தீர்க்கதரிசன வாக்கியங்களில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு!

திரு.எம்.எஸ்.வசந்தகுமார்
(ஜனவரி-பிப்ரவரி 2018)
(கடந்த இதழின் தொடர்ச்சி)

ரோம சாம்ராட்சியத்தில் “ஒகஸ்டஸ்” என்பவன் (தமிழில் அகுஸ்து ராயன்) அரசனாக இருந்தபோது ரோம ராட்சியத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் குடியிருப்பாளர்களிடம் வரி வசூலிக்கப்படுவதற்காக குடி மதிப்பு எடுக்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவன் கி.மு 27 முதல் கி.பி 14 வரை ரோமின் அரசனாக இருந்தான். அக்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்த யூதேயா சிரியாவின் ஒரு பகுதியாக இருந்ததினால், அக்காலத்தில் “சிரேனியு” என்பவன் சிரியாவின் தேசாதிபதியாக இருந்தான் என்றும் லூக்கா குறிப்பிட்டுள்ளார். ரோம சரித்திரத்தின்படி, இவன் கி.பி. 6ம் 7ம் ஆண்டுகளிலேயே சிரியாவின் தேசாதிபதியாக பணிபுரிந்துள்ளான்.

எனவே, இவனுடைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட குடிமதிப்பு கி.பி 6ம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டது. இந்த குடிமதிப்பைப் பற்றி அப்போஸ்தலர் 5:37ல் லூக்கா குறிப்பிட்டுள்ளார். யூத வரலாற்றாசிரியர் ஜேசீப்பசின் குறிப்புகளிலும் இதைப்பற்றி நாம் வாசிக்கலாம்.  இதனால் லூக்கா 2:2ல் உள்ள குடிமதிப்பை “முதலாவது குடி மதிப்பு” என்று கூறமுடியாது. இது மொழிபெயர்ப்பின் குறைபாடாகும். ஏனெனில், “முதலாவது” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், “முந்திய” என்னும் அர்த்தமுடையது. எனவே, “சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாய் இருப்பதற்கும் முன்பு இந்த குடிமதிப்பு எடுக்கப்பட்டது” என்றே 2ம் வசனம் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, இந்த மொழிபெயர்ப்புக் குறைபாட்டை அறியாத நிலையில் “லூக்கா சரித்திர ரீதியாக பிழை விட்டுள்ளார்” என்று சிலர் தர்க்கிப்பது அர்த்தமற்றது. 14 ஆண்டுகளுக்கு ஒரு தடவை குடிமதிப்பு எடுக்கப்படும் முறையின்படி இதற்கும் முற்பட்ட குடிமதிப்பு கி.மு.8ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும். கி.மு. 8ம் ஆண்டில் குடிமதிப்பு எடுக்கப்பட்டபோதே இயேசு கிறிஸ்து பிறந்துள்ளதை ஏனைய சரித்திர குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. வேதாகமக் குறிப்புகளின்படி, யூதேயாவின் அரசனாக இருந்த ஏரோது மரிப்பதற்கும் முன்னர் இயேசுகிறிஸ்து பிறந்துள்ளார் (மத்.2:1, லூக்.1:5). ஏரோதுவின் மரணம் கி.மு. 4ம் ஆண்டில் நடைபெற்றதாக வர லாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். எனவே இயேசுகிறிஸ்து கி.மு. 4ம் ஆண்டிற்கும் முன்பே, லூக்கா குறிப்பிடுவதுபோல சிரியாவில் சிரேனியு என்பவன் தேசாதிபதியாய் இருப்பதற்கும் முன்பு கி.மு.8ல் பிறந்திருக்கவேண்டும்.

3. இயேசுகிறிஸ்து எப்படிப்பட்டவராய் இருப்பார்?

இயேசுகிறிஸ்து “ஸ்திரீயின் வித்தாக” (ஆதி.3:15) “பெத்லகேமில் பிறப்பார்” (மீகா.5:2) என்பதை முன்னறிவித்த வேதாகமத் தீர்க்கதரிசனங்கள் அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார். என்பதையும் அறியத்தந்துள்ளன. இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய இரண்டு தீர்க்கதரிசனங்கள் அவர் பிறப்பதற்கும் 700 வருஷங்களுக்கு முன்னர் ஏசாயாவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான இத்தீர்க்கதரிசனங்களில் ஒன்று அவர் கன்னியின் வயிற்றில் கருத்தரித்துப் பிறப்பார் என்பதை முன்னறிவித்துள்ளதை “அவர் எப்படி பிறப்பார்?” என்னும் பகுதியில் நாம் ஏற்கனவே பார்த்தோம் (ஏசா.7:14). இரண்டாவது தீர்க்க தரிசனம் அவர் ஒரு பாலகனாய் பிறப்பார் என்பதை முன்னறிவிப்பதோடு, அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதையும் நமக்கு அறியத் தருகின்றது. ஏசாயா 9ம் அதிகாரம் 6ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தீர்க்கதரிசனத்தில் பின்வருமாறு நாம் வாசிக்கிறோம். “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்” (ஏசாயா 9:6).

இயேசுகிறிஸ்து ஒரு பாலகனாய் பிறப்பார் என்பதை முன்னறிவிக்கும் இத்தீர்க்கதரிசனம், அவர் யார் என்பதை நமக்கு அறியத்தரும் விவரணமாய் உள்ளது. இயேசுகிறிஸ்து “பாலகனாகப் பிறந்தார்” என்னும் வாக்கியம், அவர் மனிதக் குழந்தையாகப் பிறந்துள்ளதை அறியத்தருகையில், “குமாரன் கொடுக்கப்பட்டார்” என்னும் வாக்கியம், பாலகனாகப் பிறந்தவர் தேவனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அவருடைய குமாரன் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், அவர் ஒரு பாலகனாகப் பிறந்தாலும் அவர் தேவன் என்பதை நமக்கு சுட்டிகாட்டுகின்றன. ஏனெனில், அவரைப்பற்றி இவ்வசனத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் தேவனுக்கு மாத்திரமே பொருத்தமானவைகளாக உள்ளன.

மேலும், உலகில் பிறக்கின்ற மனிதர்கள் அனைவரும் வளர்ந்து பெரியவர்களானதற்குப் பிறகே அவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்பதை நாம் அறிந்துகொள்வோம். ஆனால், இயேசுகிறிஸ்துவைப் பொறுத்தவரை, அவர் மனிதனாக இவ்வுலகத்திற்கு வருவதற்கும் முன்பே தேவனாக இருந்ததினால், அவர் பிறப்பதற்கும் முன்பே அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதை வேதாகமத் தீர்க்கதரிசனங்கள் நமக்கு வெளிப்படுத்தியுள்ளன. ஏசாயா 9:6ல் இயேசுகிறிஸ்து பிறப்பதற்கும் ஏறக்குறைய 700 வருஷங்களுக்கும் முன்பு அவரைப்பற்றி சொல்லப்பட்டவைகளை இப்பகுதியில் பார்ப்போம்.

(அ) ஆளுகை செய்பவர்:

இயேசுகிறிஸ்து மானிட பாலகனாய் பிறந்தாலும் அவர் முழு உலகையும் ஆளுகை செய்யும் ராஜாவாக இருக்கின்றார் என்பதை இத்தீர்க்க தரிசனம் சுட்டிக்காட்டுகிறது. இதனால்தான், “கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்” என்று இத்தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் அரசர்கள் தாங்கள் ராஜா என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்விதத்தில் தங்கள் தோளின்மீது ராஜரீக சால்வை ஒன்றை அணிந்திருப்பது வழக்கம். இதனால்தான், “கர்த்தத்துவம்” அதாவது ஆளுகை “அவர் தோளின்மீது இருக்கும்” என்று இவ்வசனம் கூறுகிறது.

எனினும் இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்துக்கு வந்தபோது அவர் சாதாரண மனிதனாகவே இருந்தார். ஏனெனில் அவர் மனிதரைப் பாவத்திலிருந்து மீட்பதற்கான பலியைச் செலுத்துவதற்காகவே மனிதனாக வந்ததினால், அவர் தம்முடைய ராஜரீக மேன்மையை துறந்தவராக இவ்வுலகில் வாழ்ந்தார். ஆனால், அவர் மறுபடியும் இவ்வுலகத்துக்கு வரவிருக்கின்றார் (அப்.1:11). அப்பொழுது ராஜாதி ராஜாவாக அவர் வருவார் என்பதை வெளிப்படுத்தல் புத்தகம் அறியத்தருகின்றது. அப்போஸ்தலனாகிய யோவானுக்கு இதைப்பற்றிய தரிசனம் கொடுக்கப்பட்டபோது அவர், “ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின” என்று குறிப்பிட்டுள்ளார் (வெளி.11:15). இயேசுகிறிஸ்து பாலகனாக இவ்வுலகத்திற்கு வந்தாலும் அவர் ராஜாதி ராஜாவாக இருந்ததினாலேயே அவரைத் தரிசிக்க வந்த ராஜாக்களான வான சாஸ்திரிகள் சாஷ்டங்கமாய் விழுந்து அவரைப் பணிந்து கொண்டார்கள் (மத்.2:11).

இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் அவரை ஒரு பாலகனாக மாத்திரம் பார்க்கக்கூடாது. அவர் பாலகனாக இவ்வுலகத்திற்கு வந்தது உண்மை என்றாலும், அவர் முழு உலகையும் ஆளுகை செய்யும் ராஜாதி ராஜாவாக இருக்கின்றார். இயேசுகிறிஸ்து பிறந்த காலத்தில் அவரைத் தரிசிக்க வந்த வானசாஸ்திரிகள் இதனை அறிந்திருந்தனர். இதனால்தான். அக்காலத்தில் யூதேயாவின் ராஜாவாக இருந்த ஏரோது என்பவனிடம் சென்ற அவர்கள், “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்.2:2). சாஸ்திரிகளின் கேள்வி, இனிமேல்தான் அவர் ராஜாவாகப்போகிறவர் என்ற அர்த்தத்தில் அல்ல, அவர் ராஜாவாகவே பிறந்துள்ளார் என்னும் அர்த்தத்திலேயே உள்ளது. ஏனெனில், அவர்கள் ராஜாவைத் தேடியேச் சென்றார்கள்.

இயேசுகிறிஸ்து பிறந்தபோது, அவருடைய பிறப்பை அறிவிக்கும் விதத்தில் தேவன் வானத்தில் சிறப்பான ஒரு நட்சத்திரத்தைத் தோன்றப் பண்ணினார். இதைப்பற்றி ஆராய்ச்சி செய்த வானசாஸ்திரிகள் யூதர்களுடைய வேத நூலான பழைய ஏற்பாட்டின் மூலம், தாங்கள் வானத்தில் கண்ட நட்சத்திரம் யூதருடைய ராஜாவின் பிறப்பை அறிவிப்பதற்காகத் தோன்றிய சிறப்பான நட்சத்திரம் என்பதை எண்ணாகமம் 24:17 மூலம் அறிந்துகொண்டார்கள். ஏனெனில், இவ்வசனத்தில், “ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிருந்து எழும்பும்” என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் யூதருடைய ராஜாவைத் தேடி எருசலேமுக்குச் சென்றார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவை பாலகனாகக் கண்டபோது, தாங்கள் கொண்டு வந்திருந்த பெறுமதிப்பான பொருட்களை அவருக்குப் பரிசாகக் கொடுத்து அவரை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார்கள் (மத்.2:11). சாஸ்திரிகள் இயேசுகிறிஸ்துவை “பணிந்துகொண்டார்கள்” என்றே மத்தேயு 2:11இல் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மூல மொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், “வழிபட்டார்கள்” என்னும் அர்த்தமுடையது. அவர்கள் இயேசுகிறிஸ்துவை ராஜாவாக மாத்திரல்ல, தெய்வமாக இருப்பதையும் அறிந்தவர்களாக அவரை வழிபட்டனர், இன்றைய நாட்களில் நாம் இயேசுகிறிஸ்துவைப் பாலகனாக அல்ல, ராஜாவாகவும் தெய்வமாகவும் அறிந்து அவரை வழிபடவேண்டும். “இயேசுகிறிஸ்து மனிதனாக வந்த தெய்வமாக இருப்பதனால், அவரே நம்முடைய வழிபாட்டுக்கு உரியவராக இருக்கின்றார்”.

(ஆ)அதிசயமான ஆலோசகர்

ராஜாதி ராஜாவாய் இருக்கும் இயேசுகிறிஸ்து “அதிசயமான ஆலோசகராகவும்” இருக்கின்றார். ஏசாயா 9:6ன்படி, இயேசுகிறிஸ்துவுக்கு ஐந்து பெயர்கள் இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால் கி.பி.1611ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ஜேம்ஸ் அரசனுடைய வேதாகமம் அதிசயமான ஆலோசகர் என்னும் சொற்களுக்கு இடையில் ஒரு அரைப் புள்ளியைப் போட்டு, இதை இரண்டு பெயர்களாக மொழிபெயர்த்துள்ளது. இதனால், இதைத் தழுவிய நம் தமிழ் வேதாகமத்திலும், “அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தா” என்று இரண்டு பெயர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மூலமொழியில் இவையிரண்டும் தனியொரு பெயராகவே உள்ளது. எனவே, இவ்வசனத்தில் அதிசயமானவர் என்பது தனியான ஒரு பெயர் அல்ல. இது ஆலோசனைக் கர்த்தா என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள சொல்லோடு சேர்ந்து வரவேண்டும். எனவே மூலமொழியின்படி இதனை “அதிசயமான ஆலோசகர்” என்றே மொழிபெயர்க்கவேண்டும். இதனால்தான் புதிய ஆங்கில மொழிபெயர்ப்புகளில் Wonderful Counsellor என்று இதனை மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் திருவிவிலியத்தில் “வியத்தகு ஆலோசகர்” என்றும், இலங்கையில் வெளியிடப்பட்ட புதிய இலகு தமிழ் மொழி பெயர்ப்பில் “அதிசயமான ஆலோசகர்” என்றும் சரியாக மொழிபெயர்த்துள்ளனர்.

இயேசுகிறிஸ்து ஆலோசகராக இருக்கின்றார். அவருடைய ஆலோசனைகள் மனிதருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் அற்புதமானவைகளாக இருக்கும். ஏனெனில், அவருடைய ஆலோசனைகள் வெறும் மனித அறிவுரைகளாக இராமல் தேவனால் அருளப்படும் அறிவிப்புகளாகவே இருக்கும். இதனால்தான் அவருடைய பிரசங்கங்களைக் கேட்டவர்கள் தாங்கள் இதுவரையில் இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்பட்டதில்லையே என்று ஆச்சரியப்பட்டார்கள்.

உண்மையில், இயேசுகிறிஸ்து அதிகாரத்துடன் போதித்தார் என்று மாற்கு 1:22 கூறுகிறது. இவ்வசனத்தில் “அதிகாரம்” என்பதற்கு மாற்கு மூலமொழியில் உபயோகித்த சொல் தெய்வீக அதிகாரத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். இயேசு கிறிஸ்து தேவனாக இருப்பதனால், அவர் தெய்வீக அதிகாரத்துடன் நமக்கு ஆலோசனையளிப்பவராக இருக்கின்றார். அவரே நம்முடைய ஞானமாய் இருக்கின்றார் (1கொரி.1:31). அவருடைய ஆலோசனைகள், இவ்வுலகத்திலும் இனிவரவிருக்கும் உலகத்திலும் நாம் ஆசீர்வாதமும் ஆனந்தமும் உள்ளவர்களாய் இருப்பதற்கு அவசியமான அறிவுரைகளாக உள்ளன. எனவே, நாம் அவருடைய ஆலோசனைகளுக்கு முக்கியத்துவமும் முதலிடமும் கொடுக்க வேண்டும். அவருடைய ஞானமான ஆலோசனைகள் அனைத்தும் தற்காலத்தில் அவருடைய வார்த்தையான வேதாகமத்தில் உள்ளன. இது “பேதைகளை ஞானிகளாக்கும்” என்றும் (சங்.19:7), அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும் (சங்.119:130) என்றும் சங்கீதக்காரன் தன் அனுபவத்தை அறியத்தந்துள்ளான். உண்மையில், தேவனுடைய வார்த்தையான வேதாகமமே, “நம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாய் இருந்து” (சங்.119:105) நாம் செல்ல வேண்டிய பாதையை நமக்குக் காண்பித்து, நம் வாழ்வுக்கு அவசியமான சகல ஆலோசனைகளையும் தருகின்றது. இதனால், அதிசயமான ஆலோசகராக இருக்கும் இயேசுகிறிஸ்துவின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு நாம் அவருடைய வார்த்தையான வேதாகமத்தை அன்றாடம் வாசிக்கிறவர்களாக இருக்கவேண்டும்.

(இ).வல்லமையுள்ள தேவன்

இயேசுகிறிஸ்து மானிட பாலகனாய் பிறந்தாலும் அவர் தேவன் என்பதை அறியத்தரும் விதத்தில் அவர் “வல்லமையுள்ள தேவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் மானிட அரசர்களைப் பற்றியது அல்ல என்பதை இப்பெயர் உறுதிப்படுத்துகிறது. ஏனெனில், ஏசாயா 10:21இல் “வல்லமையுள்ள தேவன்” என்னும் சொற்பிரயோகம் தேவனையே குறிப்பதனால், இவ்வசனத்திலும் பாலகனாய் பிறப்பவர் தேவன் என்பதையே அறியத் தருகிறது. அதேசமயம், வல்லமை என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் வேதாகமத்தில் தேவனைக் குறிப்பிடுவதற்கே உபயோகிக்கப்பட்டுள்ளதனால், இவ்வசனத்தில் பாலகனாய்ப் பிறக்கும் இயேசுகிறிஸ்து தேவன் என்பதையே இச்சொல் சுட்டிக்காட்டுகிறது.

இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும் அவர் தேவன் என்பதை வேதாகமம் பல இடங்களில் நேரடியாக குறிப்பிட்டுள்ளது. “தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்” (1தீமோ. 3:16) “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோ.2:9) என்று கூறும் பவுல், “இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்” (ரோம.9:5) என்றும், “மகா தேவன்” (தீத்து2:13) என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இயேசுகிறிஸ்துவை “வார்த்தை” என்று குறிப்பிடும் யோவான், அவர் “ஆதியிலிருந்தே தேவனாய் இருந்தார்” (யோவா.1:1) என்றும், “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (யோவா.1:14) என்றும் குறிப்பிட்டுள்ளார். இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்தாலும், அவர் தேவனாக இருந்ததினாலேயே தெய்வத்தினால் மாத்திரம் செய்யக் கூடிய செயல்களை அவர் செய்தார். அவர் செய்த அற்புதங்கள், அவர் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை நமக்கு அறியத்தருகின்றன.

இயேசுகிறிஸ்து வல்லமையுள்ள தேவனாக இருக்கின்றதினால் நாம் பலவீனமடையும் நேரங்களில் நம்மைப் பெலப்படுத்துகிறவராக இருக்கின்றார். இதை அனுபவரீதியாக அறிந்திருந்த அப்போஸ்தலனாகிய பவுல், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று கூறக் கூடியவராக இருந்தார் (பிலி.4:13), அது மாத்திரமல்ல, நம்மால் செய்யமுடியாத காரியங்களை நமக்காக அவர் செய்கிறவராகவும், அவற்றைச் செய்யக்கூடியவராகவும் இருக்கின்றார். இதனால்தான், “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவா.15:5) என்று இயேசு கிறிஸ்து தெரிவித்துள்ளார். எனவே, நம்முடைய பலவீனங்கள், இயலாமை, குறைவுகள், தோல்விகள் என்பவற்றை நினைத்து வேதனையும் விரக்தியும் அடையாமல், சகலத்தையும் செய்யக் கூடிய ஆற்றல்மிக்க சர்வவல்லமையுள்ள தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் பெலனை நாம் பெற்றுக் கொள்ளவேண்டும்.

(ஈ) நித்திய பிதா

இயேசுகிறிஸ்து “நித்திய பிதா” என்றும் அழைக்கப்பட்டுள்ளார். சில கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பிதா என்று அழைப்பது பொருத்தமற்றது என்று கருதுகின்றனர். ஆனால் எபிரேய மொழி வழக்கில் ஒன்றினது தன்மையை ஒருவருக்கு கொடுக்கும்போது அவரை அதனது பிதா என்று அழைக்கும் வழக்கம் இருந்தது. உதாரணத்திற்கு வல்லமையானவனை வல்லமையின் பிதா என்றும், செல்வந்தனை செல்வத்தின் பிதா என்றும் அழைப்பது அவர்களது வழக்கம். இதனால்தான் பொய்யனாய் இருக்கும் சாத்தானை இயேசு கிறிஸ்து “பொய்யின் பிதா” என்று குறிப்பிட்டுள்ளார் (யோவா.8:44). எனவே இயேசுகிறிஸ்து நித்திய பிதா என்பதை “நித்தியத்தின் பிதா” என்றே மொழிபெயர்க்கவேண்டும். அதாவது அவர் நித்தியமானவர் என்பதையே இச்சொற் பிரயோகம் அறியத்தருகின்றது. இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்தில் பிறந்ததினால், அவருடைய வாழ்வு அவரது பிறப்பிலேயே ஆரம்பமானது என்று கருதுவது தவறாகும். அவர் மனிதனாக இவ்வுலகத்திற்கும் வருவதற்கும் முன்பே நித்தியமானவராக இருந்தார்.

(உ).சமாதானப்பிரபு

இயேசுகிறிஸ்து சமாதானப்பிரபுவாக இருக்கின்றார். அதாவது அவரே சமாதானத்தைத் தருகிறவராகவும், அதைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பவராகவும் இருக்கின்றார். இதனால்தான் அவரை “சமாதான காரணர்” என்று பவுல் குறிப்பிட்டுள்ளார் (எபே.2:14). எனினும், இயேசுகிறிஸ்து தருகின்ற சமாதானம் சண்டைகளற்ற சகஜ நிலையை அல்ல, பகையும் பிரிவினையும் நீக்கப்பட்டு ஒப்புரவாக்கப்படுவதாகவே உள்ளது. ஏனெனில், பாவம் காரணமாக மனிதர் அனைவரும் தேவனுடன் உறவற்ற நிலையில் இருக்கின்றனர்.

பாவம் தேவனுக்கும் மனிதருக்கும் இடையில் பகையையும் பிரிவினையையும் ஏற்படுத்தியுள்ளது (ஏசா.59:2). இதனால் பாவிகளான மனிதரினால் தேவனுடன் உறவுகொள்ள முடியாமல் உள்ளது. ஆனால், இயேசுகிறிஸ்துவினுடைய சிலுவைப்பலி, தேவனையும் மனிதரையும் பிரித்திடும் பாவத்தை நீக்கி மனிதரைத் தேவனுடன் ஒப்புரவாக்குகிறது. இதுவே இயேசு கிறிஸ்து உருவாக்கும் சமாதானமாயுள்ளது (எபே.2:14-16,ரோம.5:1,5:10). மேலும் இத்தகைய சமாதானம் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டவர்களுடனும் சமாதானத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், இத்தகைய சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்தார். இதனால்தான் அவர் சமாதானப்பிரபுவாக இருக்கின்றார்.

எனவே, நாம் தேவனுடனும் மற்றவர்களுடனும் ஒப்புரவாக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.


நினைவுகூருங்கள்

தேவசமுகம் நம்முன் செல்லாவிடின் நாம் ஒருபோதும் ஜெயமுள்ள வாழ்வு வாழமுடியாது.

சத்தியவசனம்