பயத்தின் மத்தியில் பக்தனின் மனம்

எம்.எஸ்.வசந்தகுமார்
(ஜனவரி-பிப்ரவரி 2012)

தாவீதின் பண்பும் நன்றியும் (சங். 56:12-13)

நாம் எப்பொழுதும் எல்லாவற்றுக்காகவும் தேவனை ஸ்தோத்தரிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றே வேதாகமம் கூறுகிறது (எபி.13:15). சங்கீதக்காரர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பொருத்தனைகளும் ஸ்தோத்திரப்பலிகளாகவே இருந்தன.

சங்கீதங்களின் பொருத்தனைகள், தேவன் என்னை விடுவித்தால் அவருக்கு நான் இதை செய்வேன் என்று பேரம்பேசும் ஒப்பந்தங்களாக இராமல், தேவன் நிச்சயமாக என்னை விடுவிப்பார் என்னும் நம்பிக்கையில் பக்தர்கள் ஏறெடுப்பதாகக்கூறிய ஸ்தோத்திரப் பலிகளாகவே உள்ளன. அதாவது, தேவன் என்னுடைய ஜெபத்தைக் கேட்பார் என்னும் நம்பிக்கையின் வெளிப்பாடாகவே சங்கீதங்களில் உள்ள பக்தர்களின் பொருத்தனைகள் உள்ளன. இதனால் இவைகள் விடுதலைக்காக தேவனுக்கு செலுத்தும் கூலியாக இராமல், தேவன் மீதான பக்தியின் வெளிப்பாடாகவே இருந்தன. இத்தகைய பக்தி, தேவனை ஸ்தோத்தரிப்பதையும், அவரைப் பற்றி சாட்சிபகர்வதையும் உள்ளடக்கியிருக்கிறது. இதனால்தான், நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும், கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன் என்று 116ஆம் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

56ஆம் சங்கீதத்திலும் தாவீதின் பொருத்தனைகள், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவதையும் அவர் அவனுக்கு செய்தவைகளைப்பற்றி சாட்சி பகர்வதையும் உள்ளடக்கியிருந்தன. அக்காலத்தில் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துபவன், ஆலயத்தில் அதற்கான பலியைச் செலுத்தி (லேவி.7:12, 22:29, ஆமோ.4:5), தேவனுக்கு நன்றி கூறும் பாடல்களையும் பாடுவதோடு (சங்.42:4, 69:30), தான் எதற்காக ஸ்தோத்திரப்பலி செலுத்துகிறேன் என்பதை அங்கிருக்கும் மனிதர்களுக்கு அறிவிப்பான். தாவீதும் நெருக்கடியான சூழ்நிலையிலும் தேவனைத் துதிக்கும் மனநிலையில் இருந்துள்ளதோடு, எருசலேமுக்குச் சென்று அங்குள்ள ஆலயத்தில் ஸ்தோத்திரப் பலிகளைச் செலுத்தி, அங்கிருக்கும் பக்தர்களுக்குத் தேவன் தன்னுடைய வாழ்வில் செய்தவற்றை விபரித்துக் கூறும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் நம்பினான். இத்தகைய நம்பிக்கையுடன் அவன் 56ஆம் சங்கீதத்தை நிறைவு செய்துள்ளான்: நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ? (சங். 56:13).

தாவீதின் ஜெபத்தைக் கேட்டு தேவன் அவனை எதிரிகளிடமிருந்து விடுவித்த பின்னர் அவன் ஏறெடுத்த ஸ்தோத்திரமாக இவ்வசனம் இருப்பதாகச் சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்குக் காரணம், இவ்வசனத்தின் இறுதி வாக்கியம் மூல மொழியில் தப்புவித்தீரே என்று இருப்பதேயாகும். இதனால், சங்கீதத்தின் கடைசி வசனங்கள் இரண்டும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இவர்கள் கருதுகின்றனர். சில வேத ஆராய்ச்சியாளர்கள், தாவீது விடுவிக்கப்பட்ட பின்பே முழு சங்கீதமும் எழுதப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், எதிர்கால சம்பவங்கள் நிச்சயமாக நடைபெறும் என்னும் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் ஜெபிக்கும்போதும் தீர்க்கதரிசனம் உரைக்கும்போதும், எதிர்கால சம்பவங்களை இறந்தகாலத்தில் குறிப்பிடுவது வேதாகம கால மக்களின் வழக்கமாக இருந்தது. இதனால்தான், இயேசுகிறிஸ்துவின் இவ்வுலக வாழ்வுக்கும் 700 வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா எதிர்காலத்தில் நடைபெறும் அவருடைய சிலுவை மரணத்தைப்பற்றி முன்னறிவிக்கும்போது, சம்பவங்களை இறந்த காலத்தில் குறிப்பிட்டுள்ளதை ஏசாயா 53ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கலாம். இதைப் போலவே, 56ஆம் சங்கீதத்தின் கடைசி வசனம், தேவன் ஜெபத்திற்குப் பதிலளித்துவிட்டார் என்னும் நம்பிக்கையுடன் எழுதப்பட்டுள்ளது. தேவனை நம்புகிறவன், அவர் தன்னுடைய விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்துவிட்டார் என்னும் நம்பிக்கையுடனேயே ஜெபிப்பான். இதனால்தான், மழைக்காக ஜெபித்த தீர்க்கதரிசியாகிய எலியா, தன்னுடைய ஜெபத்தை ஆரம்பிப்பதற்கும் முன்பே, தேவன் மழையைக் கொடுத்துவிட்டார் என்னும் நம்பிக்கையுடன் பெரு மழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்று கூறினான் (1இராஜா.18:41). இத்தகைய நம்பிக்கை நமக்கும் இருக்கவேண்டும் என்பதனால்தான், நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் (மாற்.11:24) என்று வேதம் கூறுகிறது.

தாவீது காத் என்னும் பட்டணத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், தேவன் நிச்சயம் தன்னைக் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையுடன் ஜெபிக்கிறவனாக இருந்தான். இதனால் தேவன் தன் ஆத்துமாவை மரணத்துக்கும், தன் கால்களை இடறுதலுக்கும் தப்புவிப்பார் என்று 13ஆம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். இவ்வசனத்தில் தப்புவித்தல் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் பிடுங்குதல் என்னும் அர்த்த முடையது. முட்களுக்கு மத்தியில் இருக்கும் ரோஜாமலர் காயப்படாமல் செடியிலிருந்து பிடுங்கப்படுவதைப்போல, ஆபத்துகள் மத்தியில் இருக்கும் தன்னை தேவன் அவ்விடத்திலிருந்து எடுத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்வார் என்னும் நம்பிக்கையில் தாவீது இச்சொல்லை உபயோகித்துள்ளான்.

தாவீதின் கூற்றில், ஆத்துமா என்னும் சொல் முழு மனிதனையும் குறிப்பிடும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இவ்வசனத்தில் இச்சொல் மனிதனுடைய ஆவிக்குரிய பகுதியைக் குறித்தால், ஆத்துமா அழியாது (மத்.10:28, லூக்.12:4-5) என்னும் வேதாகம சத்தியத்தை இவ்வசனம் முரண்படுத்தும். வேத வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது ஒரு வசனத்திற்கு நாம் கொடுக்கும் அர்த்தம், இன்னுமொரு வசனத்தை அல்லது உபதேசத்தை முரண்படுத்தினால், அது தவறான விளக்கமாகவே இருக்கும். வேதாகமத்தில் ஆத்துமா என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. சில இடங்களில் மனிதனுடைய ஆவிக்குரிய பகுதியை இச்சொல் குறித்தாலும், சில இடங்களில் முழுமனிதனையும் குறிப்பிடும் விதத்திலும் இச்சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. தற்காலத்திலும் கூட புதிய ஆத்துமாக்கள் சபைக்கு வந்துள்ளன என்று கூறும்போது மனிதனுடைய ஆவிக்குரிய பகுதி சபைக்கு வந்ததை அல்ல, மனிதர்கள் சபைக்கு வந்துள்ளதையே குறிப்பிடுகின்றோம். இதைப்போலவே, தாவீதும் தன்னுடைய ஆத்துமா மரணத்துக்குத் தப்புவிக்கப்படுவதாகக் கூறும்போது, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்த அவன் மரிக்கும் நிலையிலிருந்து தப்புவிக்கப்படுவதைப் பற்றியே குறிப்பிட்டுள்ளான்.

உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் தான் இருந்தாலும் தேவன் தன்னைக் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையில், தான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்தில் நடப்பேன் என்று தாவீது 13ஆம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். தேவனுக்கு முன்பாக நடத்தல் என்னும் சொற்பிரயோகம், தேவனுடைய பிரசன்னத்தில், அவரையே வாழ்வின் குறிக்கோளாகக்கொண்டு, அவருடைய சித்தத்தின்படியும் வார்த்தையின்படியும் அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து வாழ்வதாகும். தாவீது தேவனுக்கு முன்பாக மாத்திரமல்ல, தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்தில் நடப்பதாகவும் 13ஆம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். ஜீவனுள்ளோர் என்பது இவ்வுலகில் உயிருடன் வாழ்பவர்களாவர். வேதாகமத்தில் வெளிச்சம் இருள் என்னும் சொற்கள் பல்வேறு அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளபோதிலும், இவ்வசனத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும் தாவீது மரணத்திலிருந்து தப்புவிக்கப்படுவதைப் பற்றியே கூறுவதனால், ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்தில் என்பது உயிருடனிருப்போர் இருக்கும் வெளிச்சமுள்ள இவ்வுலகத்தையும், இருள் மரணத்தின்பின் சரீரங்கள் வைக்கப்படும் இருளான கல்லறையையும் குறிக்கின்றது. இதனால்தான், யோபு 3:22, 10:18-21ல் உயிருடனிருப்பவர்கள் வாழும் பூமி வெளிச்சமிக்கதாகவும் மரித்தோரின் சரீரங்கள் செல்லுமிடம் இருளானதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே, சங்கீதம் 88:11-12ல் பிரேதக்குழி இருள் நிறைந்த இடமாக உள்ளது. எனவே, மரண இருளில் சென்றுவிடாமல் (அதாவது மரிக்காமல்) வெளிச்சத்தில் ஜீவிப்பவர்களோடு உயிருடன் இருப்பதைப்பற்றியே தாவீது இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். 116ஆம் சங்கீதத்திலும் மரணத்திலிருந்து தப்புவிக்கப்படுவது இவ்விதமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. அச்சங்கீதத்தில், என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன் (சங்.116: 8-9) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், இருளான மரணத்திற்குள் செல்லாமல், உயிருடனிருப்போர் இருக்கும் வெளிச்சமுள்ள உலகில் வாழ்வதைப் பற்றிய நம்பிக்கையுடன் தாவீது இவ்வாறு எழுதியுள்ளான்.

உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், அதிகளவு பயத்துடன் இருந்த தாவீது தேவனை நம்பியபோது, உள்ளத்திலிருந்து பயம் முழுமையாக நீங்கியவனாக, தேவன் தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையுடன் மனிதரால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்து தேவனை ஸ்தோத்தரிப்பவனாக இருந்தான். தாவீதைப்போல நாமும், சகல சூழ்நிலைகளிலும் தேவன் நம்மோடு இருக்கின்றார் என்பதை அறிந்தவர்களாக எப்பொழுதும் அவரை நம்பி வாழ வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்கள் நமக்கு பயத்தை ஏற்படுத்தும்போது, நாம் சூழ்நிலையையும், நம்முடைய உணர்ச்சிகளையும் அல்ல, தேவனையும் அவருடைய வார்த்தையான வேதாகமத்தையுமே நம்ப வேண்டும். நாம் இருக்கும் சூழ்நிலைகளும் நம்முடைய மன உணர்ச்சிகளும் மாற்றமடைபவை. ஆனால் தேவன் மாறாதவராயிருக்கின்றார் (சங்.102:27, எபி.13:8, மல்.3:6). அவருடைய வார்த்தையும் ஒரு நாளும் மாறாது (சங்.119:89, ஏசா.40:8, மத்.24:35). தேவன் வாக்கு மாறாதவராக, தம்முடைய வாக்குத்தத்தத்திற்கு எப்பொழுதும் உண்மையுள்ளவராக இருக்கின்றார் (எண்.23:19, 1சாமு.15:29). அவர் எப்பொழுதும் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார் (மத்.28:20). இதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் பயப்படத் தேவையில்லை. நாம் பயங்கரமான சூழ்நிலைகளில் அகப்படும் போதும், நமக்கு பயத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும்போதும், தாவீதைப்போல தேவனையே முழுமையாக நம்பவேண்டும். ஏனெனில் அவர் நம்முடைய பயத்தை நீக்கு பவராகவும், நமக்கு உதவி செய்பவராகவும் இருக்கின்றார்.

ஒரு தடவை கொந்தளிக்கும் கடலில் கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண் அதிக அச்சமடைந்தவளாக நடுங்கிக் கொண்டிருந்தாள். ஆனால், அவளுடைய கணவனாயிருந்த அக்கப்பலின் தலைவனோ மிகவும் அமைதியாக இருந்தான். இதைக் கண்ட அப்பெண் தன் கணவனிடம், எனக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும் இக்கடற்கொந்தளிப்பு ஏன் உங்களுக்கு சிறிதளவுகூட அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். இதற்கு எவ்வித பதிலும் சொல்லாத கப்பற் தலைவன் திடீரென்று தன்னிடமிருந்த கூரிய வாளை அவளுடைய மார்புக்கு நேராக நீட்டினான். தன் மார்பைக் குத்தும் விதத்தில் நீட்டப்பட்ட வாளைக் கண்டு புன்னகைத்த தன் மனைவியிடம் அவன், உன்னைக் குத்தி கொல்லக்கூடிய இந்த கூரிய வாள் உன்னைக் குத்துகின்ற விதமாக உன் மார்பு வரை வந்தும் நீ ஏன் பயப்படவில்லை? என்று கேட்டான். அதற்கு அவள், என் கணவனின் கரத்திலிருக்கும் வாள் எவ்வளவு கூரானதாக இருந்தாலும் அது என்னை எவ்விதத்திலும் காயப்படுத்தாது என்று எனக்குத் தெரியும். அதனால் நான் பயப்படவில்லை என்றாள். இதைக் கேட்ட அம்மனிதன், இதைப்போலத்தான் என் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் கடல் எவ்வளவு கொந்தளித்தாலும் அது என்னை எவ்விதத்திலும் சேதப்படுத்தாது என்று எனக்குத் தெரியும். இதனால் கடற் கொந்தளிப்பு எனக்கு எவ்வித பயத்தையும் ஏற்படுத்தவில்லை என்றான். இக்கப்பற் தலைவனைப்போலவே நாம் வாழும் உலகமும், நம்முடைய வாழ்வும் தேவனுடைய கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது என்பதையும், அவருடைய அனுமதி இல்லாமல் எதுவும் நம்முடைய வாழ்வில் நடைபெறுவதில்லை என்பதையும் நாம் அறிந்திருந்தால், எத்தகைய பயங்கரமான சூழ்நிலையும் நமக்கு எவ்வித பயத்தையும் ஏற்படுத்தாது. சகலத்தையும் தம் முடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கும் வாக்குமாறாத தேவன் பின்வருமாறு வாக்களித்துள்ளார்: நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன் (ஏசா. 41:10,13).

சத்தியவசனம்