Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2021)

பாவிகளாகிய நாம் நியாயத்தீர்ப்புக்கும் ஆக்கினைக்கும் பாத்திரவான்கள். ஆனால், தேவனோ தம்முடைய கிருபையை நம்மீது ஊற்றுகிறார். இந்த ஆச்சரியமான ஈவை நாம் கல்வாரியின் சிலுவையில் கண்டுகொள்ளலாம்.

வரலாறு இதுவரை காட்டாத முறையில் சிலுவையின் நிகழ்வானது தேவனுடைய ஒப்பற்ற பண்பை நமக்கு விளக்குகிறது. சிலுவையின் மூலமாகவே நாம் அவரது அன்பின் ஆழத்தையும், உன்னத திட்டத்தின் வல்லமையையும் நாம் அறியமுடியும். தேவனுடைய கிருபையின் ஆழத்தையும், கருணையையும், அன்பையும் சிலுவை சுட்டிக்காட்டுகிறது.

ஹென்றி வான்ட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ என்ற கவிஞர் தன்னுடைய வே சைட் இன் என்ற கதைத் தொகுப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: நாம் யாவரும் ஒரே மண்ணிலிருந்து உருவானவர்கள்; எனவே, நாம் இரக்கமும் நீதியுமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். இது ஒரு சிறந்த ஆலோசனை. நாம் அனைவரும் ஒன்றுபோல் இருப்பதால் நாம் ஒருவருக்கொருவர் இரக்கமுள்ளவர்களாயிருக்கவேண்டும். நம் அனைவருக்கும் ஒரே பிரச்சனை உண்டு. அது நம்முடைய வாழ்வில் வெளிப்படும் பாவம் ஆகும். இப்பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்க ஒருவர் தேவை.

தேவன் என்மீது கருணை காட்டுவதைவிட நான் உங்கள்மீது இரக்கமாயிருப்பது எளிது. ஏனெனில், நீங்களும் நானும் சமநிலையில் இருக்கிறோம். ஆனால், அவர் உன்னதர், சகலத்தையும் சிருஷ்டித்தவர்; நான் அவருடைய சிருஷ்டியின் ஒரு பகுதி. தேவன் பரிசுத்தர்; நான் பாவி. நான் மற்றவர்களிடம் இரக்கம் காட்டாவிட்டாலும் அவர் எனக்கு கருணை காட்டுகிறார். அதுவே அவரது சிறப்புத்தன்மை. இன்று நாம் பிதாவாகிய தேவனுடைய குணாதிசயங்களைப் பார்ப்போம். சிலுவையையும் இயேசுவையும் நோக்குவோம். அங்கு இயேசுவே மையமான நபர். இவை எல்லாவற்றையும் அனுமதித்த பிதாவாகிய தேவன் ஒப்பற்ற கருணையுடையவர்.

கருணை என்பது ஒரு விலையுயர்ந்த வைரக்கல் போன்றது. அதற்கு பன்முகப்பட்டைகள் உண்டு. அதுபோல் தேவனுடைய இரக்கத்தைப் பார்க்கவும் பல வழிகள் உள்ளன. ஒரு கண்ணோட்டத்தில் நம்முடைய பாவத்துக்கு வரவேண்டிய தண்டனை தடுக்கப்பட்டது. இதையே நம்மில் அநேகர் கருணை அல்லது இரக்கம் அல்லது தயவு என்று கூறுகின்றனர். தேவனுடைய கருணையை அவருடைய அன்புடன் தொடர்பு படுத்தினாலும் அதிகமாக அவருடைய கிருபையுடன் நாம் இணைக்க முடியும்.

கருணை என்பது நமக்குரிய தண்டனையை விலக்குவது எனில், பின் ஏன் அது அவருடைய அன்புடன் இணைக்கப்பட வேண்டும்? தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபே.2:4-5) என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

கருணை, அன்பு, கிருபை இவை யாவும் தேவனுடைய தன்மைகள். இவற்றை நாம் தனித் தனியே பிரித்து அறிந்துகொள்ள இயலாது. தேவனுடைய பண்புகளும் தன்மைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. தேவனுடைய கருணை, அன்பு, கிருபை யாவும் சிலுவையில் சந்திப்பதை நாம் காணலாம். அந்த இடம் கொல்கொதா என்று அழைக்கப்படுகிறது.

அவருடைய கிருபையானது மக்கள் தம்முடைய குமாரனை கொடூரமாக சித்திரவதை செய்வதை சகித்துக்கொள்ள வைத்தது. அவரது அன்பே தம்முடைய குமாரனை சிலுவைக்கு ஒப்புவித்தது. அவரது கருணையே நமக்குரிய தண்டனையை நிறுத்தி அதை ஆண்டவராகிய இயேசுவின்மேல் சுமத்தியது. தேவனுடைய இம்மூன்று தன்மை பண்புகளும் சீராக கல்வாரி சிலுவையில் எவ்வாறு இணைந்தது எனக் காண்போம்.

சிலுவையில் வெளிப்படும் தேவனுடைய கருணையை நாம் சிந்திப்போம்.

முதலாவது, தமது குமாரனாகிய இயேசுவின் சிலுவை மரணத்தினால் ஏற்பட்ட மனத்துயரை தேவன் தாங்கிக்கொண்டார். இயேசு குற்றமற்றவர். எந்த தவறும் செய்யாதவர். இது தேவனுக்கு நன்றாகவே தெரியும். நியாயமற்ற மக்களால் அவர் துன்புறுவார் என்பதையும் அவர் நன்கு அறிவார். மற்ற மனிதர்களுமே அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்திருந்தார்கள். தேசாதிபதி பிலாத்துவின் மனைவி அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள் (மத்.27: 19).

பிலாத்துவும் இயேசுவை அவரது குற்றத்தைக் குறித்து விசாரித்தார். இவன் என்ன பொல்லாப்பு செய்தான், இவனை ஏன் சிலுவையில் அறைய வேண்டும்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே! என்று மூன்றுமுறை ஜனங்களிடம் கூறினார். பின்னர் தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் என்றான்.

குற்றமில்லாத அவர் நமக்காக குற்றமானார். இயேசு அடைந்த பாடுகள் யாவையும் நினைவு கூருங்கள். அவரது வேதனைகளை எண்ணிப் பாருங்கள். முதலாவது கெத்செமனே தோட்டத்திலிருந்து அவரைக் கட்டி அழைத்துச் சென்றனர். இதனை யோவான் 18:12 இல் வாசிக்கிறோம்.

பிரதான ஆசாரியனுடைய சேவகன் ஒருவன் அவரை ஓங்கி அறைந்தான். இது யோவான் 18: 22இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் இயேசுவின்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள் (மாற்கு 14:65). ரோம போர்ச்சேவகரும் அவரை பரியாசம் பண்ணி அவரை அடித்தனர். மூன்று முறை மூன்று விதமான மக்கள் அவரை அடித்து அவர் மேல் துப்பி, அவரை அறைந்தனர்.

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மாற்கு 15:15இல் அவரை வாரினால் அடித்தார்கள் என்று வாசிக்கிறோம். இந்த வேதனை மகா கொடியது. அவருடைய முதுகை சாட்டையால் அடித்து சிதைத்தனர். முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து அழுத்தினர் (மத்.27:29).

பின்னர் அவரை சிலுவை சுமக்க வைத்து எருசலேமின் வீதிகள் வழியாக கொல்கொதா என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த பாரமான சிலுவையை சுமப்பதும் அதிக வேதனையை அளித்திருக்கும்.

சிலுவையில் அறையப்படும் முன்பாக அவர் அடைந்த வேதனைகளை எண்ணிப்பாருங்கள். அதுவே அவருக்கு மரணத்தையே வர வைத்திருக்கும். இதையெல்லாம் சிந்திக்காத நாம், அவர் கல்லறைக்குள் தெளிவடைந்து வெளியே வந்து விட்டார் என்று பிறர் சொல்வதை மறுக்காத ஊமையராய் இருக்கிறோம்.

தண்டனைகளில் மிகக்கொடியது சிலுவையில் அறையப்படுதல் என்று கிரேக்க பேச்சாளர் டெமாஸ் தனிஸ் கூறியுள்ளார். இயேசு கல்வாரிக்குச் சென்ற பொழுது மிகக்கடினமான மரணத்தை அனுபவித்திருந்தார்.

அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்திருந்த ரோம சரித்திர அறிஞர் ஜோசிபஸ் என் பவர் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சிலுவை மரணமே மிக மோசமான தண்டனை என்கிறார். அதாவது இதைவிட கேவலமான, வேதனையான மரணம் வேறு எதுவுமில்லை என்று அர்த்தமாகும். சிலுவையில் அறையப்படுமுன் அடைந்த சரீர வேதனைகள், பாடுகள், சிலுவையில் மணிக்கணக்காக தொங்குதல் இவை யாவையும் இயேசு நமக்காக அனுபவித்தார்.

யோவான் 19:17-18 கூறுவதை வாசியுங்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்து கொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டு பேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

அந்த இடம் எருசலேம் நகரத்துக்கு வெளியே அமைந்திருந்தது. அது எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்றும் இலத்தீன் மொழியில் கல்வாரி என்றும் அழைக்கப்படுகிறது. அதன் பொருள் கபாலஸ்தலம் அல்லது மண்டையோடு (கபாலம் எனில் மண்டை என்பதாகும்). நீங்களும் நானும் அனுபவிக்கவேண்டிய வேதனைகளையும் வலிகளையும் இயேசு அனுபவித்தார்.

தேவனுடைய தன்மையை சிந்திக்கும்பொழுது இயேசு அனுபவித்த வேதனைகளை நாம் நினைப்பது எளிதாயிருக்கும். ஆனால், பிதாவாகிய தேவனை சிலுவை வழியாக கண்ணோக்குவோம். நம் பாவங்களுக்கான தண்டனையின் வேதனையை அவர் நம்மைவிட்டு நீக்கினார். இயேசு குற்றமற்றவர். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2கொரி.5:21). எனது பாவங்களுக்குரிய வேதனைகளை என்னிடமிருந்து தேவன் நீக்கி அதை இயேசு சுமக்க அனுமதித்தார். என்னுடையது மாத்திரமல்ல, உங்களுடையதையும் இயேசு சுமந்து தீர்த்தார்.

உங்கள் மீதும் என்மீதும் கொண்ட இரக்கத்தால் அதை அவர் செய்தார். எனக்குத் தகுதியான தண்டனையை அவர் எனக்குத் தரவில்லை; அதனை இயேசுவின்மேல் சுமத்தினார். பிதாவின் கருணையை இவ்வாறு சிலுவையின் மூலமாக நாம் காண்கிறோம்.

தேவனுடைய அன்பு, அவருடைய மகிமை மற்றும் அவருடைய இரக்கம், நீடிய பொறுமை இவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுகிறோம். ஆனால், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டால் மாத்திரமே நாம் நம்முடைய பாவ நிலையை உணர்ந்து வெட்கப்படுவோம். ஆனால், நாம் அவரிடம் சென்று பாவ அறிக்கை செய்து அவருடைய மன்னிப்பை கேட்கமுடியும். தேவன் சகிப்புத்தன்மையுள்ளவர்; கருணையுள்ளவர்; அவர் மன்னிப்பவர்.

இதனை அறிந்துகொண்ட நாம் இயேசுவுக்கும், தந்தையாம் கடவுளுக்கும் நன்றியுள்ளவர்களாய், அவரைப்போன்று மாற ஆழமான வாஞ்சை ஏற்படவேண்டும். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் தேவன் விரும்பும்விதமாய் அமைத்துக்கொள்ள வேண்டும். இது முக்கியமானதும் அவசியமானதுமாகும். தேவனுடைய தன்மைகளில் ஒன்றான அவரது இரக்கத்தை நாம் சிறிதளவே ஆராய்ந்தோம். இனி அவருடைய கிருபையைக் காண்போம். தேவனுடைய கிருபையை அறிந்துகொள்வதற்கு மிகச்சிறந்த இடம் சிலுவையே! ஏனெனில் என் வலிகள் வேதனைகள் யாவையும் இயேசு சிலுவையில் சுமந்தார். இயேசு சுமந்த குற்றங்கள் யாவும் என்னுடைய குற்றங்களே.

உலக நாடுகள், மக்கள் யாவரும் அனைத்துக் காலத்திலும் பாவம் என்றவுடன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையே சுட்டிக்காட்டுகின்றனர். பாவத்தின் சுமையே உண்மையான கொலையாளி. இயேசு சிலுவையில் தொங்கிய குறுகிய காலத்திலேயே இவை யாவும் நடந்தன.

உங்களுக்கு வரவேண்டிய தீர்ப்பே எனக்கும் உரியது. இதை தேவன் நன்கு அறிவார். ஆனால் தேவனுடைய கிருபையோ அதை நமக்குத் தரவில்லை. நமக்குத் தகுதியற்றவற்றை அவர் ஈவாக வழங்கினார். மனுக்குலத்தின் பாவத்தின் தண்டனையை இயேசுவின்மேல் சுமத்தியது தேவனுடைய கருணையே!

நம்முடைய வேதனையை இயேசு சுமந்தார் எனக் கண்டோம். இனி அவர் அடைந்த அவமானத்தை நோக்குவோம். பாவத்தினால் நாம் அடைய வேண்டிய அவமானத்தை தேவன் நீக்கிவிட்டார். நமக்காக இயேசு கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார், கேவலப்படுத்தப்பட்டார். அந்நாளில் ஒவ்வொருவரும் ஆண்டவராகிய இயேசுவின்மேல் துப்பினார்கள். பிரதான ஆசாரியர்களும் அவருடைய ஊழியக்காரர்களும் அவரைப் பரியாசம் பண்ணினார்கள். அவருடைய கண்களைக் கட்டி அவருடைய முகத்தில் அறைந்து, “உன்னை அடித்தவன் யார், அதை ஞான திருஷ்டியினால் சொல்” என்று அவரை எள்ளி நகையாடினர்.

ஏரோது இயேசுவுக்கு மினுக்கான ஒரு வஸ்திரத்தை உடுத்துவித்தான். பின்னர் அவனது சேவகர்கள் அவரை ஒரு தூசியைப்போல நடத்தினர். அவருக்கு அணிவித்த மேலங்கியைக் கழற்றி; அவரது வஸ்திரங்களைத் திரும்ப உடுத்தினர்.

ரோம போர்ச்சேவகர்களும் இயேசுவைப் பரியாசம் பண்ணினர். அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணினார்கள் (மத்.27:29). பின்னர் அந்தக் கோலை அவரிடமிருந்து வாங்கி அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றினர். ஏனெனில் அவர்கள் அவரை யூதருக்கு ராஜாவாகக் கருதவில்லை. இயேசுவிடம் தங்களுடைய அவமரியாதையை வெளிப்படுத்தினர். தங்களுக்கிருக்கும் வெறுப்பினைக் காட்டினார்கள்.

இயேசு கல்வாரியை அடைந்தவுடன் ஜனக் கூட்டத்தினரும் அவரைக் கேலி செய்தனர். தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தனர். ஆனால், இயேசு அந்நாளில் சிலுவையிலிருந்து இறங்கி வராமல் அங்கேயே இருக்கக் காரணம் என்ன என்பதை நன்கு சிந்தித்துப் பாருங்கள். அவர்மேல் துப்பினர்; அவரை அடித்தனர்; அவரது சிலுவையைச் சுமக்கச் செய்தனர். கல்வாரியை அடைந்தவுடன் அங்கே அவரை சிலுவையில் அறைந்தனர். அவர் கைகளிலும் கால்களிலும் ஆணிகள் கடாவப்பட்டவராய் சிலுவையில் அரைநிர்வாணமாய்த் தொங்கினார். மற்றவர்கள் அவரைப் பார்த்து நகைத்தனர்.

இப்படிப்பட்ட மனுக்குலத்தின் அதிக அவமானமும் இழிவானதுமான மரணத்தை அவர் ஏன் அனுபவிக்கவேண்டும்? இதைப்பற்றி அநேகர் பல புத்தகங்களும் எழுதியுள்ளனர். ஆனால் அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல் (எபி.12:2) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. நம்மை பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கும் மகிழ்ச்சிக்காகவும், உங்களையும் என்னையும் தேவனுடன் இணைக்கும் சந்தோஷத்துக்காகவும் இயேசு அச்சிலுவையில் தொங்கினார். தேவகிருபை நம்முடைய இடத்தில் இயேசுவை வைத்தது. தேவனுடைய சித்தம் நிறைவேறவும்; இயேசுவின் உறுதியும் அவரை சிலுவையில் இருத்தியது.

சிலுவையிலிருந்து நம் கண்களை சற்றே விலக்குவோம். பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6: 23). தேவன் நீதியுள்ளவர். அவர் பாவத்தைத் தண்டித்தேயாக வேண்டும். ஆம். எனக்கு தண்டனை நிச்சயம் உண்டு. இயேசு அடைந்த அத்தனை அவமானங்கள், வேதனைகள், பாடுகள், பரியாசங்கள் முள்முடிகள் யாவையும் நான் அடைந்தாக வேண்டும். ஆனால், நான் எதையும் பெறவில்லை; எல்லாவற்றையும் இயேசு எனக்காகவும் உங்களுக்காகவும் அனுபவித்தார்.

இயேசுவின் வேதனைகள், பாடுகள் மற்றும் சிலுவை மரணத்தை தியானித்தபொழுது எனக்கு திகைப்பூட்டியது என்னவெனில்; பாவத்துக்கான தண்டனையை பெற்றுக்கொள்வதில் இயேசு தாங்கிக்கொண்டிருந்த வேதனைகள் யாவையும் பிதாவாகிய தேவன்; கவனித்துக்கொண்டிருந்தார் என்பதாகும். பாவத்தைப் போக்க சிலுவை மரணம் தேவையான ஒன்று. அதில் நான் இருக்கவேண்டும்; ஆனால், எனக்கு பதிலாக இயேசு அவற்றை ஏற்றுக் கொண்டார். இதுவே தேவனுடைய கிருபை!

தேவன் தமது அளவற்ற கிருபையினாலே, எனது பாவத்துக்கான தண்டனையை இயேசுவின்மேல் சுமத்தினார். “என்னுடைய குமாரன் ஒருபொழுதும் பாவம் செய்யவில்லை; எனவே அவரே பாவத்துக்கான பூரண நிவாரண பலி. நீ செய்த பாவங்கள் அநேகம். எனவே நீ சிலுவையில் அறையப்படுவது நியாயம். ஆனால் உன்னுடைய இடத்தில் அவர் மரிக்கட்டும். தேவனுடைய கட்டளைகளை நீ மீறினாய், உனது வாழ்வு பாவ மனப்பான்மை உடையது. நீ செய்த காரியங்கள் நேர்மையானவை அல்ல; அவை என்னை திருப்திப்படுத்தவில்லை; அந்த நாளில் இவை யாவும் இயேசுவின்மேல் சுமத்தப்பட்டன. உன் பாவங்களை அவர் ஏற்றுக்கொண்டு உனக்குரிய தண்டனையை அனுபவித்தார். இதை நீ விசுவாசிக்க வேண்டும்” என்று தேவன் கூறுகிறார்.

தேவனுக்கு விரோதமான பாவம் எதுவும் நான் செய்யவில்லை என அநேகர் நினைக்கின்றனர். ஏனெனில், அவர்கள் தேவனை நன்கு அறியவில்லை. அவர்கள் தேவனைக் காணாததால் தேவனைக் காயப்படுத்தும் செயல்கள் செய்யவில்லை என்றும் நினைக்கின்றனர்; அம்மக்களுக்கு அவரது கிருபை வேண்டுமென நினைக்கின்றனர். நாம் மற்றவர்களுக்கு தீங்கிழைத்தால் அவர்கள் அதே விதமாய் நமக்கு செய்யக்கூடாது என்று விரும்புகிறோம். ஆனால், நாம் நமது பாவங்களால் தேவனை முகத்தில் அறைந்திருக்கிறோம். அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. பாவம் எனத் தெரிந்தும் நாம் அதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை; என் விருப்பப்படி நான் வாழுவேன்; என நம்மில் அநேகர் எண்ணுகிறோம். நமது செய்கைகளுக்குத்தக்கதாய் தேவன் நம்மைத் தண்டிப்பதில்லை. இந்த தேவனை நான் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இவரை நான் நம்பவேண்டும்.

ஜெபம்: “பிதாவே, நான் உமக்கு விரோதமாக பாவஞ்செய்துள்ளேன் என்பதையும், உம்முடைய கிருபை எனக்கு தேவை என்பதையும் நான் அறியவில்லை. ஆயினும், நீர் என்னில் அன்புகூர்ந்து, உமது ஒரேபேறான குமாரனை சிலுவையில் மரிக்க எனக்காக ஒப்புக்கொடுத்தீரே. என்னே உம் முடைய கிருபை! என் வாழ்நாள் முழுவதும் உமக்காக உழைக்க என்னை ஒப்புவிக்கிறேன். பாவியாகிய என்னை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை


வருந்துகிறோம்!

கடந்த 2020 டிசம்பர் 7 ஆம் தேதியன்று டாக்டர் பிராங்க் சுத்லே அவர்கள் தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசித்ததை அறிந்து மனம் வருந்துகிறோம். 1984ஆம் ஆண்டு வேதாகமத்திற்கு திரும்புக இந்திய ஊழியத்தில் இணைந்த டாக்டர் பிராங்க் சுத்லே அவர்கள் 2006 ஆம் ஆண்டு வரை இவ்வூழியத்தின் மேலாண்மை இயக்குநராக பணிபுரிந்து வந்தார்கள். தேவன் சகோதரர் அவர்கள் வாயிலாக செய்த சகல மகத்தான பணிகளையும் நினைவுகூர்ந்து தேவனைத் துதிக்கிறோம். அவர்களது இழப்பினால் துக்கத்திலிருக்கும் சகோதரி ஹெலன் சுத்லே மற்றும் அவர்களின் பிள்ளைகளின் குடும்பத்தினர் யாவருக்கும் தேவன்தாமே ஆறுதலையும் தேறுதலையும் அருள மன்றாடுகிறோம்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது (சங்.116:15).