பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம்!

பவானி மகேந்திரன்
(ஜனவரி-பிப்ரவரி 2019)

குழந்தைகள் ஆண்டவர் அருளும் செல்வங்கள். அவர்கள் கறுப்பாகவோ வெள்ளையாகவோ மஞ்சளாகவோ சிவந்தோ பூப்போன்று அழகான மென்மையான கள்ளம் கபடற்ற முகத்தோடு எந்நேரமும் மகிழ்ச்சியோடு காணப்படுவர்.

ஆனால் இன்றைய நாட்களில் பிள்ளைகளின் முகத்தினிலும்கூட ஒரு வாட்டத்தையே நாம் காண்கிறோம். இதற்கு காரணம் யார்? பெற்றோரா? சமுகமா? இன்றைய பொருளாதார சிக்கலில் மாட்டி தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவருக்குமே பணிபுரியும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு காரணமாயிருக்குமோ? இதை காலந்தாழ்த்தாமல் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். காலம் தாழ்த்தும்பொழுது அநேக பிள்ளைகளின் சீரழிவுக்கு நாம் ஒவ்வொருவரும் பதில் கூறவேண்டிய நிலை ஏற்படும்.

பிள்ளைகளின் ஏக்கம்

தற்போதைய காலத்தில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வதால் அந்த கள்ளங்கபடற்ற முகத்தை பார்க்கக்கூட அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. நாள் முழுவதும் வேலைக்காரர்கள் அல்லது தங்களது தாத்தா பாட்டியின் முகத்தையே பார்க்கும் குழந்தைகள் மாலை நேரம் எப்பொழுது வரும், பெற்றோர் எப்பொழுது வருவார்கள் என எதிர்பார்த்து வாசலில் நிற்பார்கள். ஆனால் வரும் பொழுதே கையடக்க தொலைபேசியை காதினுள் செருகிவரும் பெற்றோர் பிள்ளைகளை பார்த்து ஒரு “ஹாய்” சொல்லி பிள்ளைகள் கையில் ஒரு திண்பண்டத்தை திணித்துவிட்டு தங்களது பேச்சை தொடருவார்கள். பிள்ளைகள் அதைத் தானாக பிரித்து சாப்பிட்டது பாதி, சிதறியது பாதி மாத்திரமல்லாது, அவர்களை ஏக்கத்தோடே பார்க்கும்.

பள்ளி செல்லுகிற பிள்ளைகள் வீட்டிற்கு வந்தவுடன் மீண்டும் மாலை நேர வகுப்புக்களை தொடருவார்கள். தங்களது சாதனைகளை அல்லது தங்களுக்குக் கிடைத்தப் பாராட்டுகளை பெற்றோரிடம் பகிர காத்திருந்து காத்திருந்து வரும் களைப்பினால் நித்திரைக்கு சென்ற பின், வீடு திரும்புகின்ற பெற்றோர் அவர்களை வருடி கொடுத்து நெற்றியில் முத்தமிட்டு என்ன பயன்? பெற்றோர்களைக் கேட்டால் பிள்ளைகளுக்காக தானே உழைக்கின்றோம் என்பார்கள். ஆனால் பிள்ளைகள் அவர்களின் அன்புக்காக ஏங்கி ஏங்கி விரக்தி நிலையை அடைகிறார்கள். அந்த நிலையானது அவர்கள் மனதில் கோபத்தை பெற்றோர் மேல் ஆதங்கத்தை உண்டுபண்ணுகிறது. இதுவே நாளடைவில் அவர்களை சமுகத்தில் பயங்கர செயல்களை உருவாக் குகிறவர்களாக மாற்றுகின்றது. அல்லது தமது வீட்டில் கிடைக்காத அமைதி அன்பை தேடி பிழையான இடங்களுக்கு செல்ல வைக்கிறது.

பிள்ளைகளின் புன்னகை

அன்பானவர்களே, வேதம் நமக்கு கூறுவது: ”பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம்” (சங். 127:4) என்று. ஆனால் அந்த செல்வத்தை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு செல்வத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம். மிகுந்த களைப்போடு வீடு திரும்புகிற நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் முகத்தில் தெரியும் புன்னகையை பாருங்கள்…..உங்கள் களைப்பு சோர்வு தானாகவே பறந்தோடி போய்விடும். பிள்ளைகள் கடவுள் நமக்கு கொடுக்கும் பரிசு! அந்த பரிசை பாதுகாப்பது நமது பொறுப்பு.

மலர் பூங்காவிற்கு சென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? பருவகாலத்தில் அங்கு அழகான பூக்கள் மலர்ந்திருக்கும். இன்று இந்த அழகிய மலர்களைப் போன்ற பிள்ளைகளைக் கசக்கி பிழிந்து எறியும் கயவர்கள் நடமாடத்தான் செய்கின்றனர். இவர்கள் மத்தியில் நமது பிள்ளைகள் எப்படி ஒரு சந்தோஷமான நாட்களை கழிக்க முடியும்? அவர்களது முகத்தில் புன்முறுவலை நாம் எப்படி காண முடியும்? இன்று இந்த இருண்ட உலகத்தில் பிள்ளைகளின் முகத்தில் பயத்தின் அறிகுறிகளையே நாம் காண்கின்றோம்.

பள்ளிகளில் அவர்களிடத்தில் பட்சபாதம் காட்டும் ஆசிரியர்கள், ஆலயங்களில் பிள்ளைகளுக்கிடையில் வேறுபாடு. வீடுகளில் அவர்களோடு தவறாக நடக்க முற்படும் உறவினர்கள், தங்களது விரக்தியை அல்லது களைப்பை பிள்ளைகளிடம் காட்டும் பெற்றோர் … இப்படியிருக்க நமது பிள்ளைகள் எப்படி மலர்ந்த முகத்துடன் காணப்பட முடியும்? முந்தைய நாட்களில் மாலை நேரங்களில் அயல் வீட்டு பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடிய அனுபவம் எனக்குண்டு. ஆனால் இன்றைய நாட்களில் பிள்ளைகளை விளையாடவிடுவதும் நம்பிக்கையற்று காணப்படுகிறது. கல்வி எனும் சுமையை அவர்கள் தலையில் ஏற்றுவதால் விளையாட நேரம் கிடைப்பதுமில்லை.

பெற்றோர் பிள்ளைகளின் உறவு

கணவன் மனைவிக்கிடையில் ஒரு நல்ல உறவை கட்டியெழுப்புபவர்கள் பிள்ளைகளே. இன்று அநேகர் பணம் சேர்த்து வீடு கட்டி, வாகனம் வாங்கி அதன் பிறகு பிள்ளைகள் கிடைத்தால் போதும் என நினைத்து காலத்தை பின்போடுகிறார்கள். தங்களது தவறான உறவுகளினால் பிள்ளைகளை வெகு இலகுவாக கர்ப்பத்திலேயே கொலை செய்கிறவர்களும் உண்டு. வேதாகமத்தில் எரேமியாவின் புத்தகம் 1:5ஆம் வசனம் இப்படிக் கூறுகிறது: “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்”. ஆகவே தாயின் கருவில் பிள்ளைகளை உருவாக்குகிறவர் கடவுள். அவர் உருவாக்குகிற கருவையே இன்று பெற்றோர் கொலை செய்கிறார்கள். அதற்கு உடந்தையாக ஆண் அல்லது பெண் உடன்படுகிறார்கள். மருத்து வரும்கூட இப்பாவத்திற்கு உடன்படுவதை காண்கிறோம். கடவுள் தரும் கொடையான கருவை அழிப்பதும் கொலைக்குற்றமாகும். தங்களது கடன்களில் இருந்து மீள்வதற்கும் பிள்ளைகளை விற்பவர்களும் உண்டு. இது எத்தனை கவலைக்குரியது!

தாத்தா பாட்டி அன்று கதை சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? பிள்ளைகளை மடியில் படுக்க வைத்து அறிவுரையான கதைகளை பிள்ளைகளுக்கு கூறுவார்கள். வெளிநாட்டவர்கள் Good Night stories என கூறுவார்கள். கதை கூறுவது என்பது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்குமிடையில் நல்ல ஒரு உறவை கட்டியெழுப்புகிறது. இது பிள்ளைகளின் ஞாபக சக்தியை வலுவடையச் செய்கிறது. அவர்கள் மொழியையும் அதை உச்சரிக்கும் விதத்தையும் கற்றுகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இன்றோ, காலம் மாறி போய்விட்டது.

பெற்றோராகிய நாம், பிள்ளைகள் நம்மை தொல்லைப்படுத்தாமல் இருப்பதற்காக படுக்கையில் கையடக்க தொலைபேசி, TV Game ஆகியவற்றைக் கொடுத்து பழக்குகிறோம். சிறு பிள்ளைகள் தாமாகவே You-Tube இயக்க பழகி உள்ளனர். ”நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா” எனப் பாடி சோறு ஊட்டிய காலம் போய்விட்டது. இன்று இந்தப் பாட்டை கேட்கின்ற மனநிலையில் பிள்ளைகளும் இல்லை. ஆறுதலாக அமர்ந்து பிள்ளைகளுக்கு சோறு ஊட்டக்கூடிய நிலையில் பெற்றோருமில்லை.

பெற்றோரின் பொறுப்பு

வேதாகமத்தில் நீதிமொழி 22:6 கூறும் அறிவுரையானது: “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்”. பிள்ளைகள் சரியான வழியில் நடக்க வழிகாட்ட வேண்டியதும் கர்த்தரைத் தேட கற்றுத்தர வேண்டியதுமான பொறுப்பு பெற்றோராகிய நமக்குதான் உண்டு. எனவே சிறு வயதிலே நாம் தண்டிக்க வேண்டிய இடத்தில் அவர்களைத் தண்டித்து, அன்புகாட்ட வேண்டிய நேரத்தில் அவர்களை அரவணைத்து, ஆற அமர அமர்ந்து பிள்ளைகளுடன் நேரம் செலவழித்து அறிவுரைகளைக் கூறிவரும்போது சமுதாயத்தில் நல்ல பிரஜைகளாய் திகழ்வது உறுதி.

சத்தியவசனம்