தேவன் நம்மை நித்தமும் நடத்துவார்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜனவரி-பிப்ரவரி 2019)

சத்தியவசன வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய வருடத்திலும் உங்களோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய செய்தி என்னவென்றால் ஏசாயா 58ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் வாசிக்கும் இந்த வாக்குத்தத்த வசனமேயாகும். “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீருற்றைப்போலவும் இருப்பாய்” (ஏசா.58:11). இந்த வாக்குத்தத்த வசனத்திலே கர்த்தர் எனக்கு தெளிவாக சுட்டிக் காண்பித்த பகுதி, கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார் என்பதாகும்.

ஏதோ ஒரு காலத்தில் நம்மை நடத்தி நம்மை கைவிடுகிறவர் அல்ல. அல்லது மகிழ்ச்சியான காலங்களிலே நடத்தி துன்பமான காலங்களிலே ஒதுங்குகிற மனிதர்களைப்போல மறக்கிற ஆண்டவரும் அவர் அல்ல. ஒவ்வொரு நிமிடமும் அவர் நம்மை நடத்துகிற ஆண்டவராயிருக்கிறார். நான்குவிதமான வழிநடத்துதல்களை குறித்து நாம் சிந்திக்கலாம்.

சுயத்தினால் நடத்தப்படுதல்

நீதி.3:5 ஆம் வசனம் “உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து” என்று வாசிக்கிறோம். அநேக சமயங்களிலே ஆண்டவர் நம்மை நடத்தாதபடிக்கு சுயம் நம்மை நடத்திவிடுகிறது. இன்று சபைகளானாலும் சரி, ஊழியங்களானாலும் சரி, தனிமனிதனுடைய காரியம் என்றாலும் தேவசித்தத்தைக்காட்டிலும் சுய சித்தம்தான் மேலோங்கி நிற்கிறது. 2நாளா.26ஆம் அதிகாரத்தில் யூதாவின் ராஜாவாகிய உசியாவைப் பார்க்கிறோம். கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்து வந்தான். அவன் ராஜாவானாலும் கர்த்தருடைய ஆலயத்தில் அவனுடைய சட்டம் செல்லும்படியாகவில்லை. தூபங்காட்ட உசியா கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். தூபங்காட்டுகிறது ராஜாவே உமக்கு அடுத்ததல்ல என்று ஆசாரியர்கள் தடுத்தார்கள் (வச.16). அவன் துணிந்து தூபகலசத்தை எடுத்தான். கர்த்தருடைய கோபம் அவன்மேல் மூண்டது. ஆகவே சுயத்தினால் நடத்தப்படாதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருப்போம்.

மனிதர்களால் நடத்தப்படுவது

ஒரு சில மனிதர்களைப் பார்த்தால் அவர்கள் சுயமாகவும் சிந்தித்து நடக்கமாட்டார்கள். தேவ சித்தத்தை அறிந்தும் நடக்கமாட்டார்கள். மனித ஆலோசனைகளால் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மனிதர்களால் நடத்தப்படுவதும் ஆபத்தான ஒன்றுதான். தாவீதுக்கு அகித்தோப்பேல் என்னும் ஓரு நண்பன் இருந்தான். தாவீதுக்கு அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது (2சாமு.16:23 ). ஆனால் அதே அகித்தோப்பேல் ஒருநாளில் தாவீதுக்கு விரோதமாக எழும்பினான். அப்பொழுது தாவீது: கர்த்தாவே, அகித்தாப்பேலின் ஆலோசனையை பயித்தமாக்கிவிடுவீராக என்று ஜெபித்தான். அகித்தோப்பேலின் ஆலோசனை மனிதர்களின் ஆலோசனையாகவே இருந்தது. அப்.5:34,38இல் கமாலியேலின் அறிக்கையைப் பார்க்கிறோம். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம். தேவனால் உண்டாயிருந்ததானால் அதை ஒழித்துவிட உங்களால் கூடாது. எந்தவொரு மனித ஆலோசனையாக இருந்தாலும் ஆண்டவருடைய பாதத்தில் வைத்து கர்த்தரே நடத்தும்படியாக ஜெபிப்போம்.

ஆன்மீக வழிநடத்துதல்:

பழைய ஏற்பாட்டில் ஆன்மீக வழிநடத்துதல்களை ஏராளம் பார்க்கிறோம். சாமுவேல், எலியா, எலிசா போன்ற தீர்க்கதரிசிகளையும் பார்க்கிறோம். இவர்களெல்லாம் தேவனிடமிருந்து நல்ல ஆலோசனைகளைப் ஜனங்களுக்கு பெற்று தந்தனர். புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானன் ஆவிக்குரிய வழிகளில் ஜனங்களை வழிநடத்தினார். ஏரோது யோவான் ஸ்நானனின் ஆலோசனைகளையெல்லாம் கேட்டாலும், அவனது பாவத்தைக் குறித்து எச்சரித்தபோது அதை கேளாமல் போனான்.

இவ்வாறு பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இவ்விதமாக ஏராளமான நல்ல ஆவிக்குரிய வழிநடத்துதல்களை நாம் பார்க்கிறோம். அதேவேளையில் ஜனங்களை தவறான வழியில் வழிநடத்தினவர்களும் உண்டு. ஆரோன் பொன் கன்றுக்குட்டிகளை உருவாக்கி இஸ்ரவேல் ஜனங்களைத் தவறாக வழிநடத்தி விட்டான். பிலேயாம் தேவஜனத்தை சபிப்பதற்கு கூலி வாங்கிக்கொண்டான். ஆகவே இவ்விதமான வழிநடத்துதல்களிலே நாம் எச்சரிப்போடு நடந்து கொள்ளவேண்டும். ஆண்டவராகிய இயேசுவும் மத்.7:!5இல் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் என்று போதித்தார். எனவே ஆன்மீக தலைவர்களால் நடத்தப்படும்போதும் நாம் தவறான வழியில் செல்ல நேரிடும். ஆகவே நாம் மனிதர்களை நம்புகிறதைப்பார்க்கிலும் அனுதின வாழ்வில் நாம் கர்த்தர்மேல் மாத்திரமே நம்முடைய கண்களைப் பதித்து கர்த்தரால் நடத்தப்படுவதே நல்லது.

சிறுபிள்ளைகள் தீக்குச்சிகளை வைத்து வீடு கட்டுவார்கள். அதை சிறிது தட்டிவிட்டாலே போதும், அது கீழே விழுந்துவிடும். அதேபோலத்தான் ஆவிக்குரிய தலைவர்கள்மேலே நம் வீட்டை கட்டும்போது, அவர்கள் கீழே விழுந்தால் நாமும் விழுவோம். விழாதவர் யார்? நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே. ஆகவே நமது ஆவிக்குரிய பயணத்தில் நாம் சிந்திக்கவேண்டியது நாம் யார்மேல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தற்பரிசோதனை செய்து பார்ப்பது அவசியமாகும். மூத்த தலைவர்கள், ஆவிக்குரிய தலைவர்கள், நம்மை உற்சாகப்படுத்துகிற தலைவர்கள் நமக்குத் தேவை. அவர்களைக் கொண்டு நாம் செய்யவேண்டியதை கர்த்தர் போதிப்பாரே தவிர, அவர்கள்மேலே நாம் அஸ்திபாரம் போடக்கூடாது. ஆகவே ஆவிக்குரிய தலைவர்களைக் காட்டிலும் அவர்களை எழுப்புகிற ஆண்டவர் மேலே நாம் அஸ்திபாரமிட வேண்டும்.

கர்த்தரே நம்மை நடத்துவார்:

இறுதியாக, கர்த்தரே நம்மை நித்தமும் நடத்து வார். அவர்தாம் நமக்காக இரத்தஞ்சிந்தினார், நமக்காக மரித்தார், நமக்காக உயிரோடு எழுந்தவர். இன்றுவரை நம்மை நிற்கவைத்தவர் ஆண்டவர் மாத்திரமே. திரியேக தேவனே நம்மை நடத்துவார். பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் இரவில் அக்கினி ஸ்தம்பத்தினாலும் நம்மை நடத்துகிறவர். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்றவர் ஆண்டவர்.வழிதப்பிப்போகும்போது வழி இதுவே என்று சொல்லி நமது வலது கரத்தைப் பிடித்து நம்மை நடத்துகிறவர். இந்த ஆண்டவர் நம்மை நடத்துகிற ஒருசில காரியங்களை மாத்திரம் நாம் தியானிப்போம்.

முதலாவது, ஆண்டவர் இன்று நம்மை தமது வார்த்தையின் மூலம் நடத்துகிறார். தீர்க்கதரிசனங்களில் குறைவு வரும். ஆனால் வசனத்தில் ஒருநாளும் குறை வராது. மனிதர்களுடைய ஆலோசனையிலே மாறுபாடு உள்ளது. தேவனுடைய வார்த்தையிலே மாறுபாடு ஒருபோதும் இருக்காது. ஆகவே ஆண்டவருடைய வார்த்தையை இரவும் பகலும் வாசித்து தியானித்துக்கொண்டே இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். இரவும் பகலும் அவரது வேதத்தில் தியானமாய் இருக்கிற மனிதன் பாக்கியவான்.

மத்தேயு 2ஆம் அதிகாரம் 1, 2 ஆகிய வசனங்களில் சாஸ்திரிகளை நட்சத்திரத்தின் வழியாக நடத்தினார். 12ஆம் வசனத்தில் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு வழிநடத்தப்பட்டார்கள். மத்.1:20இல் யோசேப்புக்கு சொப்பனத்தில் தூதன் மூலமாக பேசி நடத்தினார். ஆரம்பத்தில் சொப்பனத்தின் வழியாக, தூதன் வழியாக நடத்தினார். ஆனால் திருமறை எழுதப்பட்ட பிற்பாடு இன்றைக்கு ஆண்டவர் வார்த்தையின் வழியாக நடத்துகிறார்.

இரண்டாவதாக, தேவன் நம்மை பரிசுத்த ஆவியானவர் முலமாகவும் இன்று வழிநடத்துகிறார். 1 சாமு.30:7ஆம் வசனத்தில் தாவீது கைவிடப்பட்ட நிலையில் அவர் வழிநடத்துவதற்காக ஏபோத்தை கொண்டுவரச் சொல்கிறார். ஏபோத்து என்றால் தேவனுடைய திட்டத்தை அறிவதற்குரிய வஸ்திரம். அதை வைத்துக்கொண்டுதான் பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவசித்தத்தை அறிந்தனர். அப்.1:20ஆம் வசனத்தில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம் பண்ணி சீட்டுப்போட்டார்கள். ஆவியானவர் அருளப்படுவதற்கு முன்னர் தேவ சித்தத்தை அறிந்து கொள்வதற்கு பலவிதமான வழிமுறைகளை கையாண்டனர். ஆனால் அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் ஊற்றப்பட்டார். ஆவியானவர் நமக்குள் இருக்கிறார். யோவான் 16:13 இல் வாசிக்கிறபடி ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிறார்.

மூன்றாவதாக, தனிப்பட்ட விதமாகவும் கர்த்தர் நம்மை நடத்துகிறார். அப்.9ஆம் அதிகாரத்தில் சவுலை நேரடியாகச் சந்தித்தார். சவுல் மனந் திரும்பி பவுலாக மாறினபின்பு, பவுலைப் பார்த்து பயப்படாதே, இந்த பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு (அப்.18:10) என்றும். அப்.16:9 இல் மக்கெதோனியா தேசத்துக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு கர்த்தரின் அழைப்பை அறிந்து கொள்ளும்படியாக தேவநடத்துதலைப் பெற்றுக் கொள்ளுகிறதையும் பார்க்கிறோம். தம்முடைய தாசர்களையும் கர்த்தர் ஆச்சரியமாய் நடத்தினார்.

1சாமு.30:8 இல் தாவீதோடு தனிப்பட்ட முறையில் கர்த்தர் பேசுகிறார். அந்தத் தண்டைப் பின்தொடர வேண்டுமோ? நான் அதைப் பிடிப்பேனோ என்று கேட்டான். அதற்கு அவர்: அதை பின்தொடர்; அதை நீ பிடித்து சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார். தனிப்பட்ட விதமாகவும் கர்த்தர் நடத்துகிறார். நம்மை குடும்பமாகவும் கர்த்தர் நடத்துவார்.

ஆதி.31:3 இல் தன்னுடைய குடும்பத்தை எண்ணி கலங்கிக்கொண்டிருந்த யாக்கோபை நோக்கி “உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடே கூட இருப்பேன் என்றார்”. ஆம், நம்முடைய ஆண்டவர் நம்முடைய குடும்பத்தையும் நடத்துகிறார். கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களை நடத்துகிறார். அப்.13:1-4 வரையுள்ள வசனங்களை வாசிப்போம். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம் பற்றினார். அந்த நேரத்தில் யார் மூலமாகிலும் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை. ஆவியானவரே திருவுளம் பற்றினார். பவுலையும் பர்னபாவையும் அழைக்கப்போகும் ஊழியத்திற்கல்ல, அழைத்த ஊழியத்திற்காக பிரித்துவிடுங்கள் என்று.

அதற்கு கீழ்ப்படிந்து சபையாரும் உபவாசித்து ஜெபம் பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து அனுப்பினார்கள். வசனம் சொல்கிறது ஆவியானவராலே அனுப்பப்பட்டார்கள் என்று. பவுலும் பர்னபாவும் அழைப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தேவசித்தத்திற்கு கீழ்ப்படிந்து புறப்பட்டுச்சென்றார்கள். அப்படியானால் ஆண்டவர் தனிப்பட்ட விதமாகவும் பேசி நடத்துகிறார். இவ்வாறு தேவன் நமது குடும்பத்தையும் சபையையும் தனிப்பட்ட விதத்தில் நடத்துகிறார்.

இவ்வாறு தேவனால் நாம் நடத்தப்படும்போது நாம் அடையும் ஆசீர்வாதங்களைப் பாருங்கள்! மகா வறட்சியான காலமாக இருந்தாலும் அவர் நம் ஆத்துமாவை திருப்தியாக்குவார். நம் எலும்புகளை நிணமுள்ளதாக்குகிறார்; நம்மை நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீருற்றைப் போலவும் மாற்றுகிறார். நிச்சயமாக தேவன் உங்களையும் இவ்வாண்டில் நித்தமும் நடத்துவார்.

சத்தியவசனம்