ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

Dr.தியோடர்.எச்.எஃப்
(மார்ச்-ஏப்ரல் 2012)

பொன் தூபபீடம்

பரிசுத்த ஸ்தலத்தினுள் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திக்கும்போது, நாம் தேவனோடு ஐக்கியம் கொள்ளும் இடத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். தேவனோடு ஐக்கியமும், தொடர்பும் ஒரு விசுவாசியின் வாழ்வில் மிகவும் முக்கியமான காரியமாகும் சாத்தான் நாம் இந்த உறவை அடைந்துவிடாமல் செய்ய பல உபாய தந்திரங்களைப் பயன்படுத்துவான்.

ஒரு தடவை ஒரு மிஷனெரி எனக்கு எழுதிய ஒரு வரி என் நினைவிற்கு வருகிறது:

நான் என்ன செய்கிறேன்? என்பது குறித்து தேவன் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் நான் எப்படி இருக்கிறேன் என்பதில்தான் குறியாய் இருக்கிறார். ஏனென்றால் ஒருவன் என்ன செய்கிறானோ, அது அவன் எப்படி இருக்கிறானோ அதிலிருந்து உதயமாகிறது. நாம் எப்படி இருக்க வேண்டுமோ, அது நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருப்பதைப் பொறுத்திருக்கிறது.

தூப பீடத்தைச் செய்தலும் அதன் அமைப்பும்

பரிசுத்தஸ்தலத்தில் இருந்த சமுகத்தப்ப மேஜை, பொன் குத்துவிளக்கு இவற்றைப் பற்றி சிந்தித்து முடித்து விட்டோம். இப்பொழுது நாம் பரிசுத்தஸ்தலத்தில் இருக்கும் மூன்றாவது பொருளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறோம். அதுவே பொன் தூப பீடம் ஆகும். இந்த தூபபீடம் பரிசுத்த ஸ்தலத்தின் மேற்குப் பக்கத்தில் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்வதற்குரிய வாசலில் தொங்கும் தொங்கு திரைக்கருகில் இருந்தது. இந்தத் தூபபீடத்தைக் குறித்து தேவன் மோசேயிடம், தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக என்றார் (யாத்.30:1). மேலும் தேவன், சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின் மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக் கடவாய் (யாத்.30:6).

ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபம் காட்டவேண்டும். மாலையில் விளக்கேற்றும் போதும் அதின்மேல் தூபங் காட்டக் கடவன். விளக்குகளை விளக்கும் போதும் அதில் தூபங்காட்ட வேண்டும். உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்ட வேண்டிய நித்திய தூபம் இதுவே. அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகன பலியையாகிலும், போஜன பலியையாகிலும் படைக்க வேண்டாம். அதின் மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம்.

இந்தத் தூபபீடம் சீத்திம் மரத்தால் செய்யப் பட்டதாயினும் (வச.1) அதுவும் பொன் தகட்டால் மூடப்பட்டது (வச.3) பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த மரத்தால் செய்யப்பட்டுப் பொன் தகட்டால் மூடப்பட்ட பொருட்களைப் போல இந்தத் தூபபீடமும் இயேசுகிறிஸ்துவைக் காட்டிற்று. கிறிஸ்துவின் மனுஷீகத்தையும் (மரம்) தெய்வீகத்தையும் (பொன்) காட்டியது.

பரிசுத்த ஸ்தலத்தில் தூபபீடம் மையமான இடத்தைப் பெற்றிருந்தது. உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம் இவற்றிற்கு மிக அருகில் இருந்த தொங்கு திரைக்கு அருகில் இந்தத் தூபபீடம் இருந்தது. மகாபரிசுத்த ஸ்தலம் தேவனுடைய வாசஸ்தலமாகும். எனவே அதற்கு அருகில் உள்ள பொருள் ஒருவேளை அதன் உள்ளே இல்லாமல் இருந்தாலும், மகா பரிசுத்த ஸ்தலத்துக்குரியதாகும். இப்படி அதன் உள்ளே இடம் பெறாமல், அதற்குரியதாய் இருப்பதே தூப பீடமாகும்.

ஒருவர் ஜெபிக்கும்போது தேவனுக்கு மிக அருகில் வருவதுபோல் வேறு நேரங்களில் வர முடியாது. இவ்வாறு தேவனை நெருங்கி வருகிறவர்கள் உதவிகளையும், ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள். எபி.2:18 இவ்வாறு கூறுகிறது, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

தூபபீடமும், ஜெப மன்றாட்டும்

தூபபீடத்தில் எரிந்து கொண்டிருக்கும் கரி நெருப்பின் மீதுதான் தொடர்ச்சியாக தூபவர்க்கம் போடப்பட வேண்டும். இதுவும் கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரி. கிறிஸ்துவும் இப்பொழுது இடைவிடாமல் பிதாவின் முன்னிலையில் நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார். அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார் (எபி.9:24). கிறிஸ்து நமக்காக இடைவிடாமல் வேண்டுதல் செய்து கொண்டிருப்பதால் நாம் அவரில் பாதுகாப்பாக இருக்கிறோம். வேதாகமத்தில் உள்ள மிகச் சிறந்த வசனங்களில் ஒன்று இவ்வாறு கூறுகிறது: மேலும் தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடி ருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார் (எபி.7:25).

விசுவாசிகளுக்காக கிறிஸ்து வேண்டுதல் செய்வதை அப்போஸ்தலனாகிய யோவானும் கூறியிருக்கிறார். என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால், நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் (1யோவா.2:1). அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து நாமும் இவ்வாறு கூறலாம்: ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. (ரோமர் 8:34).

வெண்கலப் பலிபீடம், ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிச்சுவரின் உட்புறத்தில் வைக்கப்பட்டு, கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டு மரித்ததை நினைவுபடுத்தியது போல், இந்தப் பொன் தூபபீடமும், தொங்கு திரைக்கருகில் இருந்து கிறிஸ்துவை நமக்கு நினைவுபடுத்துகிறது. கிறிஸ்து பரலோகத்தில் இருந்து பிதாவிடம் நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார். மீட்பும், ஒப்புரவாகுதலும் பலிபீடத் தண்டையில் நடைபெற்றது. மீட்கப்பட்டவர்களுக்காகப் பொன் தூபபீடத்தண்டையில் வேண்டுதல் ஏறெடுக்கப்படுகிறது. இவ்வாறு பொன் தூபபீடம், கிறிஸ்துவைக் குறித்துக் கூறுகிறது. இவ்வாறு ஆசரிப்புக் கூடாரத்தில் வெண்கலப் பலிபீடம் முதல், பொன் தூபபீடம் வரை இயேசுகிறிஸ்துவில் உள்ள பூரண இரட்சிப்பைக் குறித்துப் பேசுகிறது.

மரணம் வெண்கலப் பலிபீடத்தில் காணப்படுகிறது. பின்னர் அவர் உயிர்த்தெழுந்து, நமது ஜீவனாகி, நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுவார் என்பது பொன் தூபபீடத்தில் வெளிப்படுகிறது.

இயேசுகிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகிய இவைகளைக் குறித்து பவுல் கூறுகிறதாவது: நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்ன வென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி, நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து (1கொரி. 15:3,4). இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! கிறிஸ்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருவதற்காக மரித்தார்! நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே (ரோ. 5:10).

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பாவத்தின் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் நம்மைக் கறைப்படுத்துகிற பாவங்களிலிருந்தும் மீட்டுக்கொள்ளுகிறார். அதனால்தான் நாம் இப்படிக் கூறமுடிகிறது. மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு, அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால், அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார் (எபி.7:25).

(தொடரும்)

மொழியாக்கம்: Mr.G.வில்சன்
சத்தியவசனம்