சோதனைக்கு எதிர்த்து நின்றல்!

Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2018)

ஒவ்வொரு நாளும் நேர்மைக்கும் உண்மைக்கும் விலகிநிற்கும் வாய்ப்புகளால் நாம் அச்சுறுத்தப்படுகின்றோம். பாவம் செய்யவும் தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருக்கவும் அவருடைய வார்த்தையை அலட்சியம் பண்ணவும் இன்று அநேக சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. இவைகளை நாம் சோதனைகள் என்கிறோம். அது தேர்வில் காப்பியடிப்பது, வாடிக்கையாளரை ஏமாற்றுவது, உண்மையைத் திரித்துக்கூறுவது போன்றவையாகவும் இருக்கலாம். இந்த சோதனைகள் நமது ஆவிக்குரிய வாழ்வை உருவாக்கவோ அழிக்கவோ முடியும். நாம் விரும்பியோ விரும்பாமலோ சோதனை நமது வாழ்வில் வரும். அதனை நாம் சமாளிக்கும் வேளையில் அதற்கு தப்பித்துக்கொள்ளும் வழியை தேவன் அளிப்பார். ஆனால் சூழ்நிலையை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து வெற்றிபெற வேண்டும்.

சோதனையில் விழுவதைப் போன்று நமது ஆவிக்குரிய வெற்றியை அழிப்பது வேறு எதுவும் இல்லை. அச்சோதனை பணம், இச்சை, அதிகாரம், பதவி, புகழ், அல்லது பாலியல் சார்ந்ததாக அமையலாம். இவற்றைப் போல நூற்றுக்கணக்கான சோதனைகள் உண்டு. வாய்ப்புகள் ஒரு முறைதான் வரும், ஆனால் சோதனைகளோ ஆயிரக்கணக்கில் நமது வாசலைத் தட்டிக்கொண்டேயிருக்கும்.

”வாழ்வில் ஒரு முறை”  என்ற விளம்பரத்தை அறிந்திருப்பீர்கள், அது வெகு விரைவில் பணத்தை உருவாக்கும் முறை என்று கூறும். ஆனால் அது ஓர் அடர்த்தியான காட்டில் இருக்கும் ஆலமர நிழலைப் போன்றது. அதனால் எந்த ஒரு சிறப்பும் கிடையாது. ஏற்கனவே உங்களிடம் இருக்கும் மூன்று கடன் அட்டை(credit card)யைத் தவிர வேறு ஒரு அட்டைக்கான விளம்பரத்தைக் கண்டவுடன் அதுவும் வேண்டும் என்று நீங்கள் கேட்பதும் ஒரு சோதனையாகும். கிறிஸ்தவர்களாகிய நீங்களும் நானும் இச்சோதனைகளுக்கு விலக்கு அல்ல.

சோதனையைப் பற்றி தலைமைத்துவ இதழ் ஒன்று சில ஆயிரம் போதகர்களிடம் ஓர் ஆய்வு நடத்தியது. அதில் தனது ஊழியக்காலத்தில் விபச்சாரம் செய்ததாக 12 விழுக்காடு போதகர்கள் ஒத்துக்கொண்டனர். மேலும் 23 விழுக்காடு போதகர்கள் தகாத பாலியல் காரியங்களை நடப்பித்ததாகக் கூறியிருந்தனர். இது சோதனைக்குப் பலியானவர்களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு. ஆனால் இது ஓர் உண்மையான நிகழ்ச்சி. சரீரமும் இரத்தமும் நம்மை அதிகமாகத் தாக்குகின்றன. 25 ஆண்டுகளின் திருமண உறவுக்குப் பின்பும் விவாகரத்து பெற்ற சபையின் மேன்மையான சில மக்களைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஏனெனில் அவர் தன்னைவிட இளமையான கவர்ச்சியான ஒரு பெண்ணைக் கண்டுபிடித்ததே அதற்குக் காரணம்.

சூதாட்டப் பழக்கத்தால் ஒருவர் திவாலாகி தனது வீட்டை இழக்கவும் நேரிட்டது. அலுவல் நேரத்தில் தனது கணிப்பொறியிலிருந்து நிர்வாணப்படத்தை இறக்கியதால் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சோதனை ஒரு பிரச்சனையல்ல. ஆனால் அதற்கு எதிர்த்து நிற்பதே பிரச்சனையாகும். மேலும் அது எளிதானதும் அல்ல. ஆவிக்குரிய வெற்றி வாழ்வு வாழ சோதனையை ஜெயிக்கும் வழியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

என்னுடைய நண்பர் தேவ் என்பவரைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என்னுடைய பட்டப் படிப்பின்பொழுது அவரை நான் அறிந்தேன். அவரைப்போல கூடைப்பந்தில் சிறந்தவர்கள் வெகுசிலரே. அவர் அவ்விளையாட்டுக்குத் தேவையான 6’2”க்கும் குறைவான உயரமுடையவர். ஆயினும் தனது கால்களுக்கிடையேயும் முதுகிலும் பந்தினை உருட்டுவதிலும், பந்தினை எறிவதிலும் இரண்டு கரங்களாலும் பந்தினைக் கையாளுவதிலும் சிறந்து விளங்கினார். அதற்காக நான் அவரைப் பாராட்டுவேன். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த வீரராக விளங்கிய அவர் அதனைத் தன்தொழிலாக எடுத்துக்கொள்ள எண்ணினார். ஆனால் அவரது உயரம் அதற்குத் தடையாக இருந்தது. எனவே அவர் வியாபார உலகில் பிரவேசித்தார்.

வாலிபனாகத் தனது வாழ்வைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்த அவருக்கு பெண்களிடம் சபலம் உண்டு. திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தையான பின்னரும் தனது அலுவலகத்தில் உடன்பணிபுரிந்த சிந்தி என்ற பெண்ணால் ஈர்க்கப்பட்டார். உணவறையில் தங்களது உணவைப் பரிமாறிக்கொள்ளுவதில் அவர்கள் நட்பு ஆரம்பித்தது. தனது சபையில் தேவ் ஒரு செயல்வீரர்; ஆனால் அவர் ஒரு போலி வாழ்வு நடத்தி வந்தார். ஆனால் அது சபையினருக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அது சீக்கிரத்தில் வெளியே தெரிய வந்தது. எனவே அவரது வேலை பறிபோனது. சபையில் அவருடைய மதிப்பு குறைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தனது குடும்பத்தையும் இழந்தார். தேவ் வாழ்வு மிகவும் சோகமானது. பிரகாசமான எதிர்காலம், தாலந்துகள் நிறைந்த என் நண்பர் தேவ் அனைத்தையும் இழந்துவிட்டார்.

சோதனை வரும்பொழுது ஒரு கிறிஸ்தவன் ஆச்சரியப்படக் காரணம் எதுவுமில்லை. ஆதாம் ஏவாள் தொடங்கி மனுக்குலத்தின் இன்றைய காலம் வரைக்கும் சாத்தான் செயல்படும் விதத்தை நாம் அறிவோம். அவன் அடைந்த வெற்றிகளால் தனது தந்திரங்களை மாற்றிக்கொள்ள மாட்டான். நீங்களும் அவனுடன் யுத்தம் செய்திருப்பீர்கள். எனவே நாம் வெற்றிபெற வேண்டுமெனில், ”எப்பொழுதும் ஆயத்தமாயிரு” என்ற சாரணரின் கொள்கையை அறிந்திருக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் உண்டாகும் சோதனையை நீங்கள் சந்திக்க எவ்விதம் ஆயத்தமாக இருக்கிறீர்கள்? வேதாகமம் கூறும் ஆலோசனைகள் உங்களுக்கு பெரிதும் உதவும்.

இன்று சோதனையை சந்திக்க மூன்று காரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

ஒன்று: உங்களுடைய தனிப்பட்ட பலவீனத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது ஆன்மீகக் கவசத்தில் குறைகள், விரிசல்கள் தவறுகள் இருக்கலாம். அவைகளே சாத்தான் நம்மைத் தாக்கும் பகுதிகளாகும். நாம் மறைத்து வைத்துள்ளவைகளை சாத்தான் எளிதில் கண்டு பிடித்துவிடுவான். சாத்தானின் அம்பு மோசேயின் பலவீனமான கோபத்தைக் கண்டுபிடித்தது. அதனை மேற்கொள்ளாததால் மோசே ஓர் எகிப்தியனைக் கொலை செய்துவிடுகிறான் (யாத்.2 அதி). சாத்தானின் அம்பு எலியாவின் பலவீனமான மனமடிவைத் தாக்கியது. கர்மேல் மலையில் அவன் கொண்ட மகத்தான வெற்றியை மறக்கடிக்கச் செய்தது. இதனை 1 இராஜாக்கள் 19ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம்.

சாத்தானின் அம்பு யாக்கோபின் பலவீனமான ஏமாற்றும் பண்பினைக் கண்டது. அவனுடைய சகோதரனாகிய ஏசா அவனைக் கொலை செய்ய எண்ணினான் (ஆதி.27). பிசாசின் அம்பு பேதுருவின் நிலையற்ற தன்மையைக் கண்டு கொண்டது. அவன் அச்சோதனைக்கு இணங்கியதால் ஆண்டவரை வெளிப்படையாக மறுதலிக்க நேரிட்டது (மத்.26) இவ்வாறாக அநேகரைக் கூறலாம். நம்முடைய பலவீனங்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவைகளில்தான் சாத்தான் நம்மை சோதிப்பான். இயேசு தம்முடைய சீடர்களிடம் அவர்கள் அனைவரும் அன்று இரவு சிதறுண்டு தம்மை மறுதலிப்பார்கள் என்று அறிவித்தார். தன்னம்பிக்கை அதிகம் கொண்ட பேதுருவோ ”உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்” என்றார் (மத்.26:33). அது மிகப் பெரிய தவறு. தான் ஆண்டவரை மறுதலிக்க இயலாது என்று நிச்சயமாக அவர் எண்ணியிருந்தார். அவர் ஓர் உறுதியான சீடர். ஆனாலும் தன்னுடைய பலவீனத்தை அவர் அறிந்து வைத்திருக்கவில்லை.

நம்மில் அநேகருக்கும் இதே பிரச்சனைதான். பேதுருவின் தன்னம்பிக்கையே அவனுடைய கவசத்திலுள்ள ஓட்டை என்பதை சாத்தான் கண்டுகொண்டான். பேதுரு வைராக்கியமான வர்தான். ஆனால் அந்த சோதனை வருவதை அவர் அறியவில்லை. எனவே சாத்தான் உடனடியாக செயலில் இறங்கினான். ஒரு சில மணி நேரத்தில் பேதுரு சோதனைக்கு இணங்கி, தனது ஆண்டவரை மறுதலித்தார்.

நம்மில் உள்ள பலவீனத்தைக் காண்பதை விட மற்றவர்களிடம் உள்ள பலவீனத்தைக் காண்பது மிக எளிது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? பவுல் தீமோத்தேயுவை உருவாக்கிய திறமை ஒரு நல்ல உதாரணமாகும். தீமோத்தேயு ஒரு பயந்த சுபாவமுள்ளவர் என்று அப்.பவுல் அறிந்திருந்தார். எனவே அவர் ”தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ.1:7) என்ற ஆலோசனையைத் தந்தார். வாலிபனான தீமோத்தேயுக்கு ஏற்படும் சோதனைகள் அநேகம் என்பதால் ”அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி,” (2 தீமோ.2:22) என்று எச்சரித்தார். மேலும் முதியவர்கள் அவனை அலட்சியம் பண்ணக்கூடும் என்பதால் ”உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடி” (1தீமோ.4:12) என்றும் அறிவுரை கூறினார். இவையாவும் தீமோத்தேயுவின் தனிப்பட்ட பெலவீனங்கள். அவைகள் தீமோத்தேயுவுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவைகளை அப்.பவுல் நன்கு அறிந்திருந்தார்.

எனது நண்பர் தேவ் பெண்களைப் பற்றி அதிகமாக விமர்சனம் செய்வார். அவருடைய எண்ணங்களில் அது சோதனையாக எழும்பியதை அவர் அறியவில்லை. இது தனது பலவீனம் என்பதையும் அவர் அறிந்து கொள்ளவில்லை.

வாழ்வில் சோதனைகளை வெல்லவேண்டுமெனில் உங்களுடைய தனிப்பட்ட பலவீனங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். சோதனையை எதிர்க்க நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டு: சோதனை எழும்புவதற்கு முன்னர் அது நம்மைத் தாக்காதபடிக்கு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய பலவீனத்தை அடையாளம் கண்டுகொள்ள நம்பிக்கையான ஒருவர் அவசியம். நீங்கள் திருமணம் ஆனவர்கள் எனில், உங்களுடைய துணைவர் அதனை நன்கு செய்யலாம். சாத்தானின் சோதனையை மேற்கொள்ள ஒருவருக்கொருவர் உதவலாம்.

கார்லா என்னும் பெண்மணியைப் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். அவர் ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை செய்தார். திருச்சபையிலும் பாடற்குழுவில் இணைந்தும் நன்கு செயலாற்றினார். ஆனால் திருமண உறவில் அவர் ஏமாற்றத்தைக் கண்டார். எனவே தனது உணர்வுகளின் தேவையை நிறைவேற்ற மற்ற ஆண்களை எதிர்பார்க்கும் சோதனைக்குள்ளானார். தனது கணவன் டிம் அதனைச் செய்ய இயலாது என்று எண்ணினார். கார்லாவைவிட 20 வருடங்கள் மூத்தவரான கோன்னி என்னும் ஒரு போதகரின் மனைவி அவரை சந்தித்தார். இருவரும் இணைந்து வேதத்தை வாசித்தனர். தனது ஏமாற்றங்களை கார்லா அவரிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். கோன்னியின் ஆலோசனைகளால் கார்லா தனது குறைகளை கண்டுகொண்டார். மற்றவர்களிடம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பது தவறு என்று கோன்னி அவரைக் கண்டித்துத் திருத்தினார். கார்லாவும் ஆண்டவருக்குள் நிலைத்திருந்து வளர ஆரம்பித்தார். ஒரு தோழியை விட அதிகமாக அவருக்கு உதவிய தேவதூதனாக ஆனார். ஒரு பாசமுள்ள கடமைமிக்க மனைவியாக கார்லா மாறினார். இன்றும் நம்மிடையே அநேக கார்லாக்கள் இருக்கின்றனர். அவர்களை நல் வழிப்படுத்த கோனிக்கள் தேவை. நீங்களும் அவரைப்போல ஒருவராக இருக்கலாமே. இது ஒரு சீர்திருத்தும் ஊழியம். ஒரு மூத்த சகோதரியாக ஆவிக்குரிய வாழ்வில் அநேக கார்லாக்களுக்கு ஆலோசனை தருவது தேவன் உங்களுக்குத் தரும் ஒரு வரம். அச்சகோதரிகளுக்கு நீங்கள் தேவனருளிய ஒரு நல்ல ஈவு.

நீங்கள் சோதனையை எதிர்க்க வேண்டுமெனில், அதற்கு எதிரான ஆயத்தங்களைத் தயாராக்க வேண்டும். நமது உலகில் நாம் எவ்வாறு வாழவேண்டும், மற்றவர்கள் நமது பலவீனங்களை அறிந்து சுட்டிக்காட்டும்பொழுது  அவைகளை மேற்கொள்ள எதிர்ப்புகளை நாம் ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக: சோதனைகளை மேற்கொள்ள நாம் தேவனின் வளங்களை நாட வேண்டும். பிசாசை எதிர்த்து நிற்கும் வழிகள் வேதாகமத்தில் நிறைந்து காணப்படுகின்றன. வேதத்தை தியானிப்பவர்கள் சோதனையை எளிதில் ஜெயித்து விடுகிறார்கள். தேவனுடைய வளங்களை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளுகிறார்கள். தேவனுடைய வார்த்தை தரும் ஆலோசனைகள் எளிதானதிலிருந்து சிறந்தது வரை உள்ளடக்கியது. நாம் செயல்படுத்தும் விதமாய் ஆழமானவைகளைக் கொண்டன. எடுத்துக்காட்டாக சோதனையை எதிர்க்கும் போருக்கு பவுல் தரும் ஆலோசனையானது, ”தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசி.6ஆம் அதி.) இதனை நீங்கள் பயன் படுத்துவீர்களானால் சாத்தானை நேரில் எதிர்க்க முடியும். இல்லையெனில் இவ்வாயுதம் தரித்தவர்களின் பின்னால் நின்று கொள்ளுங்கள்.

சாத்தானுடன் போர்புரிய யோபு சில ஆலோசனைகள் தருகிறார். ”என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (யோபு31:1). இதனை அவர் கூறியபொழுது முதியவராயிருந்தார். அந்த வயதிலும் இச்சையின் சோதனையை அறிந்திருந்தார். ஆனால் அதில் அவர் விழவில்லை. அதனை எதிர்க்கும் வழியை அறிந்திருந்தார். ஆனால் என் நண்பர் தேவ் இதனை மறந்துவிட்டார். அவருடைய இச்சையை நிறைவேற்ற கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவைகள் தொலைநோக்கிக் கருவிகளாக இருந்தன. நீங்கள் சோதனையில் விழுந்துவிட்டீர்கள் எனில், அதிலிருந்து மீண்டு வருவது இயலாத காரியம். நம்மை பாவத்துக்கு நேராக வழிநடத்தும் கோபம், நிலையற்ற தன்மை, மனமடிவு இவைகளை நாம் அலட்சியப் படுத்தக்கூடாது. இவைகளே நம்மை வீழ்த்தும் சோதனைகள். தேவவசனத்தின் ஒத்தாசையுடன் பாவ சோதனைகளை வெல்ல, தந்திரமுள்ள சாத்தானுடன் போருக்கு நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அப்பொழுது நமக்கு வெற்றி நிச்சயம்!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்