“அருட்பணியாளர்களின் முன்னோடி” பவுல் அப்போஸ்தலன்

நற்செய்தியைக் கொண்டாடுவோம்
(ஜனவரி-பிப்ரவரி 2018)

சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
– பவுல் அப்போஸ்தலன்


அருட்பணியில் மிகவும் தலைசிறந்தவராகவும் அருட்பணியாளர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தவர் பவுல் அப்போஸ்தலன் ஆவார். பவுலின் வாழ்க்கையின் பின்னணியைக் குறித்து அவர் எழுதிய நிருபங்களில் ஆங்காங்கே எழுதிய குறிப்புகளிலிருந்து ஓரளவுக்கு அறியமுடிகிறது. பென்யமீன் கோத்திரத்தில் பிறந்த பவுல், பக்தியிலும் பாரம்பரியத்திலும் சிறந்த பரிசேயக்குழுவை சேர்ந்தவராயிருந்தார்.

பவுலின் பெற்றோர் சொந்த நாடான பாலஸ் தீனாவில் கிஸ்காலா என்னுமிடத்திலிருந்து புறப்பட்டு யூதரல்லாதவர்கள் வாழ்ந்த நகரான தர்சுவில் குடியேறினர் என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. பவுல் வளர்ந்த பட்டணமான தர்சு மிகவும் பெயர்பெற்றதும் செல்வமும் கல்வியும் செழித்தோங்கிய இடமாய் திகழ்ந்தது.

பவுல் ரோம குடிமகனுக்கான அந்தஸ்தைப் பெற்றிருந்தார். பெருந்தொகையை செலுத்தி பெறுமளவிற்கு அவரது குடும்பம் தகுதியடைந்திருந்தது. அவர் யூதச் சமயக்கல்வியைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தவர் (அப்.26:24). இக்கல்வியைத் தலை சிறந்த பேராசிரியரான கமாலியேலிடம் கற்றுத் தேர்ந்தார். இவர் கற்றது யூத ரபி ஆவதற்கான கல்வியாகும். அதனால் எபிரெய மொழியில் தேர்ச்சிப்பெற்றிருந்தார். தான் வாழ்ந்தபகுதியில் பிற மக்களோடு கிரேக்க மொழியிலேயே தொடர்பு கொண்டிருந்தார் (அப்.21:37). மேலும் பவுல் தனது நிருபங்களை கிரேக்க மொழியில் எழுதியதிலிருந்தும் இவர் கிரேக்க மொழியில் வல்லுநராயிருந்தார் என்பது தெளிவாகிறது. ஒருவர் ரோமக் குடியுரிமையை பெற வேண்டுமானால் அவர் ஓரளவு இலத்தீன் மொழியை கற்றிருக்கவேண்டும் என்பது ரோம அரசு ஆணை. எனவே இலத்தீன் மொழியையும் பவுல் கற்றிருக்க வேண்டும். இவ்வாறு பவுல் பல மொழிகளைக் கற்று தேர்ந்த கல்வி மேதையாக இருந்தார்.

பவுலின் யூத வைராக்கியத்தையும் இயேசு கிறிஸ்துவின் சீடர்களையும் அவரை பின்பற்றியவர்களையும் துன்பப்படுத்திய வரலாற்றையும் நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் காண்கிறோம். எந்த பவுல் சபையை துன்பப்படுத்தினாரோ அதே பவுலை தேவன் சபைக்கு தூணும் ஆதாரமுமாக்கினார். தேவன் பவுலை சந்தித்தபோது, “நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்” என்று தன்னை தேவனுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். கர்த்தர் அனனியாவிடம் தரிசனமாகி பவுலை தான் தெரிந்துகொண்டதின் நோக்கத்தை வெளிப்படுத்தினார்: “நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” (அப்.9:15,16) என்றார்.

பவுல் இயேசுவைக்குறித்து தமஸ்குவிலுள்ள தேவாலயங்களில் பிரசங்கிக்க தொடங்கியபோது, ஆரம்பத்தில் சபையார் அவரைக்குறித்து பயந்தார்கள். எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள் (அப்.9:21). பவுலினிமித்தம் தமஸ்குவிலிருந்த யூதர்களுக்கு கலக்கம் நேரிட்டது. அவனை கொலைசெய்ய திட்டமிட்டனர். தமஸ்குவிலிருந்த சீஷர்கள் இராத்திரியிலேயே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள். பவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்து கொள்ளப்பார்த்தான்; அவர்கள் அவரைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக் கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக் கொண்டு போய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்தான் (அப்.9:23-28).

பவுலும் பர்னபாவும் அந்தியோகியா பட்டணத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது பரிசுத்தாவியானவர் அவர்களை அருட்பணிக்கென பிரித்தெடுத்தார். பவுல் அப்போஸ்தலன் பல பாடுகள் மத்தியிலும் எதிர்ப்புகள் மத்தியிலும் 3 மிஷனெரி பயணங்களை மேற்கொண்டார்.

முதல் மிஷனெரி பயணத்தில் பவுலும் பர்னபாவும் ரோம ஆட்சிக்குட்பட்ட பகுதிகளுக்குள் நற்செய்தியை கொண்டு சென்றனர். கி.பி.46 முதல் 49 வரையான காலபகுதியில் இந்த மிஷனெரி பயணத்தை மேற்கொண்டனர். இவர்களுடைய பயண விவரங்களை அப்போஸ்தல நடபடிகள் 13 மற்றும் 14 ஆகிய அதிகாரங்களில் காணலாம். இந்தப் பயணத்தின்போது செலூக்கியா, சீப்புருதீவு, பாப்போ பட்டணம், பம்பிலியா, பெர்கே, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா, தெர்பை ஆகிய பகுதிகளிலுள்ள யூதர்கள், கிரேக்கர்கள் மற்றும் புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவித்து அநேகரை சீஷராக்கினார்கள். அநேக சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. பின்பு அவர்கள் அந்தியோகியா திரும்பி அங்கு சீஷர்கள் மத்தியில் தங்கள் மிஷனெரி பயணத்தின்போது தேவன் செய்த மகத்தான கிரியைகளையும் அற்புதங்களையும் சாட்சியாக அறிவித்து தேவனை மகிமைப்படுத்தினர் (அப்.14:26-28).

இரண்டாவது மிஷனெரி பயணத்தை (கி.பி. 50-52) பவுல் அப்போஸ்தலன் சீலாவோடு துவங்குகிறார். முதலில் சீரியா மற்றும் சிலிசியாவிற்கு சென்று அங்குள்ள சபைகளை திடப்படுத்தினர். அதன்பின்பு தெர்பை, லீஸ்திரா, இக்கோனியா, பிரிகியா, கலாத்தியா ஆகிய பகுதிகளில் வசனத்தைப் பிரசங்கித்தார்கள். மேலும் பரிசுத்த ஆவியானவரால் ஆசியாவில் வசனத்தை சொல்ல தடைபண்ணப்பட்டு ஐரோப்பாவிற்கு செல்ல உந்தப்பட்டனர். அதன்பின் துரோவா, பிலிப்பி, தெசலோனிக்கேயா, பெராயா, அத்தேனே, கொரிந்து, எபேசு, செசரியா ஆகிய பட்டணங்களில் அருட்பணியாற்றிவிட்டு மீண்டும் அந்தியோகியாவுக்கு பவுல் திரும்பி வந்தார். இந்த மிஷனெரி பயணத்தில் பவுல் தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் சுமார் 2000 மைல்கள் பிரயாணம் பண்ணி சுவிசேஷத்தை பிரசங்கித்து சபைகளை நிறுவினார்.

மூன்றாவது மிஷனெரி பயணத்தின்போது (கி.பி.53-58) பவுல் அப்போஸ்தலன் அந்தியோகியாவிலிருந்து கலாத்தியா பிரிகியா ஆகிய நாட்டிற்கு சென்று நற்செய்தியை பிரசங்கித்தார். அங்குள்ள சீஷர்களையும் சபைகளையும் சந்தித்து திடப்படுத்தினார். அதன்பின்பாக எபேசு பட்டணத்திற்கு வந்து அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கினார். ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார் (அப்.19:10-11). அங்கிருந்து மக்கெதோனியாவுக்கு சென்று அங்குள்ள சீஷர்களை சந்தித்துவிட்டு கிரேக்கு தேசத்தை அடைந்தார். பின்பு துரோவா, ஆசோ, மித்திலேனே, கீயுதீவு, சாமுதீவு, மிலேத்து பட்டணம், தீரு பட்டணம், பித்தொலோமாய் பட்டணம், செசரியா பட்டணம் ஆகிய இடங்களில் அதிக பிரயாசத்தோடும் பலவிதமான பாடுகளோடும் அருட்பணியாற்றினார். இறுதியில் எருசலேமுக்கு வந்தடைந்தார். இம்மூன்று மிஷனெரி பயணத்திலும் பவுல் அடைந்த பாடுகளும் இன்னல்களும் அநேகம்.

இதைக்குறித்து பவுல் அப்போஸ்தலனே தனது அனுபவத்தை 2கொரி.11:23-28இல் விளக்குகிறதைப் பார்க்கிறோம்:

“நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்று தரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒரு தரம் கல்லெறியுண்டேன், மூன்று தரம் கப்பற் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம் பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுய ஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேக முறை கண் விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேக முறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள் தோறும் நெருக்குகிறது.

எருசலேமுக்கு வந்த பவுல் தேவாலயத்தில் பிரசங்கித்துக்கொண்டிந்தபோது யூதர்கள் அவரைத் தாக்கி கலகம் செய்தபடியால் பவுல் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். கொஞ்சகாலம் எருசலேமிலும், 3 வருடங்கள் செசரியாவிலும் சுமார் 2 வருடங்கள் ரோமாபுரியிலும் காவலில் இருந்தார்.

பேராபத்துக்கள் நிறைந்த பயணம்:

செசரியாவிலிருந்து ரோமாபுரிக்கு பவுல் செய்த ஆபத்துக்கள் நிறைந்த பயணமே பவுலின் நான்காம் மிஷனெரி பயணம் எனக் கருதப்படுகிறது. அவர் கட்டுண்டவராக கொண்டுபோகப்பட்டாலும், தான் ஒரு மிஷனெரி, இது கர்த்தருடைய ஊழியம் என்பதை மறக்காமல், துணிச்சலோடு சென்ற வழியிலும், ஊர்களிலும், தீவுகளிலும், கப்பலிலுள்ளவர்களுக்கும் இயேசுவின் நற்செய்தியைப் பகிர்ந்தளித்தார். லூக்காவும் அரிஸ்தர்க்கும் அவருக்கு உதவியாக சென்றார்கள் (அப்.27:2). பவுல், ராயனுக்கு அபயமிட்டபடியினால் நியாயம் விசாரிக்கும்படி ரோமாபுரிக்கு சென்று தனித்து குடியிருக்க உத்தரவு பெற்றுக்கொண்டு (அப்.28:16,30) வாடகைவீடு எடுத்து தங்கி இரண்டு வருடங்கள் வசனத்தைப் பிரசங்கித்து போதித்து வந்தார் (அப்.28:31).  இந்த நாட்களில் எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், பிலேமோன் ஆகிய நிருபங்களை எழுதினார். இவைகள் சிறைச்சாலை நிருபங்கள் என (Prison Epistles) அழைக்கப்படுகின்றன. இதோடு அப்போஸ்தல நடபடிகளில் சொல்லப்பட்டுள்ள பவுலின் சரித்திரம் முடிவடைகிறது.

அதன்பின்பு பவுல் மூன்று அல்லது நான்கு வருடங்கள் விடுதலையோடு சில இடங்களுக்கு சென்று ஊழியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை 2தீமோ.4:20; தீத்து 1:5; பிலே.22 ஆகிய வசனங்களிலிருந்து யூகிக்க முடிகிறது. சில சரித்திர ஆசிரியர்களும் இக்கருத்தை ஒத்துக்கொள்கிறார்கள். பின்பு மீண்டும் பவுல் கைதுசெய்யப்பட்டு ரோமாபுரிக்கு கொண்டுவரப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இந்நாட்களில் பவுல் 1தீமோத்தேயு, தீத்து, 2தீமோத்தேயு நிருபங்களை எழுதினார். இவைகளும் சிறைச்சாலையில் எழுதப்பட்ட போதக நிருபங்களாகும் (Pastoral Epistles).

சரித்திர ஆசிரியன் எசுபியஸ் திரும்பவும் பவுல் ரோமாபுரியில் சிறையாக்கப்பட்டதையும், நீரோ பேரரசனால் இரத்த சாட்சியாக பவுலும், பேதுருவும் மரித்ததையும் குறிப்பிடுகின்றனர். எனவே பவுலின் இரண்டாம் ரோமச் சிறையிருப்பின்போது 2தீமோத் தேயுவை பவுல் எழுதியிருக்கலாம் (2தீமோ.1:8, 16,17;2:9). தெர்த்துல்லியனும்கூட, யோவான் ஸ்நானனைப் போன்று, சிரச்சேதம் செய்யப்பட்டு பவுல் மரித்தார் என கூறுவதால், பவுல் கி.பி.64 அல்லது 67 இல் கொல்லப்பட்டார் என்று நம்புகிறோம்.

சத்தியவசனம்