Dr.உட்ரோ குரோல்
(செப்டம்பர்-அக்டோபர் 2019)
மறக்க முடியாத சாதனை
ஆசகேல் தான் துரத்திச் சென்ற மனிதனைப் பிடிக்க முடியாத போதிலும், அவனைத் துரத்திச் செல்வதில் மிகுந்த தைரியமும், மன உறுதியும் கொண்டிருந்தான். சவுலின் படைத் தலைவனான அப்னேரும், அவனுடைய படை வீரர்களும் தாவீதின் படை வீரர்களால் ஒரு பயங்கர யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்னேர் எப்படியோ தப்பி, ஓடத்தொடங்கினான்.
ஆசகேல் அவனைத் துரத்திக்கொண்டு பின் சென்றான். அப்படி அவன் அப்னேரைத் துரத்திக்கொண்டு ஓடும்போது, தன்னைத் துரத்தி வரும் வீரனின் வேகத்தையும், ஓடும் திறமையையும் கண்டு திரும்பிப் பார்த்து அது ஆசகேல் என்று அடையாளம் கண்டுகொண்டான். அப்னேர், ஆசகேலைவிட முந்தி ஓடித் தப்பமுடியாது என்று கண்டான். எனவே அவன் திரும்பி ஆசகேலைப் பார்த்துப் பயமுறுத்தினான். எனினும் ஆசகேல் நின்றுவிடவில்லை. தொடர்ந்து ஓடினான். அப்னேர் நின்று தன் ஈட்டியினால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி அவனுடைய முதுகுப்பக்கம் நீட்டி நின்றது. ஆசகேல் அந்த இடத்திலேயே விழுந்து செத்தான். இவ்வாறு வேகமாகத் துரத்தி ஓடிய ஆசகேல் மரணமடைந்தான்.
(சென்ற இதழின் தொடர்ச்சி)
ஆசகேல் பராக்கிரமசாலிகளின் வரிசையில் ஒருவனாகக் கருதப்பட்டான். காரியங்கள் ஆசகேலின் வழியில் வரத் தொடங்கின. அவன் இப்பொழுது 24000 படை வீரர்களின் தளபதி. இந்தப் புனிதக் கடமைக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட 12 வீரர்களில் ஒருவன். அவன் தன்னுடைய மாமாவுக்குப் பெருமையுடனும், சிறப்புடனும் சேவை செய்யமுடியும். இப்பொழுது அவன் தன்னுடைய சகோதரர்களின் நிழலிலிருந்து ஓரளவு வெளியே வந்துவிட்டான் என்று சொல்லலாம்.
ஆசகேல் என்னும் இளைஞன், இதைவிடச் சிறந்த ஒரு குழுவின் உறுப்பினனாகவும் ஆக்கப் பட்டிருந்தான். தாவீது நியமித்திருந்த ‘பராக்கிரம சாலிகள்’ அல்லது ‘முப்பது பேர்’ குழுவில் ஆசகேலும் ஒருவன். இந்த ‘முப்பது’ என்பது தாவீதினால் தெரிந்தெடுக்கப்பட்ட பராக்கிரமசாலிகளின் ஒரு பொது எண்ணாக இருந்திருக்கலாம். ஏனெனில் இவர்களைப் பற்றி கூறப்பட்டிருக்கும் இரண்டு இடங்களிலும் முப்பதுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பராக்கிரமசாலிகள் இருந்தார்கள் என்று காண்கிறோம். 2 சாமுவேல் 23ஆம் அதிகாரம், 1 நாளாகமம் 11ஆம் அதிகாரம்.
இந்த எண் 30ஆக இருந்திருக்கலாம். கூடுதலாக இருந்தவர்கள் இந்த முப்பது பேரில் யுத்தத்தில் இறந்தவர்களின் இடத்தை நிரப்ப நியமிக்கப்பட்டிருப்பார்கள் (உதாரணம்: இத்தியனாகிய உரியா). எப்படியிருந்தாலும் இந்த 30 பேர் கொண்ட குழு இஸ்ரவேலின் உயர்மட்ட போர்த் தளபதிகளாய் இருந்தார்கள். இந்த இரண்டு வேதப்பகுதிகளிலும் அந்த 30 பராக்கிரமசாலிகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அப்பட்டியல்களில் முன்னிலையில் இருக்கும் பெயர் எது? என்று நினைக்கிறீர்கள். ஆசகேல்.
ஆர்வத்தின் வீழ்ச்சி
ஆசகேலுக்குக் கொடுக்கப்பட்ட பணி மிகவும் அபூர்வமானது. என்றபோதிலும் அவனுடைய பெயர் பலரால் இன்று நினைவுகூரப்படவில்லை. அவன் ஒரு பெரிய மகத்துவமுள்ள தேவனுக்கு ஊழியம் செய்த சிறிய மனிதனாயிருந்தான். அவனிடம் தேவனுக்காகவும், இஸ்ரவேல் தேசத்துக்காகவும் மிகுந்த ஆர்வம் இருந்தது. தன்னுடைய மாமாவாகிய தாவீது இராஜாவுக்குச் சாதனையான காரியத்தைச் செய்யவேண்டும் என்று விரும்பினான். ஆனால் தேவனுக்கு உபயோகம் உள்ள ஊழியர்களாயிருப்பதற்கு நம்மிடம் ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. இதற்கு ஆசகேலின் கதை ஒரு நல்ல உதாரணம். ஆசகேல் புகழின் உச்சிக்கு ஏறினான். ஆனால் தன்னுடைய ஆர்வம் காரணமாக விவேகமும், ஞானமும் இல்லாததால் வீழ்ச்சியடைந்தான்.
ஆசகேல் தன்னுடைய குடும்ப உறவுகள் காரணமாக நமது கவனத்தை ஈர்க்கவில்லை. இராஜாவுக்குச் சேவை செய்யத் தெரிந்தெடுக்கப்பட்ட 12 பேரில் ஒருவன் என்பதாலும் அவன் புகழ்பெறவில்லை. தாவீதினால் தெரிந்தெடுக்கப்பட்ட 30 பராக்கிரமசாலிகளில் ஒருவன் ஆசகேல் என்பதாலும் அவன் பெருமையடையவில்லை. ஆசகேல் தன்னுடைய பெருமைக்குத் தெரிந்து கொண்டது தன்னுடைய “ஓடும் வேகத்திறன்”. அவனால் தளபதியாயிருந்து தன் படைப்பிரிவை நடத்தவும் முடியும். அவனால் வேகமாக ஓடவும் முடியும். அவன் மிகவும் தைரியசாலி. ஊக்கமும், ஆர்வமும், உற்சாகமும் உள்ளவன். அவனுடைய கால்களின் வேகம் அவனை ஓடச் செய்தது. சில வேளைகளில் தேவனுடைய வீரர்கள் மிகவும் வேகமாகச் செயல்படுகிறார்கள்.
சவுலின் மரணத்துக்குப் பிறகு, அவனுடைய குமாரர்களில் ஒருவனான இஸ்போசேத் கீலேயாத், எப்பிராயீம் மற்றும் இஸ்ரவேல் முழுவதுக்கும் இராஜாவாக ஆக்கப்பட்டான் (2சாமு. 2:8,9). இது தாவீதை இஸ்ரவேலிலும், யூதாவிலும் இராஜாவாக ஆக முடியாதபடி தடுக்கும் ஒரு முயற்சி. இஸ்போசேத் இராஜாவாக முடி சூட்டப்பட்டபொழுது, சவுலின் மெய்க்காப்பாளனாகவும், படைத்தளபதியாகவும் இருந்து அப்னேர்தான் பின்னணியில் இருந்து அனைத்துக் காரியங்களையும் செய்தவன். அப்னேர் சவுலுக்கு மிகவும் உண்மையுள்ள ஊழியக்காரன். அது தான் தாவீதுக்கு அவனை மிகவும் ஆபத்தான பகைவனாக ஆக்கிற்று.
சவுலின் தளபதி அப்னேரும், தாவீதின் தளபதி யோவாபும் அடிக்கடி பூனையும் எலியும் போல மோதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அது அதிக நாள் தொடரவில்லை. அதற்கு ஏதாவது செய்யப்படவேண்டும். இஸ்ரவேலின் தளபதியும், யூதாவின் தளபதியும் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கிபியோனின் குளத்தருகே கூட்டினார்கள். ஒரு பக்கத்தில் அப்னேரும் அவனுடைய வீரர்களும் இருந்தனர். குளத்தின் மறுகரையில் இவர்களுக்கு எதிராக யோவாபும் அவனுடைய வீரர்களும் கூடியிருந்தனர். அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்து எங்கள் பக்கத்தில் 12 வீரர்களும், உங்கள் பக்கத்தில் 12 வீரர்களும் முன்வந்து சிலம்பம் பண்ணட்டும் என்றான். யோவாப் அதற்குச் சம்மதித்தான். அப்படியே 12 வீரர்கள் வீதம் ஒருபக்கமாய்ப் போய்ச் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்று மடிந்தார்கள். பயங்கர யுத்தம் அங்கு நடந்தது. தாவீதின் சேவகர் அப்னேரையும், அவனுடைய படையினரையும் தோற்கடித்துவிட்டார்கள்.
இந்தத் திட்டம் வேடிக்கையானது, ஆபத்தானது. சவுலின் 12 வீரர்களும், தாவீதின் 12 வீரர்களும் ஒருவரையொருவர் கொன்றார்கள். விளைவு 24 வீரர்களும் செத்து மடிந்தார்கள். இந்தப் போட்டியால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. பகைதான் வலுத்தது.
பயங்கர யுத்தம் மூண்டது. யோவாபும் யூதாவின் மனுஷரும் வெற்றியடைந்தார்கள். அப்னேர் துரத்தியடிக்கப்பட்டான். இந்தப் போராட்டத்தில் யூதாவின் பக்கத்தில் செரூயாவின் குமாரர் மூன்றுபேரும் இருந்தார்கள். அவர்கள் யோவாப், அபிசாய், ஆசகேல். இவர்களில் ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாக ஓடுகிறவனாயிருந்தான். (2சாமு.2:18).
தோற்று ஓடிக்கொண்டிருந்த அப்னேரைப் பின்தொடர்ந்து ஆசகேல் ஓடத் தொடங்கினான். அவனுடைய சகோதரர்கள் அதைக் கண்டார்கள். அவர்கள் அவனைத் தடுத்து நிறுத்தவோ, பிடித்து நிறுத்தவோ முடியவில்லை. வில்லிலிருந்து விடுபட்ட அம்பைப்போல ஆசகேல் பாய்ந்து சென்று கொண்டிருந்தான். ஆனால் அவன் போர்க் கவசம் தரித்திருக்கவில்லை. கையில் ஆயுதமும் இல்லை.
ஆசகேல் தன்னுடைய ஓடும் திறமையை ஆண்டவருக்காகச் செலவிட விரும்பினான். அதுபோலத் தன் இராஜாவுக்கு வீரத்துடன் சேவை செய்யவும் விரும்பினான். மேலும் இந்தத் தீரச் செயலினால் தன் சகோதரர்களை விடப் புகழ் பெற்றவனாகவும் ஆக நினைத்தான். ஆசகேல் அப்னேரைத் துரத்திச் சென்றான். வலது புறம், இடது புறம் விலகிச் செல்லவில்லை (வச.19). அவனிடம் ஆர்வம் இருந்தது, ஊக்கம் இருந்தது, அவனிடம் அர்ப்பணிப்பு இருந்தது. அவன் உறுதியான தீர்மானத்துடன் செயல்பட்டான். ஆனால் அவன் அதிக ஞானம் உள்ளவன் அல்ல.
ஓடிக்கொண்டிருந்த அப்னேர் தன்னைப் பின்தொடர்ந்து ஒருவன் பின்னால் ஓடி வருவதை உணர்ந்தான். அது யாராய் இருக்கும்? என்று நினைத்தான். இவ்வளவு வேகமாக ஓடி வல்லமையுள்ள பராக்கிரமசாலியாகிய என்னைப் பிடிக்க வருகிறவன் யார்? என்று நினைத்தான். அவன் பின்னால் திரும்பி, “நீ ஆசகேல் அல்லவா?” என்று கேட்டான். அவன் “ஆம், நான்தான்” என்றான் (வச.20).
ஆசகேல் ஒரு கொள்கைவாதி. அப்னேர் ஒரு நடைமுறைச் செயல்வீரன். ஆசகேலினால் வேறு எவரையும்விட வேகமாக ஓடத்தான் முடியும். ஆனால் அப்னேரோ, இஸ்ரவேலிலும், யூதாவிலும் தனக்கு நிகரான, இணையான வீரன் இல்லாத அளவு பராக்கிரமசாலி. ஆசகேல் அப்னேரைப் பிடிக்கவோ, சண்டையிடவோ முடியாது. இது அப்னேருக்குத் தெரியும்.
சவுலின் தளபதி அடுத்துச் செய்ததை நலம் பாராட்டத்தான் வேண்டும். அவன் ஆசகேலைப் பார்த்து, “நீ வலது புறமோ, இடது புறமோ சென்று அங்கே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வீரனைப் பிடித்துக் கொன்று அவன் அணிந்திருக்கும் போர்க் கவசத்தைக் கழற்றி நீ அணிந்துகொள் (வச.21) என்றான். அவன் ஆசகேலைப் பார்த்து, நீ என்னைத் துரத்துவதை நிறுத்திவிடு என்று கெஞ்சிக் கேட்டான். இது ஆசகேலுக்குப் பயந்து சொன்னதல்ல.
ஆசகேல் தன்னிடம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்தே அவன் அவ்வாறு கூறினான். அப்னேர் தன்னுடைய ஈட்டியால் ஆசகேலைத் தாக்கும்போது என்ன நடக்கும் என்பதை அறிந்துதான், நீ போய் கவசம் போட்டுக் கொண்டு வா என்றான். ஆசகேல் மறுத்துவிட்டான். விரட்டிச்சென்று, அப்னேரைப் பிடித்து என்ன செய்வோம் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை. இது அவன் செய்த முட்டாள் தனம், ஞானம் இல்லாத செயல். வேகமாக அவன் பின்னே ஓடினான். வேகமாக ஓடுதல் மட்டும்தான் அவனுடைய தனித்திறமை!
மீண்டும் அப்னேர் ஆசகேலிடம் பேசிப் பார்த்தான். அப்னேர் ஆசகேலைச் சந்தித்துச் சண்டையிட்டு, முறியடித்துவிட முடியும். அவன் இறந்தும் போகலாம். அப்புறம் ஆசகேலின் மூத்த சகோதரனான யூதாவின் தளபதி யோவாபின் முகத்தில் தான் எப்படி விழிக்க முடியும்? என்று தயங்கினான். அப்னேருக்கு யோவாபைப் பற்றியோ ஆசகேலைப் பற்றியோ பயம் இல்லை. ஆனால் அவன் கனம் பொருந்தியவன். கண்ணியமாய் நடந்துகொள்ள விரும்பினான். ஆசகேலைக் கொல்லுவதை விரும்பவில்லை. கதையின் முடிவை 2சாமு.2:23 கூறுகிறது: “ஆனாலும் அவன் (ஆசகேல்) விலகிப்போக மாட்டேன் என்ற படியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது; அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்”.
ஆசகேலின் ஆர்வத்தை எல்லாரும் மதித்தார்கள். எனவே அவனுக்கு மரியாதை செலுத்தி, அஞ்சலி செலுத்தும் வண்ணமாக அனைவரும் அவன் இறந்துகிடக்கும் இடத்தில் வந்ததும் தரித்து நின்றார்கள். ஆசகேலின் ஆர்வம் அவனுக்கு மரணத்தைத் தந்துவிட்டது. அவனுடைய முடிவு துக்ககரமானது. அவன் வீரத்துடன் இறந்திருந்தாலும், அவனுடைய செயலில் முட்டாள்தனம் இருந்தது. இந்த மரணம் அப்னேருக்கும், ஆசகேலின் சகோதரர்கள் யோவாப், அபிசாய் ஆகியோருக்கும் இடையே இரத்தப் பகை உண்டாகக் காரணமாயிற்று. உடன்தானே யோவாப் அப்னேரைக் கொல்லத் திட்டம் தீட்டினான்.
காலக்கிரமத்தில் இஸ்ரவேலிலும், யூதாவிலும் இருந்தவர்களில் வல்லமையும் பராக்கிரமமும் நிறைந்தவர்கள் தாவீதும், அப்னேரும் மட்டுமே. அவர்கள் தங்களுக்கிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள முயற்சித்தார்கள். தாவீது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் என்பது அப்னேருக்குத் தெரியும். எனவே சவுலின் இராஜ்யத்தைத் தாவீதிடம் ஒப்படைக்க அப்னேர் வந்தான். அப்னேரும், தாவீதும் சம்மதித்தபோதிலும், யோவாபினால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. யோவாப் அப்னேரைத் தனியாக ஆலோசனை நடத்த அழைப்பதுபோல அழைத்துச்சென்று, சதியாக அவனைக் கொன்றுவிட்டான். அப்னேர் தன் தம்பி ஆசகேலைக் குத்திக் கொன்றதுபோல அதே இடத்தில் ஐந்தாவது விலா எலும்புப் பகுதியில் வயிற்றில் குத்திக் கொன்றான் (2சாமு.3:27). இந்தச் செயல் தாவீதுக்கும் மருமகன் யோவாபுக்கும் இடையே ஒரு பகையை உருவாக்கிற்று.
ஒளியும், வெப்பமும்
தடகளப் போட்டிகள் மிகவும் நெருக்கமானவை. சாதனைகள் ஒரு வினாடியில் எவ்வளவோ சிறிய பகுதி வித்தியாசத்தில் முறியடிக்கப்படுகின்றன. போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் நீண்டகாலம், மிகவும் கடினமாகப் பயிற்சி பெற்று, ஆயத்தம் செய்கிறார்கள். வெற்றியடைவதே அவர்களது குறிக்கோள். தடகளப் போட்டிகளில் போட்டியிடும் வீரர்களை நாம் வெகுவாகப் புகழுகிறோம், பாராட்டுகிறோம், விரும்புகிறோம். அதுபோலத்தான் நாம் ஆசகேலையும் பாராட்டுகிறோம், புகழுகிறோம். அவன் மான்கால் வேகம் கொண்டவன். அவன் வாழ்ந்த காலத்தில் அவனுடைய வேகத்துக்கு ஈடாக ஓடக்கூடியவர்கள் வேறு எவரும் இருந்ததில்லை.
ஆசகேல் தேவன் பயன்படுத்திய சிறிய வீரர்களில் ஒருவன். அவன் செய்தது எதுவோ, அது ஆண்டவருடைய மகிமைக்காகச் செய்யப்பட்டது. அவன் தன்னுடைய மாமாவாகிய இராஜாவுக்காக அப்படிச் செய்தான். தன்னுடைய குடும்பத்துக்குப் பெயர் வரட்டும் என்று அப்படிச் செய்தான். அது பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆசகேலின் ஆர்வம் அவனை அந்தச் செயலைச் செய்யத் தூண்டிற்று. நாம் நம்முடைய ஆண்டவருக்கு நல்ல ஊழியம் செய்ய வேண்டுமானால், செய்யக்கூடாத காரியங்களும் உண்டு என்பதை தேவனுடைய மாவீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுகிறோம். “ஞானம் இல்லாத ஆர்வம் துன்ப முடிவைத் தரும்” என்பதை ஆசகேலின் கதையிலிருந்து கற்றுக்கொள்ளுகிறோம்.
தவறாக வழிநடத்தப்பட்ட ஆர்வத்தை ஆண்டவருக்காகக் கொள்ளும் கிறிஸ்தவர்களைக் காண்கிறோம். அவர்கள் தாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் நிறுத்தி, அவர்கள் கையில் ஒரு கைப் பிரதியைத் திணித்து, கோபத்துடன் அவர்களிடம் இப்படி அறிவிப்பார்கள். “உங்கள் வாழ்வில் இயேசு கிறிஸ்து இல்லையானால், நீங்கள் நரகத்துக்கு நேராகச் சென்று கொண்டிருக்கிறீர்கள்”. அவர்களுடைய ஆர்வத்தைப் பாராட்டுவோம். அவர்கள் கூறிய வார்த்தைகளாலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர்கள் ஆசகேலைப் போன்றவர்கள். அவர்களின் அணுகுமுறை தவறு. அவர்களிடம் ஆர்வமும், சத்தியமும் இருந்தபோதிலும், ஞானம் இல்லை.
ஒரு தீக்குச்சியை உரசினால் அது வெப்பம் தரும். அது ஒளியையும் தருகிறது. எருசலேமில் ஒரு வெறுமையான கல்லறையில் தோன்றிய தீப்பொறி, உலகம் முழுவதும் பரவி எரியும் காட்டுத்தீயாக மாறிவிட்டது. நற்செய்தி அறிவித்தல் என்னும் தீப்பொறி வெப்பத்தையும், வெளிச்சத்தையும் தருகிறது. நமக்கு வெப்பம் மட்டும் போதும் என்று நினைப்போமானால், நாம் நம்முடைய கடமைகளைச் செய்துமுடிப்போம். ஆனால் அது இயேசு அன்புடன் செய்த ஊழியம் போல இராது. நாம் ஒளி மட்டும் போதும் என்று நினைப்போமானால், நாம் வாதத்தில் ஜெயிப்போம். ஆத்துமாவை இழப்போம். நாம் நற்செய்தியைப் பயன்தரும் வகையில் போதிக்க வேண்டுமானால், மக்கள் இரட்சிக்கப்படுவதைக் காணவேண்டுமானால், நம்மிடம் வெப்பமும் இருக்க வேண்டும், வெளிச்சமும் வேண்டும்.
ஆசகேல் ஒரு வீரனாய் இருந்தான். ஆனால் அவன் வெப்பத்தால் நிறைந்தவன், அவனில் ஒளி இல்லை. அவன் ஆரம்பம் முதலே துடுக்குத்தனம் உள்ளவன். அவன் அப்னேருக்குச் சமமானவன் அல்ல. அதை உணர்ந்துகொண்டவன் அப்னேர் மட்டுமே.
ஆசகேல் தேவனால் பயன்படுத்தப்பட்டது போல நானும் ஆண்டவரால் பயன்படுத்தப்பட விரும்புகிறேன். நீங்களும் அப்படி விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். அவர் நம்மைப் பயன்படுத்த வேண்டுமானால், நாம் அவருடைய பலத்தில் சார்ந்திருக்க வேண்டும். நம்முடைய வேகத்தில் சார்ந்திருக்கக் கூடாது. சில வேளைகளில் நாம் மிகவும் வேகமாக ஓடுகிறோம். தேவனை இடையில் விட்டுவிட்டு, முன்னால் ஓடிச்சென்றுவிடுகிறோம். ஆசகேல் ஆர்வத்துடன் ஓடும் வேகமும் பெற்றிருந்தான். நாமும் அவனைப் போலிருக்க வேண்டும். ஆனால் ஆசகேலின் வேகம் தேவனுடைய ஞானத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. நாம் இந்த விஷயத்தில் அவனைப்போல இருக்கக்கூடாது.
தேவன் பயன்படுத்தும் சிறிய மனிதர்கள் தங்களிடம் உள்ளதை எடுத்துத் தேவனிடம் கொடுக்கிறார்கள். அவர் அவற்றை ஆசீர்வதிக்கவேண்டும் என்று ஜெபிக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய உதவியை நாடாமல் தாங்களாகவே பெரிய காரியங்களைச் செய்ய முயற்சித்தால், அதில் பயனில்லை. போர்க்கவசம் அணியாமல் யுத்தத்துக்குப் போகக்கூடாது என்பதற்கு நமக்கு எச்சரிக்கைத் தருபவன் ஆசகேல். எனவே தேவனுடைய சத்துருவாகிய சாத்தானை நீங்கள் துரத்திக்கொண்டு ஓடும்போது, ‘தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்’. அப்பொழுதுதான் “…பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாவோம்” (எபே.6:11)
ஆசகேலின் வாழ்க்கையை மதிக்கிறோம். அவன் தேவனால் பயன்படுத்தப்பட்ட சிறிய மனிதர்களில் ஒருவன். இந்தச் சத்தியத்தை நமக்கு நினைவூட்டுகிறான். மற்றப்படி அவனுடைய வாழ்க்கை முழுவதும் சிறந்ததே!
மொழியாக்கம்: G.வில்சன்