Dr.W.வாரன் வியர்ஸ்பி
(செப்டம்பர்-அக்டோபர் 2021)

நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றக்காலத்தில் அறுப்போம் (கலாத்தியர் 6:9).


நன்மையான காரியங்களைச் செய்வதில் மக்கள் ஒருபோதும் சேர்ந்துபோவதில்லை. இல்லையா? உங்கள் தோட்டத்தைச் சீர்ப்படுத்துவதைக் குறித்து சிந்தித்துப்பாருங்கள். வசந்த காலத்தின் ஆரம்பத்தில் அது மிகவும் சுவாரஸ்யமாயிருக்கும். அப்பொழுதுதான் பச்சையாகத் தளிர்கள் தோன்றி வளர ஆரம்பிக்கும். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் தோட்டத்தில் களைகளும், செடிகளும் வளர்ந்து நிறைந்திருக்கும்போது நிலை என்ன? வகைவகையான உணவுகளைத் தயாரித்தல், முதல் பத்து வருஷங்கள் சந்தோஷமாயிருக்கும். ஆனால், அதன்பின் அதில் உள்ள விருப்பம் நமக்கு குறைந்துவிடும்.

உங்கள் தோட்டத்தில் புல்வெட்டுதல் ஆர்வமான வேலைதான். ஆனால், நாள் செல்லச்செல்ல என் மகன் வளர்ந்து என்று இந்த வேலையைச் செய்து எனக்கு ஓய்வு தருவான் என்ற எண்ணம் சலிப்பைத் தரும்.

நம்முடைய வாழ்வில் அவசியமான, முக்கியமான வேலைகளைச் செய்வதில்கூட நமக்குச் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. ஓர் ஆராதனையில் ஆர்கன் வாசிப்பது ஒரு நல்ல காரியந்தான். ஆனால் வாசித்து, வாசித்து நமது கைவிரல்கள் சோர்ந்து போகின்றன.

ஓய்வு நாட்பள்ளி ஒரு முக்கியமான வேலை. ஆனால், ஆசிரியர்களுக்கு அப்போதைக்கப்போது கொஞ்சம் விடுமுறை தேவைப்படுகிறது. பூச்செடிகளையும், கன்றுகளையும் பராமரித்து விற்கும் நர்சரியில் வேலை பார்ப்பவனும் தப்பி ஓடப்பார்ப்பான். இப்படி களைப்பும், சலிப்பும், சோர்வும் ஏற்படும்போது, நாம் அதை எப்படி சமாளிக்க வேண்டும்? நாம் இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டு பிடிக்க முயல்வோம்.

1. நாம் ஏன் களைப்படைகிறோம்?

சோர்வடைவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. சிலவேளைகளில் நம்முடைய உடல் சோர்வடைந்திருக்கும். எலியா தேவன் தன்னைக் கைவிட்டுவிட்டார். இந்த உலகம் அவனுக்கு எதிராக இருந்தது. என்று நினைத்து செத்துப்போக விரும்பினான் (1இரா.19:4). அவனது பிரச்சனை சரீரக்களைப்பு. ஏனெனில் கடந்த சில நாட்களாக அவன் ஓய்வின்றி வேலை செய்திருந்தான். 1இராஜாக்கள் 18ஆம் அதிகாரம் பார்க்கவும். தேவன் எலியாவுக்கு ஓய்வும், உணவும் கொடுத்தார். அவன் எழும்பித் தன் பணியைத் தொடரச் சென்றான்.

சோர்வடைவதற்கு ஒரு காரணம் மன உணர்வுகளாயிருக்கலாம். ஒரு ஆசிரியர் ஓய்வு நாட் பள்ளியில் உதவிப்படங்கள் எல்லாம் தயாரித்துக் காட்டி, பிள்ளைகளுக்கு மிகவும் சுவையாகக் கதைகளையும் பாடங்களையும் கற்பித்திருப்பார். ஆனால் போட்டிகளிலும், தேர்வுகளிலும் அவர்கள் மிகவும் பின்தங்கியிருப்பதைக் கண்டதும் அவருடைய உற்சாகமெல்லாம் குன்றி, மனம் சோர்வடைந்துபோகும். தன் வேலையின் பயனாக நல்ல முன்னேற்றம் ஏற்படாவிடில் நமக்குச் சோர்வு வந்துவிடுவது இயல்பான ஒன்றாகும்.

தெசலோனிக்கே சபையிலும் மற்ற விசுவாசிகள் தங்கள் கடமைகளையும் வேலைகளையும் செய்யாமல் இருந்தது சில தெசலோனிக்கேயருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது (2 தெச. 3: 10-13). ஒரு சபையில் அல்லது குழுவில் மற்ற எல்லோரும் சோம்பேறிகளாயும், அவர்களில் ஒருவர்மட்டுமே இரவும் பகலும் உழைக்கிறவராயும் இருந்தால், மற்றவர்களின் நிர்விசாரத்தைக் கண்டு உழைக்கும் ஒரு மனிதன் சோர்வடைவது இயற்கைதானே!

நீங்கள் சமீபத்தில் ஒரு சோகமான அனுபவத்தைக் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அல்லது திடீரென்று நீங்கள் வீடுமாறி வேறு இடம் சென்று குடும்பத்தோடு தங்கவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அல்லது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு சந்தோஷமான அனுபவம் நடைபெறவில்லை. இப்படிப்பட்ட அனுபவங்கள் உங்கள் மன உணர்வை வெகுவாகப் பாதிக்கும். மிக அதிக பாரத்துடன் வாழ்க்கையை நடத்திச் செல்ல முயலும்போது. நம் உள்ளத்தில் சோர்பு வேகமாகக் குடியேறிவிடும்.

கடைசியாக, நாம் நன்மை செய்யும்போது ஆவிக்குரிய சோர்வுகள் ஏற்படும். மல்கியா 1:13 இல் தேவன் மக்களை வன்மையாகக் கண்டிக்கிறார். அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாகவோ, மன உணர்வு மூலமாகவோ தேவனோடு எந்த உறவும், தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. நாம் தேவனோடு உள்ள தொடர்பை விட்டுவிடும்போது, நாம் அவருக்காக ஒரு முக்கியமான வேலையைச் செய்வதைத் தவறிவிடுகிறோம்.

நீங்கள் அமைதியாக இருந்து உங்கள் இருதய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பது இயேசு கிறிஸ்துவா? அல்லது வேறு நபர்களா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

2. நாம் எப்படி சோர்வை மேற்கொள்ளலாம்?

நன்மை செய்வதில் சோர்ந்துபோவதற்கான அடையாளங்களை உங்கள் வாழ்வில் நீங்கள் காணும்போது, பயப்பட வேண்டாம். நீங்கள் குற்றம் செய்துவிட்டதாக உணரவும் வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படக்கூடியது. நம்முடைய வாழ்வில் களைப்புகளும், சோர்வுகளும் வரலாம். ஆனால், அவை வெகு சீக்கிரத்தில் மாறிப் போய்விடும். ஒருபோதும் நிலைத்து நிற்பதில்லை.

கொஞ்சநேரம் கூடுதலாகத் தூங்குங்கள். கொஞ்ச நேரம் ஜெபம் பண்ணுங்கள். கற்பிக்கும் வேலைக்கு ஒருநாள் போகாமலிருங்கள். மறுபடியும் மாணவராகச் சேர்ந்து படியுங்கள்

கீழ்க்கண்ட ஆவிக்குரிய ஊக்கம் தரும் காரியங்களைச் சிந்தியுங்கள். அவை உங்கள் இருதயத்தில் ஆழமாகப் பதியட்டும்.

1. நீங்கள் எதைச் செய்தாலும் அதைத் தேவனுக்காகவே செய்வதாக நினையுங்கள்.

கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக என்று பவுல் கூறுகிறார் (1கொரி.15:58). நாம் எப்போது கர்த்தருடைய கிரியைகளைச் செய்துகொண்டிருக்க வேண்டும். எனவே, நாம் செய்யும் கிரியைகளின் விளைவுகளுக்குப் பொறுப்பு தேவனே. நாம் செய்யும் பங்கு என்னவென்பதை ஆண்டவர் அறிவார். நாம் எவ்வளவு உண்மையாக உழைக்கிறோம் என்பதை அவர் கவனிக்கிறார். நாம் செய்யும் எதுவும் கவனிக்கப்படாமல் விடப்படுவதில்லை உங்கள் சேவையை வேறு எவரும் கவனிக்காவிட்டாலும்கூட, உங்கள் பரலோகப் பிதா கவனிக்கிறார்; அவர் கரிசனை கொள்கிறார்.

2. நீங்கள் செய்வது உதவிகரமானது என்று நினையுங்கள்.

1 கொரிந்தியரிலுள்ள அதே வசனத்தில், கர்த்த ருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவின்பேரில் உள்ள அன்பு, அவருக்கு மகிமை இவற்றால் தூண்டப்பட்டு நீங்கள் கிரியை செய்ய ஆரம்பிக்கும்போது, தேவன் அதை ஆசீர்வதிக்கிறார். நாம் நினைப்பதைக்காட்டிலும் அதிகமான நன்மையைச் செய்கிறோம். ஆவிக்குரிய காரியங்களை நாம் செய்யும்போது, அவற்றின் விளைவுகள் காலம் கடந்துதான் தெரியவரும். ஓய்வு நாட்பள்ளியில், வேதாகம வகுப்பில் மனந்தளர்ந்து விடாதீர்கள். உங்கள் வகுப்பில் உங்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டு, பெரிய தலைவலியாய் இருந்த வாலிபன் அல்லது பெண், ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒரு மிஷனெரியாய்த் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்படுவீர்கள்!

3. நீங்கள் கடவுளுக்காக எதைச் செய்கிறீர்களோ, அது நிச்சயமாக கனி கொடுக்கும்.

நாம் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்திலே அறுப்போம் (கலா.6:9). அறுவடையைக் கண்டடைவதற்குக் காலம் ஆகும். நாம் கவனமாக நல்ல விதையை, நல்ல நிலத்தில் விதைத்திருப்போமானால் அறுவடை உறுதி. அறுவடையின் ஒரு கொள்கையென்னவேனில், நாம் விதைப்பதைக் காட்டிலும் அதிகமாக அறுவடை செய்வோம். ஜெபங்கள், இரக்கச் செயல்கள், கிறிஸ்துவுக்கு உண்மையாக இருத்தல், பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்திருத்தல் ஆகியவை அழகான கனிகளைத் தரும்.

இந்த வேதவசனங்கள் நம்மை இன்னும் அதிகமாகச் செய்யவேண்டும் என்று கூறவில்லை. நாம் செய்துகொண்டிருக்கும் நன்மையான செயல்களைத் தொடர்ந்து செய்யும்படி நம்மைத் தூண்டுகின்றன. சில வேளைகளில் நாம் செய்யும் வேலையால் பலன் ஏதும் உண்டா? கைவிட்டுவிடலாமா? என்று நினைக்கும் சந்தர்ப்பங்கள் வரலாம். நாம் செய்வதை ஆண்டவருக்காகச் செய்கிறோம் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவர் தரும் பலத்தால் நாம் ஒரு பெரிய அறுவடையைக் கண்டடையலாம்.

மொழியாக்கம்: Mr.G.வில்சன்