ஆசரிப்புக் கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

Dr.தியோடர்.எச்.எஃப்

பொன் குத்துவிளக்கு

குத்துவிளக்கிலிருந்து வரும் ஒளி

பொன் குத்துவிளக்கிலிருந்து வந்த ஒளி சமுகத்தப்பமேஜை மீது மட்டுமல்ல, தூப பீடத்தின்மீதும் வீசியது. அதுதான் நாம் தேவனிடம் மன்றாட்டு ஏறெடுக்கும் இடம். மேலும் அது பரிசுத்தஸ்தலம் முழுவதும் ஒளி கொடுத்தது. அது ஆசாரியர்கள் கிறிஸ்துவின் மகிமை முழுவதையும் அங்கே வெளிப்பட்டிருக்கக் காணமுடிந்தது. இந்த ஒளி பரிசுத்த ஸ்தலத்துக்கும், மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையே உள்ள திரையில் இருந்த கேருபீன் சித்திரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியது. இந்தக் கேருபீன் தேவனுடைய பரிசுத்தத்தைக் காத்துவந்தது. அது அருகில் வருபவர்களை “வெளியே நில்லுங்கள்“ என்று சொல்லிக் கொண்டிருந்தது. மகா பிரதான ஆசாரியனை ஒரு வருடத்துக்கு ஒருமுறை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கும். வேறு எப்போதும் எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை.

இவ்வாறு பொன் குத்துவிளக்கிலிருந்து வந்த ஒளி சமுகத்தப்ப மேஜையின்மீதும், தூப பீடத்தின்மீதும், தொங்குதிரையின் கேருபீன் மீதும் பிரகாசித்தது. இவற்றில், சமுகத்தப்ப மேஜை கர்த்தருடைய வார்த்தையையும், வேதாகமத்தையும், தூபபீடம் தேவனிடத்தில் ஜெபிக்கும் மன்றாட்டு இடத்தையும், கேருபீன் தேவனுடைய பரிசுத்தத்தின் காவலன் என்பதையும் காட்டின.

பரிசுத்த ஸ்தலத்தில் இந்த ஒளி, கிறிஸ்துவின் பரிபூரண பரிசுத்தத்தைக் காட்டிற்று. வேதாகமம் கிறிஸ்துவைக்குறித்து என்ன கூறுகிறது என்பதற்கு இது சாட்சி. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல், பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (1யோவா. 1:5-7).

ஆசரிப்புக்கூடாரத்தில் ஒளி தேவனைக் குறித்தது. பரிசுத்த ஆவியின் மூலமாக, இருளில் ஒளிவீசுகிறவராக, ஐக்கியத்தை ஏற்படுத்துகிறவராக இருந்தார். அறிக்கையிடப்படவேண்டிய எது இருந்தாலும் அது பரிசுத்த ஸ்தலத்தில் அறிக்கை செய்யப்படவேண்டும். ஏனெனில் பொன்குத்துவிளக்கின் ஒளி சமுகத்தப்ப மேஜைமீதும், தூபபீடத்தின் மேலும் வீசியது. இது இப்பொழுது உண்மையாய் இருப்பது போல், அப்பொழுதும் உண்மையாகவே இருந்தது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்“ (1யோவா. 1:9).

கர்த்தருடைய வார்த்தையாகிய வேத வசனம் தரும் ஒளியே உண்மையான ஒளி. அதுவே நமக்குப் பாதுகாப்பான வழிகாட்டி, இடைவிடாமல் மன்றாட்டு ஜெபம் ஏறெடுத்து நாம் நடத்தும் வாழ்க்கை, பரிசுத்தஆவியின் உண்மையான ஒளியினால் சாதிக்கப்படும் போதே சக்தி வாய்ந்ததாக அமையும்.

இயேசு தம்மை “உலகத்தின் ஒளி“ என்று கூறியதைக் கவனியுங்கள். “நான் உலகத்திலிருக் கையில் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்“ என்றார். “அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக் காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன்தான் போகிற இடம் இன்னதென்று அறியான். ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார்“ (யோவா. 12:35,36).

இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறிப் பிதாவின் சமுகத்தில் இப்பொழுது வீற்றிருக்கிறார். உலகத்தில் ஒளியாக இருந்த இயேசு இப்பொழுது பரலோகத்தில் தேவனோடு இருக்கிறார்.

இயேசு தம் சீஷரோடு இவ்வுலகத்தில் வாழ்ந்ததுபோல, இப்போது நம்மோடு இல்லா விட்டாலும், நம்மிடம் ஒளி இல்லாமலில்லை. அவரது மரணம், தேவாலயத் திரைச்சீலையை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழித்தது. அப்பொழுதே விசுவாசிகளுக்கு “அப்பா, பிதாவே“ என்றழைக்கும் புத்திர சுவீகாரத்துடன் தேவனுடைய சமுகத்தில் நேரடியாகச் செல்லும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.

“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்“ (எபி.10:19-22).

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நாம் ஒளியில் நடக்கிறவர்களானபடியால் நாம் ஒருவரோடொருவர் ஐக்கியம் உடையவர்களாயும், தேவனோடு ஐக்கியமுள்ளவர்களாயும் இருப்போம். இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்கள் ஆவிக்குரிய இருளிலும், அந்தகாரத்திலும் இருக்கிறார்கள். ஆனால் அவரை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் ஆவிக்குரிய ஒளியில் நடக்கிறார்கள்.

பொன் குத்துவிளக்காகிய இயேசுகிறிஸ்து இப்போதிருந்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு இடைப்பட்ட காலத்துக்கு விசுவாசிகளுக்கு ஒளியாயிருக்கிறார். கிறிஸ்து இனி வரும்போது அவரே புதிய வானத்துக்கும், புதிய பூமிக்கும் நித்திய ஒளியாயிருப்பார்.

இப்போது நமக்கு ஆசரிப்புக் கூடாரம் இல்லை. நமக்கு உண்மையான பரிசுத்த ஸ்தலத்துக்குச் செல்ல முடியும். கிறிஸ்துவே ஒளியாயிருப்பதால், அவர் காட்டும் ஒளியில் நாம் நடந்து செல்ல முடியும்.

குத்துவிளக்கும், பரிசுத்த ஆவியும்

குத்துவிளக்கு செய்யப்பட்ட முறையைத் திரும்பவும் பாருங்கள். “பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்“ (யாத் 25:31).

குத்துவிளக்கு, பல துண்டுகள் இணைக்கப்பட்டுச் செய்யப்படவில்லை. ஒரே பெரிய துண்டான சுத்தமான பொன் பாளத்திலிருந்து அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டிருந்தது. ஏழு கிளைகளிலும் மேலே சின்னம் போன்ற அமைப்பு இருந்தது. இதில் எண்ணெய் ஊற்றப்படும். அதில் ஏழு கிளைகள் இருந்தபடியால் அவற்றில் திரிகள் போடப்பட்டு விளக்குகள் எரிக்கப்பட்டன.

குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்த சுத்தப் பொன் இயேசுவின் தெய்வீகத்தைக் காட்டியது. அந்த விளக்கில் ஏழுதண்டுகளும் விளக்குகளும் இருந்தன. இவை பரிசுத்த ஆவியின் ஏழு கிரியைகளைக் காட்டின. கிறிஸ்து இவ்வுலகத்தில் வாழ்ந்தபோது இந்த ஏழு ஆவிகளாலும் நிரப்பப்பட்டிருந்தார். ஏசாயா தீர்க்கதரிசி கிறிஸ்துவின் வருகையையும், அவரிடம் இருக்கும் ஏழு ஆவிகளையும் பற்றிக் கூறினார். ஏசாயா 11:1,2 வசனங்களைப் பார்க்கும்போது இந்த ஏழுதண்டுகள் உள்ள விளக்குகளின் அடையாளம் நமக்குத் தெரியவருகிறது. “ஈசா யென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்“.

இந்த ஏழு ஆவியையும் குறித்து வெளி. 1:4,5இல் வாசிக்கிறோம். “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்…… இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக“.

ஆசரிப்புக் கூடாரத்தில் தேவனுடைய ஏழு ஆவிகள் உள்ள, ஏழு தண்டுகள் அமைந்த குத்துவிளக்கு வெளி.4:5லும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. “அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன“. எனவே ஏழு தண்டுகள் உள்ள அந்த குத்து விளக்கு, விசுவாசிகளுக்குக் கிறிஸ்துவைக் காட்டுகின்றன. அவை தேவனுடைய ஒளியை இருண்ட இடத்தில் பிரகாசிக்கச் செய்யும். அது தேவனுடைய ஏழு ஆவிகளையும் குறிக்கிறது.

இந்தக் குத்துவிளக்கு இயேசுகிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியையும் குறிக்கிறது என்று பார்க்கிறோம். ஆனால் இந்த இருவரையும் பிரிக்கவே முடியாது என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.

ரோமர் 8:9, பரிசுத்த ஆவியை “தேவனுடைய ஆவி“ என்றும் “கிறிஸ்துவின் ஆவி“ என்றும் கூறுகிறது. “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல“.

தேவனை நமக்கு வெளிப்படுத்த இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை உலகத்துக்கு அனுப்பினார். இயேசு பரமேறுவதற்குமுன், “சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்“ (யோவா.16:13-15). இவ்விதமாக இயேசு கிறிஸ்து பரிசுத்தஆவியைக் குறித்து கூறியதன் கருத்து, “அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்“ என்பதே. (யோவா.15:26).

பேதுருவும் பரிசுத்தஆவியை இயேசு கிறிஸ்துவோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின் படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும், கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்“ (அப். 2:32,33).

ஆசரிப்புக்கூடாரத்தின் பொன் குத்துவிளக்கிலுள்ள பொன் இயேசுவின் தெய்வீகத்தைக் காட்டுகிறது. அதின் ஏழுதண்டுகளும் ஏழு ஆவிகளைக் குறிக்கிறது. இயேசுவினிடத்தில் இந்த ஏழு ஆவிகளும் உண்டு என்பதை வெளி 3:1 இல் பார்க்கிறோம். “தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது:“

பொன்குத்துவிளக்கின் ஏழு தண்டுகளையும் பரிசுத்தஆவியின் ஏழு பணிகளையும் ஏசாயா கூறுவதைக் கவனியுங்கள். கிறிஸ்துவைக்குறித்த பின்னணியை ஏசா.11:1 தெரிவிக்கிறது. “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்“, “எழும்பிக் கனி கொடுக்கும்“ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பின்னர் வசனம் 2இல் பரிசுத்த ஆவியானவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஏழு பணிகளைக் காண்கிறோம். “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்“.

ஏசா.11ஆம் அதிகாரம் எதிர்காலத்தில் வரப்போகும் ராஜ்யத்தைக்குறித்துக் கூறுகிறது. இயேசுகிறிஸ்துவே நமது பிரதான ஆசாரியராயிருக்கிறார். “விசுவாசிகள் இராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் இருப்பார்கள்“ (1பேது.2:9). எனவே நமக்குப் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் உரிமையும், கிறிஸ்துவைச் சந்திக்கும் உரிமையும் உண்டு. ஏழு வகை ஆவிகளும் கிறிஸ்துவில் அமைந்திருக்கிறது. “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்தார்“ (எபே.2:7) இந்தச் சிலாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. நாம் கிறிஸ்துவோடுகூட உட்காருதல் என்பது மாம்ச சரீரத்துடன் அல்ல, ஆவிக்குரிய ஒரு அனுபவம் அது. நாம் கிறிஸ்துவோடு ஆவியில் இணைக்கப்பட்டிருப்போம். கிறிஸ்து பரலோகத்தில் இருக்கிறார். இது ஒரு ஆவிக்குரிய உலகம்.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்