திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(செப்டம்பர்-அக்டோபர் 2019)

5. மனைவி திராட்சக்கொடி, பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்

வேதவசன அடிப்படையிலிருந்து குடும்ப வாழ்க்கையைக் குறித்து நாம் தியானித்து வருகிறோம். குடும்பம் என்று எடுத்துக்கொண்டால், ஒரு கணவன்-மனைவி, அவர்களுடைய வாழ்க்கையில் பிள்ளைகள் இருப்பார்களானால், இவர்கள் எல்லாரும் உள்ளடங்கின ஒரு கூட்டமாவர். கணவனுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் வேதத்திலே உண்டு, மனைவிக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளும் உண்டு. தங்களது பொறுப்புகளை அவரவர் நிறைவேற்றவேண்டும். ஒருவருக்கொருவர் அடுத்தவர் பொறுப்புகளை நிறைவேற்ற நினைத்தால் அங்கே சில சின்ன சின்ன சிக்கல்கள் வர ஆரம்பித்துவிடும்.

கணவன் – குடும்பத்தை நடத்துகிற தலைவர்

உதாரணமாக 128 வது சங்கீதத்தில் கணவனுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு என்னவென்று பார்க்கும்போது, முதலாவதாக, கர்த்தருக்கு பயந்தவனாக அவன் இருக்கவேண்டும்; ஏனென்றால் குடும்பத்தை நடத்துகிற தலைவர் அவர், அவருக்கு ஞானம் வேண்டும். அந்த ஞானம், கர்த்தருக்கு பயப்படுகிற பயத்திலிருந்து வரும்.

இரண்டாவதாக, கர்த்தருடைய வழியிலே நடக்கிறவராக அவர் இருக்க வேண்டும். ஏனென் றால் அவர் தலைவர்; முன்னாலே போகிறார், பின்னாலே வருகிறவர்களை வழிநடத்தக்கூடிய வழியை அவர் அறிந்திருக்க வேண்டும். ஆகவே தேவனுடைய வழியிலே நடக்க வேண்டும்.

மூன்றாவதாக, உன் கையின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்றால்; அடிப்படையாக குடும்பத்தின் தேவைகளையெல்லாம் கவனித்துக் கொள்ளுகிற பொறுப்பு கணவனுடைய பொறுப்பு; தகப்பனாருடைய பொறுப்பு. அந்த பொறுப்பை உணர்ந்து அதற்கு தன்னை அர்ப்பணிக்கும் பொழுது குடும்பத்திலே தேவன் ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார். சில குடும்பங்களிலே மனைவியினுடைய கையின் பிரயாசத்தை கணவன் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார். மனைவி வேலை செய்யவேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை; ஏனென்றால் அவர்களையும் தேவன் தம்முடைய சாயலிலே சிருஷ்டித்தார். அவர்களுக்கும் தாலந்துகளை கொடுத்திருக்கிறார், பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார், படிப்பைக் கொடுத்திருக்கிறார், பயன்படுத்த வேண்டும். தாலந்தை புதைத்து வைக்கக்கூடாது என்பதை வேதத்திலே வாசிக்கிறோம். ஆனால், அடிப்படையாக கணவன் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். கணவன் தன்னுடைய பொறுப்பை மனைவியினிடத்திலே அல்லது மற்றவர்களிடத்திலோ கொடுத்துவிட்டு, இவர் வீட்டிலே சோம்பேறியாக இருக்கும்பொழுது, அந்த குடும்ப வாழ்க்கையிலே சந்தோஷம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அந்த குடும்ப வாழ்க்கையை ஒருவேளை சமாளித்துக் கொண் டிருக்கலாம். ஆனால், சந்தோஷம் இருக்க முடியாது.

மனைவி – குடும்பத்தலைவி

இப்பொழுது நாம் மனைவியைப் பற்றிப் பார்ப்போம். உன் மனைவி, உன் வீட்டோரங்களிலே கனிதரும் திராட்சக்கொடியை போல் இருப்பாள். “வீட்டோரங்களிலே கனிதரும் திராட்சக்கொடி” என்று சொல்லும்பொழுது, மனைவியினுடைய பொறுப்பு என்ன? கணவன் கையினாலே பிரயாசப்பட்டு குடும்பத்தின் தேவைகளை கவனிக்க வேண்டும். ஆனால் மனைவி வீட்டோரங்களிலே கனிதரும் திராட்சக்கொடி. வீட்டிற்குள்ளாக மிகவும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிற பொறுப்புடையவளாக அவள் இருக்க வேண்டும். வீட்டின் பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு, வெளியிலே போய் அவர்கள் கிரியைகளை செய்து கொண்டிருந்தால் வீட்டிற்குள்ளே பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடும். மாலையிலே பிள்ளைகள் பள்ளிக் கூடத்திலிருந்து வருகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், வீட்டிற்கு வந்தால் “அம்மா” என்று அழைக்கக்கூடிய ஒரு அம்மா அங்கே இருக்க வேண்டும்.

அங்கே அம்மா இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், என்ன செய்வார்கள்? அடுத்த வீட்டிற்கு போவார்கள், அடுத்த வீட்டிலே போய், அவர்களுடைய வாழ்க்கை தரத்தின் அடிப்படையிலே தங்களுடைய வாழ்க்கை தரத்தை அமைத்துக்கொள்வார்கள். அங்கே அவர்கள் டிவியிலே என்ன பார்க்கிறார்களோ, அதையே இவர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். கடைசியிலே அந்த பிள்ளைகள் ஆண்டவரற்றவராக அடாதடி பண்ணிக்கொண்டிருக்கும்பொழுது, பிரசங்கிமார்களிடத்திலே வந்து தாய்மார்கள் என் மகனுக்காக ஜெபியுங்கள், ஜெபியுங்கள் என்று சொல்லுவது தவறு. மனைவி வீட்டோரங்களிலே கனிதரும் திராட்சக்கொடி என்று சொல்லப்பட்டிருக்கிறது. வீட்டின் பொறுப்புகளை கவனித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கூட்டத்திலே நான் பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கே நான் சொன்னது: சிலர் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடிகளாக இல்லை. P&T Department லேயும் இரயில்வே புக்கிங் கவுண்டர்களிலும் நிறைய கனிதரும் திராட்ச கொடிகளாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டேன். கூட்டம் முடிந்த உடன் இரண்டு பேர் என்னிடத்திலே வந்துவிட்டார்கள். “எங்களைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கேட்டார்கள். நான் சொன்னேன்: அம்மா உங்களைப் பற்றி எனக்கு தெரியாது; உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். எங்களைப் பற்றி நீங்கள் சொன்னீர்கள்; உங்களுக்கு வெளிப்பாடு இருக்கா என்று கேட்டார்கள். நான் அவர்களைப் பார்த்துச் சொன்னேன்: எனக்கு வெளிப்பாடு ஒன்றும் இல்லை, என்ன சொன்னேன் என்றேன். அதற்கு அவர்கள், நான் P&T Department-ல் வேலை பார்க்கிறேன்”. என்னுடைய தோழி இவள் “இரயில்வே புக்கிங் கவுண்டரிலும் வேலை பார்க்கிறாள்” என்றாள். நீங்கள் எப்படி சொன்னீங்க என்றாள்? நான் அதை இன்றைக்கு சொன்னேன், ஒருவேளை நாளைக்கு “State Bank of India விலே” அல்லது “Life Insurance Corporation of India” என்று சொல்லுவேன், என்று சொல்லிவிட்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவர்கள் சொன்ன காரியம் என்னவென்றால், நீங்கள் சொன்னது உண்மை வீட்டிற்குள்ளே, கனிகொடுக்க வேண்டிய நாங்கள், வெளியிலே கிரியைகளைச் செய்துவிட்டு வரும்பொழுது, வீட்டின் பொறுப்புகளை நிறைவேற்றமுடியவில்லை.

ஆகவே, நான் கொடுக்கிற ஆலோசனை என்னவென்றால், வெளியிலே நீங்கள் வேலை செய்யலாம், வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வீட்டின் பொறுப்புகளை, தட்டிக் கழித்துவிட்டு, நீங்கள் வெளியிலே கனிதரும் திராட்சக்கொடிகளைப்போல் இருக்கக்கூடாது. வீட்டின் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஆகவே வீட்டோரங்களிலே கனிதரும் திராட்சக் கொடிகளைப்போல இருக்க வேண்டும். வீட்டிற்குள்ளே கனிகளை கொடுக்கிற மிக முக்கியமான பொறுப்பை, தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். நான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கணுமா என்று சிலர் கேட்பார்கள்? அப்படி நான் சொல்லவில்லை.

நான் சொல்லுகிற காரியம் என்னவென்றால்: வீட்டிற்குள்ளே உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். சிலரிடத்திலே நான் பேசும் பொழுது; நீங்க என்ன செய்றீங்கம்மா? என்று கேட்டால் “Just a House Wife” என்று சொல்லுவார்கள். நான் வீட்டிலே இருக்கிற மனைவியாக, அல்லது ஏதோ, இருந்து கொண்டிருக்கிறேன் என்பார்கள். நான் சொல்லுவேன்: தயவுசெய்து அப்படி சொல்லாதிருங்கள், “You are not Just a House Wife” ஏதோ வீட்டிலே இருக்கிற சாதாரணமாக ஒரு மனைவியாக இல்லை, வீட்டிலே இருக்கிற பெரிய பொறுப்புகளை நிறைவேற்றுகிற ஒரு தாயார். அந்த பொறுப்பை தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உங்களை நீங்கள் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஒரு கணக்கெடுத்தவர்கள் சொல்லுகிறார்கள்: ஒவ்வொரு மனைவிமாரும் வீட்டிலே இருக்கிறவர்கள், எத்தனையோ கிலோமீட்டர் நடக்கிறார்களாம், சமையலறையிலிருந்து வாசலுக்கு நடப்பார்கள், வாசலிலிருந்து பெட்ரூம்பிற்கு நடப்பார்கள், பெட்ரூம்மிலிருந்து சமையலறைக்கு செல்வார்கள், அங்கிருந்து Calling Bell அடித்தால் அங்கே போவார்கள், அங்கேயிருந்து டெலிபோன் எடுக்கப்போவார்கள், இப்படி நடந்து, நடந்து, நடந்து, எத்தனையோ கிலோமீட்டர் நடந்து எவ்வளவோ பொறுப்புகளை நிறைவேற்றுகிறீர்கள். இது தேவன் உங்களுக்கு கொடுத்த பொறுப்பு, நீங்கள் அதை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு அம்மாவுக்கு ஒரு வீட்டிலே நிறைய பிள்ளைகள் இருந்தார்களாம், ஒருவேளை இந்த குடும்ப கட்டுப்பாடு என்ற திட்டம் வருவதற்கு முன்பு நடந்த சம்பவமாக இருந்திருக்க வேண்டும். அந்த அம்மா அந்த குடும்பத்தின் பிள்ளைகளையெல்லாம் கவனிப்பதிலே மிகவும் சலிப்படைந்து போதகரிடத்திலே போய் சொன்னார்களாம்: ஐயா ஊழியம் செய்யவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. ஆனா எனக்கு ஒரு சபை இல்லையே? இத்தனை பிள்ளைகளை வைத்துகொண்டு நான் எப்படி ஊழியம் செய்ய முடியும்? என்று கேட்டார்கள். அப்பொழுது அந்தப் போதகர் சொன்னது, எத்தனையோ பேருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு சபை இல்லை. ஆனால் வீட்டிலேயே ஆண்டவர் உங்களுக்கு ஒரு சபையைக் கொடுத்திருக்கிறார், அந்த ஊழியத்தை நீங்கள் செய்யுங்கள். பிள்ளைகளை வளர்க்கிற பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யுங்கள், வீட்டோரங்களிலே கனிதருகிற நல்ல திராட்சக்கொடிகளாய் நீங்கள் இருங்கள் என்று சொன்னார்.

குடும்பத்திற்கு தேவன் தரும் ஆசீர்வாதங்கள்

128வது சங்கீதத்திலே கணவனைப் பற்றி சொல்லியிருக்கிற பொறுப்புகளை அவன் நிறை வேற்றுகிறபொழுது: அவன் பாக்கியவானாயிருப்பான் என்று பார்க்கிறோம். 2வது வசனத்திலே பாக்கியமும் நன்மையும் உனக்கு உண்டாயிருக்கும் என்றும், 4வது வசனத்திலே கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான் என்றும் பார்க்கிறோம். இந்த வார்த்தைகளையெல்லாம் நீங்கள் பாருங்கள்: அவன் பாக்கியவானாய் இருப்பான்; பாக்கியமும் நன்மையும் அவனுக்கு உண்டாயிருக்கும்; இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான் என்று ஆணித்தரமாய் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கம். ஆனால், இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பரிபூரணமாய் அனுபவிக்க உங்கள் வாழ்க்கையில் தேவன் உங்களுக்கு கொடுக்கிற பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். 5வது வசனத்திலே; ”கர்த்தர் சீயோனிலேயிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்; நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும் இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்”. இங்கே இஸ்ரவேல் எருசலேம் என்கிற இப்படிப்பட்ட வார்த்தைகள் ஏன் உபயோகிக்கப்பட்டிருக்கிறது?

தனிப்பட்ட குடும்பங்களை, தேவன் ஆசீர் வதிக்கும்பொழுது அந்த குடும்பத்தை ஒரு பட்டணத்திற்கே ஆசீர்வாதமாக தேவன் மாற்றிவிடுகிறார். எருசலேம் என்பது ஒரு பட்டணம், இஸ்ரவேல் என்பது ஒரு ராஜ்யம். ஒரு ராஜ்ஜியத்திற்கே ஆசீர்வாதமாக தேவன் மாற்றுகிறார். ஆகவே மறுபடியும், மறுபடியும் நான் சொல்லுகிற காரியம்: எனது பொறுப்புகளை நான் நிறைவேற்றும்பொழுது; என்னுடைய குடும்பத்தை தேவன் ஆசீர்வதிக்கிறார். அது எனக்கு மாத்திரமல்ல, என்னுடைய குடும்பத்திற்கு மாத்திரமல்ல; நம்முடைய பிள்ளைகளை பட்டணத்திற்கே ஆசீர்வாதமாக அதுமட்டுமல்ல, உலகத்திற்கே ஆசீர்வாதமான பிள்ளைகளாக மாற்றிவிடுகிறார். பல ராஜ்ஜியங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றிவிடுகிறார்.

பல இடங்களிலே ஆண்டவருக்கென்று ஊழியஞ்செய்கிற பிள்ளைகளை அவர்களை எழுப்பிவிடுகிறார். ஆகவே, அதை கருத்திற்கொண்டு, அந்த பெரிய நோக்கத்தை தேவன் நிறைவேற்றுவதற்காக, எனக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற சிறிய குடும்பங்களிலே அவருடைய நோக்கங்களை நாம் நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணத்தோடுகூட நம்முடைய பொறுப்புகளை நிறை வேற்றும்பொழுது, தேவன் நம்முடைய குடும்பத்தை மாத்திரமல்ல, நம்முடைய பட்டணத்தை மாத்திரமல்ல, நம்முடைய தேசத்தையே அவர் ஆசீர்வதிக்கிறார். தேசத்திற்கு சமாதானத்தை அவர் கட்டளையிடுகிறார்.

இப்படிப்பட்ட ஒரு எழுப்புதல், நம்முடைய தேசத்திலே வரவேண்டும் என்றால், அது குடும்பங்களுக்குள்ளாக முதலாவதாக ஆரம்பிக்க வேண்டும். குடும்பங்களிலே எழுப்புதல் வராமல் தேசத்திலே எழுப்புதல் வந்துவிட்டது என்றால் அது மாய்மாலம். குடும்பத்திற்குள்ளே எழுப்புதல் வராமல், சபையிலே எழுப்புதல் வந்துவிட்டால் அது மாய்மாலம்.

பிள்ளைகள்

கணவன் – மனைவிக்கு இப்பொழுது பிள்ளைகள் பிறக்கிறார்கள். இதிலே ஒரு காரியத்தை நான் தெளிவாய் சொல்லவேண்டும். அதைக் குறித்து சங்கீதம் 127:4வது வசனத்திலே வாசிக்கிறோம். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். ஆங்கிலத்திலே Gift என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கிறது. Gift is Given; Not demanded. ஒரு பரிசு அல்லது ஈவு என்பது நமக்கு தானாகவே கொடுக்கப்படுகிற ஒரு காரியமாகும். நாமாகவே இழுத்து பறித்து நாம் பெற்றுக்கொள்ளுகிற ஒரு காரியமல்ல. ஆகவே குழந்தைகள் என்பது தேவன் நமக்கு ஈவாக கொடுக்கிற ஒரு காரியம். இதிலே நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்றிரண்டு காரியங்கள் உண்டு.

முதலாவது ஒரு கிஃப்ட் ஒரு பரிசு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒருவர் நமக்குக் கொடுப்பார் என்றால், நமக்கு அது சொந்தமாவதற்கு முன்பே அது அவருக்கு சொந்தமானது. என்னுடைய கையிலே இருக்கிற பேனாவை உங்களுக்கு கொடுக்கிறதற்கு முன்பாக அது எனக்கு சொந்தமானது. நம்முடைய பிள்ளைகள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். நம்முடைய கரத்திலே கொடுத்து வளர்க்கும்படியான கிருபையை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

இன்னொரு காரியம் உங்களுடைய மனதிலே வரலாம், பிள்ளைகள் கர்த்தருடைய சுதந்திரம் என்று சொல்லுகிறீர்களே, ஆனால் கடவுளை விசுவாசிக்கிற கடவுளை நம்பியிருக்கிற நல்ல ஆண்டவருடைய பிள்ளைகளுக்கு பிள்ளைகள் இல்லையே, ஆனால் கடவுளையே நம்பாதவர்கள் அநேகருக்கு, பிள்ளைகள் இருக்கிறார்களே என்று கேட்கலாம். இங்கே சொல்லப்பட்டிருக்கிற வசனங்களை நீங்கள் சூழ்நிலையின் அடிப்படையிலே பார்க்கவேண்டும். கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் – எந்தெந்த வீடு கர்த்தரால் கட்டப்படுகிறதோ கர்த்தருடைய கட்டுப்பட்டிற்குள் விட்டுக்கொடுக்கிறார்களோ அங்கே பிறக்கின்ற பிள்ளைகள்தான் தேவனாலே கொடுக்கப்படுகிற ஈவுகள்!

ஆகவே, கர்த்தருக்கென்று உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அந்த வாழ்க்கைக்குள்ளாய் கர்த்தர் பிள்ளைகளைக் கொடுத்திருப்பாரென்றால் அது தேவனாலே வந்த சுதந்திரம், தேவனாலே கொடுக்கப்பட்ட ஈவாகும், அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உங்களுடைய பொறுப்பாகும். இவ்விதமாக நம்முடைய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

128ஆம் சங்கீதம் 3 வசனத்தின் பின்பகுதியில் உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப் போலிருப்பார்கள். ஒலிவ மரக் கன்றுகள் ஒலிவ மரத்தின் அடியிலே வளருமாம். அந்த நிழலிலே வளருகிறவர்கள். நம்முடைய பிள்ளைகளை நம்முடைய நிழலிலே நாம் வளர்க்க வேண்டும். அந்த நிழலிலே வளர்ப்பதற்காக நிழல்களை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்யாதே அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று அவர்களைக் கடிந்துகொண்டே இருக்கக்கூடாது. அல்லது இதை நீ செய், இதைச் செய் என்று கட்டளை போட்டுக்கொண்டே இருக்கக் கூடாது. அவர்கள் சுயமாகவே தாம் விரும்புகிற காரியங்களை செய்யக்கூடிய சூழ்நிலைகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

இந்த புத்தகத்தை படிக்காதே, அந்தப் புத்தகத்தை படிக்காதே, என்று சொல்லிக்கொண்டே இருக்கிற நாம் எந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்தப் பாடல்களைக் கேட்காதே, அந்தப் பாடல்களைக் கேட்காதே, என்று சொல்லுகிற பெற்றோர்: எந்த பாடல்களைக் கேட்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த காட்சியைப் பார்க்காதே அதைப் பார்க்காதே என்று சொல்லுகிறவர்கள் எதைப் பார்க்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகள் சூனியத்திலே வளர முடியாது. நம்முடைய பிள்ளைகள் நல்ல ஒரு சூழ்நிலையில் தான் வளர வேண்டும்.

ஆகவே அவர்களுக்கு வேண்டிய நிழல்களை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஒலிவ மரக் கன்றுகள் ஒலிவ மரத்தின் நிழல்களிலே வளருகிற கன்றுகளாக இருக்கிறது. அதேபோல நம்முடைய பிள்ளைகள் நம்முடைய நிழலிலே வளர வேண்டும். இன்றைக்கு சிலர் அந்த பிள்ளைகள் தங்களோடு கூட இருக்கிற வாய்ப்புகள் இருந்தாலும் தங்கள் வீட்டிற்கு பக்கத்திலே படிக்கக் கூடிய வசதிகள் இருந்தாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற Hostel-லில் போய் போட்டுவிடுகிறார்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது நான் சொல்லுவது உங்களுடைய பொறுப்புகளை நீங்கள் தட்டிக்கழிக்கிறீர்கள். ஏனென்றால் இங்கே வசதி வாய்ப்புகள் இருக்கிறது, ஏன் பிள்ளைகளை அங்கே போட்டுவிடுகிறீர்கள்? எங்களது குடும்பம் கர்த்தருக்கென்று ஊழியம் செய்ய வேண்டும் ஐயா என்கிறார்கள். வேதத்திலே நாம் பார்க்கும்பொழுது அநேக குடும்பங்கள் கர்த்தருக்கென்று ஊழியம் செய்திருக்கிறார்கள். ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தான். அவனுக்கு பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். நம் வாழ்க்கையிலே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு உங்களுக்கென்று கொடுத்த பிள்ளைகளுக்கு நிழல்களை நீங்களாவே உருவாக்கிக் கொடுக்க வேண்டும். உங்கள் பந்தியைச் சுற்றிலும் உங்கள் நிழல்களிலே வளர்கிறவர்களாய் அவர்கள் இருக்க வேண்டும்.

இவ்விதமாய் பிள்ளைகளை வளர்ப்பதற்கு நாம் நம்மை ஒப்புக்கொடுப்போம். பிள்ளைகளை வளர்ப்பதிலே நாங்கள் செய்த எங்கள் தவறுகளை எங்களுக்கு மன்னியும் என்று கேளுங்கள். இந்த நாளிலே கர்த்தர் மன்னித்து ஆசீர்வதித்து, புதிய குடும்ப வாழ்க்கை உருவாக்கும்படியாக உங்களுக்கு உதவி செய்வார்.