திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(ஜூலை-ஆகஸ்டு 2019)

4. கர்த்தருக்குப் பயந்து அவர் வழியில் நடத்தல்

குடும்ப வாழ்க்கை தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம். அதிலே நீங்கள் ஒருமனப்பட்டு செயல்படவேண்டும் என்பதையும் அதற்கு ஆதாரமாக சிம்சோனைக் குறித்தும் பார்த்தோம். தேவனுடைய ஒருபெரிய மனிதன், அவர் அங்கே போனார்; அங்கே தேவனுடைய ஆவியானவர் இறங்கினார். அவர் இங்கே போனார்; தேவனுடைய ஆவியானவர் அவர்மேல் இறங்கினார். ஒருவேளை இன்றைக்கு சிம்சோன் இங்கே இருப்பார் என்று சொன்னால், நான் அந்த ஜெபக் கூட்டத்துக்கு போனேன்; ஆவியானவர் இறங்கினார். இந்த ஜெபக்கூட்டத்துக்கு போனேன்; ஆவியானவர் என்னை அபிஷேகம் பண்ணினார் என்று சொல்லுவார். இவைகளெல்லாம் நல்ல காரியங்கள். அந்த ஜெபக்கூட்டத்திலும் இந்த ஜெபக்கூட்டத்திலும் ஆவியானவர் அபிஷேகம் பண்ணுவது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், இப்படிப்பட்ட உன்னதமான உச்சகட்டத்தின் அனுபவங்களைக் குறித்து பேசிவிட்டு, இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலே அதாவது, இரண்டு அனுபவங்களுக்கு இடையிலே அங்கே அவன் போனான்; ஒரு பெண்ணைக் கண்டான். இங்கே அவன் போனான்; ஒரு வேசியைக் கண்டான். அங்கே அவன் போனபோது தெலீலாள் என்பவள் தன்னுடைய மடியிலே அவனைப் படுக்கவைத்திருந்தாள். இப்படிப்பட்ட காரியங்களை வாசிக்கும்பொழுது அது எவ்வளவு வேதனையான காரியமாக இருக்கிறது, பாருங்கள்.

குடும்ப வாழ்க்கை ஒரு சந்தோஷமான ஒரு வாழ்க்கையாகவும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற ஒரு வாழ்க்கையாகவும் இருக்கவேண்டுமென்றால், அங்கே நாம் நம்பிக்கைக்குரியவர்களாக வாழவேண்டும். நம்பிக்கை துரோகம் நாம் செய்யக்கூடாது. உங்களுடைய திருமண நாளை எண்ணிப் பாருங்கள். அந்த நாளிலே நீங்கள் கொடுத்த வாக்கு என்ன? என்னுடைய வாழ்விலும் தாழ்விலும், என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும், என்னுடைய ஐசுவரியத்திலும் தரித்திரத்திலும், எல்லாச் சூழ்நிலையிலும் உன்னையே பற்றிக்கொள்வேன்; பிறர் முகம் பார்க்கமாட்டேன் என்று வாக்கு கொடுத்தவர்கள் வாழ்க்கையிலே சில வேளைகளிலே பல விதமான சோதனைகள் வரும்பொழுது, அங்கும் இங்கும் அலசடிபட ஆரம்பித்து விடுகிறார்கள். சிம்சோனைப்போல உங்களுடைய வாழ்க்கையில் உச்சகட்ட காரியங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் நிலைவரமான அனுபவம் வேண்டும். குடும்ப வாழ்க்கையிலே நீங்கள் ஒருவருக்கொருவர் நிலைவரமாக வாழ வேண்டும். நிலைவரமான நட்பும் உறவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உங்களுடைய குடும்ப வாழ்க்கையிலே நிலைவரமான ஆசீர்வாதங்கள் இருக்கும்.

இந்த நாளிலே இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற உங்களுடைய யாருடைய வாழ்க்கையிலாவது மூன்றாவது ஒரு நபர் பிரவேசித்து உங்களுடைய குடும்ப வாழ்க்கையின் பரிசுத்தத்தை, குடும்ப வாழ்க்கையின் நோக்கத்தை சீரழித்துக்கொள்வதற்காக பல காரியங்கள் நடந்துகொண்டிருக்குமானால் இன்றைக்கே அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். மனந்திரும்பி கல்வாரி சிலுவையண்டையிலே வந்து, ஆண்டவரே என்னை மன்னியும்! என்று ஒப்புக்கொடுத்து உங்களுடைய கணவன் அல்லது மனைவியினிடத்திலே ஒப்புரவாகி மறுபடியுமாக குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட பாக்கியத்தை தேவன் உங்களுக்கு கொடுக்க வேண்டும்.

சிம்சோனுடைய வாழ்க்கையிலே அசுத்தத்திற்கு அவன் ஒப்புக்கொடுத்தபடியினால் அவனுடைய வாழ்க்கையும் பரிசுத்தமாய் இல்லை. தேவனுடைய நோக்கத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. கடைசியிலே தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினபொழுது பகைவரோடு கூட சேர்த்து தன்னையும் ஒரு வேடிக்கை பொருளாக மாற்றி அழித்துக்கொண்டார் எனப் பார்க்கிறோம். நீங்களும் அவ்வாறு வேடிக்கை பொருளாக மாறிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஏன் நீங்கள் ஊழியக்காராகக்கூட இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்திலே நாம் பரிசுத்தராக இல்லையென்றால், நாம் வேடிக்கைப் பொருளாக மாறிவிடுவோம். மற்றவர்கள் நம்மை வேடிக்கை பொருளாக பார்ப்பார்கள். அந்த நிலையில் நாம் இருக்கக்கூடாது.

இன்னொரு உதாரணத்தையும் வேதத்திலிருந்து கவனிக்கலாம். யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான் (ஆதி.39:1). அவனுடைய அண்ணன்மார் விற்றுவிடுகிறார்கள். வீட்டைவிட்டு பெற்றோரைவிட்டு தூரமாய் இருக்கிறான். அன்புக்காக ஏங்கி தவிக்கிற ஒரு அழகான வாலிபன். அந்த சூழ்நிலையில்தான் அவனுடைய எஜமானுடைய மனைவி அவனிடத்திலே போய், உனக்கு அன்பு வேண்டும் என்பதை நான் உணருகிறேன். உன்னுடைய பெற்றோருடைய அன்பு உனக்கு இல்லை. உன் சகோதனுடைய அன்பு உனக்கு இல்லை. ஒருவரும் உன்னை நேசிக்கவில்லை அடிமையாய் இருக்கிறாய்; என்னுடைய அன்பை உனக்குத் தருகிறேன் என்று சொல்லுகிறாள். இந்த வேளையிலே பிசாசானவன் யோசேப்பினிடத்தில் சொல்லி இருக்கவேண்டும்; யோசேப்பு யோசேப்பு ஒருவரும் உன்னைப் பார்க்கவில்லை, உன்னுடைய அண்ணன்மார் இங்கே இல்லை, உன்னுடைய பெற்றோர் இங்கே இல்லை, அவளுடைய கணவன்கூட இங்கே இல்லை, ஒருவரும் பாாக்கவில்லையே, ஏன் இந்த பாவத்தை நீ செய்யக்கூடாது? இதைச் செய்தால் ஒருவனும் இதைக் கண்டுபிடிக்கப்போவதில்லை.

இந்த விதமான சோதனையிலே அவன் பிடிபட்டுக் கிடக்கும்போது அவன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? இத்தனை பெரிய பொல்லாப்புக்கு நான் உட்பட்டு என் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி? அவனுடைய வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் என்ன? தேவனுக்கு விரோதமாக நான் எப்படி பாவம் செய்ய முடியும்? ஆம்! என்னுடைய நண்பர்கள் இங்கே இல்லை. என்னுடைய சகோதரர்கள் இங்கே இல்லை, அவளுடைய கணவன் கூட இங்கே இல்லை. ஆனால் என்ன செய்யமுடியும்? என்னுடைய தேவன் இங்கே இருக்கிறாரே. நான்கு சுவர்களுக்கு வெளியிலே எல்லாரையும் நீ அடைத்து வைத்துவிடலாம். ஆனால் நான்கு சுவர்களுக்கு உள்ளாக இருக்கிற என்னுடைய வாழ்க்கையிலே தேவனுடைய பிரசன்னத்திலிருந்து என்னை அகற்ற முடியாது. அந்த இடத்திலிருந்து அவன் ஓட ஆரம்பிக்கிறான்.

கிறிஸ்துவுக்குள் அருமையான தேவனுடைய பிள்ளைகளே, பாவ சோதனைகள் இன்றைக்கு அடிக்கடி நமக்கு வந்துகொண்டிருக்கிறது. சோதனைகள் இல்லையென்று சொல்லக் கூடியவர்கள் யாருமே இங்கு இல்லை. அப்படிப்பட்ட பல சோதனைகள் வரும்போது ஒருவரும் உங்களை காணாமல் இருக்கலாம். நீங்கள் தனிமையானவர்களாக உட்கார்ந்து இருக்கலாம். அப்படிப் பட்ட சூழ்நிலையிலே நீங்கள் வெற்றி பெற்றவர்களாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? தேவனுடைய பிரசன்னத்தினாலே நிரப்பப்படுவதற்கு நீங்கள் இடங்கொடுக்க வேண்டும். தேவனுடைய பிரசன்னம் உங்களை நிரப்பும்பொழுது அவருடைய பிரசன்னம் உங்களை வழிநடத்தும்பொழுது, எல்லா சூழ்நிலைகளிலும் தேவனாகிய நீர் என்னை காண்கிற தேவன்: நீர் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர் என்ற உணர்வின் அடிப்படையிலே பாவ சோதனைகளைவிட்டு ஓட தேவன் கிருபைகளை தந்து கொண்டே இருப்பார். அப்படிப்பட்ட கிருபை உங்களுடைய வாழ்க்கையிலே இருக்க வேண்டும் என்றால் சோதனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கான மார்க்கத்தை தேவன் காட்டும்போது அந்த மார்க்கத்திற்கு நீங்கள் கீழ்ப்படியவேண்டும்.

வேத வசனம் நமக்கு இவ்வாறு சொல்லுகிறது: மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல், வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையோடுகூட அதற்கு தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1கொரி. 10:13) என்று. ஆகவே, உங்களுடைய வாழ்க்கையிலே பாவ சோதனைகள் அதிலும், குறிப்பாக குடும்ப வாழ்க்கையை சீரழிக்கக்கூடிய அசுத்தமான பாவங்கள் உங்களது வாழ்க்கையிலே வரும்போது அதிலிருந்து விடுபடும் போக்கை தேவன் காட்டுவார். அந்த போக்கை கண்டுபிடித்து தேவனுக்கு கீழ்ப்படியவேண்டும். பிசாசுக்கு எதிர்த்து நிற்கவேண்டும்; அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். நீங்களும் அவனைவிட்டு ஓடிப்போவீர்கள். இப்படிப்பட்ட பாவங்களிலே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிற யாராவது இருப்பீர்கள் என்றால் இன்றைக்கு மனந்திரும்பி கிறிஸ்துவின் அண்டை வாருங்கள்.

உங்களுடைய வாழ்க்கையிலே வெற்றி வேண்டும் என்றும் பாவ சோதனைகள் நெருக்கி நிற்கும்போது, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி என்ற கேள்வியை கேட்டு அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும், கர்த்தருக்கு கீழ்ப்படிகிற கிருபையைத் தரவும் ஜெபியுங்கள். உங்களுடைய வாழ்க்கையை தேவன் ஆசீர்வதிப்பார்.

தேவனாலே உருவாக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையை கெடுப்பது பிசாசினுடைய தந்திரமாகும். இந்த நாட்களிலே பிசாசானவன் குடும்ப வாழ்க்கையை உடைத்துக்கொண்டிருக்கும்போது அதை ஆசீர்வாதமான ஒரு வாழ்க்கையாக நாம் மாற்றவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி தியானித்து வருகிறோம். வேதத்திலே பல பகுதியிலே குடும்பத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இப்பொழுது சங்கீதப் புத்தகம் 127,128 என்ற வேதபகுதிகளை நாம் பார்ப்போம். இந்தப் பகுதிகளை நாம் பார்க்கும்பொழுது குடும்பத்தை தேவன் கட்டவேண்டும் என்பதைக் குறித்துப் பார்க்கிறோம். 127ஆம் சங்கீதம் முதல் வசனம், “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” எனக் கூறுகிறது. கர்த்தர் நம்முடைய குடும்பத்தைக் கட்டவேண்டும்.

இங்கே வீடு என்று சொல்லப்பட்டிருப்பது குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறது. ஆனால் கர்த்தர் அந்த குடும்பத்தை கட்டுவதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையிலே நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன பொறுப்புகளை தேவன் கொடுக்கிறார், என்பதைக் குறித்து 128வது சங்கீதத்திலே நாம் வாசிக்கிறோம்.

1. முதல் வசனத்திலே கணவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். முதலாவது யார் கர்த்தருக்கு பயந்து நடக்கவேண்டும்?

இன்றைக்கு சில குடும்பங்களிலே அதைக் குறித்துக் கேட்டால் பாட்டியம்மா கர்த்தருக்குப் பயப்படவேண்டும். பாட்டியம்மா கர்த்தருடைய வழியிலே நடக்கவேண்டும். பாட்டியம்மா குடும்ப ஜெபங்களை நடத்த வேண்டும் என்று சொல்லி விடுவார்கள். ஆனால், வேதத்திலே இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது கணவனுக்கு. அதாவது, குடும்பத்தின் தலைவனாகிய தகப்பனாருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு! இந்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற கணவன் அல்லது தகப்பனாருக்கு வேதம் சொல்லுகிறது என்னவென்றால்; நீங்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்க வேண்டும்.

ஏன் கர்த்தருக்குப் பயப்பட வேண்டும்? நீதி மொழிகள் முதலாம் அதிகாரத்திலே, கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (1:7) என்று வாசிக்கிறோம் அல்லவா! ஞானம் நமக்குத் தேவை. அந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் இருக்கவேண்டும். அதன் அடிப்படையிலே நாம் பெற்றுக்கொள்ளுகிற ஞானத்தினாலே நம்முடைய பிள்ளைகளை வழிநடத்துவதற்கு, குடும்பத்தை வழிநடத்துவதற்கு, குடும்பத்திலே பல தீர்மானங்களைச் செய்வதற்கு தேவன் உதவி செய்கிறார்.

21வது நூற்றாண்டிலே கம்ப்யூட்டர் யுகத்திலே, டெலிவிஷன் யுகத்திலே, சேட்டிலைட் யுகத்திலே நாம் வாழ்கிறோம். இப்படிப்பட்ட காலத்திலே நம்முடைய பிள்ளைகள் அதிக அறிவுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவினாலே அவர்களும் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டச் சூழ்நிலைகளிலே பெற்றோர் அவர்களை சரியாக வழி நடத்தவேண்டும் என்றால் நமக்கு ஞானம் தேவை. இந்த ஞானம் எங்கேயிருந்து வரும்? கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தினால்தான் இந்த ஞானம் நமக்கு வரும். ஆகவே கணவன் அல்லது தகப்பனுடைய வாழ்க்கையிலே கர்த்தருக்கு பயப்படுகிற பயம் மிகவும் நமக்கு தேவை எனப் பார்க்கிறோம்.

2. இரண்டாவது சொல்லப்பட்டிருக்கிறது: அவன் கர்த்தருடைய வழியிலே நடக்கிறவன். கணவன் கர்த்தருடைய வழியிலே நடக்க வேண்டும் ஏன்? அவனுக்கு பின்னாலே, அவனை பின்பற்றி வருகிற ஒரு கூட்ட மக்கள் இருக்கிறார்கள். தேவன் குடும்பத்தினுடைய தலையாக இருக்கிறார். ஆனால் கணவன் தலைவராக இருக்கிறார். அந்த தலைவர் முன்னாலே போகும்போது பின்னாலே பின்பற்றி வருகிற ஒருகூட்ட மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். மனைவி, அவரது அன்பு பிள்ளைகள் ஆகிய இவர்கள் எல்லாரும் அவரை பின்பற்றி வந்துகொண்டிருக்கிறார்கள். அவரைப் பின்பற்றி அவர்கள் வரும்பொழுது எங்கே அவர்களை வழிநடத்துகிறோம் என்பதை தகப்பனார் அல்லது கணவன் யோசிக்கவேண்டும்.

ஒரு கணவன் நல்ல குடிகாரராக இருந்தாராம். அவர் ஒருநாள் இராத்திரி மழை பெய்து கொண்டிருக்கும்பொழுது நடுராத்திரி படுக்கையிலிருந்து எழும்பி வெளியிலே சென்றார். வெளியிலே மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையையும் பொருட்படுத்தாதபடிக்கு நடந்து நடந்து சாராயக் கடைக்கு வந்துவிட்டார். சாராயக் கடையிலே நின்று கொண்டிருக்கும்பொழுது பின்னாலே யாரோ வந்து அவருடைய சட்டையைப் பிடித்து இழுப்பதைப் போல உணர்ந்தார். திரும்பிப் பார்த்தால் அவருடைய மகன் சின்ன தம்பி ஜானி அங்கே நின்று கொண்டிருக்கிறான். மகனிடத்திலே அவர் கேட்கிறார், ஜானி! உன்னை யார் இங்கே வரச்சொன்னது? எப்படி இங்கே வந்தாய்? சாராயக்கடைக்கு வந்து விட்டாயே என்று அவர் சத்தம் போடுகிற பொழுது அந்த ஜானி சொன்ன காரியம் என்னவென்றால்: Dady, Dady, I have been following only your foot path! உங்களுடைய பாத சுவடுகளின் தடையங்களையே நான் பின்பற்றி வந்தேன். மகன் நடுராத்திரி விழித்துப்பார்த்திருக்கிறான். பக்கத்திலே இருந்த கட்டிலிலே அப்பாவைக் காணவில்லை, வெளியே வந்து பார்க்கிறான்; மழை பெய்துகொண்டிருக்கிறது, தகப்பனார் நடந்துபோன அந்த தடயம் அங்கே இருந்திருக்கிறது. அதன் மேலேயே கால்களை வைத்து வைத்து நடந்து வந்தபொழுது கடைசியிலே சாராயக்கடைக்கு வந்துவிடுகிறான்.

கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவர்கள் கர்த்தருடைய வழியிலே நடக்கிறவர்கள் என்று சொன்னால் கர்த்தருடைய வழியிலே நடக்கும்பொழுது பின்னாலே வருகிறவர்கள் கர்த்தருடைய வழியிலே வருவார்கள். அல்லது குடிகாரர்களாக இருப்பீர்கள் என்று சொன்னால் உங்களுடைய பிள்ளைகளும் சாராயக்கடையிலே வந்து சேர்ந்து விடுவார்கள். நம்முடைய பிள்ளைகளை அடுத்த தலைமுறையினரை எங்கே நாம் வழிநடத்தி செல்கிறோம் என்பதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே குடும்ப வாழ்க்கை என்பது பிள்ளைகளாலே தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்போது அந்த பிள்ளைகளை நாம் எப்படி வழிநடத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும். சரியான பாதையிலே நாம் வழிநடத்தத்தக்கதாக கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் இருக்கவேண்டும், ஞானம் இருக்கவேண்டும். இரண்டாவது அவர் வழியிலே நடக்கிறவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்று வேத வசனம் சொல்லுகிறது.

இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற கணவனே, தகப்பனே, உங்களுடைய வாழ்க்கையிலே நீங்கள் பாக்கியவான்களாக இருக்கிறீர்களா? குடும்பத்திற்கு ஆசீர்வாதமாக இருக்கிறீர்களா? இரண்டாவது வசனத்திலே பார்க்கிறோம்: உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாயென்றால் என்ன அர்த்தம்? கணவன் குடும்பத்தினுடைய காரியங்களை கவனித்துக்கொள்வதற்காய் வேலை செய்கிறவனாய் இருக்கவேண்டும். அவன் கையின் பிரயாசத்தை அவன் சாப்பிடுவான். ஆனால் இன்றைக்கு சில வேளைகளிலே உன் மனைவியின் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்று வேதத்தையே மாற்றவேண்டியதாய் இருக்கிறது. அப்படியென்றால் மனைவிமார் வேலை செய்யக்கூடாதா? அந்தவிதமான சர்ச்சைக்குள்ளே நான் போகவில்லை. அடிப்படையாக இது கணவனுடைய பொறுப்பு! தகப்பனாருடைய பொறுப்பு! தன்னுடைய கையின் பிரயாசங்களை தன்னுடைய குடும்ப வாழ்க்கைக்கு பயன்படுத்துகிறவனாக இருக்கவேண்டும்.

வேதத்தின் அடிப்படையிலே தங்களது குடும்பத்தை நடத்தக்கூடிய ஞானத்தை, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை, தங்களது கைகளின் பிரயாசத்தை குடும்ப வாழ்க்கையின் பயன்பாட்டிற்காக செயல்படுத்தும் இப்படிப்பட்ட பாக்கியத்தை தேவன் உங்களுக்கு தருவாராக!