சகோதரி சாந்தி பொன்னு
(செப்டம்பர்-அக்டோபர் 2019)

அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர் போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள் (1பேது.4:10).


“எல்லாத் தொல்லைகளையும் உதறிவிட்டு, எல்லாரையும் எல்லாவற்றையும் விட்டுவிலகி, சில நாட்கள் தனித்து வாழ விரும்பி, ஒரு தடவை, ஒரு தனி இடத்தை நாடிப்போனேன். என் திட்டம் இரண்டு கிழமைகள் எங்கேயாவது மறைந்திருப்பதாக இருந்தது. ஆனால் இரண்டாம் நாளே, ‘இதுவும் வாழ்க்கையா’ என்றாகிவிட்டது. பேசவோ, பார்க்கவோ, கூடியிருந்து உண்ணவோ, சண்டை செய்யவோ, சமாதானமாகவோ, கூடிப்பாடி ஆராதிக்கவோ, உள்ளதைப் பகிர்ந்து அதில் மகிழ்ந்திருக்கவோ ஒருவரும் இல்லையே என்று உணர்ந்தபோது, எனக்குள் ஒரு வெறுமை, ஒரு தனிமை உருவெடுத்தது. அது என்னை அழிக்கும் முன்னரே, அடுத்த நாளே நான் என் சொந்த இடத்துக்குத் திரும்பிவிட்டேன்” என்று ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கிறிஸ்துவுக்குள்ளான கிறிஸ்தவ வாழ்வு தனித்து வாழும் வாழ்வு அல்ல! சிலர் ஒரே குடும்பத்தில், அல்லது ஒரே சபையில் சேர்ந்திருந்தாலும், தங்களைத் தனிமைப்படுத்தி வாழுவதுண்டு. அது கிறிஸ்தவ வாழ்வு அல்ல. கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு கூட்டு வாழ்க்கை. அங்கே சந்தோஷமும் இருக்கும், சஞ்சலமும் இருக்கும். இல்லையானால் வாழ்வே சிறப்பாயிராது அல்லவா! ஆனால் என்ன சஞ்சலங்கள் நேரிட்டாலும், தேவனுக்குள்ளான மகிழ்ச்சி நிறைவாகவே இருக்கும். இந்தக் கூட்டு வாழ்வுக்குத்தான் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். கண்களுக்குத் தெரியாத அவருடன் நாம் உறவுகொண்டு, அவரோடு நாம் வாழுகிறோம் என்பதற்கு ஒரே சாட்சி, கண்களுக்குத் தெரிகின்ற பிற மக்களோடு நாம் தேவ அன்பைப் பகிர்ந்துகொண்டு வாழுவதே ஒன்றேயாகும். இந்த வாழ்வுக்குத்தான் தேவனுடைய வார்த்தை நமக்கு அழைப்புவிடுத்திருக்கிறது. இந்தச் சிந்தனைக்கு நாம் இடமளிக்காமல் இருக்கும்போது, பல சிக்கல்களை நாம் சந்திக்க நேரிடுகிறது.

ஒருவருக்கொருவர்

“ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள். கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். ஒருவருக்கொருவர் மெய்யைப் பேசுங்கள். ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். ஒருவரையொருவர் தாங்குங்கள். தேற்றுங்கள். ஒருவருக்கொருவர் போதியுங்கள். உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிடுங்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்.” இவை யாவும் பரிசுத்த வேதாகமம் நமக்குத் தருகின்ற பரிசுத்த கட்டளைகள். இவற்றோடு, ‘அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்’ (1பேது.4:10) என்று பேதுரு இன்னுமொரு ‘ஒருவருக்கொருவர்’ விதிமுறையைக் கூட்டி எழுதியிருக்கிறார்.

ஆம், நாம் கிருபையாய்ப் பெற்றுக்கொண்ட ஈவுகளைப் பகிர்ந்துகொடுத்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும்படி நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஈவுகளை எப்படிப் பகிருவது? உண்மைதான், அவற்றை எடுத்துக் கொடுக்கமுடியாது. ஆனால், பிறருக்கு நாம் காட்டும் அன்பில், சிரத்தையில், செய்கின்ற உதவியில் அந்த ஈவுகளை நாம் உண்மைத்துவத்துடன் பிரயோகிக்கலாமே! அப்போது, அங்கே தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. தேவன் நமக்கு அருளியிருக்கிற ஈவுகள் எதுவும் நமது இன்பமான உல்லாசங்களுக்காக அல்ல என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் உணரவேண்டும். இது நம்முடையது நமக்கானது என்று சுயநலமாக இருக்கிற பலராக, நம்மிடம் எந்த ஈவும் எந்த தாலந்தும் இல்லையே என்று தப்பிக்கொள்கின்ற சிலராக நாம் இருக்கக்கூடாது. அதேசமயம், நம்மிடம் இல்லாத ஒன்றை, இருப்பதுபோலக் காட்டிக்கொள்வதும் நல்லதல்ல. நம் எல்லாருக்குள்ளும் தேவன் ஏதொவொரு ஈவைத் தந்திருக்கிறார். பேதுரு, பிரசங்கம் பண்ணுவதைக் குறித்தும், உதவி செய்வதைக் குறித்துமே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் பவுலடி யாரோ இதைக் குறித்து அதிகம் எழுதியுள்ளார் (ரோமர் 12:6-18, 1கொரி.12:8-11).

என்ன பலன்?

இவ்விதமாக, ‘ஒருவருக்கொருவர்’ என்று வேதாகமம் காட்டும் வழியில் வாழுவதால், என்ன நடக்கப்போகிறது? இந்த உலகம் எதைத்தான் ஏற்கப்போகிறது? இப்படி அலுத்துக்கொள்வது கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நமக்குப் பொருந்தாது. நாம் பலன் எதிர்பார்த்து ஜீவிக்கிற மக்கள் அல்லவே! பலன் யாவும், கொடுத்தவருக்கே தவிர, நமக்கல்ல. கொடுத்தவர் மகிழும்போது, நமது இருதயம் மகிழுமே, அதைவிட வேறென்ன உன்னதமான பலன் நமக்குக் கிடைக்கவேண்டும்?

ஒரு முதியோர் இல்லத்திலே ஒரு தாயார், கையினால் இயக்குகின்ற தையல் இயந்திரம் ஒன்று வைத்திருக்கிறார்கள். மிஞ்சுகின்ற துணிகள், மற்றவர்கள் வேண்டாம் என்று ஒதுக்குகின்ற துணிகளை எடுத்து, சிறுபிள்ளைகளுக்கான அழகழகான சட்டைகள் தைத்துக்கொடுப்பார்கள். இன்னுமொரு தாயாரையும் தெரியும். அவர் எப்படியாவது தினமும் யாருக்காவது உணவு சமைத்துக் கொடுப்பார். அவர் என்ன சொல்லுவார் தெரியுமா? ‘எனக்குச் சமையலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. தெரிந்ததைத் தேவனுக்காகச் செய்கிறேன்’ என்பார். அவரது கைப்பக்குவமே தனிதான்! இன்னொருவர், தனக்குக் கிடைக்கின்ற பணத்தில் ஒரு சிறு பகுதியைச் சேகரித்து, ஒருதொகை வரும்போது, தன்னைப்போல தனிமையில் இருக்கின்ற தேவையுள்ள முதியோருக்குக் கொடுப்பார்கள். அதைப் பெற்றுக்கொள்கிறவர்கள் நன்றி சொல்லும்போது, இந்த அம்மாவின் முகம் மலருவதை நேரில் கண்டால்தான் புரியும்.

கடந்த நாட்களில், இலங்கையில் யுத்தம் நடந்து முடிந்த பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு, மிகவும் உள் ஊர்ப் பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்குச் சென்றிருந்தோம். அங்கே நாம் சந்தித்த மக்களின் வாழ்நிலைகளையும், அவர்கள் அவசர தேவைகளையும் நேரிலே கண்டபோது, சென்ற எங்கள் எல்லோரின் இருதயமும் உடைந்துவிட்டது. அங்கே ஒரு வயோதிப தகப்பனார், யுத்தத்தில் இழந்துபோன காலுக்குப் போட்ட பொய்காலே பொய்யாய்ப் போன கதையைச் சொன்னபோது அதிர்ந்துபோனோம். ‘இதுவரை நம்மை யாரும் வந்து பார்த்ததுமில்லை, ஆறுதல்கூடச் சொன்னவரும் இல்லை’ என்று அவர் சொன்னபோது உண்மையாகவே மனமுடைந்துபோனோம். வெகுதூரத்துக்கு ஒன்றாக அமைந்திருக்கிற வீடுகளிலே, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள்கூட மிகவும் குறைந்த நிலையிலே, மாத்திரமல்ல, கைகளை இழந்து கால்களை இழந்து, ஊன்று கோல்களோ, சக்கர நாற்காலியோ கிடைக்காத பட்சத்தில் அல்லலுறும் மக்களை நேரிலே சந்தித்தோம். ‘என்ன வாழ்க்கை’ என்று நம்மில்தானே நமக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாங்கள் வாழுகின்ற சுயநல் வாழ்வைக் குறித்து வெட்கம் உண்டானது. அவர்களுடைய தேவைக்கேற்ப சில உதவிகளைச் செய்தபோது, நாம் கண்டு அனுபவித்த ஒரே விஷயம், நமது ஆண்டவருடைய நாமம் மகிமைப்பட்டது என்பதுதான்.

பெரும்பாலானோர், புறமதத்தினர். ‘நாங்கள் எங்களை நேசித்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வந்திருக்கிறோம்’ என்று நமக்குள் இருக்கின்ற தேவ அன்பையும், ‘இது நமது ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் இந்த உதவியை யாரோ அனுப்ப, நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம்’ என்று சொல்லி நாம் அவர்கள் தேவைக்கான காரியங்களையும் பகிர்ந்தபோது, தமக்காக ஜெபிக்கும்படி கேட்டது மாத்திரமல்ல, கரம்கூப்பி ஜெபத்தில் அவர்கள் பங்கேற்றதையும் மறக்கவே முடியாது. அவர்கள் கண்கள் மூடி கைகள் கூப்பி நமது ஆண்டவருக்கு நன்றி சொன்னார்கள்.

‘எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக, ஆமென்’ என்று பேதுரு எழுதியதற்கு ஒரு சிறிய உதாரணத்தைத்தான் நாம் மேலே வாசித்தோம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ‘பிறருக்குக் கொடுக்கிற மனது’ கூட, தேவன் அருளுகின்ற வரம்தான். ஆனால், அது சிலருக்கு மாத்திரம் அருளப்படுகிற வரம் அல்ல. பாடல் வரம், பிரசங்க வரம் எல்லாருக்கும் கிடைக்காது. ஆனால், தங்கள் வறுமையிலும் தரித்திரத்திலும்கூட பிறருக்குப் பணத்தாலே உதவி செய்கின்ற வரம், மாத்திரமல்ல, தங்களிடம் உள்ள பொருட்களினாலும், சரீரத்தாலும் உதவி செய்கின்ற வரம் கிறிஸ்துவின் பிள்ளைகள் யாரும் தங்களுக்கு இல்லை என்று சொல்லமுடியாது.

ஏனென்றால், ஒன்று, இன்று நாம் வாழுவது, கிறிஸ்து தம்மையே முழுமையாகச் சிலுவையில் கொடுத்தபடியினால்தான் என்பதை நாம் விசுவாசிக்கிறவர்கள் என்றால், எப்படி நாம் சுய நலத்தோடு வாழமுடியும்? அடுத்தது, நமக்கென்று இருக்கின்ற எதுவும் நம்முடையதல்லவே! எல்லாமே தேவன் தந்தது. நாம் விடுகின்ற மூச்சுக்காற்றுக்கூட தேவன் அருளிய கிருபையின் ஈவுதான். ஆகவே, நம்மிடம் இருப்பவற்றால் பிறருடைய தேவைகளைச் சந்திக்கும் போதும், நம்மிடமுள்ள ஈவுகளை வரங்களைப் பிறருக்கென்று பிரயோகிக்கும்போதும், அதைப் பெற்றுக்கொள்கிறவர்கள் இயேசுவின் அன்பை, ஏன் இயேசுவையே நம்மில் காண்பார்கள்; கண்டு அவர்கள் தேவனைத் துதிப்பார்கள்; இந்த இயேசு யார் என்று தேடுவார்கள்; அவர்களும் இயேசுவின் அன்புக்குள் வர இது ஒரு பாலமாகும் அல்லவா!

இந்த இடத்திலே இயேசு சொன்ன ஒரு காரியத்தை நாம் நினைவுகூருவது நல்லது. தேவனுடைய பிள்ளைகள் பூமிக்கு உப்பாகவும், வெளிச்சமாகவும் இருக்கவேண்டியதன் அவசியத்தைக் கூறிவிட்டு இயேசு தொடருகிறார்: இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ (மத்.5:16).

உக்கிராணத்துவம்

அப்படியானால், ‘ஒருவருக்கொருவர்’ பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கும், உக்கிராணத்துவத்துக்கும் என்ன சம்பந்தம்? தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர் போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்’ என்று பேதுரு நமக்கிருக்கவேண்டிய உக்கிராணத்துவத்தை இங்கே குறிப்பிடுவது என்ன?

‘உக்கிராணத்துவம்’ என்றால் என்ன என்பதை நாம் முதலில் கவனிக்கவேண்டும். நமது சபைகளிலே பலவித உக்கிராணப் பொறுப்புகள் உண்டு. இந்தப் பதவிகளுக்காக பல முயற்சிகள் எடுத்து, தங்கள் பெருமைக்காக உக்கிராணக்காரராகின்ற பலரும் உண்டு. ஆனால் உக்கிராணத்துவம் என்பது ஒரு சுயநலம் கருதாத, ஒரு பெரிய பொறுப்பு. உக்கிராணத்துவம் என்பதைக் குறித்து எளிமையாக சிந்தித்தால், இன்னொருவரின் சொத்தை, வீட்டை, பண விபரத்தை நிர்வகிப்பதுதான் உக்கிராணக்காரரின் பொறுப்பு. கிறிஸ்தவர்கள் நம்மைப் பொறுத்தளவில், தேவனுடைய வேலையை, அவர் நம்மிடம் பொறுப்பாய் தந்த அவருடைய ஈவுகளை, அவருடைய சபையின் மூலமாக நிர்வகிக்கவேண்டிய அல்லது, முன்னெடுக்கவேண்டிய பொறுப்புத்தான் உக்கிராணத்துவம் ஆகும். இந்த உக்கிராணத்துவம் என்பது பதவி அல்ல; இது பொறுப்பு. இந்தப் பூமியிலே தம்முடைய நாமம் தரித்த ஒவ்வொருவரையும் தேவன் தம்முடைய உக்கிராணக்காரராக நியமித்திருக்கிறார். பொறுப்புகளைத் தந்திருக்கிறார்; அதை நிறைவேற்றத்தகக்க ஈவுகளையும் தந்திருக்கிறார்.

ஆக, உக்கிராணத்துவம் என்பது தெரிவு அல்ல. சுவிசேஷ உக்கிராணத்துவம் தனக்கு அருளப்பட்டதாக பவுல் குறிப்பிடுகிறார். சுவிசேஷத்தை விசுவாசிக்கின்ற விசுவாசம்கூட உக்கிராணத்துவத்தின் ஒரு பகுதிதான். ‘சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ! நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு. உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும் உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே’ என்று தன்னுடைய உக்கிராணத்துவத்தைக் குறித்து எழுதுகிறார் பவுல் (1கொரி. 9:16,17).

உக்கிராணத்துவமும் கணக்கொப்புவித்தலும்

உக்கிராணத்துவத்தின் இன்னொரு பகுதி, கணக்கொப்புவித்தல் ஆகும். பிறருடைய காரியத்தை நாம் நிர்வகிக்கும்போது, உரியவருக்கு உரிய நேரத்தில் கணக்கு ஒப்புவித்துத்தானே ஆகவேண்டும். மத்.25:14-30இல் இயேசு குறிப்பிடுகின்ற புறதேசத்துக்குப் பிரயாணமாய்போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாக, அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக ஒப்புக் கொடுத்து, பின்னர் வந்து கணக்குக் கேட்ட உவமையிலும் நாம் இதைத்தான் கற்றுக்கொள்கிறோம். தேவனுடைய ஈவுகளை, தேவனுடைய காரியங்களை நாம் எப்படி இந்த உலகிலே உபயோகிக்கிறோம், செலவு செய்கிறோம் என்பதற்கான கணக்கை நாம் தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள். புதைத்து வைத்தால் என்ன நடக்கும் என்பதை இயேசுவின் உவமை நன்கு விளக்குகிறது.

மாத்திரமல்ல, நம்மால் இயலாத எதையும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறவர் அல்ல. வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுக்கவும். பசியுள்ளவனுக்கு ஒருவேளை உணவு கொடுக்கவும், தாகமுள்ளவனுக்குத் தண்ணீர் கொடுப்பதும், வியாதிப்பட்டவனை ஆறுதல்படுத்தவும், சிறையிலிருக்கிறவனைப் பார்ப்பதும்கூட நம்மால் முடியாதா என்ன? இறுதி நாளிலே, ஆண்டவர் நம்மிடம் கேட்கும்போது (மத்.25: 34-46) நாம் என்ன சொல்லுவோம்?

ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழும் வாழ்வு மகத்தான வாழ்வு. அது நமக்கு அருளப்பட்ட உக்கிராணத்துவம். இறுதியிலே நாம் அதற்கான கணக்கை ஒப்புவித்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் நாம் கொண்டிருக்கின்ற, அனுபவிக்கின்ற யாவுமே தேவனிடமிருந்து கிருபையாய் நாம் பெற்றுக்கொண்டவைகளே. ஆகவே, அவருக்குரியதை அவருடைய மகிமைக்காகச் செலவு செய்யலாமே. அதனால் அநேகர் தேவ அன்பை ருசிபார்க்கக்கூடுமல்லவா!

பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகள் நாமே தேவனுடைய உக்கிராணக்காரர். அவர் நம்மிடம் பொறுப்புகளை மாத்திரமல்ல, தம்முடைய யாவையும் தந்திருக்கிறார். அவருடையதை அவருடைய மகிமைக்காகவே, உக்கிராணத்துவத்தோடு பயன்படுத்துவோமாக. ‘ஒருவருக்கொருவர்’ இதுதான் கிறிஸ்தவ வாழ்வின் மூச்சுக்காற்று என்பதை மறக்கவேண்டாம். இன்று இப்போதே, தேவன் தந்த ஈவுகளில் எதையாவது நமக்கென்று மறைத்து வைத்திருந்தால், அது பொருளோ பணமோ செல்வமோ உதவி செய்யும் மனப்பான்மையோ பிரசங்கிப்பதோ எது வாயினும், இன்று யாருக்காவது தேவனுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வோமா? வாஞ்சை இருந்தால் தேவாவியானவர் நிச்சயம் நமக்குப் பெலன் தந்து நடத்துவார். ஆமென்.