மிஷனெரிக்கான கரிசனை

ஆ.பிரேம்குமார்
(ஜனவரி-பிப்ரவரி 2018)

மிஷனெரிக்கான கரிசனை ஏன் அவசியம்?

சுவிசேஷத்திற்குத் தடையான ஒரு நாட்டினுள் கணவனும் மனைவியும், கூடாரம் அமைக்கும் மிஷனெரிகளாக ஊழியம் செய்துகொண்டிருந்தனர். அங்கு மற்றும் ஒரு இளம்பெண் குறுகியகால அனுபவம் பெற்றுக்கொள்வதற்காக, மிஷனெரி பிரயாணமொன்றை மேற்கொண்டு சென்றார். அந்த வேளையில் அங்கிருந்த நமது மிஷனெரி இந்த சகோதரியிடம் “நாம் தனிமையில் இருக்கிறோம். நண்பர்கள் யாராவது தொலைபேசியில் தொடர்புகொண்டால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். பிறந்தநாள் வாழ்த்து மடல் வரும்போதும், தொலைபேசி அழைப்பு வரும்போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும்” என்றார். அந்த மிஷனெரி கூறிய காரியத்தின் தாற்பாரியத்தை குறுகிய காலத்திற்கு சென்றிருந்த இந்த சகோதரியினால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த சகோதரியும் சில வாரங்களாக அவர்களோடு இருக்கையில், இவரையும் தனிமை வாட்டத்தொடங்கியது.

அப்பொழுது “அவர் எப்படியிருக்கிறார்” என்று விசாரிக்க நாங்கள் தொலைபேசி அழைப்பு விடுத்தபோது தன்னிலும் கரிசனையாய் இருக்கிறார்கள், தன்னையும் விசாரிக்கிறார்கள் என்ற உணர்வினால் அவரால் சந்தோஷத்தைத் தாங்கமுடியவில்லை. சந்தோஷத்தில் அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கினார். நமது மிஷனெரி தம்பதியிடம் தனித்தனியாகச் சென்று, தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அப்பொழுது நமது மிஷனெரி “இப்பொழுது நான் முதலில் சொன்னது உங்களுக்கு விளங்குகிறதல்லவா” எனக் கேட்டார்.

நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்போது மற்றவர்கள் தம்மைப்பற்றி நினைக்கிறார்கள், தம்மில் அக்கறை கொள்கிறார்கள் என்பது தூர இடங்களில் தனிமையில் இருக்கும் மிஷனெரிகளைப் பெரிதாக உற்சாகப்படுத்தும்!

மிஷனெரிகள் ஆண்டவரை மட்டும் தானே நம்பிப்போகவேண்டும். ஆண்டவர் அவர்கள் மேய்ப்பனாயிருந்து அவர்களை வழிநடத்துவார். அப்படியானால் நாம் ஏன் மிஷனெரிகளில் கரிசனை செலுத்தவேண்டும் என நீங்கள் கேட்கலாம்? தூர இடங்களில் இருக்கும் மிஷனெரிகளுக்கு, நாம் இங்கிருந்து எப்படி கரிசனை செலுத்துவது என்றும் நீங்கள் கேட்கலாம்? இந்தக் கட்டுரையில், நாம் ஏன் மிஷனெரிகளில் அக்கறை காட்டவேண்டும் என்பதை கவனிப்போம்.

மிஷனெரிகளை அனுப்பும் சபை அல்லது மிஷனெரி ஸ்தாபனத்தின் கண்ணோட்டத்தில் அங்கத்தினர் மீதான அக்கறை ஏன் அவசியமானது?

1. மிஷனெரிகள் தளத்தில் நீடித்திருப்பதற்கு
(To sustain the workers)

கரிசனை பெறுபவர்கள் நீண்ட காலம் ஊழியம் செய்வார்கள் (People who are cared for will serve longer). இவர்களில் மற்றவர்கள் அக்கறை செலுத்தி உற்சாகப்படுத்துவதால், இவர்கள் தங்கள் ஊழியத் தளங்களை இலகுவில் விட்டுவிட்டு வராதிருப்பார்கள்.

ஏற்கனவே இவரைப் பயிற்றுவிப்பதற்கும், ஆயத்தப்படுத்துவதற்கும், ஊழியத்தளத்திற்கு அனுப்புவதற்கும் மிஷனெரி ஸ்தாபனம் அல்லது சபை பெரிதான முதலீடு (பணம், நேரம், சக்தி) செய்துள்ளது. அவர் தளத்திலிருந்து விலகினால் அவ்வளவு முதலீடும் வீணாகிவிடும். அதுமட்டுமல்ல, இவரது நிலைக்கு இன்னொருவரைக் கொண்டு வருவதற்காக மீண்டும் முதலீடு செய்ய நேரிடும். எனவே இருப்பவர்களை இலகுவில் இழந்துவிடாமலிருக்க, அவர்களில் கரிசனை செலுத்தி சரீர ரீதியான, உளரீதியான உறவுமுறை ரீதியான (தேவனோடும், மற்றவரோடும்) தேவைகளைச் சந்தித்து, அவர்கள் பிரச்சனைகளில் உதவி செய்து நமது கரிசனையை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களை நீடித்திருக்கப் பண்ணலாம். இவ்வாறான செயற்பாடுகளினால் அவர்கள் தீர்க்கக்கூடிய பிரச்சனைகளினிமித்தம் ஊழியத்தைவிட்டு விலகுவதைத் தவிர்க்க முடியும்.

2. செயல்திறன் மிக்க ஊழியம் செய்வதற்கு

தங்களை அனுப்பிவிட்டு தங்களை மறந்து விட்டார்கள். கரிசனையற்று இருக்கிறார்கள். அறிக்கைகளை மட்டும் அனுப்பக் கேட்கிறார்கள். ஆனால், தம்மிலோ அக்கறையேயில்லை என்ற உணர்வு அவர்கள் மனபலத்தை, மன உறுதியை (Moral) உடைத்து அவர்களை அதைரியப்படுத்தி அவர்கள் ஊழியத்தையும் பாதித்துவிடும். சரீரநலம், உளநலம், பிள்ளைகளின் கல்வி போன்ற பிரச்சனைகள் இருக்கையில் அவர்களால் ஊழியத்தில் முழு கவனத்தை செலுத்தமுடியாமல் ஊழியமும் பாதிப்புறுகிறது. ஆனால் தம்மை அனுப்பியவர்கள் தம்மில் அக்கறையோடிருக்கிறார்கள் என்பது அவர்களை செயற்திறனுடன் செயல்பட ஊக்குவிக்கும். எனவே அவர்கள் ஊழியமும் விருத்தியடைந்து அதிக பலன் கிட்டலாம். நல்ல கரிசனையின் விளைவாக ஊழியர்களின் மன உறுதி உயர்வான நிலையிலிருக்கும். இது செயற்திறனை (Productivity) அதிகரிக்கப்பண்ணும்.

3. அவர்களை பாதுகாப்பதற்கும், கணக்கு ஒப்புவிக்கத்தக்கவர்களாக வைப்பதற்கும்.

தம் சொந்த இடத்தைவிட்டு, சபையைவிட்டு, உறவுகளை விட்டுத் தூர இடங்களில் இருப்பதால், அவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க முடியாத நிலையில் அவர்கள் பாவ சோதனைகளில் விழுந்துவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலத்தில் அடிமைப்பட்டிருந்து மேற்கொண்ட பழைய சோதனைகள் கூட தனிமை, அதைரிய வேளைகளில், பரீட்சார்த்த சூழ்நிலைகளில் மேலெழும்ப வாய்ப்பிருக்கின்றது. எனவே அனுப்பிய சபை அல்லது ஸ்தாபனத்தைச் (அல்லது இரண்டையும்) சேர்ந்தவர்கள் அடிக்கடி அவர்களோடு தொடர்பில் இருந்து விசாரிப்பது பொறுப்புணர்வை அல்லது கணக்கொப்புவித்தலையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது. அது மாத்திமல்லாமல் ஊழியத் தளத்தில் அவர்களை விசாரிக்க ஏற்படுத்தப் பட்டவர்களின் கரிசனையும், விசாரிப்பும், அவர்கள் கேட்கும் கேள்விகளும்கூட கணக்கொப்புவித்தலை ஊக்குவித்து பாதுகாப்பைக் கொடுக்கிறது. அவர்கள் வெறுமனே ஊழியம், ஊழியமென ஓடியோடி, ஓய்வெடுக்காது, ஆவிக்குரிய உணவுகள் உட்கொள்ளாது பெற்றுக்கொள்ளாது கொடுத்துக்கொண்டே இருந்தால், ஒருகட்டத்தில் தமது சக்தியை இழந்து வெந்துபோன நிலைக்கு வந்துவிடுவார்கள். ஊழியத்திற்கான ஆர்வத்தையும், ஏன் கடவுளோடு உள்ள உறவையுங்கூட இழந்துவிட நேரிடலாம். எனவே மிஷனெரிக்கான கரிசனையானது மிஷனெரிகளை பாதுகாத்து, கணக்கு ஒப்புவிப்பவர்களாக மாற்றுகிறது.

மிஷனெரிக்கான கரிசனையானது மிஷனெரியின் கண்ணோட்டத்தில் ஏன் அவசியமானது?

1. மிஷனெரிகளுக்கு ஊக்குவிப்பு மிக அவசியமாகும்.

தேவனோடு நெருங்கி ஜீவித்த தலைசிறந்த மிஷனெரியான பவுலுக்குக்கூட மிஷனெரிக்கான கரிசனை ஊக்குவிப்பு அவசியமாக இருந்தது. பண உதவி (பிலி.4:10-19), ஜெப உதவி (எபேசி. 6:19,20,2தெச.3:1,2), மக்களின் நேரடியான தனிப்பட்ட உதவி, ஊக்குவிப்பு அவசியமாயிருந்தது (2தீமோத்.4:11-13), (1கொரி.16:15-18, 2தீமோத்.1:16).

சபைகளே இல்லாத மினிக்கோய் என்ற பிரதேசத்திலிருந்து இந்தியாவிலுள்ள கொச்சின் பிரதேசத்திற்கு வந்துள்ள, மினிக்கோய் மக்கள் மத்தியில் ஊழியம் செய்யச் சென்றிருந்த ஒரு மிஷனெரி, தான் சந்தித்த ஓர் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இவர் கொச்சியில், ஒருமுறை பேருந்தில் ஏறி கிடைத்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி இவரைக் கோபத்துடன் பார்த்தார். நடத்துனர் (கண்டக்டர்) இவரிடம் கடுமையான தொனியில் வேறு ஆசனத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார். ஏனெனில் அக்கலாச்சாரத்தில் பெண்கள் அருகில், ஆண்கள் உட்காருவது இல்லை (கணவன் உட்காரலாம்). இது இவருக்கொரு கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது.

உணவுப் பழக்கவழக்கங்கள்கூட இடத்திற்கிடம் வேறுபடலாம். பீஹாரில் மக்கள் கடுகு எண்ணெயால் சமைப்பார்கள். அவர்களது சில உணவுகளை உட்கொள்ளப் பழகுவது, நமது மிஷனெரிகளுக்கு சவாலாக இருந்ததுண்டு. காலநிலையும் வித்தியாசம். உதாரணமாக பீஹாரில் கடுங்குளிர் நிலவும் காலங்களில், எருமை மாடுகள் குளிரில் மரித்து விடக்கூடாது என்பதற்காக அவற்றிற்கு சாக்கினால் உடை அணிவிப்பதுண்டு. வெயில் காலத்தில் கடும் வெயினால் உடலில் கொப்பளங்கள் கூட ஏற்படுவதுண்டு. இந்தப் பிரதேசங்களுக்குச் சென்று, அங்கு நீண்ட நாட்கள் தங்குவதற்கான வீசா பெற்றுக்கொள்வது இலகுவல்ல. குறுகியகால வீசா கிடைத்திருப்பின் அதனை புதுப்பிக்க அடிக்கடி நாடு திரும்ப நேரிடும். இது அதிக செலவை ஏற்படுத்துவதுடன் பிள்ளைகளின் படிப்பையும், ஊழியத்தையும்கூட பாதிக்கலாம்.

இவை மட்டுமல்ல, மக்களுக்கு நற்செய்திகளை அறிவிக்க ஆவலோடு சென்றவர்கள் பாஷை படிப்பதற்கே குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. அவர்களோடு பேசுவதற்கு பாஷை, ஒரு தடையாயிருக்கிறது. நமது சில மிஷனெரிகள் ‘ஐயோ! இந்த பாஷையை என்னால் கற்கவே முடியாது’ என்று எண்ணிய சூழ்நிலைகளும் உண்டு (ஆனால் இன்று அப்பாஷைகளில் பிரசங்கிக்கவும் ஆண்டவர் உதவி செய்துள்ளார்). இவைகள்தான் போராட்டங்கள் என்றால் மக்கள் இவர்களைப் பற்றி எழுப்பும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதிலளிப்பதும் இலகுவானதொன்றல்ல!

எந்த ஜனத்தை ஆதாயம் செய்யச் சென்றார்களோ, அவர்களே இவர்களைப் புறக்கணிப்பது, இவர்களது உண்மையான அன்பை சந்தேகப்படுவதும், எதிர்பார்த்த வேகத்தில் பலன் கிடைக்காமையும் இவர்களை சோர்வுறப்பண்ணலாம். ‘ஐயோ, முடியாத ஒன்றைச்செய்ய வந்து விட்டோமோ’ என்றுகூட எண்ணத்தோன்றலாம்.

அத்தோடு குடும்பத்திற்குள் வரும் பிரச்சனைகள், தேவைகள், குழு அங்கத்தினரோடு, அனுப்பிய சபையோடு, ஸ்தாபனத்தோடு ஏற்படும் முரண்பாடுகள் நோய், ஊழியத்தள விரக்திகள், தனிமையின் வாட்டம் என்பன இவர்களை அதைரியப்படுத்தலாம். போர்க்களத்தின் முன்னணியில் இருந்து போரிடுபவர் அதிக காயப்பட வாய்ப்பிருக்கிறது.

அதுபோலவே, மிஷனெரி ஊழியத்தில் இவர்களே முன்னணியில் இருப்பதால், சாத்தானின் தாக்கத்திற்கும் இவர்களே முகங்கொடுக்கின்றனர். எனவே இவர்களை ஊக்கப்படுத்துவது மிக அவசியம்.

மிஷனெரி சரித்திரத்தில், வில்லியம்கேரி மிஷனெரியாகச் செல்ல முடிவெடுத்தபோது, அவர்களுக்கு மூன்று சிறு குழந்தைகள் இருந்ததுடன், மனைவி டாரத்திகேரி, அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். டாரத்தி மிஷனெரியாகப் போக எந்த விசேஷ அழைப்பையும் பெற்றதாக உணரவில்லை. குழந்தை பிறந்தபின் விருப்பமற்ற மனதுடன் இந்தியா சென்றார். இந்தியாவில் அவரது முதல் வருடத்தில் வறுமை, தனிமை, பலவீனப்படுத்தும் நோய் போன்ற இவற்றைத் தாங்க நேரிட்டது. அதைவிட மோசமானதாக, தனது ஐந்து வயது மகனின் மரணத்தால் வந்த ஆறாத்துயரத்தை அவரால் தாங்க முடியாமலிருந்தது. இறுதியில் டாரத்தி கேரி மனநோயாளியானார். ஆரம்ப முதலே இவர்களில் அக்கறைசெலுத்தி, இவர்களை ஊக்கப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்குமானால், அது இவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்திருக்கும்.

செவ்விந்தியர் மத்தியில் மிஷனெரியாகச் சென்று காசநோயினால் பெரும் வேதனைப்பட்ட டேவிட் பிரெய்னார்ட் தனிமையுணர்வால் வாடியதுடன், பலமுறை மனச்சோர்வுக்கூடாகவும் கடந்துபோனார் என்பதை அவரது நாட்குறிப்பேட்டுக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

அதோனிராம் ஜட்சனின் மனைவியும், பிள்ளையும் மரித்தபோது, அவர் காடு ஒன்றிற்குள் சென்று, அங்கு குடிசைபோட்டு, சிலகாலம் ஜீவித்தார். மிஷனெரி ஊழியம் கடினமானது! தனிமை, ஆவிக்குரிய போராட்டம், உறவுகளில் பிரச்சனை, நோய், பிள்ளைகளின் எதிர்காலம், எதிர்பார்த்த விளைவின்மை ஆகிய இவற்றால் இலகுவில் அதைரியப்பட்டுவிடலாம். எனவே இவர்கள்மீது, கவனம் செலுத்தி இவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம்.

2. மிஷனெரிகளுக்கு வழிநடத்துதல் அவசியமானது!

குடும்பவாழ்வு, பணத்தை கையாளுதல், ஊழியம், சோதனைகள், தனிப்பட்ட உறவுகள் சார்ந்த விஷயங்களில் மிஷனெரிகளுக்கான வழிநடத்துதல் அவசியமானது. மிஷனெரி ஊழியத்திற்குள் காயப்பட்ட மக்களும், கசப்பான குடும்பப் பின்னணியிலிருந்து வருபவர்களும் கூட இருக்கின்றார்கள். எனவே ஆரோக்கியமான குடும்ப வாழ்வைக் கட்டவோ, நல்ல பெற்றோராக இருக்கவோ, அல்லது போதகர் இல்லாதபோது தம் ஆவிக்குரிய வாழ்வை பேணி வளர்க்கவோ, அவர்களுக்கான ஆலோசனையும் வழிநடத்துதலும் தேவைப்படுகிறது.

பணித்தளத்தின் உண்மையான நிலைமையை அறியவும் சக குழு அங்கத்தினரோடு அல்லது கணவன், மனைவிக்கிடையில் பெற்றோர், பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் உறவுசாரார் பிரச்சனைகளிலும், அவர்களுக்கு வழிநடத்தல் அவசியமாயிருக்கின்றது. குழு அல்லது குடும்பங்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்திலேயே தீர்வுகளும், ஆலோசனைகளும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில் சிறு காயங்கள் பெரியனவாகி, அதை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுக்கலாம். நீதி.11:14 இல் ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள். அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். கிடைக்கும் குறைந்த சம்பளத்தை சரியாகத் திட்டமிட்டு செலவழிக்க ஆலோசனை அவசியமாக இருக்கிறது. ஊழியகாரியங்களிலும், தீர்மானங்களிலும் ஆலோசனை வழிநடத்தல் அவசியம்! எனவே மிஷனெரிக்கான கரிசனை அவர்களுக்கு அவசியமாகும்.

3. மிஷனெரிப் பணித்தளத்தில் தமக்கு ஏற்படும் விரக்திகளை, சோர்வுகளை, உறவுசார் பிரச்சனைகளை, மனமுறிவுகளை கொட்டுவதற்கு அவர்களுக்கென இடம், நபர்கள் தேவைப்படுகிறது.

வீடு திரும்பிய பெண் மிஷனெரி ஒருவர், தனது மிஷனெரிப் பணித்தளத்தில் கண்ட சில காட்சிகளால் மிகவும் பாதிப்புற்றார்! மிஷனெரி தளத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்று மருத்துவ உதவிகள் செய்துகொண்டிருந்தார். ஒருநாள் இரவு திடீரென துப்பாக்கி வேட்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அதன்பின் தன் கூடார வாசல் வழியாக சுடப்பட்டவனை தரதரவென இழுத்துக்கொண்டு போவதைக் கண்டாள். அவன் செய்த குற்றம் அபின் (போதைப்பொருள்) திருடியதுதான்!

அதன்பின் ஒரு கிராமத்தில் நடந்து போகையில் ஏதோ காலில் தடுக்கியது. அது என்னவெனப் பார்த்தபோது, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்றுமாதக் குழந்தைதான் காலில் தடுக்கியது என அறிந்து அதிர்ச்சியுற்றாள். அச்சிறு குழந்தை அபினுக்கு அடிமைப்பட்டிருந்தது. குற்றுயிராயிருந்த அக்குழந்தையைப் பற்றி விசாரித்தபோது அந்த தாய்க்கு ஐந்து வயதிற்குக் குறைவான, நான்கு குழந்தைகள் ஏற்கனவே உள்ளார்களெனவும், இக்குழந்தை சாகும்படிக்கே, இவ்வாறு கட்டி விடப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டார்.

இந்த இரு சம்பவங்களும் இந்த மிஷனெரியை வெகுவாகப் பாதித்தன. நாடு திரும்பிய பின்னரும் கூட, இரவில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதுபோல தோன்றி, பயத்தினால் உறங்க முடியாது அவதியுற்றமையினால் மாத்திரைகளை உட்கொண்டார். இந்த அனுபவத்தை, அப்பெண் சபையிலே பகிர்ந்துகொள்ளும் சந்தர்ப்பமும் போதகரால் வழங்கப்படவில்லை. ஓய்வு நாள் பாடசாலையிலும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தான் திரும்ப வந்ததை யாராவது அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. ஒரு ஞாயிறு தினத்தன்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போதகரிடம், ‘தான் வாழ்வெனும் கயிற்றின் இறுதிக்கு வந்து விட்டதாகவும், அதனை இழக்கப்போவதாகவும் தனக்கு உதவி வேண்டும்’ எனக் கேட்டார். அப்போதகரோ, அவள்மேல் கரத்தைப் போட்டு, “வேதாகமத்திற்குள் அதிகம் போ, எல்லாம் சரியாகிவிடும். நான் இந்த வாரம் அதிக அலுவலாக இருக்கிறேன். அடுத்த வாரம் என் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு புதன் கிழமைக்குப் பின்பு, ஒரு சந்திப்புக்கான முன் பதிவை (Appointment) எடுத்துக்கொள்” என்றார்.

அப்பெண்ணின் மனதில் உதித்த எண்ணம் நான் இவரது நேரத்திற்கும் பாத்திரமானவள் இல்லை என்பதாகும். மற்ற ஆலோசகர்களையும் சந்திக்க முயற்சித்தார். மனோதத்துவ நிபுணர்கள் இவரது நிலைக்குப் பல விசித்திர பெயர்களைக் கொடுத்தனர். இறுதியில், அந்தப் பெண், தான் யாருடைய நேரத்திற்குள் பாத்திர மில்லாதவள் என, அதிக மாத்திரைகள் சாப்பிட்டு, தன் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என எண்ணினார். (இந்த சம்பவம், நீல் பிரலோவின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது).

மிஷனெரிகள் நாடு திரும்பும்போது, அவர்கள் தங்களுக்குள் அடுக்கி வைத்திருப்பவைகளைப் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது இன்றியமையாதது. நமது மிஷனெரி ஸ்தாபனத்தில் அங்கத்துவ (மிஷனெரிகளுக்கான) கரிசனைக்(பராமரிப்புக்)குழு ஒன்று உள்ளது. விடுமுறைக்காகவோ, வீசா புதுப்பிக்கவோ நாடு திரும்பும் மிஷனெரிகளை இக்குழு சந்தித்து, மிஷனெரிகளுக்கு தங்கள் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் பேச அனுமதிப்பார்கள். அப்பொழுது மிஷனெரிகள் பணித்தளத்தில் தங்களுக்கு ஏற்பட்ட உறவுமுறை சார்ந்த பிரச்சனைகள், விரக்தி, கோபம் எல்லாவற்றையும் கொட்டுவார்கள். சக ஊழியரைக் குறைகூறுவார்கள். தம் வேதனைகளையும் பகிர்வார்க்ள.  இவை அனைத்தையும் இக் குழுவினர் மிகவும் பொறுமையோடு கேட்பார்கள். இப்படி கொட்டிய பின்பு, அவர்கள் ஓரளவு ஆறுதல் அடைவார்கள். குழு அங்கத்தினர்கள், அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளும் ஆலோசனைகளும் கொடுப்பார்கள். சில வேளைகளில் இந்த அங்கத்துவ கரிசனை குழுவினர் அவர்கள் தளத்திலிருக்கும்போதே, கணனியைப் பயன்படுத்தி ‘ஸ்கைப்’ ஊடாக இக்காரியத்தைச் செய்வார்கள்.

மிஷனெரிப் பணியின் வெற்றியின் பெருமளவு விகிதாச்சாரம், தன் ஊழியர்களுக்குக் காண்பிக்கப்படும் கரிசனையிலேயே தங்கியுள்ளது என்கிறார் கலாநிதி மு.ராஜேந்திரன். எனவே அனுப்பும் சபை, ஸ்தாபனத்தின் பார்வையிலும் மிஷனெரி யின் பார்வையிலும் மிஷனெரிகளுக்கான கரிசனை மிக அவசியமானதாகும்.

சத்தியவசனம்