ஆசீர்வாதமான குடும்பம்

Dr.தியோடர் வில்லியம்ஸ்
(ஜனவரி-பிப்ரவரி 2012)

நமது ஆலயங்களிலே திருமண ஆராதனையின்போது 127ஆவது 128ஆவது சங்கீதங்களை வாசிக்கும் ஒரு பழக்கம் இருக்கிறதில்லையா, அதை நீங்களும் கேட்டிருப்பீர்கள். 128ஆவது சங்கீதத்திலே அருமையான அநேக சத்தியங்கள் உள்ளன. இந்த சங்கீதத்திலே குடும்பத்தைக் குறித்ததான தேவ திட்டத்தைப் பார்க்கிறோம். உங்களுடைய குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கவேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது. இச்சங்கீதத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்:

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்”. “இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான் (சங்.128:1, 4).

இதை வாசித்துக்கொண்டிருக்கும் கணவன்-மனைவி அல்லது புதியதாக திருமணமானவர்களே! இதோ, உங்களுக்கு கர்த்தருடைய வார்த்தை என்னவெனில், உங்களுடைய திருமண வாழ்வு, குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப் பட்டதாய் இருக்கவேண்டும் என்று கர்த்தர் திட்டமிட்டிருக்கிறார். இதுவே அவருடைய சித்தம்!

அவருடைய சித்தத்தின்படி, திட்டத்தின்படி நம்முடைய குடும்பவாழ்வு நடக்கவில்லையானால் யாருக்குப் பொறுப்பு? திருவாளர் மாணிக்கம் கடைக்குப் போய் ஒரு நல்ல டேப்ரிக்கார்டர் வாங்கினார். எத்தனையோ நாட்களாய் சேர்த்துவைத்த பணத்தைக் கொண்டு அந்த டேப்ரிக்கார்டரை வாங்கினார். வாங்கின உற்சாகத்திலே அதிலே டேப்புகளையெல்லாம் போட்டு போட்டு நிறைய பாடல்களையும் பிரசங்கங்களையும் கேட்டார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. சில வாரங்கள் சென்றபின்பு அது நின்றுபோய்விட்டது, வேலை செய்யவில்லை. என்ன ஆனது என்று அவருக்குத் தெரியவில்லை. இவரால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. டேப்ரிக்கார்டரைப் போட்டு கேட்கத்தான் தெரியும் தவிர, அதில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதை எப்படி சரிசெய்வது என்றெல்லாம் அவருக்குத் தெரியாது. உடனே அதை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்று, கடைக்காரரிடம் என்னய்யா, இந்த மாதிரி ஒரு டேப்ரிக்கார்டரை எனக்கு கொடுத்துட்டீங்க. இது வேலை செய்யவில்லையே. நான் வாங்கி சில வாரங்களேதான் ஆகிறது என்று கேட்டார்.

அப்பொழுது கடைக்காரர் கேட்டார் அய்யா திரு.மாணிக்கம், அந்த டேப்ரிக்கார்டரோடுகூட ஒரு கையேடு புத்தகம் ஒன்று கொடுத்தேன். அது இருக்கிறதா? அதை படித்துப் பார்த்தீர்களா? என்றார். அதற்கு மாணிக்கம் புத்தகமா, டேப்ரிக்கார்டரைத்தான் நான் வாங்கிட்டுப் போனேன். அதோடுகூட நீங்கள் கொடுத்த கருவிகளையெல்லாம் நான் வாங்கிட்டுப் போனேன். ஆனால் புத்தகம் ஒன்றும் இல்லையே என்று கூறினார். கடைக்காரர் அய்யா, நீங்கள் அந்த கையேடு புத்தகத்தை போய்த் தேடிப்பாருங்கள். இந்த டேப்ரிக்கார்டரை செய்தவர் இதை எப்படி இயக்குவது? இது எப்படி இயங்குகிறது? என்றெல்லாம் அந்த புத்தகத்திலே சொல்லியிருக்கிறார். ஏதாவது கோளாறு ஏற்பட்டால் இது என்ன கோளாறு, ஏன் ஏற்பட்டது என்பதையெல்லாம் அந்த புத்தகத்தில் பார்த்தால் தெரியும். எனவே அந்த கையேடு புத்தகம் மிகவும் முக்கியம் என்று சொல்லி மாணிக்கத்தை அனுப்பிவிட்டார்.

அருமையானவர்களே, திருமண வாழ்வு என்பது ஆண்டவர் கொடுத்த ஈவு. ஆதியாகமம் 2ஆவது அதிகாரத்திலே பார்க்கிறோமே, ஏவாளை ஆதாம் உருவாக்கினானா? அல்லது தனக்கு திருமணம் வேண்டுமென்று சொல்லி ஆதாம் ஏதாவது முயற்சி செய்தானா? இல்லை. அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கடவுளே பார்த்து அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை உருவாக்கி, கொண்டு வந்து அவனுக்கு முன்பாக நிறுத்தினார். அப்போ திருமணத்தை உருவாக்கியது யார்? கர்த்தர். அதை உருவாக்கினவர் அந்த திருமணம் எப்படி இயங்குவது, அதை எப்படி இயக்குவது என்று இந்த சத்திய வேதத்திலே எழுதி வைத்திருக்கிறார். அதைப் பார்த்து அதன்படி நடந்தால்தான், திருமண வாழ்வு மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் உள்ளதாய் இருக்கும். இந்த செய்தியின் ஆரம்பத்தில் கூறியதுபோல் உங்கள் திருமண வாழ்வு ஆசீர்வாதமாக இருக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். ஆனால், அது நம்மால் நடக்கக்கூடிய ஒரு காரியம் அல்ல. அவர் சொன்னபடி, அவர் வார்த்தையிலே கூறியிருக்கிற காரியங்களையெல்லாம் செய்து அதின்படி நடந்தால், உங்கள் திருமண வாழ்வு ஆசீர்வாதமுள்ளதாக இருக்கும். இதுவே கர்த்தருடைய திட்டம்! அந்தத் திட்டத்திற்கென்று அவர் ஒரு ஒழுங்கு வைத்திருக்கிறார். அதை இந்தச் சங்கீதத்திலே பார்க்கிறோம். அவருடைய ஒழுங்கு என்ன?

கர்த்தருடைய ஒழுங்கில் கணவனின் பொறுப்பு

சங்கீதம் 128:1,2இல் கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் என்று வாசிக்கிறோம். யாருக்கு இந்த வார்த்தைச் சொல்லப்பட்டிருக்கிறது? கணவருக்கு. அப்படியென்றால், குடும்ப ஆசீர்வாதத்திற்கு கணவரின் பங்கு என்ன? இந்த ஒழுங்கிலே, ஒரு கணவன் தனது கைகளின் பிரயாசத்தினாலே வேலைசெய்து சம்பாதித்து, தனது குடும்பத்தை நடத்தவேண்டும். கணவன் தனது கைகளின் பிரயாசத்தைக் கொண்டு அவர் சாப்பிட வேண்டும், அவருடைய குடும்பமும் சாப்பிட வேண்டும். இதுதான் கர்த்தருடைய ஒழுங்கு.

ஆனால் இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது? இன்றைக்கு சில குடும்பங்களிலே கணவர் வேலை செய்யமாட்டார், அவர் 100க்கு 100 முழுக்க சோம்பேறியாய் இருப்பார். இந்தத் தேனீக்களின் கூட்டத்திலே ஆண் தேனீக்கள் இருக்கின்றதல்லவா? இந்த ஆண் தேனீக்கள் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாய் இருக்கும். இந்த மாதிரியாக வேiலை செய்யாத சில கணவர்கள் உண்டு. இப்படியான குடும்பங்களில் மனைவிதான் ஓடி ஆடி வேலைசெய்து பணத்தை சம்பாதித்துக் கொண்டுவரவேண்டும். இது எல்லா வாழ்க்கை தரத்திலும், சில குடும்பங்களிலே இன்று நடைபெற்று வருகிறது. ஏழையான ஒரு அம்மா போய் பல வீடுகளிலே வீட்டுவேலை செய்துவிட்டு வருவார்கள். கணவர் வீட்டில் இருந்துவிட்டு குடித்து வெறித்து, அந்த பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு, மனைவியை அடிப்பார். அங்கு எப்படி சமாதானம் இருக்கும்? அந்தக் குடும்பம் அப்படியே சிதறிப்போய்விடும். அதேபோல் கொஞ்சம் மேல்மட்டத்தில் உள்ள குடும்பங்களிலும் வேலை செய்யாத சோம்பேறி ஆண்கள் உண்டு. இவர்கள் வேலை தேடி போவதில்லை, எந்த வேலையிலும் நிலைத் திருப்பதில்லை. பின்பு எப்படி குடும்பம் நடக்கும்? அந்த வீட்டுக்கார அம்மாதான் போய் அலுவலகத்திலேயோ அல்லது வேறு எங்கேயோ வேலைசெய்து கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்த ஊதியத்திலே குடும்பம் நடக்கும். இது கர்த்தருடைய திட்டமா? இது அவருடைய ஒழுங்கா? இல்லவே இல்லை!

இதை படித்துக்கொண்டிருக்கும் என் அருமையான சகோதரர்களே, உருப்படியான வேலை செய்து, உண்மையாய் அதை செய்து குடும்பத்தை ஆதரிக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு. தகப்பனாகிய நீ, கணவராகிய நீ அந்த பொறுப்பிலிருந்து தவறுவாயானால் உன் குடும்பம் சிதறிவிடுமே! நீ கர்த்தருக்கு கணக்கு கொடுக்கவேண்டும்.

கணவர் ஒருவேளை நோய்வாய்பட்டு அல்லது ஊனமுற்று வேலை செய்யமுடியாத நிலையில் இருந்தால் அது வேறே காரியம். ஆனால் சுகமிருந்தும், பலமிருந்தும் வேலை செய்ய மனமில்லாமல் இருந்தால் அது தவறு. அப்போ குடும்பத்தை ஆதரிப்பது கணவரின் பொறுப்பாகும் என்பது தேவனுடைய திட்டமாகும். அதனாலே மனைவி வேலைசெய்யக் கூடாது என்று நான் சொல்லவில்லை, வேதமும் போதிக்கவில்லை. மனைவி வேலை செய்தாலும், குடும்பத்தை ஆதரிக்கும் முக்கியமான பொறுப்பு கணவருக்கு உரியது.

கர்த்தருடைய ஒழுங்கில் மனைவியின் பொறுப்பு

சங்கீதம் 128:3இல் உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப் போல் இருப்பாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வீட்டோரங்களில் என்கிற இந்த சொல்லை சரியானபடி எபிரேய மொழியிலிருந்து மொழிபெயர்த்தால், ஒரு தேவாலயத்திலே பரிசுத்தமான ஒரு பகுதி இருப்பதுபோல உன் வீட்டுக்கு உண்டல்லவா. அப்படிப்பட்ட அந்த உள்ளான இடத்திலேதான் மனைவிக்கு இடம். அப்படியென்றால் ஒரு வீட்டுக்கு ராணி யார்? மனைவிதான், தாய்தான். அந்த வீட்டுக்குள்ளே கனிதரும் திராட்சக்கொடியைப் போல் அவள் இருப்பாள். எனவே ஒரு மனைவிக்கு இடம் எது? வீட்டுக்குள்ளே.

அப்படியானால் மனைவி வீட்டுக்கு வெளியே வேலை செய்யக்கூடாதா? சமூக சேவகியாய் இருக்கக்கூடாதா? சபை ஊழியத்திலே பங்குபெறக் கூடாதா? அப்படிச் சொல்லவில்லை, சபை ஊழியம் சமூகசேவை என்றுசொல்லி ஊரெல்லாம் சுற்றிவிட்டு, வீட்டை கவனிக்காமல் குடும்பத்தை கவனிக்காமல் இருந்தால் அதுதான் தவறு. இப்படிப்பட்ட சில பெண்கள் உண்டு அல்லவா! ஏம்மா பிள்ளைகளுக்கு சாப்பாடு செய்யவில்லையே, கணவருக்கு ஒன்றும் சமைத்து வைக்கவில்லையே என்று கேட்டால், உபவாச ஜெபம் ஐயா, நான் போய்விட்டேன். நீ உபவாசம் இருந்தால் சரி, அவருக்கு எப்படி? அவருக்கு சாப்பாடு வேண்டும் அல்லவா, உன் பிள்ளைகளுக்கு சாப்பாடு வேண்டும் அல்லவா. ஆவிக்குரிய காரியங்களைக் காரணமாக வைத்து, கடவுளையும் காரணமாக வைத்து, குடும்பப் பொறுப்பை உதாசீனம் செய்கிற பெண் தவறு செய்கிறாள். இதை நான் சொல்லவில்லை வசனம் சொல்கிறது. உன் வீட்டோரங்களில் உன் மனைவி. வீட்டுக்குள்ளே உள்ள கடமைகளை கவனிக்க வேண்டும். அதனாலே நீ வீட்டுக்குள்ளேயேதான் இருக்கவேண்டும், வெளியே வேலை செய்யக்கூடாது சமூகசேவை தேவையில்லை, சபை ஊழியம் தேவையில்லை என்று வசனம் சொல்லவில்லை. தாராளமாய் சபை ஊழியம், சமூகசேவை, வெளியே வேலை அனைத்தையும் செய்யலாம். ஆனால் வீட்டை உதாசீனம் செய்யாதே, உன் குடும்ப பொறுப்பை உதாசீனம் செய்யாதே. அது கர்த்தரின் ஒழுங்குக்கு மாறாக செல்வதாகும்.

கர்த்தருடைய ஒழுங்கில் பிள்ளைகளின் பொறுப்பு

உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள் (சங்.128:3). எவ்வளவு அருமையான ஒரு காட்சி இது! பந்தியிலே கணவன் மனைவி உட்கார்ந்திருக்கிறார்கள், பிள்ளைகளும் உட்கார்ந்திருக்கிறார்கள். குடும்பமாக உட்கார்ந்து ஜெபித்து, சாப்பிடுவது எவ்வளவு ஒரு நல்ல ஒழுங்கு. சில குடும்பங்களில் இப்படிப்பட்ட ஒழுங்கு இல்லை, குடும்ப ஜெபமும்கூட கிடையாது. சில வீடுகளில் குடும்ப ஜெபம் நடத்த முடியவில்லை என்று சொல்வார்கள். ஏன் என்று கேட்டால், என் வீட்டுக்காரர் வேலைமுடித்து Over Time பார்த்து விட்டு இரவு நேரம் கழித்து வருகிறார், அதற்குள்ளாக பிள்ளைகளெல்லாம் தூங்கிவிடுகின்றனர். அதனால் குடும்ப ஜெபம் நடத்தமுடியவில்லை என்கிறார்கள். அப்படி தப்பித்தவறி அவர் வந்து அகப்பட்டுக் கொண்டாலும்கூட, குடும்ப ஜெபத்திலே ஒரு பொம்மை மாதிரி உட்கார்ந்திருப்பார், வாயை திறக்கமாட்டார். வேதத்தைப் படிப்பது யார்? அந்த சிறுபிள்ளைகள்தான். பின்பு ஜெபம் பண்ணுவது அம்மா. இவர் ஒன்றுமே செய்ய மாட்டார். எவ்வளவு தவறில்லையா!

என்அருமையான சகோதரனே, கணவன் என்கிற முறையிலே தகப்பன் என்கிற முறையிலே, உன் குடும்பத்தின் ஆவிக்குரிய நிலைக்கு நீ பொறுப்பு! குடும்ப ஜெபத்தை முன்னின்று நடத்தவேண்டியது உன்னுடைய பொறுப்பு. அதற்கு ஏற்ற ஒரு நேரத்தை அமைத்து பிள்ளைகளும், தாயும் தகப்பனுமாக உட்கார்ந்து ஜெபிப்பது எவ்வளவு நல்ல முறை. அதைப்போலவே குடும்பமாய் ஒன்றாக உட்கார்ந்து ஜெபித்து சாப்பிடுவது எவ்வளவு நல்ல ஒழுங்கு. அந்தப் பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகளைப்போல இருப்பார்கள். இது எதைக் காட்டுகிறது? பாதுகாப்பைக் காட்டுகிறது. இன்றைக்கு அநேக வீடுகளிலே குடும்பங்களிலே பாதுகாப்பு உணர்வு கிடையாது. வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான் (சங்.127:6). அம்பறாத்தூணி என்றால் அம்புகளை வைக்கிற அந்த பொருள் இதிலே அம்புகள், கையிலே அம்புகள் – இது எதைக் காட்டுகிறதென்றால், பாதுகாப்பைக் காட்டுகிறது. பிள்ளைகளுக்குத் தேவையானது என்ன? பாதுகாப்பு. ஒரு வீட்டிலே அம்மாவும், அப்பாவும் நாயும் பூனையும் போல சண்டை போட்டால், பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பு உணர்வு இருக்கும்?

ஒரு தங்கை இவ்வாறு கூறினாள்: பாஸ்டர், எங்க வீட்டிலே எனக்கு ஒரே நடுக்கமாயிருக்கிறது. எங்க அப்பாவும், அம்மாவும் சண்டை போடத் தொடங்கிவிட்டால் அவர்கள் போடுகிற சத்தத்திலே எனக்குள்ளே ஒரு நடுக்கம் வந்துவிடும். சில சமயத்திலே அப்பாவும், அம்மாவும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள். அப்பொழுது எனக்குள்ளே ஒரே பயமாயிருக்கும் என்றாள். இதைக் கேட்ட என் உள்ளம் அப்படியே உடைந்துவிட்டது. இன்று எத்தனை குடும்பங்களிலே இந்த நிலை. இதை வாசித்துக் கொண்டிருக்கும் என் அருமையான சகோதரனே, சகோதரியே உன் பிள்ளையின் பாதுகாப்பிற்காக, அவர்களுடைய பாதுகாப்பு உணர்வு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, நீங்கள் இருவரும் கணவனும், மனைவியும் ஒன்றுபடவேண்டும். அமைதியாய், சமாதானமாய் இருக்கவேண்டும். நீங்கள் ஒருபோதும் சண்டைபோடக் கூடாது. ஏனென்றால் ஒரு நாளிலே அவர்கள் நின்று, உன்னாலேதான் என்னுடைய ஆளத்துவம் பாதிக்கப்பட்டது. எனக்கு இத்தனைவிதமான மனோதத்துவ பிரச்சனைகள் வந்ததற்கு காரணம் நீதான் என்று சொன்னால், நீ கர்த்தருக்கு கணக்குக் கொடுக்கவேண்டும் இல்லையா?

குடும்பத்திற்கு தேவன் தரும் ஆசீர்வாதம்

இந்த கடவுளுடைய திட்டத்திலே அவரது ஒழுங்கைப் பற்றி பார்த்தோம். குடும்பத்திற்கு தேவன் தரும் ஆசீர்வாதத்தைக் குறித்து 128ஆம் சங்கீதத்திலே பார்க்கிறோம். கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் (சங்.128:5). ஏன் சீயோன் இங்கு குறிக்கப்படுகிறது? சீயோன் என்பது கிருபையைக் காட்டுகிறது. சீனாய் மலை நியாயப்பிரமாணத்திற்கு அடையாளமாயிருக்கிறது. சீயோன் மலை கிருபைக்கு அடையாளமாயிருக்கிறது. குடும்ப வாழ்விலே கிருபை தேவை அல்லவா!

கர்த்தரின் மன்னிப்பை பெற்றுக்கொள்வதற்கும், ஒருவரையொருவர் மன்னிப்பதற்கும் கர்த்தரின் கிருபை தேவையாயிருக்கிறது, நான் தப்பு செய்துவிட்டேன், உன்னை புண்படுத்தி விட்டேன், என்னை மன்னித்துவிடு என்று நீ சொல்வாயானால், எத்தனையோ ஆண்டுகளாக இருந்த மனத்தாங்கல் எல்லாம் தீர்ந்து விடும், இல்லையா! அதைச் செய்யாமல் போனால், மனத்தாங்கல் வளர்ந்துகொண்டே போகிறது. அந்த தடுப்புச்சுவர் பெரிதாகிக்கொண்டே போகிறது. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள் (எபே. 4:26) என்று வேதவசனம் சொல்கிறது. கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் கோபம் கொண்டாலும், பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள். கோபப்பட்டு விட்டு பாவம் செய்யாமலிருப்பது எப்படி? சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. இரவு வருவதற்கு முன்பு, சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு அதை சரிபண்ணிக் கொள்ளுங்கள். கோபப்பட்டாலும், ஒருவருக்கொருவர் மனத்தாங்கல் ஏற்படும்படி பேசிவிட்டாலோ, செயல்பட்டுவிட்டாலோ உடனே மன்னிப்புக் கேட்டு அதை சரிபண்ணிவிட வேண்டும். இல்லையானால் பிசாசுக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அதைத்தான் எபேசியர் 4:27ல் பவுல் கூறுகிறார். இப்படி நாம் கிருபையினாலே மன்னிப்பைப் பெற்று, கிருபையினாலே கடவுளுடைய பயத்திலே நடக்கும்பொழுது வருகிற ஆசீர்வாதம் சீயோன் மலையிலிருந்து வருகிற ஆசீர்வாதம் என்று அழைக்கப்படுகிறது.

குடும்பத்தில் கர்த்தருடைய நோக்கம்

நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய் (சங். 128:5,6). நானும், என் குடும்பமும், என் பிள்ளைகளும் என்று வாழ்வது தேவனின் நோக்கமல்ல. நம்முடைய குடும்ப வாழ்வின் மூலமாய் கர்த்தரின் திட்டம் நிறைவேற வேண்டும். அவருடைய இரட்சிப்பின் திட்டம் நம் குடும்பத்தின் மூலம் நிறைவேற வேண்டும். மற்றவர்கள் அவரைப்பற்றி அறியவேண்டும். அவருடைய சபை வளரவேண்டும். இதைத் தான் 5,6 ஆகிய வசனங்களிலே இஸ்ரவேல், எருசலேம் என்று கூறுகிறார். குடும்ப வாழ்வுக்கும், எருசலேமுக்கும், இஸ்ரவேலுக்கும் என்ன சம்பந்தம்? குடும்ப வாழ்வின் மூலமாக எருசலேம் வாழும், இஸ்ரவேல் கட்டப்படும். நமக்கு சபை கட்டப்படும் என்று இதை நாம் பொருள்படுத்தலாம்.

ஆகையினால் என் அருமையான சகோதரரே, சகோதரிகளே உன் குடும்ப வாழ்வு மற்றவர்களின் ஆத்தும இரட்சிப்புக்காக, சபையின் நல்வாழ்வுக்காக பயன்பட வேண்டுமே! இப்படிப்பட்ட குடும்ப வாழ்வை நாம் விரும்புகிறோமா?

சத்தியவசனம்