! மாற்றம்! எங்கே பார்த்தாலும் மாற்றங்கள். ஆனால், மனித வாழ்வில் சந்தோஷம் நிம்மதி திருப்தி ஏற்பட்டதா? இங்கேதான் பதில் தடுமாறுகிறது.

வழுவிப்போன மனித இருதயத்தில் மாற்றம் ஏற்படும் வரைக்கும் எந்த மாற்றமும் மனித வாழ்வுக்கு விடுதலையையோ மகிழ்ச்சியையோ தர வாய்ப்பே இல்லை. ‘மாற்றங்கள் அவசியம். இல்லாவிட்டால் இக்காலத்துக்கேற்ப நம்மால் வாழமுடியாது’ என்றார் ஒருவர். இக்கருத்தைக் குறித்து உங்கள் அபிப்பிராயம்தான் என்ன வாசகர்களே!

தனிப்பட்ட மனிதரின் மாற்றங்கள்

ஏதேனிலே ஏற்பட்ட கொடிய மாற்றம் மாற்றப் படவேண்டியதாயிற்று. இந்த மாற்றத்தை வேதாகமத்திலே பலருடைய வாழ்விலே காண்கிறோம். ஏமாற்றக்காரனும் எத்தனுமாயிருந்த யாக்கோபு, யாக்போக்கு ஆற்றங்கரையில் நின்று, ‘நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்’ (ஆதி.32:26) என்று கதறினானே, எதற்காக? தன் வாழ்வில் ஒரு மாற்றத்துக்காகத்தானே. அப்படியே அவன் இஸ்ரவேலாக மாற்றப்பட்டான். ஆனால் ஏசாவோ மாற்றத்தைக் காணாமலே போய்விட்டான்.

கர்த்தராலே தெரிந்துகொள்ளப்பட்டவன் சவுலுக்குள் மறைந்திருந்த சுபாவம் வெளிப்பட்ட போதும், தேவனுக்குக் கீழ்ப்படியாமற் போன போதும் கர்த்தர் அவனை ஒரேயடியாகத் தள்ளி விடவில்லை. ஒருதரத்திற்கு இருதரமாகத் தருணம் கொடுத்தார். ஆனால் சவுலோ மாற்றத்தைக் காணாதவனாகவே மரித்துப்போனான். ஆனால் தாவீது, அவனும் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவன். வாழ்வில் பல சவால்களைச் சந்தித்தவன். உபத்திரவத்தின் குகையிலே புடமிடப்பட்டவன். ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொண்டு, அழகாக மக்களை நடத்தியவன். என்றாலும் ஏதேனில் உண்டான பாவ சுபாவம் விடுமா? தாவீதும் பாவத்தில் விழுந்தான். ஆனால், ஒரு பெரிய வித்தியாசம். இவன் தன் பாவத்தை உணர்ந்தபோது, கதறி அழுது ஜெபித்த ஜெபத்தின் முக்கிய பகுதி: ‘தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். …உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்’ (சங்.51:10,12). தாவீது கதறி ஜெபித்தது சூழ்நிலைக்காக அல்ல; மாறாக தனது இருதய மாற்றத்துக்காகவேயாகும்.

இயேசுவை மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுதான், அவனுடைய இருதயம் ஒரு மாற்றத்துக்கு ஏங்கியது. கர்த்தர் அவனைச் சபையின் கற்பாறையாக உயர்த்தினார். யூதாஸ் மாற்றத்தைக் காணாமல் நான்றுகொண்டு செத்துப்போனான்.

துடிப்புள்ளவன், கல்விமான், சனகெரிப் சங்கத்தின் இளைய உறுப்பினன், எபிரெயன், ஒரு யூதன், ரோமப்பிரஜா உரிமையையும் பெற்றவன், எல்லோராலும் மதிக்கப்பட்டவன், தனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று இந்த சவுல் ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால் தேவன் அவனில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார். ‘ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்’ என்று கதறியபோதுதான் சவுலின் வாழ்வில் பெரிய மாற்றம் உண்டானது. பின்னர் அவன் சவுல் என்று அழைக்கப்படாமல் அவனுடைய இன்னொரு  பெயராகிய பவுல் என்றே அழைக்கப்பட்டான். கிறிஸ்துவின் பெயரைச் சொன்னவர்களையே துன்புறுத்திய இவன், அதே கிறிஸ்துவுக்காய் தன் தலையைக் கொடுத்தானே, எப்படி? அவன் இருதயத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால்தான்.

பலருடைய வாழ்விலே, கிறிஸ்தவர்களாகப் பிறந்து வளர்ந்தவர்களுடைய வாழ்விலேயே, பல மாற்றங்கள் ஏற்பட்ட சாட்சிகள் ஏராளமாகவே உண்டு. அதற்காக அவர்கள் பாவமே அறியாதவர்களாக இல்லை; ஆனால் பாவத்தைக் குறித்த எச்சரிப்பை உணர்ந்தனர். இதுவரை தம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த பாவத்திலிருந்து விடுதலையை உணர்ந்தனர். கிறிஸ்து தம்மோடிருக்கிறதை உணர்ந்தனர். இப்போதாம் அல்ல, கிறிஸ்துவே தமக்குள் வாழுகிறார் என்ற உறுதியைப் பெற்றனர். முன்னரைப்போலல்லாமல், தவறு செய்தாலும் தூக்கிவிடப்படுகின்ற அனுபவத்தில் நடக்கின்றனர், மாற்றங்களைக் காணுகின்ற, மாற்றங்களால் உற்சாகமடைகின்ற இந்த உலகில் வாழ்ந்துகொண்டே என்றும் மாறாத நித்தியத்தின் மாறாத சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர். மாற்றம் அவர்கள் இருதயத்தை மாற்றியது. உலகில் ஏற்படுகின்ற நல்லதோ தீயதோ எதுவும் இவர்களுக்கும் தேவனுக்குமுள்ள உறவை மாற்றமுடியாதிருக்கிறது. ஏதேனில் தோன்றிய மாற்றம் இவர்கள் வாழ்வில் மாற்றப்பட்டதால் உண்டான மாறாத சந்தோஷம் இவர்கள் இருதயத்தை நிரப்பியிருக்கிறது.

கிறிஸ்துவுக்குள்ளான மாற்றம் தேவை

பிரியமானவர்களே, மாற்றமே தேவையற்றிருந்த மனித வாழ்விலே முதல் மாற்றம் ஏற்பட்டது ஏதேனிலேதான். அது மாற்றப்பட வேண்டிய மாற்றமாயிருந்தது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த மனிதன் பல முயற்சி எடுத்து பல மாற்றங்களைச் சாதித்தாலும், அவனுடைய இருதயத்தில் மாற்றம் ஏற்பட்டதா? அவன் ஏற்படுத்திய மாற்றங்களால் மனிதனின் அந்தரங்கத்தின் அசிங்கங்களை அவனால் மாற்ற முடிந்ததா? ஏதேனில் உண்டான பாவத்திலிருந்து அவனை மீட்க முடிந்ததா?

ஆகவேதான், தேவன் தாமே மனிதனாய், இந்தப் பாழாய்ப்போன உலகிற்கு வந்தார். மனித வாழ்வில் ஒரு விடுதலையின் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு வந்தவரையே மாற்றப் பார்த்தான் சாத்தான். ஆனால் வந்தவரோ நித்தியமானவர், மாறாதவர்; அவரை மாற்ற முடியுமா? மாறாதவராய் இருந்ததால்தான் மாறிப்போன மனித வாழ்வின் அவலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, மனித வாழ்வில் மாறாத ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்தார். அந்த மன மாற்றம் இருதய மாற்றம், உள்ளான வாழ்வின் மாற்றம், இதனைக் கிறிஸ்துவால்மாத்திரமே கொடுக்கமுடியும். இப்புதிய ஆண்டில் இந்த உன்னத மாற்றம் மானிடர் மத்தியில் ஏற்பட நாம் கடினமாக உழைக்க முன்வருவோமாக. ஏனெனில் மாற்றமே இல்லாத ஒரு காலம் மிக அருகில் நெருங்கிவந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம்.

மாறிவிட்ட எனக்கு என்ன மாற்றம்

‘என் பாவத்தை இயேசு தாமே சிலுவை யில் பரிகரித்து எனக்கு விடுதலை தந்தார்’ என்று விசுவாசித்து அந்தப் புதிய மாற்றத்திற்குள் வந்து பல ஆண்டுகளாகிவிட்ட என் வாழ்வில் ஏது மாற்றம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். ‘நான் அல்ல; கிறிஸ்துவே எனக்குள் இருக்கிறார்’ என்றால் கிறிஸ்துதானே என் வாழ்வில் வெளிப்பட வேண்டும். அந்த மகா உன்னத மாற்றம் என் வாழ்வில் ஏற்பட்டிருக்குமானால் அந்த மாற்றத்தை நம்மால் மறைக்கவே முடியாது. இன்று அந்த மாற்றம் நம்மில் வெளிப்படுகிறதா? சிந்திப்போம். திருக்கான நமது இருதயம் மாறும்போது, அதனால் நமது வாழ்வு மாறும். நாம் மாறும்போது நமது குடும்பம் மாற்றமடையும். குடும்பத்தின் மாற்றம் சபையில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அந்த உருவாக்கம் நிச்சயம் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். இந்தத் தாக்கத்தை நாம் எந்தளவுக்கு ஏற்படுத்தியிருக்கிறோம்?

இப்புதிய ஆண்டில் கிறிஸ்துவுக்குள்ளாக நம்மில் ஏற்பட்ட மாற்றத்தைப் புதுப்பித்துக்கொண்டு, பிறர் மத்தியில் அந்த உன்னத மாற்றத்தை ஏற்படுத்தப் புறப்படுவோமாக. மாற்றமே தேவையற்றிருந்த மனித வாழ்வு பாவத்தின் வரவினால் கறைப்பட்டுப்போனதால், அது திரும்பவும் தன் நிலைக்கு, தேவனோடு நித்தியமாய் வாழும் பரிசுத்த நிலைக்கு மாற்றப்படுவதற்குத் திரும்பவேண்டியது அவசியம். மனித இருதயம், அந்தரங்கம், உள்ளான சிந்தனைகள் எல்லாவற்றிலும் மாற்றம் அவசியம். அதற்கு ஒரே வழி ஆண்டவரும் இரட்சகருமாகிய கிறிஸ்து இயேசுதான். அவர் சிந்திய இரத்தம் ஒன்றேதான். அதனால் உண்டான, கிருபையாய் நமக்கு அருளப்பட்ட அந்த ஒப்பற்ற அழியாத மாறாத அந்த நித்திய மாற்றத்தை நாமும் உறுதிப்படுத்திக்கொண்டு, நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் வாழ்விலும் அந்த உன்னத மாற்றம் ஏற்படுவதற்கு நாம் ஒன்றிணைந்து உழைப்போமாக.


உங்களுக்குத் தெரியுமா?

கர்த்தருடைய ஆலோசனைகளின்படி நடந்துகொண்டவர்கள் யாரும் தோற்றுப் போனதாக சரித்திரம் இல்லை. தேவ ஆலோசனைகளை மீறினவர்களின் முடிவோ பரிதாபம்!

சத்தியவசனம்