நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள்

கோதுமை மணி – 17
(மே-ஜுன் 2011)

இராபர்ட் மொஃபாட்

1795 இல் ஸ்காட்லாந்தில் உள்ள ஆர்மிஸ்டனில் மிகவும் ஏழைகளான பெற்றோருக்கு இராபர்ட் மொஃபாட் பிறந்தார். வீட்டில் அவருக்கு பள்ளிப் பாடங்கள் எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டன. இளமையிலேயே வயலின் வாசிக்கவும் முறையாகப் பழகிக் கொண்டார்.

இராபர்ட் வீட்டைவிட்டுப் போகும் போது அவருடைய அப்பா இவருக்குக் கொடுத்த உபதேசம், “கடினமாக வேலை செய். உன்னுடைய படிப்பை விட்டுவிடாதே“. இந்த அறிவுரையை இராபர்ட் ஒரு போதும் மறக்கவில்லை. அவர் தான் செய்த எல்லாக் காரியங்களிலும் இவற்றைக் கடைப்பிடித்தார். இது அவருக்கு எப்போதும் ஒரு அறைகூவல் ஆயிற்று.

அவருடைய அம்மா, பிரியும் போது கூறிய வார்த்தைகள்: “ஒவ்வொருநாளும் காலையில் ஒரு அதிகாரமும், மாலையில் ஒரு அதிகாரமும் வேதாகமத்திலிருந்து வாசி“ என்பதே.

இந்தப் போதனைகளெல்லாம் இராபர்ட்டுக்கு அவருடைய பிற்கால வாழ்க்கைக்கும், மிஷனெரி ஊழியத்துக்கும் அதிக உதவியாய் இருந்தன. இராபர்ட் மனந்திரும்பிக் கிறிஸ்துவைத் தம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவுடன், அவருக்கு மிஷனெரியாகச் செல்லும் ஆசை உண்டாயிற்று. உடனே லண்டன் மிஷனெரி சொசைட்டிக்கு விண்ணப்பம் கொடுத்தார். இவருக்குப் பள்ளிக் கல்வி இல்லாதபடியால் இவர் மிஷனெரியாகத் தெரிந்தெடுக்கப்படவில்லை. இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் சில சிறப்புப் பயிற்சிகள் பெற்றவுடன், இவரது ஊழிய ஆர்வத்தைக் கண்டு, இவரைத் தெரிந்தெடுத்து தென்ஆப்பிரிக்காவில் கேப்டவுனுக்கு மிஷனெரியாக இராபர்ட் அனுப்பப்பட்டார்.

1816 இல் நீண்ட, ஆபத்துக்கள் நிறைந்த கடல் பயணத்துக்குப் பின்னர் இராபர்ட் மொஃபாட் தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். அவருடைய வாழ்க்கையின் பெரும் பகுதி ஆப்பிரிக்காவிலேயே தங்கியிருந்தார்.

கேப் டவுனில் இறங்கியபின் இராபர்ட் 600 மைல்கள் ஆப்பிரிக்காவின் உட்பகுதிக்கு மாட்டு வண்டியில் பயணம் செய்து சென்றார். பல நதிகளையும், சதுப்பு நிலங்களையும் கடந்து சென்றார். வெப்பம் மிக அதிகமாயிருந்தது, காட்டு மிருகங்களின் தாக்குதல் பயமும் இருந்தது. மிகவும் ஆபத்துகள் நிறைந்த இந்த யாத்திரையைச் செய்வது இராபர்ட்டுக்குப் புது அனுபவமாயிருந்தது. ஆண்டவர் தன்னைத் தமது ஊழியத்திற்கென்று தெரிந்தெடுத்து அனுப்பியுள்ளார். எனவே எந்தப் பயங்கரங்களும் என்னை அதைரியப்படுத்தாது என்ற எண்ணத்துடன் முன்னேறினார். இவருடன் ஆப்பிரிக்கர்கள் பலர் ஒரு குழுவாகச் சென்றனர். அவர்களிடமிருந்து ஆப்பிரிக்க மொழியைக் கற்றுக்கொண்டார்.

1817இல் இராபர்ட் மொஃபாட் நமக்கு வாலாந்து என்னும் இடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அது மிகவும் பயங்கர கொள்ளைக் காரனான ‘ஆப்பிரிக்கானர்‘ என்பவனுடைய இடமாயிருந்தது. இராபர்ட் அங்குசென்று தனது வல்லமையான ஊழியத்தை ஆரம்பித்தார். பெயரைக் கேட்டாலே அனைவரும் அஞ்சி நடுங்கும் ஆப்பிரிக்கானர் கொள்ளைக்காரனை இராபர்ட் மனந்திரும்ப வைத்துவிட்டார். இது அனைவருக்கும் ஆச்சரியமாயிருந்தது. இந்த ஆப்பிரிக்கானர் கிறிஸ்துவின் பிள்ளையாக மாறியபின் சீக்கிரத்தில் இறந்துபோனான் என்றபோதிலும் இந்தப் பயங்கரக் கொள்ளைக்காரனை மாற்றிய கடவுள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

இராபர்ட் காட்டுப் பகுதியில் ஒவ்வொரு இனமாக சந்தித்து ஊழியம் செய்தபின் கடந்து சென்று கொண்டேயிருந்தார். ஒவ்வொரு இடத்திலும் வயது முதிர்ந்தவர்கள் கொடுமைப் படுத்தப்படுவதைக் கண்டார். சில வேளைகளில் வயதானவர்களை வனாந்தரப் பகுதியில் ஒரு வேளை உணவைமட்டும் கொடுத்து விட்டு, விட்டுச் சென்றுவிடுவர். இந்தப் பழக்கத்தைப் போக்கி முதியவர்கள் மீது அன்பு காட்டவும், இறப்பதுவரை கரிசனையுடன் பாதுகாக்கவும் அந்த ஆதிவாசி மக்களுக்குப் புத்தி கூறினார். இவரது உரையைக் கேட்ட மக்கள் “தாங்களும் முதியவர்களாகும்போது தங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்“ என்பதை எண்ணி, மனந்திரும்பி, அவர்கள் மீது பாசம் செலுத்த ஆரம்பித்தனர்.

இவ்வாறு மிஷனெரிப் பணித்தளத்தில் ஒரு வருஷம் இருந்தபின் இராபர்ட் லண்டனுக்குச் சென்றார். இவர் மேரி ஸ்மித் என்னும் பெண்ணைத் திருமணம் செய்ய தீர்மானித்திருந்தார். அவர்களுடைய திருமணம் நடந்தேறியது. மிஷனெரித் தம்பதிகள் மீண்டும் தங்கள் பணியைத் தொடர ஆப்பிரிக்காவுக்குச் சென்றனர். இவர்கள் 50 வருடங்கள் ஆப்பிரிக்கக் காடுகளில் ஆதிவாசி மக்கள் மத்தியில் நற்பணியாற்றினர். மேரி மொஃபாட் அம்மையார் தனது கணவருக்கு ஊழியத்தில் மிகவும் உதவியாயிருந்தார். ஆண்டவர் இவர்களை ஆசீர்வதித்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையைக் கொடுத்தார். இந்தச் சின்னப்பெண்தான் பின்னாளில் புகழ்பெற்ற ஆப்பிரிக்க மிஷனெரியும், நாடு கண்டுபிடித்தவருமான டேவிட் லிவிங்ஸ்டனின் மனைவியானார்.

ஒருநாள் இராபர்ட் மொஃபாட் பயணம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு கூட்டம் மக்கள் ஆழமாக ஒரு குழியைத் தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களிடம் விசாரித்தபோது அவர்களில் ஒரு பெண் இறந்து விட்டதாகவும் அவளை அடக்கம் பண்ணக் குழி தோண்டுவதாகவும் கூறினார்கள். கரையில் இரண்டு சிறு குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. விசாரித்தபோது அந்த இரண்டு குழந்தைகளும் இறந்துபோன பெண்ணின் குழந்தைகள். அவளது உடலை அடக்கம் செய்யும்போது அந்த இரண்டு குழந்தைகளையும் உயிருடன் அந்தக் குழியில் போட்டுப் புதைத்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டார். உடனே இராபர்ட் ஓடிச்சென்று இரண்டு குழந்தைகளையும், தான் வளர்ப்பதாகக் கூறித் தூக்கிக்கொண்டார். அன்று முதல் அந்த இரண்டு பிள்ளைகளும் அவருடைய வீட்டில் அவருடைய குழந்தைகளைப் போலவே வளர்ந்து வந்தன.

அநேக ஆண்டுகள் இராபர்ட் மொஃபாட் கடினமாக ஊழியம் செய்ததன் பலனாக அநேக மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் பிள்ளைகளானார்கள். இந்த மக்களுக்காக மொஃபாட் அவர்களுடைய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தார். எழுத்து வரிசையை எழுதி முடித்தபின் அந்த மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அது மிகவும் கடினமான வேலை. மிக மெதுவாகவே செய்ய முடிந்தது. புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலை நடந்தது. அப்போது அவரது மனைவிக்கு உடல்நிலை மிகவும் மோசமாயிற்று. மருத்துவ வசதிக்காக அவர்கள் உடனே கேப் டவுனுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அங்கே இருக்கும்போது மொஃபாட் தான் மொழிபெயர்த்ததை அச்சிட விரும்பினார். அங்குள்ள அரசாங்கத்திலும் அது பற்றி கேட்டார். ஆலோசித்தார். அவர்கள் நாங்கள் அச்சு இயந்திரங்களைத் தருகிறோம். ஆட்கள்தான் இல்லை என்றார்கள். இராபர்ட் அச்சு இயந்திரங்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் ஒரு நண்பரின் உதவியுடன் தானே ஒவ்வொரு எழுத்துக்கும் அச்சுக்களைச் செய்தார். இவ்வாறு கடினமாக வேலை செய்து மொஃபாட் அந்த மக்களுக்கு அவர்களுடைய மொழியில் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் மொழிபெயர்த்து, அச்சிட்டுக் கொடுத்தார். மேலும் “பரதேசியின் மோட்ச பிரயாணம்“ என்னும் கதைச் சுருக்கத்தைப் புத்தகமாக அச்சிட்டுக் கொடுத்தார்.

(தொடரும்)

சத்தியவசனம்