ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2012

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்த மீட்பர் இயேசுவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

வேதாகமத்தின் நற்செய்தியை அறிவிக்கும் இவ்வூழியத்திற்கு தாங்கள் இணைக்கரம் நீட்டி தாங்கி வருகிறமைக்காக மிக்க நன்றி கூறுகிறோம். இவ்வூழியத்திற்கு தேவன் தந்துள்ள விசுவாசப் பங்காளர்களுக்காவும், ஜெப பங்காளர்களுக்காகவும், வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர்களுக்காகவும் தேவனைத் துதிக்கிறோம். தற்போது திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் மாலையில் ஒலிபரப்பாகும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் அநேக நேயர்களுக்கு கேட்பதற்கு வசதியின்றி இருப்பதை அறிந்தோம். மாலையில் வரும் நிகழ்ச்சிகளை, காலையில் ஒலிபரப்பு செய்வதற்கு ஜெபித்து முயற்சித்து வருகிறோம். இது குறித்து ஃபீபா வானொலி நிலையத்தாரோடு தொடர்பு கொண்டுள்ளோம்.

தற்போது எமது தலைமை அலுவலகத்தில் Associate Director ஆக சகோதரர் அனில்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்துகிறோம். இவ்வூழியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அவர்களை தேவன் எடுத்து உபயோகிக்கும்படி ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் இயேசுகிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதலை மையமாக வைத்து செய்திகள் இடம் பெற்றுள்ளன. புதிய உடன்படிக்கையின் இரத்தம் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய செய்தி கர்த்தருடைய பந்தியின் மகத்துவத்தை விளக்குகிறது. சகோ.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் அளித்துள்ள செய்தி சிலுவையில் மனுக்குலத்தின்மேல் தேவன் காட்டிய அவரது அன்பை எடுத்துக்காட்டுகிறது. சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் இரு கள்வர்கள் என்ற தலைப்பில் அளித்துள்ள செய்தியில் மனந்திரும்பிய கள்ளனின் நற்பண்புகளை விவரித்துள்ளார்கள், Dr.உட்ரோகுரோல் அவர்கள் கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் என்ற தலைப்பில் அளித்துள்ள செய்தியில் சாத்தானோடுள்ள போராட்டத்தில் இயேசுகிறிஸ்து அடைந்த வெற்றியை விளக்கியுள்ளார்கள். Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் மரணத்தின் மேலுள்ள அதிகாரத்தை கிறிஸ்து வெற்றி சிறந்த விதத்தை விளக்கியுள்ளார். இச்செய்திகள் உங்கள் ஆன்மீக வாழ்விற்கு பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை எங்களுக்கு எழுதித் தெரிவிக்க மறவாதீர்கள். உங்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும், ஊழியர்களின் சார்பாகவும் எமது ஈஸ்டர் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்