தேவ அன்பு

சகோ.பிரகாஷ் ஏசுவடியான்
(மார்ச்-ஏப்ரல் 2012)

நன்மைக்கு தீமை செய்வது பிசாசின் குணம். நன்மைக்கு நன்மை செய்வது மனித இயல்பு; ஆனால் தீமைக்கு நன்மை செய்வதோ தெய்வீக அன்பு!

தேவனுடைய அன்பை குறித்து நாம் சிந்திக்கும்பொழுது தேவன் நம்மை தமது சாயலிலே படைத்தார் என்று வேத புத்தகத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் நமக்கு அவருடைய நிபந்தனைகளைக் கொடுத்தார். அந்த நிபந்தனைகளோடுகூட சுயாதீனத்தையும் கொடுத்தார். ஆனால் அந்த சுயாதீனத்தை மனிதன் தவறாக பயன்படுத்தி, இது என் வாழ்க்கை என் இஷ்டப்படி வாழ எனக்கு உரிமை உண்டு என்றும், இது என் சரீரம் என் இஷ்டப்படி பயன்படுத்த எனக்கு உரிமை உண்டு என்றும் சொல்லி சரீரத்தை பாவங்களினாலே கறைபடுத்தினான். மனதை என் மனது என் இஷ்டப்படி சிந்திப்பேன் என்று அசுத்தமான, அருவருப்பான சிந்தனைகளுக்கும் தவறான சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்தான். என் சமுதாயம், என் இஷ்டப்படி வாழ்வேன் என்றான். இவ்வாறு மனிதனுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இப்படி பாதிக்கப்பட்ட மனிதனைத் தேடி வந்து இறைவன் இந்த உலகத்திற்கு தமது அன்பை வெளிப்படுத்தினார். எப்படியெல்லாம் தேவன் தனது அன்பை வெளிப்படுத்தினார்? வேத புஸ்தகத்திலே தேவனுடைய மனிதர்களான ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, யோசுவா இப்படிப்பட்ட பெரிய மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் மூலமாய் தமது அன்பை தேவன் வெளிப்படுத்தினார். மனிதர்கள் அதற்கு இணங்காதபோது ராஜாக்களின் மூலமாக தமது அன்பை வெளிப்படுத்தினார். அவர்களின் ஆட்சியின் மூலமாக, அவர்களுடைய நீதியின் மூலமாக அன்பை வெளிப்படுத்த பிரயாசப்பட்டார்கள்.

தேவ அன்பிற்கு மனிதன் இணங்கவில்லை. அதன்பிறகு நியாயத்தின் மூலமாக நியாயத் தீர்ப்புகளின் மூலமாக தேவன் தமது நீதியை வெளிப்படுத்தினார். ஆனால் மனிதன் இணங்கவில்லை. அதன்பிறகு தீர்க்கதரிசிகளை அவர் அனுப்பினார், பல தீர்க்கதரிசிகளை தேவன் அனுப்பி தமது அன்பை வெளிப்படுத்தினார்.

நமது கரத்திலே இருக்கிற வேதாகமம் சொல்லுகிற ஒரேயொரு சத்தியம், தேவன் நம்மேல் அன்புள்ளவராயிருக்கிறார் என்பதாகும். அவர் தமது அன்பை பலவிதங்களிலே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இதற்கெல்லாம் மனிதன் இணங்காமல் இருக்கும் பொழுது இயேசுகிறிஸ்துவே இந்த உலகத்திற்கு வந்து தமது அன்பை வெளிப்படுத்தினார். தமது போதனைகளின் மூலம் அன்பை வெளிப்படுத்தினார். உதாரணமாக மத்தேயு 5,6,7 அதிகாரங்களில் மலை பிரசங்கங்களின் மூலம் வெளிப்படுத்தினார். இந்த வசனங்களைப் படித்து மகாத்மா காந்தி போன்ற பெரும் தலைவர்கள் அகிம்சை என்கிற கொள்கையை அவர்கள் வாழ்க்கையின் அடிப்படை கொள்கையாக மாற்றிக்கொண்டார்கள். ஏனென்றால் அவைகளில் இயேசுகிறிஸ்து தமது அன்பை வெளிப்படுத்தினார். போதகத்தின் மூலமாக தமது அன்பை வெளிப்படுத்தினார். போதனைகளைக் கொடுத்துவிட்டு அவர் மறைந்துபோகவில்லை. மலையிலிருந்து கீழே வந்த பொழுது குஷ்டரோகியை தொடுகிறதைப் பார்க்கிறோம். குஷ்டரோகியைத் தொட்டு, எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்றார். வியாதியுள்ளவர்கள் அவரிடத்தில் வருகிறார்கள், அவர்களைப் பார்க்கும்பொழுது மனதுருகி அவர்களுக்கு சுகத்தை கொடுக்கிறார். வியாதியிலும் பலவிதமான கஷ்டங்களிலும் வேதனைகளை அனுபவிக்கிறவர்கள் மத்தியிலே தமது அன்பை வெளிப்படுத்தும்படியாய் இயேசு கிறிஸ்து கிரியை செய்கிறவராய் சாதனைகளை அவர் செய்கிறார்.

ஆனால் அதோடுகூட அவர் மறைந்து போகவில்லை. போதனைகளை கொடுத்துவிட்டு, பல சாதனைகளை செய்துவிட்டு அவர் வாழ்க்கையின் இறுதியிலே சிலுவைக்குச் சென்றார். அவரை பகைத்தவர்கள் அவரை குத்தினார்கள், கண்களை கட்டினார்கள், பரிகாசம் செய்தார்கள், காறி துப்பினார்கள், இவ்விதமான வேதனைகளை இயேசுகிறிஸ்து அனுபவித்தார். சிலுவையிலே அறைந்தார்கள். சிலுவைக்கு செல்லுமுன் கெத்செமனேயில் ஜெபிக்கும்போது அவருடைய வேர்வை இரத்தமாக வெளியே வந்ததை வேதத்திலே வாசிக்கிறோம். இவ்வாறு அவருடைய வேதனைகளின் மூலமாக தமது அன்பை வெளிப்படுத்தினார். இயேசுகிறிஸ்து சிலுவையிலே மரித்தபொழுது தமது அன்பை நமக்கு வெளிப்படுத்தினார். சிலுவையிலே தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து தமது உயிரைக் கொடுத்ததே தேவன் தமது அன்பை வெளிப்படுத்தின உச்சகட்டமாகும். இயேசு கிறிஸ்து சிலுவையிலே எதற்காக மரித்தார்?

1.அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக் காரருக்காக மரித்தார் (ரோமர் 5:6).

நாம் பெலவீனர்கள் என்பதை அடிக்கடி உணருகிறோம் இல்லையா! நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புகிறோம். கொடுமையான ஒரு வாழ்க்கையை நாம் வாழக்கூடாது என்று விரும்புகிறோம். ஆனால் நம்மால் அது முடியவில்லையே. ஏனென்றால் நாம் பெலவீனர்கள். நமது சரீரத்திலே பெலன் இல்லை. நமது சிந்தனையிலே பரிசுத்தம் இல்லை. எதை செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை செய்துவிடுகிறோம். எதை செய்யவேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நம்மால் செய்ய முடியவில்லையே. தீர்மானம் செய்து செய்து பார்க்கிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக நான்கு வாலிபர்களைப் பற்றி ஒரு பத்திரிக்கையிலே படித்துக் கொண்டிருந்தேன். கதையாக அவர்கள் எழுதின காரியம் உண்மையோ, கற்பனையோ என்று எனக்கு தெரியாது. இந்த நான்குபேரும் ஒரு தீர்மானம் செய்துவிட்டு ஒரு இடத்திலே போய் உட்கார்ந்தார்கள். என்ன தீர்மானமென்றால், இன்றையிலிருந்து நாம் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது. ஏன் பேசக் கூடாது? மற்றவர்களைப் பற்றி நாம் புரணி பேசிவிடுகிறோம், கோள் சொல்லி விடுகிறோம், தவறாய் சொல்லி விடுகிறோம், வாயிலே கெட்ட வார்த்தைகள் வந்து விடுகிறது. ஆகவே பேசக்கூடாது என்று தீர்மானம் பண்ணிவிட்டு உட்கார்ந்தார்கள். மதியம் 12 மணியானது அவர்கள் பேசவில்லை. மாலை 4 மணியானது அவர்கள் பேசவில்லை. மாலை 6 மணிக்கு குளிர்காற்று தென்றல் வீசின பொழுது அது சரீரத்திலே பட்டவுடனே ஒருவனால் பொறுத்துக்கொள்ள முடியாமல், நல்ல காற்று வீசுகிறது என்று சொல்லி விட்டான். இதைச் சொன்னவுடனே அடுத்தவன் சொன்னானாம், பேசாதடா, நாம் பேசக் கூடாது என்று தீர்மானம் பண்ணியிருக்கிறோம் என்று சொன்னான். உடனே அடுத்தவன், இவர்கள் இரண்டுபேரும் பேசி விட்டார்களே என்று சொன்னான். கடைசியாக நான்காவது மனிதன் சொன்னானாம்: நான் ஒருவன்தான் இன்னும் பேசவில்லை என்று. இதைப் படிக்கும் போது சிரிப்பு வருகிறது. நான்கு பேர் ஒரு தீர்மானம் பண்ணினார்கள். அந்த தீர்மானத்தை உடைத்தபொழுது நாம் சிரிக்கிறோமே, நாம் எத்தனை தீர்மானங்களை செய்திருக்கிறோம். ஜனவரி மாதம் முதலாம் தேதி எத்தனை தீர்மானம் பண்ணியிருப்போம். ஆனால் இரண்டு வாரத்திற்குள் எல்லா தீர்மானங்களையும் உடைத்துவிடுகிறோம். நமது பிறந்த தினத்திற்காக காத்திருப்போம், அன்றைக்கு ஒரு தீர்மானம் செய்வோம். பண்டிகை நாட்களுக்காக காத்திருப்போம், அன்றைக்கு ஒரு தீர்மானம் செய்வோம். இவ்வாறு எத்தனையோ தீர்மானங்களை செய்த நாம் தீர்மானங்களையெல்லாம் உடைத்துவிட்டு நாங்கள் பெலவீனர்கள், எங்களால் அந்த தீர்மானங்களை கைக்கொள்ள முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்காகதான் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.

வேதாகமம் சொல்லுகிறது: நாம் பெலனற்றவர்களாயிருக்கும்பொழுதே கிறிஸ்து நமக்காக மரித்தார். நான் பெலவீனன், தீர்மானங்களையெல்லாம் உடைத்துப்போடுகிறேன் என்று நினைப்பீர்களேயானால் உங்களுக்கு தரும் செய்தி என்னவென்றால், இயேசுகிறிஸ்து உங்களுக்காக சிலுவையிலே மரித்தார். உயிரோடு எழுந்து உள்ளங்களிலே பிரவேசித்து உங்களைப் பலப்படுத்த அவர் ஆயத்தமாயிருக்கிறார். நமது சொந்த பெலனைக் கொண்டு அந்த வாழ்க்கையை வாழமுடியாது. முகமது அலி, மைக்டைசன் போன்ற குத்துச் சண்டை வீரர்கள் தங்கள் கைகளிலே ஒரு உறை போட்டிருப்பார்கள். அந்த உறைக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது. அது என் கையில் இருக்கும்வரை பெலவீனமான ஒரு உறையாக இருக்கும். ஆனால் மைக் டைசன் அந்த உறையை எடுத்து தன் கைகளிலே மாட்டிக் கொண்டு நமக்கு நேராக வருவதாக வைத்துக் கொள்வோம், அப்பொழுது நாம் அங்கே இங்கே பார்த்து எங்கேயாவது ஓடிவிடுவோம். ஏனென்றால் அவர்களின் கை அந்த உறைக்குள்ளே போனவுடனே பெலவீனமான அந்த உறை பெலமுள்ள உறையாக மாறி விடுகிறது. நாம் பெலனற்றவர்களாய் இருக்கும்பொழுது கிறிஸ்து மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்கிற செய்தி நல்ல செய்தி என்பதை உணர வேண்டும். உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமது உள்ளங்களிலே வரும்பொழுது நமக்கு பெலன் உண்டாகிறது. ஆகவே அவருக்கு உங்கள் உள்ளங்களை கொடுங்கள்.

2.நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8).

நாங்கள் பாவமே செய்யவில்லையென்று நிறையபேர் சொல்லுவதுண்டு. உண்மையாக யோசித்துப் பார்ப்பீர்களென்றால் சிலர் பெரிய பாவங்களை செய்திருக்கலாம், சிலர் சின்ன பாவங்களை செய்திருக்கலாம். ஒரு ரூபாய் திருடினாலும் திருடன்தான், 1 லட்சம் ரூபாய் திருடினாலும் அவன் திருடன்தான். ஆகவே நமது வாழ்க்கையிலே சின்னதோ, பெரியதோ நமது தேவனுடைய பிரமாணங்களை நாம் மீறியிருப்போமென்றால், என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ்வேன் என்றால் பாவம் செய்திருக்கிறோம்.

வேதம் சொல்லுகிற நல்லசெய்தி என்ன? நாம் பாவிகளாய் இருக்கும்பொழுதே கிறிஸ்து நமக்காக மரித்தார். என் பாவத்திற்கு எனக்கு வரவேண்டிய தண்டனையை இயேசுகிறிஸ்து சிலுவையிலே ஏற்றுக்கொண்டார். இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு சொல்லுகிறார்: நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா.53:5). நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்துவிட்டபடியினால் இனிமேல் எனக்கு தண்டனை இல்லை என்கிற நிச்சயத்தை நமக்கு கொடுக்கிறார்.

3. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே (ரோமர் 5:10).

இயேசுகிறிஸ்துவினுடைய மரணம் விசேஷமானது. நாம் பாவிகளாயிருக்கையில் நமக்காக அவர் மரித்தார். பெலவீனர்களாயிருக்கும்பொழுது கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். சத்துருக்களாயிருக்கும்பொழுதும் அவர் மரணத்தினாலே ஒப்புரவாக்கப்பட்டோம். லவோதிக்கேயா திருச்சபையைப் பார்த்து, இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து….. என்று கூறுகிறார் (வெளி.3:20). ஒருவேளை உங்கள் வீட்டிற்கு நான் வருகிறேன் என்று நினைத்துக்கொள்ளுங்கள். வரும்பொழுது வாசலில் நின்று பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் வருவதைப் பார்த்துவிட்டு கதவை அடைத்து, தாழ்ப்பாளை போட்டு, விளக்கை அணைத்துவிட்டு, வீட்டிற்குள் உட்கார்ந்துவிட்டீர்கள். நான் வெளியே நின்று கதவை தட்டிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் கதவை திறக்க ஆயத்தமாய் இல்லை. அப்படியானால் என்ன அர்த்தம்? என்னை நண்பராக நீங்கள் கருதவில்லை, பகைவராக கருதுகிறீர்கள். இயேசுகிறிஸ்து நமது இருதய கதவை தட்டிக்கொண்டே நிற்கிறார். அதற்கு நாம் திறந்து இடம் கொடுக்கவில்லையென்றால் அவரை பகைவராகவே கருதிக்கொண்டு இருக்கிறோம். நாம் அவரை பகைவராக கருதினாலும் அவர் நமக்காக மரித்தார், இன்றும் அன்போடுகூட கதவை தட்டிக்கொண்டே இருக்கிறார். எனவே அவரோடு ஒப்புரவாகுவோம்.

நீங்கள் பெலவீனர்களாயிருக்கும்பொழுது, பாவிகளாயிருக்கும்பொழுது சத்துருவாக இருக்கும்பொழுது உங்களுக்காக உயிர் கொடுத்து, உயிர்த்தெழுந்து உங்கள் உள்ளங்களிலே வந்து வாசம் செய்வேன் என்கிற இயேசுகிறிஸ்துவுக்கு உங்கள் உள்ளத்திலே இடம்கொடுங்கள். அவரோடு நீங்கள் ஒப்புரவாகும்போது நமது வாழ்க்கையிலே இருக்கிற இருளை அகற்றி நமது வாழ்க்கை பிரகாசிக்கும்படியான வாழ்வைத் தர அவர் ஆயத்தமாயிருக்கிறார்.

சத்தியவசனம்