கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும்

Dr.உட்ரோ குரோல்

(மார்ச்-ஏப்ரல் 2012)

மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று வெற்றி முழக்கமிட்ட வீராதிவீரர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். இந்த இதழில் தேவனுக்கு விரோதமாய் சாத்தான் செய்த யுத்தங்களில் இரண்டினை ஆராய்வோம்.

அநாதி காலமுதலே தேவனுக்கு எதிராக சாத்தான் கலகம் செய்துகொண்டு வருகிறான். இவன் யார்? இவன் தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் வைக்கப்பட்டிருந்த அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த கேரூப்; மற்ற தூதர்களுக்கு இல்லாத அதிகாரங்கள் இவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இவன் ஞானத்தால் நிறைந்தவன். பூரண அழகுள்ளவன். இந்த அழகினால் அவனுடைய இருதயம் மேட்டிமையாகி நான் தேவனுக்கு சமமாவேன் என்று கூறினான். எனவே தேவன் அவனையும் அவனுடைய கூட்டத்தினரையும் தம்முடைய பரிசுத்த பர்வதத்திலிருந்து கீழே பூமிக்கு தள்ளி விட்டார்.

அவன் தன்னுடைய கலகத்தை இந்த உலகிலும் தேவன் உண்டாக்கிய ஆதாம் ஏவாள் மூலமாகத் தொடர்ந்தான். அவன் மிகவும் தந்திரசாலி மதிநுட்பமானவன், மன உறுதி படைத்தவன். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1 பேதுரு 5:8) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. சாத்தான் உங்களையும் என்னையும் அழிக்கும் எண்ணமுடையவன். தேவனுக்கு எதிரியானவன். நீங்களும் நானும் அவனுடைய பகடைக்காய்கள். ஆனால் இயேசுவின் சிலுவை மரணமும், உயிர்த்தெழுதலும் சாத்தானுக்குக் கிடைத்த மாபெரும் தோல்வியாகும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி நாம் யோவான் 19:12-15 என்கிற வேதபகுதியில் வாசிக்கிறோம். அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை பண்ண வகை தேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலை பண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான். அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். இயேசுவின் மரணம் மேற்கத்திய நாடுகளில் மாத்திரமல்ல, மற்ற நாடுகளிலும் அநேக மார்க்கங்களிலும் அறியப்பட்டுள்ளது. அநேகருக்கு இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் பரியாசமாகவே காணப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் இஸ்லாமிய நம்பிக்கையுடையவராயின், இயேசுவின் சிலுவை மரணம் உண்மையா? இத்தகைய மரணம் அவருக்கு அவசியமா? என்ற வினாக்களுக்கு விடைகாண முயலுங்கள். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை, அவருக்காக வேறொருவரை அறைந்தார்கள் என்று இஸ்லாமிய மார்க்கம் போதித்து வருகிறது. மரியாளின் குமாரனான இயேசு என்ற மேசியாவை, தேவனுடைய தூதுவரைக் கொன்றோம். ஆயினும் அவரைக் கொல்லவில்லை, சிலுவையில் அறையவும் இல்லை, அவரைப் போன்ற ஒருவரையே காண்பித்தோம் என்று குரான் கூறுகிறது.

இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்ற கருத்து இஸ்லாமிய மதத்துக்கும் சாத்தானுக்கும் மிக அவசியமானதொன்று. இயேசுவுக்கு சிலுவை மரணம் இல்லையென்றால் நம்முடைய பாவங்களுக்கு அவர் நம்மை தேவனுடன் ஒப்புரவாக்க முடியாது. மேலும் முகம்மதுவால், ஆபிரகாமால், மற்ற போதகர்களால் செய்ய முடியாத ஒரு காரியத்தை இயேசுகிறிஸ்து செய்துமுடித்தார். நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை அவர் சிலுவையில் செலுத்தினார் என்று சத்தியவேதம் கூறுகிறது.

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய இரத்தபலி அவசியமானது. ஏதேன் தோட்டத்திலும் இரத்தம் சிந்தப்பட்டது. ஆதாம் ஏவாள் தங்களுக்கு அத்தியிலைகளைத் தைத்துக் கொண்ட பொழுது எந்தவித இரத்தமும் சிந்தப்படவில்லை. எனவே தேவன் ஒருமிருகத்தைக் கொன்று அவர்களை உடுத்துவித்தார். பழைய ஏற்பாடு முழுவதிலும் இந்த இரத்தம் சிந்துதலைப் பற்றி நாம் வாசிக்கிறோம். இன்றைய கிறிஸ்தவர்களாகிய நமக்கு இயேசுகிறிஸ்து கல்வாரியில் சிந்தின இரத்தம் மிகவும் விலையேறப் பெற்றதாக உள்ளது. நம்மீது உள்ள தேவனுடைய அன்பை நமக்கு அது நிரூபித்துக் காட்டுகிறது. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8) என்று சத்தியவேதம் கூறுகிறது.

ஆனால் இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்துவிடாதபடி சாத்தான் அநேக உபாயங்களைக் கையாண்டான். ஆனாலும் தேவனே வென்றார். கல்வாரி சிலுவையில் மனுக்குலம் அனைத்துக்கும் இயேசுகிறிஸ்து பாவத்தின் தண்டனையை செலுத்தியது தேவனுடைய திட்டமாகும். அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்தி வருகிறவனாயும் நிற்பான். இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார் (எபி. 10:11-14). நீங்கள் தேவனுடைய பரலோகத்துக்குச் செல்லவேண்டுமானால் தேவனுடைய பாதையிலேயே செல்லவேண்டும். நானே வழி, நானே சத்தியம் என்னையல்லாமல் ஒருவனும் தேவனிடத்தில் வரமுடியாது என்று இயேசுகிறிஸ்து கூறியுள்ளார்.

தன் முயற்சியில் தளராது மீண்டும் சாத்தான் களத்தில் இறங்கினான். அது ஒரு முக்கியமான யுத்தம். மரித்த கிறிஸ்து உயிர்த்தெழக்கூடாது என விரும்பினான். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை மத்தேயு நற்செய்தியாளர் அழகாக விளக்குகிறார். ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும் படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் (மத்.28:1-6).

கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை லூக்கா நற்செய்தியாளர் 24ஆம் அதிகாரத்தில் விவரிக்கும் விதத்தை வாசிப்போம். வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலை கவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள் (லூக்கா 24:1-7). இங்கே தூதன் கூறிய செய்தியை கூர்ந்து கவனிப்போம். அவர் இங்கே இல்லை (நிகழ் காலம்), அவர் உயிர்த்தெழுந்தார் (கடந்தகாலம்). அந்த பெண்கள் இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறையில் அவருடைய சரீரத்தைக் காணவில்லை. காரணம் அவர் அங்கே இல்லை. வெறுமையான கல்லறை மாத்திரமே இருந்தது.

மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவு கூர்ந்து, கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள் (லூக்கா 24:7-9). அன்றையதினமே எம்மாவு ஊருக்குச் சென்றுகொண்டிருந்த கிலெயோப்பாவுக்கும் அவருடைய நண்பருக்கும் இயேசு தம்மை உயிருள்ளவராகக் காண்பித்தார். அவர்கள் அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு அவர்களுக்கு தாங்கள் இயேசுவைக் கண்டதாகக் கூறினார்கள்.

இயேசுவைக் கல்லறையில் வைத்த பொழுது தான் வெற்றியடைந்ததாக சாத்தான் நினைத்தான். ஆனால் கிறிஸ்துவோ உயிர்த்தெழுந்தார். தேவனுடனான நீண்ட யுத்தத்தில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் முக்கிய நிகழ்வாகும். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தம் நிறுத்தப்பட்டது. எதிர்காலத்திலும் சாத்தான் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்வானா? அவனுடைய பெருமை அவனை சரணடையச் செய்யாது. எனவே ஒருநாள் தேவனுடைய கரத்தால் சாத்தான் வீழ்ச்சிய டைய வேண்டும்.

கிறிஸ்தவ மார்க்கமானது இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைச் சார்ந்துள்ளது. அது உண்மையான காலக்கணக்கின்படி நடந்த நிகழ்வாகும். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததற்கு காலமும் இடமும் சரித்திரத்தில் உண்டு. நான்கு நற்செய்தி நூல்களும் இதனை முக்கியப்படுத்தித் தெளிவாக விளக்குகிறது. அப்போஸ்தல நடபடிகளின் புத்தகமும் உயிர்த்தெழுதல் நடந்ததை வலியுறுத்துகிறது. அப்.1:3; அப்.2:24-35; 3:15; 4:10; 5:30-32; 13:13-37 ஆகிய ஆறு பகுதிகளும் உயிர்த்தெழுதல் ஒரு சரித்திர நிகழ்வு என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அக்காலத்து மக்கள் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை சந்தேகிக்கவில்லை. ஆனால் அந்நிகழ்வு நடந்து சுமார் 2000 ஆண்டுகள் கழித்து நாம் அதைக் குறித்து கேள்வி எழுப்புகிறோம். சரித்திர நிகழ்வில் ஐயம் எழுப்புவது அறிவீனம் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முழுவதும் நம்பினார். எனவேதான் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க அதனை ஒரு ஆதாரமாக அளித்தார். இயேசுகிறிஸ்து உயிர்த்ததினால் மரணத்தை அவர் ஜெயித்தார். கிறிஸ்துவைக் கொன்று அவரைக் கல்லறையில் வைக்க சாத்தானால் முடியவில்லை. துன்மார்க்கர்களை தேவன் உயிரோடு எழுப்புவதில்லை. இயேசுவின் உயிர்த்தெழுதல் அவரது நீதியை அறிவிக்கிறது. தேவன் நீதிமான்களை எழுப்புகிறார் அல்லது நீதிக்கு பலன்களைப் பெற்றுக் கொள்ள அவர்களை உயிர்த்தெழுப்புகிறார்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் அவர் பரத்துக்கேறி தேவனுடைய வலதுபாரிசத்தின் சிங்காசனத்தில் அமருகிறார். அவரது உயிர்த்தெழுதல் உங்களுக்கும் எனக்கும் மன்னிப்பை அருளுகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்ததினாலே நம்முடைய உயிர்த்தெழுதலும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஏனெனில் நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள் (யோவான் 14:19) என்று இயேசுகிறிஸ்து கூறியுள்ளார்.

தேவனுக்கும் சாத்தானுக்குமான இறுதி யுத்தத்தை வெளிப்படுத்தல் 20ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கலாம். அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. மேலும் அவர்களை மோசம் போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள் (வெளி.20:7-10).

சாத்தான் தற்பொழுது உயிரோடிருந்து மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாலும், ஒரு நாளில் அவன் தள்ளப்பட்டு அக்கினிக் கடலிலே தனது கலகத்துக்கான தண்டனையை அடைவான். அவனைச் சார்ந்தவர்களும் அவனுடைய ஆதரவாளர்களும் அதே தண்டனையை அடைவார்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லையெனில், நீங்களும் அதே பரிதாபமான நிலையை அடைவீர்கள். கிறிஸ்துவே ஒரே இரட்சகர், ஒரே வழி, வெற்றி வேந்தர். அவரை அண்டினால் நாமும் ஜெயம் பெறுவோம். இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோமர் 8:37). தேவனுக்கும் சாத்தானுக்கும் விரோதமான யுத்தத்தில் தேவனே வென்றார்.

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன் (வெளி. 3:20-21).

இந்த பாக்கியத்தை தேவன் நமக்கு தந்தருளுவாராக. ஆமென்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்