சகோ. ஜே.சி.ரைய்ல்
(மே-ஆகஸ்ட் 2021)

நீங்கள் மறுபடியும் பிறந்து விட்டீர்களா? இது நம் வாழ்க்கையில் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாகும். “நான் இந்தச் சபையைச் சேர்ந்தவன்’ நான் கிறிஸ்தவன் என நினைக்கிறேன் போன்ற பதில்கள் அர்த்தமற்றது. பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களிடம் யோவான் கூறுகின்ற மறுபிறப்பின் அடையாளங்கள் காணப்படுவதில்லை. ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று (யோவா. 3:3) இயேசு கூறினார்.

1. மறுபிறப்பு அடைந்த ஒரு நபரால் தொடர்ச்சியாக பாவத்தில் வாழ முடியாது.

அந்த நபர் பாவம் செய்தாலும், அது முழு மனதுடனும், முழு ஆவலோடும் செய்யப்படுவதில்லை. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான் (1யோவான் 3:9). தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம் (1யோவான் 5:18).

மறுபிறப்பு அடைவதற்கு முன்பதாக ஒரு செயல் பாவமா இல்லையா என்ற உணர்வே இல்லாதிருந்தது. பொல்லாப்பைச் செய்தபின், பாவ உணர்வும் இல்லாமலிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் பாவத்திற்கும் அவருக்கும் முரண்பாடு இல்லாமலிருந்தது. அவர்கள் நண்பர்களாயிருந்தனர். ஆனால் உண்மைக் கிறிஸ்தவர் பாவத்தை வெறுப்பார். பாவத்தை விட்டு ஓடுவார். யுத்தம் செய்வார். பாவத்தைக் கொள்ளை நோயாகக் கருதுவார். அதின் பிரசன்னத்தை வெறுப்பார். அதின் ஆதிக்கத்தில் விழும்போது மனம் வருந்துவார். மேலும் பாவத்தினின்று முழுமையாய் விடுதலைப் பெற வாஞ்சிப்பார்.

பாவம் இவர்களை மகிழ்ச்சியாக்குவதில்லை. இவர்கள் வெறுக்கும் ஒன்றாகப் பாவம் காணப்படும். ஆனாலும் பாவத்தின் பிரசன்னத்தைத் தன்னிடமிருந்து முற்றிலும் அழிக்க இவர்களால் முடியாது. தம்மிடம் பாவம் இல்லை என்று சொன்னால் இவர் பொய்யர் ஆவர் (1யோவான் 1:8).

ஆனால் இவர்கள் பாவத்தை வெறுத்து, அதைச் செய்யக்கூடாது என்பதில் உறுதியான எண்ணம் கொள்பவர்கள். அசுத்த சிந்தனைகள் தங்கள் மனதில் வருவதைத் தவிர்க்க முடியாவிட்டாலும், அவற்றை வார்த்தையிலும் கிரியையிலும் ஒதுக்குவர் (யாக்.3:2). அவ்வண்ணமே பலவீனங்களையும் குறைவுகளையும் பாவிப்பர். ஆனால் இவையனைத்தும் தன் உள்ளத்தில் வேதனை உண்டாக்குகிறது என்று கூறுவர். அன்பானவர்களே, நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டீர்களா?

2. மறுபிறப்பு அடைந்த ஒரு நபர் இயேசுகிறிஸ்து தான் தன் பாவங்களை மன்னிக்க முடியும் என்று விசுவாசிப்பார்.

கிறிஸ்துதான் இந்த மீட்பின் பணிக்காகப் பிதாவினால் நியமிக்கப்பட்டவர் என்பதையும், அவராலேயன்றி மீட்பு இல்லையென்றும் விசுவாசிப்பார். மறுபடியும் பிறந்த ஒரு விசுவாசி தன்னில் தானே தகுதியின்மையைத்தான் உணருவார். ஆனால் கிறிஸ்துவில் முழு நம்பிக்கை கொள்வார்.

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான் (1யோவா. 5:1). அவரை விசுவாசித்ததினால் தன் பாவங்கள் கழுவப்பட்டதை உணருவதோடு, சிலுவையில் முடிக்கப்பட்ட மீட்பின் பணியை ஏற்றுக்கொண்டதால் தேவனுடைய பார்வையில் தாம் நீதிமான்களாக்கப்பட்டதை விசுவாசிப்பார். பயமின்றி, மரணத்தையோ நியாயத்தீர்ப்பையோ எதிர்கொள்வார்.

அவருக்கு சந்தேகம் வரக்கூடும். பயம் கொள்ளலாம். சில நேரங்களில் விசுவாசமே அற்றுப் போனாற்போல உணரலாம். இப்படிப்பட்ட சூழலிலும் கிறிஸ்துவை மறுதலிக்கமாட்டார். கிறிஸ்துவைத் தவிர்த்து தன் நீதியின் மேலோ, தன் உத்தமத்தின் மேலோ, தன் ஜெபத்தின் மேலோ, தன் சபையின் மேலோ, நம்பிக்கை வைக்கமாட்டார்.

3. மறுபிறப்பு அடைந்த ஒருநபர் நீதியை நடப்பிப்பார்.

நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள் (1யோவான் 2:29). மறுபடியும் பிறந்தவர் பரிசுத்தவான். தேவசித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து எல்லாவகையிலும் தேவனைப் பிரியப்படுத்தி, தேவன் அருவருக்கும் காரியங்களைத் தன் வாழ்வில் தவிர்ப்பார். கிறிஸ்துவையே நோக்கிப்பார்த்து, அவரையே தன் வாழ்வில் முன் மாதிரியாகப் பாவித்து, அவர் கூறுவதை நிறைவேற்றும் நண்பராக இருப்பார்.

தான் எல்லாவகையிலும் சிறந்தவர் என்று நினைக்கமாட்டார். மாறாக, தம்மிடம் கிரியை செய்யும் மற்றொரு பிரமாணமான பாவ பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல், கிருபையின் கீழ் நிற்கப் பழகுவார். இந்தப் பாவப்பிரமாணத்தைத் தவிர்க்க முடியாதென்பதை உணருவார். ஒரு சில நேரங்களில் “தான் கிறிஸ்தவர்தானா?” என்று நொந்துகொண்டாலும் தேவகிருபையைச் சார்ந்துகொள்வார்.

ஜான் நியூட்டன் இப்படிக் கூறுவார்: “நான் எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி இருக்கவில்லை. நான் எப்படி இருக்க விரும்புகிறேனோ அப்படியும் இருக்க முடிவதில்லை. மறுவாழ்வில் நான் எப்படி இருப்பேனோ, அப்படி இப்போதில்லை. ஆனால் நான் எப்படி இருந்தேனோ, இன்று அப்படி இருக்கவில்லை. நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் தேவகிருபையே”. அன்பானவர்களே, என்ன நீங்கள் மறுபடியும் பிறந்து விட்டீர்களா?

4. மறுபிறப்பு அடைந்த ஒரு நபர் சகோதரர்களிடம் விசேஷித்த அன்பு கொண்டிருப்பார்.

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம் (1யோவா.3:14).

இவர் தன் பரம தகப்பனைப்போலவே அனைத்து மனிதரிடமும் பொதுவான அன்பு கொள்ளுவார். விசுவாசிகளிடமோ சிறப்பான அன்பை பேணுவார். தனது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப்போல மோசமான பாவியையும் நேசித்து, அவருக்காகக் கண்ணீர் சிந்துவார். விசுவாசிகளிடம் ஐக்கியம் கொள்ளும் போது, தம் வீட்டில் இருப்பதுபோல உணருவார்.

கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர் என்று உணருவார். அவர்கள் அனைவரும் ஒரே பாதையில் செல்லும் சக பயணிகளாவார். இந்த விசுவாசக் கூட்டத்தில் பல வகுப்பினர் பல்வேறு சூழலில் காணப்படலாம். ஆனால் அவர்கள் அனைவருமே பரம தகப்பனின் பிள்ளைகள் என்பதால் அவர்களை நேசிக்காமல் இருக்க முடியாது.

5. மறுபடியும் பிறந்த ஒரு நபர் உலகை மேற் கொள்வார்.

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும் (1யோவான் 5:4). நன்மை எது, தீமை எது என்று மறுபடியும் பிறந்த ஒருவருடைய நோக்கு உலகத்தைச் சார்ந்திராது. உலக பாதைகளுக்கும் வழிமுறைகளுக்கும் எதிராகப் போவதால் அவர் வருத்தப்படுவது கிடையாது. மனிதர் என்ன யோசிப்பர் என்பதைக் குறித்து அவரிடம் ஆர்வம் இருக்காது. அவர் உலகத்தை மேற்கொள்பவர்.

மனிதரின் புகழ்ச்சியைவிட தேவனின் புகழ்ச்சியை அவர் அதிகம் விரும்புவார். மனிதரைப் புண்படுத்துவதைப் பார்க்கிலும் தேவனைப் புண்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருப்பார். தனக்கு புகழ் சேரவோ, தன்னுடைய இகழ்ச்சியோ குறித்து சற்றும் கவலைப்படமாட்டார். அவருடைய ஒரே நோக்கம் தேவனைப் பிரியப்படுத்துவது மாத்திரம்தான்.

6. மறுபடி பிறந்த ஒருவர் தன் ஆத்துமாவைக் குறித்து மிகவும் கவனமாயிருப்பார்.

பாவத்தை மாத்திரமல்ல, பாவத்திற்கு வழி நடத்தும் அனைத்திலிருந்தும் தூரமாயிருக்க விரும்புவார். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான் (1யோவான் 5:18). தன் உறவுகளைக் குறித்துக் கவனமாயிருப்பார். தவறான உரையாடல்கள் இருதயத்தைக் கறைப்படுத்தும் என்பதை உணர்ந்து கவனமாயிருப்பார். எப்படியாக, ஆரோக்கியத்தைவிட வியாதி வேகமாகப் பரவுமோ, நன்மையைவிடத் தீமை எளிதாக ஒட்டிக்கொள்ளும் என்பதை நன்கு அறிவார். தன் நேரங்களைக் குறித்துக் கவனமாயிருபபார். பயனுள்ளவைகளுக்காக நேரத்தைப் பயன்படுத்துவார்.

எதிரி நாட்டில் ஒரு போர் வீரனாய் அவர் வாழ்கிறார். சர்வாயுத வர்க்கத்தைத் தரித்தவராய் எப்பொழுதும் ஆயுதம் அணிந்து கவனமாய் காணப்படுவார். காத்திருந்து தாழ்மையாய் ஜெபிப்பார்.

இதுவே மறுபடியும் பிறந்தவர்களின் அடையாளங்கள், இந்த ஆறு காரியங்கள் ஒவ்வொரு மனிதரிடமும் மாறுபடக்கூடும். சிலரிடம் சில காரியங்கள் குறைந்து காணப்படக்கூடும். ஒரே அமைப்பில் அனைத்துமே காணப்படுவதில்லை.

எப்படியாக நாம் இதற்கு பதிலளிக்கப் போகிறோம்? இவை அனைத்துமே ஒரு நபரிடம் காணப்பட்டால் அவர் மறுபடியும் பிறந்தவர் எனவும், காணப்படாவிட்டால் அவர் மறுபடியும் பிறக்காதவர் எனவும் நாம் கூறமுடியுமா? அப்போஸ்தலனாகிய யோவான் இதைத்தான் கூற முயலுகின்றார்.

இந்த ஆறு அடையாளங்களும் உங்களிடம் உண்டா? நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டீர்களா? சிந்திப்பீர்களா?