இரு கள்வர்கள்

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2012)

கிறிஸ்துவானவர் சிலுவையிலே தொங்கும் பொழுது அவருடைய சிலுவையின் இரண்டு புறத்திலே சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்த இரண்டு குற்றவாளிகளாகிய அந்த கள்வர்களைக் குறித்து லூக்கா 23:39 முதல் 43ஆம் வசனம் வரை எழுதப்பட்டுள்ள வேதபகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம். சிலுவையின் அருகில் போர் வீரர்களும் இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சமயத்திலே இயேசுவானவர் சிலுவையிலே ஜீவனோடு இருந்தார். அதேசமயத்திலே சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இரு கள்வர்களும் உயிரோடுதான் இருந்தார்கள்.

அவர்களில் ஒருவன் இயேசுவைப் பார்த்து, நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். உண்மையாகவே இது வலது பக்கத்துக் கள்ளனா? அல்லது இடது பக்கத்துக் கள்ளனா? என்று திருமறையிலே சொல்லப்படவில்லை. ஆனால் பொதுவாக பாரம்பரிய நம்பிக்கையிலே, இந்த இகழ்ச்சியான வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கள்ளனை இடதுபுறத்துக் கள்ளனாகவே மக்கள் அழைக்கின்றனர். இங்கே அந்த மனிதன் சொன்ன வாக்கியங்கள் ஒரு ஜெபம்போல காணப்படுகின்றது நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான் (லூக்கா 23:39). இது வெளிப்படையான பார்வையிலே ஒரு ஜெபம்போல காணப்பட்டாலும், அது ஜெபம் அல்ல. இது ஆண்டவரைக் குறித்த ஒரு பரியாசமான வார்த்தையாகும். இந்த வார்த்தையைக் கேட்ட இன்னொரு கள்ளன் அதாவது மனந்திரும்பப் போகிற கள்ளன், மற்றவனைப் பார்த்து கடிந்துகொள்கிறான். நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாத ஒன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அந்த முதலாவது கள்ளனை கடிந்துகொள்கிறான். அருமையானவர்களே, மனந்திரும்பி ஆண்டவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட அந்த கள்ளனுடைய வாழ்க்கையிலிருந்து சில காரியங்களை நாம் இன்றைக்கு கற்றுக் கொள்ளப் போகிறோம்.

1. பாவ உணர்வடைந்தான்

முதலாவதாக அவனுடைய வாழ்க்கையிலே பாவ உணர்வு அவனுக்குள் இருந்தது அல்லது பாவ உணர்வை அடைந்தான் என்று சொல்லலாம். முதலாவது தான் ஒரு பாவி என்பதை ஒத்துக்கொள்கிறான். லூக்கா 23:41இல் நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் என்று சொல்கிறான். நாம் தண்டிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? நாம் இந்த சிலுவையிலே மரண தண்டனை அடைவதற்கு காரணம் என்ன? நாம் செய்த கடந்தகால தவறுகள், கடந்தகால பாவங்கள் என்பதை உணரத்தக்கதாக சொல்கிறான். நாம் நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். ஆகவே நாம் இன்று நடப்பித்தவைகள் ஒவ்வொன்றுக்காகவும் நாம் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று சொல்கிறான். இந்த மனந்திரும்பின கள்ளன் பாவ உணர்வடைந்தான். தன்னைக் குறித்து, தன் வாழ்வைக் குறித்து, தன்னோடு அடிக்கப்பட்ட இன்னொரு கள்ளனுடைய வாழ்க்கையைக் குறித்து அவன் உணர்ந்து கொள்கிறான். நாங்கள் பாவிகள், நாங்கள் செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனையை அடைந்தோம் என்கிற உணர்வை அடைகிறான்.

அருமையான சகோதரனே, சகோதரியே பாவ உணர்வு என்பது ஒரு மனிதனுக்குள்ளே சுயமாய் வருவதல்ல, அல்லது ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குள்ளே பாவ உணர்வை திணிக்கவோ, உருவாக்கவோ முடியாது. பாவ உணர்வை யார் தரமுடியுமென்றால் பரிசுத்த ஆவியானவர்தான். ஆவியானவர்தான் ஒரு மனிதனுக்குள்ளே பாவ உணர்வைத் தருகிறார், உருவாக்குகிறார். ஆவியானவருடைய உதவியில்லாமல் எந்தவொரு மனிதனும் கிறிஸ்துவண்டை வரமுடியாது. ஆவியானவருடைய உதவி இல்லாமல் எந்த சகோதரனும், எந்த சகோதரியும் இயேசுவை கர்த்தர் என்று அறிக்கைசெய்ய முடியாது. ஆகவே ஆவியானவர் ஒரு மனிதனுக்குள்ளே இடைபடும்பொழுதுதான் அவன் பாவ உணர்வடைகிறான். எனவேதான் பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அருமையானவர்களே! ஆவியானவர் தற்காலத்திலே எப்படி கிரியைச் செய்கிறார்? வசனத்தின் ஊடாக பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார். வசனமும் எதனாலே கிரியை நடப்பிக்கிறது? ஆவியானவருடைய துணையினாலே கிரியை நடப்பிக்கிறது. ஆவியானவரையும் திருவசனத்தையும் நாம் ஒருபோதும் பிரிக்கவே முடியாது. ஆவியானவர் எங்கே உண்டோ அங்கு திருவசனம் கனம் பண்ணப்படுகிறது. அல்லது திருவசனம் எங்கே சரியாக விதைக்கப்படுகிறதோ, சொல்லப்படுகிறதோ அங்கு ஆவியானவருடைய கிரியை உண்டு.

இங்கே நாம் பார்க்கும் போது, பரிசுத்தமான தேவனுடைய திருக்குமாரனாகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலே சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனமாக கேட்டுக் கொண்டிருக்கிறான் இந்த கள்ளனான மனிதன். ஆகவே, அவனுக்குள்ளே உணர்வு வருகிறது. பாவ உணர்வு மாத்திரமல்ல, இவனுக்குள்ளே இன்னொரு உணர்வும் வருகிறது. இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று சொல்லுகிறான். பாருங்கள், தான் பாவி என்பதை உணர்ந்தான். அவரையோ பாவம் செய்யாதவர் என்பதை விசுவாசித்தான். விசுவாசித்துக் கொண்டது மாத்திரமல்லாமல், தன் சக குற்றவாளியைக் கடிந்துகொள்கிறான். இவ்வளவு தண்டனைகளைப் பெற்றும் நீ இதைப் புரியவில்லையா அல்லது உணரவில்லையா என்று கடிந்து கொள்கிறான்.

அருமையான என் சகோதரனே, சகோதரியே! நாம் துன்பம் அடைந்தபோதிலும் அநேகரை பரியாசம் பண்ணுகிற நிலைகள் நம் அநேகருடைய வாழ்க்கையிலும் காணப்படுவது உண்டல்லவா! அதேபோலத்தான் இந்த முதல் கள்ளனிடத்திலும் காணப்பட்டது. ஆனால் மனந்திரும்பின இந்த இரண்டாவது கள்ளனோ தான் பாவி என்கிற உணர்வை அடைந்தான். அதேசமயத்திலே கிறிஸ்துவோ பாவம் செய்யாதவர் என்கிற உணர்வை அடைந்தான். இதுதான் அவனுடைய விசுவாச வாழ்க்கையிலே ஒரு படியாக மாறிவிடுகிறது. இந்த பாவ உணர்வு அடைந்ததோடு அவன் நின்றுவிடவில்லை.

2. ஜெபித்தான்

இரண்டாவதாக, இயேசுவினிடத்தில் ஒரு அருமையான ஜெபம் செய்தான். திருமறையிலே காணப்படுகிற சிறப்பான சுருக்கமான ஜெபங்களிலே மிக அருமையான ஜெபம் இந்த ஜெபம்தான். தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் (லூக்.18:13) என்கிற இன்னொரு ஜெபமும் உண்டு. அதேபோல இங்கே ஒரு ஜெபத்தை அவன் பண்ணுகிறான் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான் (லூக்கா 23:42). பார்வைக்கு இது சுருக்க ஜெபமாயிருக்கலாம், வாக்கியத்தைப் பார்த்தால் மிக சுருக்கமான வாக்கியமாயிருக்கலாம். ஆனால் ஆழமான, தெளிவான, ஏராளமான இறையியல் கருத்துக்களை அது உள்ளடக்கிய வாக்கியமாகும். முதலாவது இயேசுவை பரிசுத்தர் என்று ஏற்றுக் கொண்டவன். அடுத்ததாக ஜெபம் பண்ண ஆரம்பிக்கிறான். ஆண்டவரே! என்று சொல்கிறான். ஆண்டவரே! என்றால் ஆளுகிறவர் என்று அர்த்தம். அதாவது தான் எதிர்பார்த்திருக்கிற இராஜா என்ற பொருளிலே ஆண்டவரே! என்று சொன்னான். ஒருவேளை மற்ற மனிதர்களைப்போல ஒரு சாதாரண போதகரே, மேய்ப்பரே என்று அவரை அவன் அழைக்கவில்லை. ஆண்டவரே என்று அழைத்ததின் மூலம் அவனுடைய விசுவாசத்தினுடைய முதல்படி ஜெபத்திலே தொனிக்கிறது.

சகோதரனே, சகோதரியே! இதை படித்துக் கொண்டிருக்கின்ற உன் வாழ்க்கையிலே எத்தனையோமுறை நீ ஆண்டவரே, ஆண்டவரே என்றுசொல்லி அழைக்கிறாய். ஆண்டவரே என்றுசொல்லி நீ பாடுகிறாய். உன் வாழ்க்கையிலே ஒவ்வொரு பகுதிகளிலும் நீ ஆண்டவருடைய ஆளுகையை ஏற்றுக் கொண்டிருக்கிறாயா? ஆண்டவர் உன்னை ஆண்டுவருகிறாரா? இப்பொழுது இந்த இயேசுவானவர் ஆளாதபடி மற்றவர்கள் நம்மை ஆண்டுகொண்டிருப்பார்களானால் நாம் மனந்திரும்ப வேண்டும். இந்த மனந்திரும்பின கள்ளன் அவரை, ஆண்டவரே என்று சொல்லி அழைக்கிறான். அதோடு அவன் நின்றுவிடவில்லை.

3. விசுவாசித்தான்

அடுத்ததாக நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்று சொல்கிறான். ராஜ்யம் என்பது இராஜாவோடு இணைந்த ஒன்றாகும். இராஜாவிடத்தில்தான் ராஜ்யம் இருக்கும். யார் இராஜாவாக இருக்கிறாரோ அவருக்கு நிச்சயமாகவே ராஜ்யபாரம் உண்டு. ஆண்டவரே! என்று அழைத்தவன் அடுத்ததாக, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும் என்று வேண்டிக்கொண்டான். பாருங்கள்; இந்த விசுவாச ஜெபத்தை ஆண்டவர் அங்கீகரித்தார். அருமையான சகோதரனே, சகோதரியே! பாவ உணர்வோடு, ஆண்டவரை விசுவாசித்து நாம் பண்ணுகிற ஒவ்வொரு ஜெபத்திற்கும் பதில் வருகிறது. ஆண்டவரை நோக்கி விசுவாசத்தோடு கதறுகிற மக்களுக்கு நிச்சயமாக பதில் உண்டு. இந்த மனிதன் சிலுவையிலே தொங்குகிற அந்த சூழ்நிலையிலும்கூட ஆண்டவரே, உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று வேண்டிக் கொண்டான். அவனுடைய ஜெபம் சுருக்கமானதாயிருந்தாலும் ஆழமான ஜெபம்தான். அது அவனுடைய வாழ்க்கையிலே ஆச்சரியமான காரியங்களை நடப்பித்தது. ஆண்டவர் தனது வேதனையின் மத்தியிலும் அவனிடத்தில் தமது வாய் திறந்து சொல்கிறார்: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இன்றைக்கு – அப்படியானால் அவனுடைய ஜெபத்திற்கு உடனடியாக பதில் வருகிறது. இன்றைக்கு என்று உடனடியாகவே அவனுடைய வாழ்க்கையிலே பதில் கிடைக்கிறது.

எனது அருமையான சகோதரனே, சகோதரியே, நம்முடைய ஜீவியத்தை நாம் ஒருமுறை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தக் கள்ளன் ஜெபித்தவுடனே, ஆண்டவர் அவனுக்கு இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று வாக்கு கொடுத்தார். நமது ஜெபத்துக்கும் நிச்சயமாகவே பதில் உண்டு. இந்த மனிதன் கள்ளனாக இருந்தும் சிலுவையிலே தொங்குகின்ற நிலைமையிலிருந்தும் விசுவாசித்து, உணர்ந்து ஆண்டவரை நோக்கி கதறி ஜெபிக்கும்போது அவனது வாழ்க்கையிலே மீட்பு வந்தது. அப்படியானால் இந்த சம்பவத்தின் மூலமாய் நாம் கற்றுக் கொள்கிற சில படிப்பிணைகள் இருக்கிறது. ஒரு மனிதன் விசுவாசித்து பாவ உணர்வோடு அவரை நோக்கி ஜெபிக்கிற மனிதனை ஆண்டவர் ஏற்றுக்கொள்கிறார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொல்கிறார். அவரிடத்தில் வருகிற எவரையும் அவர் புறம்பே தள்ளுகிறதில்லை. எந்த இடத்திலே எந்த சூழ்நிலையிலே யாராக இருந்தாலும் ஆண்டவர் அவர்களை ஏற்றுக்கொள்கிறார், அவர்களுக்கு மறுபிறப்பு கொடுக்கிறார், அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார்.

அப்படியானால் அவரிடத்திலே நித்திய ஜீவனைப் பெறுவதற்கும், அவரிடத்திலே நித்திய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும், அவரிடத்திலே நித்திய மகிமையைப் பெறுவதற்கும் என்ன வழியென்று சொன்னால் மூன்று காரியம் செய்யவேண்டும். 1. பாவ உணர்வடைய வேண்டும். 2.நாம் ஜெபிக்க வேண்டும். 3. ஆண்டவரை விசுவாசிக்க வேண்டும். இந்த மூன்று காரியங்களும் நடைபெறும்போது நிச்சயமாகவே ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்.

சவுல் என்கிற மனிதன் ஆண்டவருக்கு விரோதமாக பாவம் செய்தவன், ஆண்டவருக்கு விரோதமாக கலகம் செய்தவன், ஆண்டவருக்கு விரோதமாக வாழ்ந்து திருச்சபையை பாடாய்ப்படுத்தினவன், திருச்சபைக்கு விரோதமாக சீறி எழும்பினவன் (அப்.9:1-5). ஆனால் என்ன நடந்தது? அவனை ஆண்டவர் சந்திக்கத் திட்டமிட்டார். அவன் பயணம் செய்து கொண்டிருந்த பாதையிலே மத்தியான வெளிச்சத்திலே ஒரு பெரிய வெளிச்சத்தின் மூலமாய் அவனை சந்தித்தார். வெளிச்சத்தைக் கண்ட சவுல் கீழே விழுந்தான். கர்த்தருடைய சத்தம் கேட்கிறது. சவுலே, சவுலே ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய். அந்த வெளிச்சத்தைக் கண்ட சவுல் உடனே ஆண்டவரே, நீர் யார் என்று கேட்கிறான்? உடனே ஆண்டவராகிய இயேசு , நீ துன்பப்படுத்துகிற கிறிஸ்து நானே என்று சொன்னார். உண்மையாகவே பாருங்கள், சவுல் ஆண்டவரை துன்பப்படுத்தினானா? இல்லவே இல்லை. ஆனால் ஆண்டவரின் சரீரமாகிய சபையை அவன் துன்பப்படுத்தினதை தன்னை துன்பப்படுத்தினதாக கூறுகிறார். நீ துன்பப்படுத்துகிற கிறிஸ்து நானே என்று அவனிடம் சொன்னார். இப்படி சொன்னவுடனே சவுல் ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டான். ஆண்டவர் அவனை சந்தித்தபோது அவர் யார் என்று அறிந்தபோது அவன் உணர்வடைகிறான். ஆண்டவரே! நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்றான். இதிலே அவனுடைய உணர்வு, அர்ப்பணம் எல்லாமுமே வெளிப்படுகிறது.

அருமையானவர்களே, நம்முடைய ஜீவியத்திலே நாம் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். இந்த சவுலுடைய வாழ்க்கையிலே உணர்வு வந்தது. அதே சமயத்திலே அவனது வாழ்க்கையிலே விசுவாசம் வந்தது. அந்நேரத்திலே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று வேண்டிக் கொண்டான். உடனே ஆண்டவர் சொல்கிறார், நீ பட்டணத்திற்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார் (அப்.9:6) உடனே சென்று அப்படியே கீழ்ப்படிந்தான்.

அருமையான என் சகோதரனே சகோதரியே, எந்த சூழ்நிலையிலே எந்த நிலையிலே நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தாலும், எவ்வளவு பயங்கரமான பாவங்களை நீங்கள் செய்துகொண்டிருந்தாலும் எவ்வளவு அக்கிரம சேற்றினிலே நீங்கள் சிக்கியிருந்தாலும், எவ்வளவு தீயபழக்கத்திலே நீங்கள் அடிமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், எவ்வளவு சூழ்நிலையிலே நீங்கள் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், நீங்கள் பயப்படவேண்டாம். ஆண்டவரண்டை வாருங்கள். உங்களை ஏற்றுக்கொள்ள ஆண்டவர் உயிரோடிருக்கிறார். உங்களை நேசிக்கிற ஆண்டவர் உயிரோடிருக்கிறார். உங்களுக்காக விலைமதிக்க முடியாத தன்னுடைய இரத்தத்தையே சிந்தின ஆண்டவர் இன்றைக்கும் உயிரோடிருக்கிறார். எனவே, அவரண்டையில் வாருங்கள். அவரிடத்தில் வருவீர்களானால் உங்களை உணர்ந்துகொள்வீர்களானால், விசுவா சத்தோடு அவரை நோக்கிப் பார்ப்பீர்களானால், அவரை நோக்கி நீங்கள் ஜெபிப்பீர்களானால் இந்த ஆண்டவர் உங்களை நேசிக்கிறவராக இருக்கிறார். அந்தக் கள்ளனுக்கு ஆண்டவர் சொன்னார், இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மெய்யாகவே என்று ஏன் சொல்லுகிறார். அவருடைய வாக்குறுதிக்கு அவ்வளவு நிச்சயமும் அழுத்தமும் இருக்கிறதினாலே அவர் அவ்வாறு சொல்கிறார். ஆகவேதான் பாவ உணர்வோடும், விசுவாசத்தோடும் அவரை நோக்கிப் பார்த்து, ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும் என்று நீங்கள் ஜெபிப்பீர்களானால் நிச்சயமாய் உங்களை ஏற்றுக்கொள்வார்.

சத்தியவசனம்